‘‘அரிது அரிது, மானிராய்ப் பிறத்தல் அரிது” என்பர் ஆன்றோர். அத்தகைய அரிய மானிடப் பிறவி எடுத்த நாம், நம் பிறவிப் பயனை அடைதல் கடன். அதில்லாது ஊமையராய், குருடராய், செவிடராய் வாழ்ந்து, கேவலம் பூச்சிப் புழுக்களைப் போல் புவியில் பிறந்து மடிவதால் என்ன பயன்? மக்கள் யாவரும் மாக்கள் வாழ்வு விடுத்து மனித வாழ்வு வாழ்தல் வேண்டும். அதற்கு நாம் பொருளைவிட அருள் அதிகம் பெறல் வேண்டும்.
‘‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லாகி யாங்கு”
என்பது வள்ளுவர் வாக்கு, அருளில்லார்க்கு அவ்வுலகம் மட்டுமின்றி, இவ்வுலகம் இல்லையென்றே நான் கூறுவேன். காரணம், அருளின் சக்தி அளவற்றது. பொருள் விரைவில் வற்றிப்போம் கிணற்று நீருக்குச் சமம். ஆனால், அருளோ என்றென்றும் வற்றாது பொங்கி எழும் ஊற்று நீர், அது அள்ள அள்ளக் குறையவே குறையாது. அதன் ஆதியும், அந்தமும் அறியவே முடியாது. ஆழத்தை அளத்தலும் அரிது.
ஏனைய மேல் நாட்டவர்க்கும் நமக்கும் உள்ள அடிப்படை வேறுபாடே இதுதான். அவர்கள் பொருளை பிரதானமாகக் கொண்டனர். ஆனால், நாமோ அருளைக் கொண்டோம். அதனால் அவர்களுக்கு மிருக பலம் அதிகரித்தது. நமக்கோ மனோ பலம் அதிகரித்தது. அம்மிருக பலத்தின் விளைவை நாம் தற்போது கண்கூடாகக் கண்டு வருகிறோம். அணுகுண்டு வாயுக்குண்டு எனப் பல அழிவுச் சக்திகளை வளாத்து, மனித வர்க்கத்தையே அழிக்க அங்கு வழி வகுக்கப்படுகிறது. அத்தகைய மிருக பலமிக்க மேல் நாடுகளின் நெருங்கிய தொடர்பின் காரணமோ என்னவோ, நம் நாட்டிலும் அருள் வலிகுன்றி, நாமும் பக்திப் பாதையினின்று விலகலானோம். இறைவன் இல்லையென்று கூறவும் தலைப்பட்டோம். ‘‘ஆலயங்கள் ஏனய்யா? அபிஷேகங்கள் ஏனய்யா? கோலங்கள் கொடிகள் ஏனய்யா? கொட்டு முழக்கம் ஏனய்யா?” என்று நாக் கூசாமல் நாத்திகம் பேசவும் முற்பட்டோம்.
இது மிகவும் வருந்தத்தக்க நிலை. விரைவில் இந்நிலை மாறவேண்டும். இனியும் காலம் கடத்தாது. நாம் நம் கடமையை உணர வேண்டும். நம் நற்கதியை நாட வேண்டும். நம் உடலில் உயிர் வாழ்தற்கு எவ்வாறு உணவு தேவையோ, அதேபோல் நம் மன அமைதிக்கு, இறுதி முக்திக்கு மிக இன்றியமையாதது தெய்வ பக்தியும், இறை வழிபாடுமேயாகும். பக்தி என்றால் அன்பு. இறைவன் இடத்தில் அன்பு செலுத்த வேண்டும்.
இறைவன் என்றால் யார்? அந்த ஈசன் எங்கிருக்கின்றான்? எங்கும் எதிலும் வியாபித்து ஞானப் பரம்பொருளாய் உயிரினுள்ளே விளங்கும் இறைவனை எங்ஙனம் எளிதில் எடுத்துரைக்க முடியும்? அனுபவத்தால்தான் ஈசனை உணர்தல் வேண்டும். கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை. அதனையே திருமூலர்:
‘‘தேனுக்குள் இன்பம் சிவப்போ கறுப்போ! வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலிர்! தேனுக்குள் இன்பம் செறிந்திருந் நாற்போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே”.
என அறிவுறுத்துகிறார். இவ்விதம் நம் ஊரிலும், உள்ளத்திலும் உயிரிலும் உறையும் உத்தமனை உணர்ந்து காணல் நம் கடன். ‘‘உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம் உடம்பினில் உத்தமனைக் காண்”, என்கிறார் நம் ஔவைப் பிராட்டியும், அந்த உத்தமனைக் காணும் நாட்டத்தில் ஏற்படுவதுதான் பக்தி. தெய்வ பக்தியும், இறை வழிபாடும்தான் நாம் உய்யும் வழி.
