‘‘பத்தரை மாற்றின் பசும்பொன்னே! – நாங்கள் பார்த்திட எழுந்த தவமின்னே! சித்தராய் ஒளிர்ந்த சிவக்கண்ணே! – என்றும் சித்திகள் பூத்த நலக்கண்ணே! பத்தரைக் காக்கும் பரஞ்சுடரே! – நாளும் பரவிட எழுந்த ஒளிப்புனலே! முத்தரே! ஞானா! தருமலிங்கா! – உன்றன் முனைச்சுழி அருளைப் பொழிவாயே! -தருமலிங்கசாமி தோத்திரம்

சித்தர்களின் பெருமையைப் பற்றிக் குறிப்பிடும்போது திருமூலர் தம் திருமந்திர நூலில்,

‘‘சித்தர் சிவத்தைக் கண்டவர்; சீருடன் சுத்தா சுத்தத்துடன் தோய்ந்து தோயாதவர்; முந்தாம் முத்திக்கு மூலந்தர்; மூலத்துச் சத்தர், சதாசிவந் தன்மையர் தாமே!” என்று கூறுகிறார்.

இதனால் நாம் அறியும் உண்மை ‘‘சித்தர்கள் ஆண்டவனாகவே வைத்து மதிக்கப் பெறத்தக்க சீரியர்” என்பதேயாகும். சித்தர்கள் கையாண்ட நெறியைச் ‘‘சித்த தருமம்” என்றும் அழைப்பது வழக்கம். இது காலத்தை வெல்லும் உபாயத்தையும் காலன்வசம் போகாத் தன்மையையும் (இறப்பில்லா இன்பவாழ்வு) அளிப்பதாகும். இவர்கள் ஏகான்ம வாதத்தையும், (அத்துவைதம்) துவைத நெறியையும் இணைத்துப் படிமுறையில் உயிர்கள் உய்ய வழிவகை செய்தவர்கள் என்பர். இந்நெறியைக் கைக்கொண்ட சித்தர்கள் பலர் நாடெங்கிலும் – பித்தரைப் போலும், பேயரைப்போலும் உலவி வருதல் உண்டு. அவர்களில் ஒருவரே சித்தர் தருமலிங்க சுவாமிகள் ஆவார்.

பிறப்பிடம்:

திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் இவர்களால் பாடப்பெற்ற பெரும்பதி, திருமறைக்காடு எனும் வேதாரணியம். இங்கே வேதங்களால் திருக்காப்புச் செய்யப்பெற்ற (அடைத்தல்) கதவினைத் திறக்கவும் மூடவும் செய்த பெரியவர்கள் இவர்கள். தாயுமானவப் பெருந்தகை தோன்றிய ஊரும் இதுவேயாகும். இவ்வூரின் வடக்கே 8 கல் தொலைவில் உள்ள ஓர் ஊர் ‘‘தேவதாகுடி”யாகும். தற்போது இவ்வூர் ‘‘தேத்தாகுடி” என மாறி வழங்குகிறது. இவ்வூரில் 160 ஆண்டுகட்குமுன் தோன்றி வாழ்ந்தவரே இச்சித்தர் பெருமான். இவருடைய பரம்பரையினர் இன்னும் இவர் சமாதிக்கு நித்திய வழிபாடு, குருபூசை முதலியவற்றைச் செய்து வருகின்றனர்.

ஊர்ச் சிறப்பு:

இவ்வூர் நாகை – வேதாரணியம் நெடுஞ்சாலையிலேயே உள்ளது. வேதாரணியத்தின் பகுதியைச் சார்ந்த இவ்வூருக்கு வடக்கே – ‘‘வடக்குப் பொய்கை நல்லூர்” என்ற ஊர் ஒன்று உள்ளது. நவகோடிச் சித்தர்கணத் தலைவராகிய ‘‘கோரக்கச் சித்தர்” இவ்விடத்தில்தான் அடங்கியுள்ளார். தேவதாகுடிக்குத் தெற்கே புண்ணியத் தலங்களில் ஒன்றான ‘‘கோடிக்கரை” உள்ளது. இங்கேதான் திருப்பதியில் சமாதியான கொங் கணவரின் சீடர்கள் பலர் ‘‘கொங்கணவர்க்கச் சித்தர்கணம்” எனும் பெயரால் அடங்கியுள்ள “சித்தர்கட்டம்” – என்ற இடம் உள்ளது. இவ்விரண்டு இடங்கட்கும் இடையில் இச்சித்தர் வாழ்ந்த ஊர் இருப்பது பெரும் சிறப்பு அன்றோ?

