ஒருநாள் ஆலயத் தொண்டர்களை வைத்துக் கொண்டு அன்னை ஆதிபராசத்தி அருள்வாக்குச் சொன்னபோது இன்றைய சமுதாயத்தின் நிலைமையைச் சுருக்கமாக ஆனால் அழகாகப் படம் பிடித்துக் காட்டுவது போலக் கூறினாள்.
‘‘பணம்; மனம்! பணத்தில் மனம் இருக்கிறது; மனத்தில் பணம் இருக்கிறது. இதுதான் மகனே! இன்றையச் சமுதாயம்!”
என்றாள். பணம் என்ற ஒன்று இந்தச் சமுதாயத்தை என்னபாடுபடுத்துகின்றது! பணவேட்டை எவ்வாறெல்லாம் மனிதனது மாண்புகளை அழிக்கின்றது! என்பதை இன்றைய சமுதாயத்தில் கண்கூடாகக் காண்கிறோம்!
பணத்தின் இன்றியமையாமை:
மனித வாழ்க்கைக்கு அடிப்படையான தேவைகள் மூன்று. உணவு; உடை; இருக்க இடம். இம்மூன்றனுக்குமே தேவைப்படுவது பொருள். பொருளின் இன்றியமையாமையையாகும். குறைத்துச் சொல்லவில்லை. ‘‘பணம் இல்லாதவன் பிணம்” ‘‘இல்லானை இல்லாளும் வேண்டாள்; ஈன்றெடுத்த தாய், வேண்டாள்;” ”பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை”, என்றெல்லாம் பொருளின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியிருப்பது உண்மைதான். “வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய மதிவலோர்தம் உரை பிழையன்று காண்” என்று பாடிய பாரதி கூட, இவ்வுலக வாழ்க்கை களவு போன்றது என்ற உண்மையை உணர்ந்துதான் பாடினான். அப்படிப் பட்ட அவனும்,
‘‘பொருளிலார் பொருள் செய்தல் முதற்கடன் போற்றிக் காசினுக்கு ஏங்கி உயிர் விடும் மருளின் மாந்தரை யேபழி கூறுவன் மாமகட்கு இங்கு ஊனம்உரைத்திலன்” என்று பாடுகின்றான்.
பணம் – கருவி
மனித வாழ்க்கைக்கு ஒரு கருவியாக மனிதனால் படைத்துக் கொள்ளப்பட்டதே பொருள்! பணத்துக்குப் ‘‘பொருள்” என்று பெயர் இருப்பது உண்மை! பணத்துக்கும் மேற்பட்ட பொருள் இந்த உலகில் உண்டு! அதைப் புரிந்து கொள்ளாத காரணத்தால் மனித சமுதாயம் பிறந்து இறந்து அல்லல்படுகின்றது. ‘‘பொருளல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம் மாணாப் பிறப்பு” என்கின்றார் வள்ளுவர், பணம் என்ற ஒன்று இல்லாத காலத்தேயும் மனிதன் கூட்டு வாழ்வில் நிறைவு கண்டான்! பண்டமாற்று முறை இருந்த காலத்தும் மனித வாழ்வு சீராகத்தான் நடந்தது. பல படிகளைத் தாண்டி பல முன்னேற்றங்களைத் தாண்டி இந்த அளவுக்கு மனித சமுதாயம் வந்திருக்கிறது.