‘‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேராதார்”
என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவரும், தெய்வ பக்தியால் விளைவதுதான் மனச்சாந்தி, மன அமைதி, இறுதியில் முக்தி, கலியுகத்தில் பக்தியே முக்திக்கு வழியெனச் சாத்திரம் கூறுகிறது.
‘‘தயப்பரம் கிருதாயுகே திரேதாயாம் ஞானமுச்யதே த்வாபரே யக்குமித்யாஹீ பக்திரென கலௌயுகே”
என்பது வடமொழி சுலோகம். கிருத யுகத்தில் தவத்தின் மூலமும், திரேதா யுகத்தில் ஞானத்தின் மூலமும், துவாபர யுகத்தில் யாகம் முதலியன செய்வதன் மூலமும் முக்தி அடையலாம். ஆனால், கலியுகத்தில் பக்தி ஒன்றுதான் முக்திக்கு வழி என்று அறுதியிட்டுக் கூறுகிறது இச்சுலோகம்.
தெய்வ பக்தி செய்யும் விதம் ஒன்பது. அதனை நவவித பக்தி என்பர் பெரியோர்.
‘‘சனிதோறும் சிரவணத்தால் அனுமானும், உயர்கீர்த் தனத்தினால் வான்மீகன், தியானத்தால் சீதை, தனிப்பாத சேவனத்தால் பரதனும், அர்ச்சனையால் சபரியும், வந்தனத்தினால் விபீஷணனும், அடிமை வளப்பால் நல்இலக்குமணன், சக்தியத்தால் சுக்ரி வன்தானும், ஆத்மகிவே தனத்தினால் சடாய, இளப்பாச மகன்றுதனை யடைய அருள்புரியும் இராமபிராணி ராகவன் சிரிணைமலர்த்தாள் போற்றி!”
அனுமான் பக்தி செய்த முறையான சிரவணம் என்பது, இறைவனின் திரு அவதார லீலைகளில் பல கதைகளைக் கேட்டு ஆனந்திப்பது. வான்மீகன் கீர்த்தனம் என்பது, பகவானுடைய கீர்த்தி மற்றும் குணநலங்களை இராக தாளங்களுடன் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிய தேகம் புளகாங்கிதம் அடைய, நாதழுதழுக்கக் கீர்த்தனங்களால் பாடுவது, சீதை செய்த தியானம் என்பது, மனம் ஆன்மாவுடன் ஒன்றி இறைவனுடைய நாமத்தை அடிக்கடி உச்சரிப்பது. பரதனின் பரத சேவை என்பது, ஆண்டவனுடைய பாதா ரவித்தங்களுக்குப் பூஜை செய்து வணங்குவது. சபரியின் அர்ச்சனை என்பது இறைவனுடைய திரு உருவங்களை அலங்கரித்து, பூக்களால் நாமாவளிப் பாடல்களால் அர்ச்சிப்பது. வீபீஷணனின் வந்தனம் என்பது, கடவுளை நினைந்து வணங்குதல், இலக்குமணனின் அடிமை வனப்பு என்பது, என்னைப் படைத்துக் காக்கும் கடவுளே உமக்கு நான் அடிமை, எனவே தயையுடன் அருள வேண்டுமென்று சரணடைந்து பிரார்த்திப்பது. சுக்ரிவனின் சக்கியம் என்பது பெண்டு பிள்ளை பண்டு பதார்த்தத்தினிடத்தில் உள்ள ஆசைகளைவிடக் கடவுள் இடத்தில் அதிக ஆசை வைப்பது, சடாயுவின் ஆத்ம நிவேதனம் என்பது, தன்னுடைய சித்தத்தை இறைவனிடத்தில் வைத்து இதர சிந்தனைகள் ஒன்றுமில்லாமல் இருப்பது. இவ்விதம் ஒன்பது விதத்தில் இறைவனிடம் பக்தி செய்து பயன் பெறல் வேண்டும்.
‘‘சமுத்திரக் கட்டங்களில் யாத்திரிகர் போடும் காசுகளை நீரில் மூழ்கி எடுப்பதற்காதகக் காத்திருக்கும் பையன்களைப் பார்த்திருக்கிறீர்களா? அக்காசைப் பெறுவதற்கு ஒருவன் தன் மூச்சை அடக்கிக் கொண்டு, தன் தேகத்தை அம்புபோல் நேராக வைத்துக்கொண்டு மூழ்க வேண்டும். நீர்த் தேக்கத்தின் அடியிலே விழுந்திருக்கிற ஒரு சிறு நாணயம் போன்றது ஆத்மா. மனமோ சமுத்திரம் போன்றது. அதன் அடங்காத எண்ணங்கள், ஓயாத சிந்தனைகள் அலைகள் போன்றவை. அலைகளை நிறுத்தினால்தான், எங்கு மூழ்க வேண்டும் எனத் தெரிந்துகொள்ள முடியும். அடங்காத எண்ணங்கள் சாந்தடைந்தால்தான் ஆத்மாவின் பூரண நிலை தெரியும். அலைகளை நிறுத்தவேண்டுமானால், அவைகளின் மூலகாரணங்களை, எங்கிருந்து அவைகள் வருகின்றன எனக் கண்டறிய வேண்டும். அம்மாதிரியே நமக்குள் சோதித்து எங்கிருந்து எண்ணங்கள் வெளிவருகனிற்ன? எங்கிருந்து பல விஷயங்களை நோக்கிச் செல்கின்றன எனத் தெரிந்துகொள்ள வேண்டும். நீர் சலனமற்றத் தெளிவான தன்மையை அடைந்ததும் காசை எடுப்பது எளிமையான காரியம். இம்முறையில் ஆத்ம ஞானமும் ஒருமைப்பட்டுப் பனிக்கட்டி போல் உறைந்து அசைவற்றுத் தோன்றும். ஆத்ம ஞானம் அடைவதற்கு இன்றியமையாத தனித்ததொரு நிபந்தனை ஒரே இலட்சிய நோக்கோடு, ஒரே மனத்துடன் ஆத்மாவிலேயே நாட்டம் கொள்ளுவதுதான்” என அருளினார்கள் தபோவனம் தெய்வத் திரு ஞானானத்தகிரி சுவாமிகள்.