மற்றும் இவ்வூரைச் சுற்றியுள்ள ஊர்கள் பெரும்பாலும் முனிவர்களின் திருப்பெயர்களைத் தாங்கியிருப்பதும் சிறப்புக்குரியதே. செம்போடை என்று ஓர் ஊர்; இங்கேதான் ‘‘ஆதிபராசத்தி வார வழிபாட்டு மன்றம் உள்ளது. ‘‘சம்பூகன் ஓடை” என்பதே செம்போடை எனத்திரித்துள்ளதாம். கத்தரிப்புலம் என்பது மற்றோர் ஊர்; ‘‘சப்தரிஷிப்புலம்” என்ற பெயரே இப்படித்திரிந்ததாகக் கூறுவர். ‘‘தேத்தாகுடி” என்ற பெயரும், தேவதைகள் குடிகொண்டு இருக்கும் இடம் என்ற பொருள் உடையது. இன்னும் மந்திர சித்தி பெற வேண்டியவர்கள், இவ்வூர் எல்லையில் தங்கி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மந்திரங்களை உருவேற்றிச் செல்கின்றனர் என்று அறிய முடிகிறது. எல்லாத் தேவதைகளும் குடிகொண்டு வாழும் இடம் ஆதலால், மந்திரசித்தி இவ்வூர் எல்லையில் மிக எளிமையாகக் கிட்டும் என்பது நம்பிக்கையாக நிற்கிறது.

சித்திலே பூத்த முத்து:

இம்மகானின் பெயர் ‘‘தருமலிங்கம்” என்பதாகும். இவர் தம் வாழ்நாளில் பல்வேறு அற்புதங்களைச் செய்;ததாக இவ்வூர்ப் பெருமக்கள் கூறுவர். நாடார் சமூகத்தைச் சோந்த இவர் இப்பகுதியில் அருள்பூத்த ஞானியாகவும், கண்கண்ட கடவுளாகவும் கருதப்பெற்ற பெரியார் ஆவார். இவர் தீராத நோய்களை எல்லாம் தீர்க்கும் தெய்வ அருள் பெற்றவராகக் கருதப்பட்டவர். இவர் சமாதியடைந்த பிறகும் பலருடைய கனவில் தோன்றிப் பல அதிசயங்களை நடத்துவதாக இப்பகுதியினர் குறிப்பர். பக்தர்கள் இவர் சமாதிக்கு வந்து பல வேண்டுதல்களைச் செய்வதை இன்னும் பார்க்க முடிகிறது. அவர் நடந்து கொண்டு இருக்கும் போது எந்த நோயாளி வந்து தன்நோயைத் தீர்க்கும்படி வேண்டிக்கொண்டாலும் அங்குள்ள செடி கொடிகளைக் கொண்டே நோயைக் குணமாக்கியவர். செடி, கொடிகள் இல்லாத இடம் என்றாலும் அதற்காக இவர் கவலைப்படுவது இல்லை! வெறும் மணலை அள்ளித்தந்தே தீராத நோய்களைக் குணமாக்கியவர் இவர்! இல்லற ஞானியகவே இருந்த இம்மகான் தன் குடும்பத்தையும், உற்றார் உறவினரையும் விட்டு விலகாமல் அருட்சித்து ஆடிக் கண்கண்ட கடவுளானவர்.