காலந்தோறும் ஒவ்வொரு சமுதாயத்திலும் வெவ்வேறு விதமான பிரச்சினைகள் தோன்றிய துண்டு. அந்தந்தக் காலத்தில் வாழ்ந்த ஆன்றோர்களும், சான்றோர்களும் மனித குலத்தை நெறிப்படுத்தி வழிகாட்டியுள்ளனர். மனிதனிடம் பொதிந்து கிடக்கின்ற ‘‘மிருக குண”த்தைப் போக்கி அவனை நல்லவனாகவும் – பண்பட்டவனாகவும் ஆக்க அந்தக் காலத்தில் சமயங்களும் சமயச் சான்றோர்களும்தான் முயன்றனர். ஒவ்வொரு சமயமும் தங்களக்கு என்று நிறுவனங்களும், அமைப்புகளும், கோஷ்டிகளும் அமைத்துக் கொண்டு சமயக் கருத்துக்களைப் பரப்பிய காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில சண்டைகள் தோன்றின. மனிதர்களிடம் அமைந்த இந்தப் பலவீனங்கள் சமய நிறுவனங்களிடம் வந்து சேர்ந்தன. ஒவ்வொரு சமயமும் மனித குலத்துக்குப் பெரிய அளவில் நன்மைகளில் புரிந்தது. இதனை மறுக்கவோ! மறைக்கவோ இயலாது. இந்த நூற்றாண்டில் சமுதாயத்தில் சமய உணர்வுகள் அகற்றப்பட்டன் தெய்வ நம்பிக்கை கேலி செய்யப்பட்டது; அவனவன் செய்யும் தீவினைகட்கு அவனவன் பொறுப்பாளி என்ற கோட்பாட்டில் நம்பிக்கை போய்விட்டது. தொழிற்புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட விஞ்ஞான முன்னேற்றமும் – புதுமைகளும் மக்களுக்குப் பழங்காலச் சமயங்களில் இருந்த பிடிப்பைத் தளர்த்தி விட்டன. ‘‘பணம்” என்ற ஒன்றே இன்றைய மனிதனை ஆட்டிவைக்கும் சாத்தானாக உருவாகி விட்டது.
செல்வம் நிலையாமை:
மனிதர்கள் தங்கட்களுக்குள் ஒரு பரிமாற்ற வசதிக்காக ஏற்பட்ட பணம் இன்று மனித குலத்தையே ஆட்டுவிக்கும் சக்தியாக மாறிவிட்டது; சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் பெருகி வரும்போதெல்லாம் அன்றைய பெரியோர்கள் செல்வத்தின் நிலையாமை பற்றி எச்சரித்துக் கூறினார்கள். நீங்கள் போகின்ற கடைசிப் பயணத்தின் போது உங்கட்கு இந்தச் செல்வம் துணை வராது; மனைவி, மக்கள் துணைவர மாட்டார்கள்; ஊரும் சதமல்ல் உற்றார் சதமல்ல் பேரும் சதமல்ல் பெண்டிச் சதமல்ல் இறைவன் ஒருவன்தான் உங்கட்குப் பிறவிதோறும் துணையாக இருப்பவான்; உங்களுடன் கூட வருபவை நீங்கள் செய்த பாவங்களும், புண்ணியமுமே என்றெல்லாம் சொல்லி அன்றைய மக்கட்கு நல்வழி புகட்டினர்.
பொருள் முதல் வாதம்:
கண்ணால் காண்பவை மட்டுமே நம்புதற்குரியன் நல்வினை – தீவினை என்பதெல்லாம் இல்லை; பொருள்தான் சமுதாய மாற்றங்களை உண்டாக்குகிறது; அதுதான் வரலாற்றுப் போக்கை நிர்ணயிக்கிறது; ஆன்மா என்பதும் அபத்தம்; எதையும் விஞ்ஞானக் கண்ணோட்டத்தோடு அணுக வேண்டும் என்று இன்றைய அறிவு ஜீவிகள் பேசுகின்றார்கள். பொருளை – பணத்தை மையமாக வைத்துக் கொண்டு வாழ ஆரம்பித்ததின் விளைவுகளைத்தான் இன்றைய சமுதாயம் அனுபவிக்கின்றது.
பணத்தை மையமாக வைத்து வாழத் தொடங்கிவிட்ட சமுதாயத்தில் சுயநலம்தான் ஓங்கும், எப்படியும் வாழலாம் என்ற நினைப்பு வந்து விட்ட பிறகு ஒழுக்கம் – பண்பாடு இவை மறையத்தான் செய்யும் – இதன் விளைவாகப் போட்டி – பொறாமை – திருடு – கொலை – கொள்ளை – கற்பழிப்பு – கலவரங்கள் – அராஜகப் போக்கு – இலஞ்சம் – குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசை – உழைக்காமலேயே முன்னேற வேண்டும் என்ற துடிப்பு வேலை நிறுத்தங்கள் வேலை வாய்ப்பு இல்லாமை கள்ள வாணிகம், கறுப்புப் பணம், விலைவாசி ஏற்றம் இவை அனைத்துக்கும் காரணம், இன்றைய சமுதாயம் பணத்தையே மையமாக வைத்து வாழத் தொடங்கி விட்டதன் விளைவுகளே!