பூவாழி ஓடை:

தேத்தாகுடியை அடுத்துக் கிழக்கே ‘‘புட்பவனம்” என்ற ஊர் உள்ளது. இவ்வூரின் தெற்குப் பகுதியில் ‘‘பூவாழி ஓடை” என்ற நீரோடை ஒன்று உள்ளது. இது திருமறைக் காட்டு வரலாற்றோடு தொடர்புடையது என்பர். வேதங்கள் மனித உருத்தாங்கித் திருமறைக் காட்டு ஈசனை வணங்கிய செய்தியினை எல்லோரும் அறிவர். இவ்வேதங்கள் முதன்முதலில் – புட்பவனத்தை அடுத்து அதன் வடக்கேயுள்ள, ‘‘நாலு வேதபதி” – எனும் ஊரில் கோயில் கொண்ட அமராபதி ஈசுவரனை வணங்கிய பின்னர்தான் திருமறைக்காடு சென்றனவாம். வேதங்கள் பூசித்த தலங்களில் இந்த நாலுவேதபதியும் ஒன்று. வேதங்களை முறைதவறி மக்கள் ஓதுவதால் ஏற்படும் பாவங்களைக் கழித்துக் கொள்ளவே வேதங்கள் ஆண்டவனை வழிபட்டுச் செல்லுகின்றன என்பர். அங்ஙனம் வழிபட்டு நாலுவேதபதியிலிருந்து – திருமறைக் காட்டிற்குச் சென்ற வேதங்கள், இப்பூவாழி ஓடையில் பூத்திருந்த அலரிப்பூக்களை (அரளி) மறைக்காட்டு ஈசனுக்குச் சாத்தப் பறித்தும் சென்றனவாம். இதனால் அவ்வோடை ‘‘பூவாழிஓடை” என இன்றும் பெயர்பெற்று வழங்குகிறது. இத்துணை சிறப்புப் பொருந்திய ஓடையில் பூஞ்செடிகளே இல்லையே என்ற வருத்தம் சித்தருக்கு. இதனால் பகல் முழுதும் ஊரெல்லாம் தேடிச் செடிகளைச் சேர்த்து இரவு முழுதும் அவைகளை நட்டுத் தண்ணீர் ஊற்றுவது என்பதை வழக்கமாகக் கொண்டார். தண்ணீர் ஊற்றும் போது கூடப் பலர் கண்களுக்கு இவர் உருவம் தெரியாதாம். பக்கத்தில் நின்று பார்ப்பவர்க்குக் கூடத் தண்ணீர் தான் தெரியுமே தவிர இவருடைய உருவம் தெரியாதாம். அவர் அன்று வளர்த்த பூஞ்செடிகளின் பூண்டு இன்னும் அற்றுப் போகாமல் அவ்விடத்திலும் – ஆற்றங்கரைப் பகுதியிலும் உள்ளதைப் பார்க்க முடிகிறது.

அரிய சித்து:

இவர்தம் குடிமரபுக்கு ஏற்பர் சகோதரர்களுடன் சேர்ந்து தென்னை, பனைகளில் கள் இறக்குவது வழக்கம், இவருடைய சகோதரர்கள் அனைவரும் பொழுது சாயும் நேரத்திற்கு முன்பே மரம் ஏறுவதற்குப் போய்விடுவார்கள். ஆனால் இவர் மட்டும் நன்கு இருட்டிய பிறகே செல்வது வழக்கம். ஊர் அடங்கிய நேரத்தில் இவர் சென்று, மரங்களின் அடியில் தம்கையால் மூன்று தட்டுக்கள் தட்டுவாராம், உடனே மரங்கள் வளைந்து கொடுக்குமாம்; பசளையைச் சீவிவிட்டுக் கன் கலயங்களை மாட்டி விட்டு – மீண்டும் மூன்று தட்டுத் தட்டிவிடுவாரம்; அம்மரங்கள் பழைய நிலைக்கு வந்து விடுமாம். அங்ஙனம் வளைந்து கொடுத்த பனைமரம் ஒன்றின் அடியினை – சித்தரின் அற்புதச் செயலை மெய்ப்பிக்க வேண்டி இவ்வூர் மக்கள் இன்றும் காட்டுகின்றனர். ‘‘இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறக் கூடிய காரியமா? என்று இன்றைய மனித உள்ளம் கேட்கிறது! விஞ்ஞானத்திற்கும் அப்பாற்பட்ட மெய்ஞ்ஞானம் செயல்கள் – உலகில் அட்டமாரித்தி பெற்றவர்களால் நடைபெறும்!” – என்பதே இவ்வுள்ளத்தின் கேள்விக்குப் பதில்! அட்டமாசித்தி, இயற்கையையும் மாற்றிக்காட்டும் சர்வ வல்லமையையும் உடையது! ‘‘இயற்கையையும் மாற்றும் சத்திபெற்ற தெய்வீக அருளாளர்களால் எதுவும் உலகில் நடக்கும்” என்னும் உண்மையை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