ஆன்மிக வழியின் அருமை
ஆன்மிக நெறி ஆன்மா, என்பதனை ஒப்புக்கொள்கின்றது. தெய்வம் ஒன்று நம்மைக் கண்காணிக்கின்றது என்பதை நம்புகின்றது. அவனவன் செய்கின்ற நல்வினை தீவினைகட்கு ஏற்பவே ஒவ்வொருவனுக்கும் இன்ப துன்பங்கள் அமைகின்றன என்று நம்புகின்றது. கடவுளை நம்புவதாலும், வழிபடுவதாலும், கடவுளின் நோக்கத்தை உணர்ந்து வாழ்வதாலும் தீவினைப் பயனால் வருகின்ற துன்பங்களிலிருந்து விடுபட முடியும் என்று கருதுகின்றது. எல்லா உயிருமே இறைவன் படைப்பு எல்லா உயிர்கட்கும் அன்பு காட்டச் சொல்கின்றது. நடமாடும் தெய்வங்களான ஏழைகட்குக் கொடுப்பதுதான் ஆண்டவனுக்குப் போய்ச் சேரும் என்பதை நம்புகிறது! இனம் மொழி சாதி சமய வேறுபாடு இல்லாமல் பகுத்துண்டு பல்லுயிர் காக்கும் பண்பாட்டை ஆன்மிக நெறி வலியுறுத்துகின்றது. நாட்டுக்கு நாடு போர்கள் விளைந்தபோதிலும் இந்த ஆன்மிக உணர்வுகள் அன்றைய சமுதாயத்தில் அழுத்தமாகப் பதிந்து கிடந்தன. சமுதாயத்தில் ஓர் இணக்கம் இருந்தது.
இன்று பல படிகளைத் தாண்டி மனித சமுதாயம் பல வசதி வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறது. இன்றைய மனிதனுடைய அறிவு வளர்ந்திருக்கிறது; மனம் சுருங்கிவிட்டது. வெறும் அறிவு வளர்ச்சி மட்டும் மனித சமுதாயத்தில் ஒற்றுமையை உண்டாக்கி விடாது. மனம் வளர வேண்டும்; அதற்கு ஆன்மிகம் தான் வழி! எவன் எந்த நிலையில் இருந்தாலும் சரி! எப்படிப்பட்ட அதிகாரத்தில் இருந்தாலும் சரி! மறவாமல் நினைத்துக் கொள்ள வேண்டிய அறிவுரை ஒன்று உண்டு! இதனைத்தான் திருமூலர் சொல்கிறார்.
‘‘கண்காணி இல்லென்று கள்ளம்பல செய்வார்; கண்காணி இல்லா இடமில்லை; காணுங்கால் கண்காணி யாகக் கலந்தெங்கும் கின்றானைக் கண்காணி கண்டார் களவொழிந் தாரே”
இந்தக் கருத்தை ஒவ்வொருவனும் நினைவில் கொண்டால் பாவம் செய்ய மனம் அஞ்சும்; மனம் திருந்தும்!
தெய்வ நம்பிக்கை அறநெறியில் நம்பிக்கை ஆகிய இரண்டும் இல்லாத சமுதாயத்தில் பணம்தான் ஆட்சி செய்யும்! பணம் ஆட்சி செய்யும் சமுதாயத்தில் மனம் கெட்டு, மனிதாபிமானம் கெட்டு, பண்பாடுகள் கெட்டு, எல்லோரும் தொல்லைப்பட வேண்டியது தான்! இன்றைய சமுதாயம் நிம்மதியின்றி அல்லப்பட வேண்டியதுதான்! ‘‘பணம் மனம்; பணத்தில் மனம் இருக்கிறது; மனத்தில் பணம் இருக்கிறது; இது தான் இன்றைய சமுதாயம் மகனே! என்று அம்மா சொன்னாளே எவ்வளவு ஆழமான அருமையான கருத்து!
ஓம் சக்தி!
நன்றி: சக்தி ஒளி
]]>