இவர்கள் துரும்பையும் பெரிய தூணாக்க வல்லவர்கள்; பெரிய தூணையும் துரும்பாக்க வல்லவர்கள்; ‘‘செயற்கரிய செய்வார் பெரியர்” – என்று வள்ளுவர் கூறியதும் இவர்களைக் குறித்தே! இன்று மருவத்தூர் ஆலயத்தில் நடைபெறும் சித்தாடல்கள் அனைத்தும் இவ்வுண்மையைக் காட்டுகிறது. பிளாஸ்கில் இருந்த பாலை பிளாஸ்டிக் சிங்கம் குடித்த அற்புதச் சித்தாடலை நேரே கண்டவர் மறந்திருக்க முடியாது! சாதாரண வேப்பிலை, உடனே தண்டாகவும், வண்டாகவும் மாறும் விந்தையினை யாரும் இதற்குள் மறந்திருக்க மாட்டார்கள். ‘‘குழந்தைகளிடம் நெருங்கி விளையாடும் ஒரு சித்தபிடம் சில குழந்தைகள், ‘‘மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவைப் பார்க்க வேண்டும்” என்று கேட்டனராம். உடனே சித்தர், ‘‘அதற்கென்ன அத்தனை பேரையும் அழைத்துச் சென்று காட்டிவிடுகிறேன்” என்று அனைவரையும் தம் முதுகில் ஏற்றிக் கொண்டாராம்! ஏற்றிக்கொண்டு ‘‘எல்லோரும் கண்களை மூடிக்கொள்ளுங்கள்” என்றாராம்! எல்லாக் குழந்தைகளும் அங்ஙனமே செய்தனராம்! உடனே மதுரைத் திருவிழாக் காட்சி ஆரம்பித்து விடுகின்றது; ஒவ்வொருவருக்கும் இனிப்பப் பொட்டலங்கள் கைகளில் வந்து சேர்கின்றன. குழந்தைகள் அனைவரும் சுற்றிப்பார்க்கின்றனர்; இனிமேல் வீட்டிற்குப் போகலாமா? என்று சித்தர் கேட்கிறார்! குழந்தைகள் ஆம் என்கின்றனர்; உடனே குழந்தைகள் நாம் இருந்த இடம் வந்து சேர்ந்து விடுகின்றனர். இந்நிகழ்ச்சி சித்தரின் வரலாற்றில் போற்றப்படும் பகுதி என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்! இது போன்ற நிகழ்ச்சிகள் சித்தர்கள் வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளே அல்லவா? இதைப் போன்றதே தருமலிங்க சித்தரின் அற்புத நிகழ்சசியுமாகும்; இதனை நம்புவதால் குறை ஒன்றும் இல்லை. சித்தமார்க்கத்தின் நுண்மை அறிந்தோர்க்கு இது நம்பக் கூடியதேயாகும்.

மனைவியின் மங்கலம்:

சித்தர் தருமலிங்க சுவாமிகள் தான் சீவசமாதி அடையும் நாளை முன்கூட்டியே கூறிவிடுகிறார். சமாதிக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் தானே செய்துவிடுகிறார். உறவினர்களை, ஊரார்களை எல்லாம் அழைத்து அவரவர்க்கு வேண்டிய அறிவுரைகளை எல்லாம் கூறுகிறார்; இறுதியாகத் தன்மனைவியை அழைத்து, ‘‘நான் சமாதி அடைந்ததும் – இறந்து விட்டதாகக் கருதி – நீ கைமத்பெண் கோலத்தில் இருக்கக்கூடாது; சித்தர்கள் இறக்கக் கூடியவர்கள் அல்லது; மறைந்து நிற்பவர்களே! நான் உயிரோடு இருப்பதாகவே கருதவேண்டும்; பூவும் பொட்டுடனும் பொருந்திய மஞ்சளுடனும், மங்கலக் கழுத்துடனும் நீ இருக்க வேண்டும்; மாறாக யார் எதைச் சொன்னாலும் கவலைப்படாதே! கைம்பெண்கோலம் உனக்கு இல்லை!” என்றாராம். அருகில் உள்ள உறவினரைப் பார்த்து, ‘‘இவன் இன்னும் இத்தனை ஆண்டுகள் உயிருடன் இருப்பான்; இவள் இறந்ததும் உடலைக் கொளுத்தக் கூடாது; என் பக்கத்தில் சமாதி வைத்துவிட வேண்டும்? என்றாராம். உறவினர்கள் ‘‘சரி – அப்படியே செய்கிறோம்” என்றனராம்! மீண்டும் சித்தர், ‘‘ஒருகால் நீங்கள் என்வாக்கை மீறி நடத்தீர்கள் என்றால் உங்கள் சந்ததியே அற்றுப்போகும்” என்றாராம். ஆனால் உறவினர்கள், சித்தர் சமாதிநிலை அடைந்ததும் – அவரடைய துணைவியாரைத் தம்குல வழக்குப்படியே கைம்பெண் கோலத்தில்தான் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தித் துன்புறுத்தினார்கள்; அதற்கு அந்த அம்மையார் இடம்கொடுக்கவில்லை; உடனே தம் இனத்தில் இருந்து விலக்கி வைத்துவிட்டனர். அதையும் அந்த அம்மையார் பொருட்படுத்தவே இல்லை; கணவன் வாக்கைக் கடவுள் வாக்காகவே நிறைவேற்றினார்.

சுடுகாட்டில் சூறாவளி:

சித்தர் குறித்திருந்த நாளில் அம்மையார் இறந்தார். சித்தர் வாக்குப்படி அம்மையாரைச் சமாதி வைக்க உறவினர்கள் சம்மதிக்கவே இல்லை; எரித்துவிடவே முற்பட்டனர். ஆனால் அவர்கள் செயல் முடிந்ததா? இல்லை! சுடுகாட்டில் எரிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர்; தீப்பிடிக்குமுன் எங்கிருந்தோ ஒரு சூறாவளி வந்து தீயை அணைத்தது; மீண்டும் உறவினர்கள் தீ வைக்க முயன்றனர்; மீண்டும் காற்று வந்து விறகு முதலியவற்றைச் சிதைத்தது; இவ்வாறு மூன்று முறை முயன்றும் உறவினர்களால் தீ வைக்க முடியவில்லை! பிறகுதான் அவர்கட்குப் புத்திவந்து சமாதிவைக்க ஒத்துக்கொண்டனர். சித்தர் பெருமானின் சமாதிக்குப் பக்கத்திலேயே இந்த அம்மையாரின் சமாதி இருப்பதைப் பார்க்கமுடிகிறது. ‘‘சித்தர் வாக்கு” தெய்வவாக்கு – என்பதற்கு இது எடுத்துக்காட்டு. சித்தர்கள் மறைந்தாலும், தோன்றாத்துணையாக நின்று நம்மைக் காப்பவர்கள்; சித்தர் சமாதியில் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்லும் காட்சி இதனைக்காட்டுகிறது. மக்களின் துன்பத்தைப் போக்கி அவர்கட்கு நன்மைசெய்யவே சித்தர்களின் சமாதி ஆலயங்கள் உலகு எங்கணும் உள்ளன. அவற்றை வழிபட்டு நம் மனப்புண்ணை ஆற்றிக் கொள்வோமாக!

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here