ஆகவே, நம் உள்ளக் கமலத்தில் ஆத்மாவினுள் இருக்கும் இறைவனை வெறும் உண்ணும் உணவாலும், உடுத்தும் உடையாலும் அடைதல் இயலாது. திரிகரண சுத்தியோடு நம்முன் உள்ள சோதியை நாடினால் ஞானம் கிட்டும். அரிய மானிடப் பிறப்பு எடுக்கும் ஒவ்வொருவரும் ஞானம் பெற்று, ஆத்ம அருளை அடைந்து அருளுடன் ஒன்றிக் கலந்திட வேண்டும். அவ்விதம் உடம்பினுள் உள்ள சோதியை உணர்ந்து அறிந்து பிரம்ம நிலையை அடைபவரே ஞானி ஆவார்.
‘‘ஞானி என்றால் யார்? பஞ்ச பூதங்களின் நுட்பங்களையும், உலக மாயையையும் அறிந்து தெளிந்து, அவற்றின் நிலை கண்டு இயக்கம் கண்டு, நிறை கண்டு நிதானித்து, நிர்மயமாய், நிர்மலமாய், நிம்மதியாய் அளந்து நிறுத்து, அதன் சுவை கண்டு, நிறம் கண்டு, இனம் கண்டு, ‘‘து” இவ்வளவுதானா அவை என்று உணர்ந்து, நிரந்தரமற்ற அவை தேவையில்லையென உதறித் தள்ளி அவற்றை எல்லாம் ஆட்டிப் படைக்கும் ஆதிசக்தி நீயென உணர்ந்து, உன்னையே நாடல் வேண்டும். நீ என்றும் நிர்குணமாய் நிர்மலமாய், நிர்ச்சலமாய், நிர்மதியாய், ஆதி சக்தியாய், அறிவாய் விளங்கும் பரம்பொருள். நீயின்றி நானில்லை. நற்குணமில்லை, ஊணில்லை, உறக்கமில்லை, உன்னையே சிந்திக்கும் அறிவில்லையேல் அண்ட சராசரமேயில்லை. ஆகவே, உன்னையே அடைவேன் சிந்திக்கும் நான், ஞான், நீ இரண்டும் சேர்ந்து ஒன்றிக் கலந்ததே ஞானி” என்றார்கள் கருவை தெய்வத்திரு பொதிச் சுவாமிகள்.
ஞானம் பெற உதவுவது நலம், காவி உடுத்தல், காது மூக்கைப் பொத்தி மூச்சடக்கல், காட்டுக்குச் செல்லல், பட்டினி கிடத்தல், காய்கனிகளை உண்ணல், கனல் நடுவே நடுத்தல், ஒருகாலில் நிற்றல் முதலிய வழிகளில் உடலை வருந்துதல் தவமாகாது. தவத்தின் பல்வேறு வடிவங்கள் அங்க அடையாளங்களே அவை.
‘‘தனைத்தான் அடக்கல் பேசாமை தன்னுள்ளத்தின் பரிசுத்தம் மனத்தின் அமைதி பொறுமையிவை மனிதத் தவமென்றோதுவரே”
என்கிறது கீதை. எனவே, ஐம்புலன்களை அடக்கி, உள்ளத்தைப் பரிசுத்தமாக வைத்து மன அமைதியும் பொறுமையும் மேற்கொள்வது தவம். அதற்குத் தக்க ஞானகுருவை நாடித்தேடி அடைந்து, அவர் காட்டும் வழியைப் பின்பற்ற வேண்டும்.
தனக்கு வரும் துன்பங்களை மன அமைதியுடனும், பொறுமையுடனும் தாங்கிக் கொள்ளுதல் மற்றொரு உயிருக்குத் துன்பம் செய்யாதிருத்தல் இத்தன்மைகள் இரண்டும் சேர்ந்த ஒரு பண்பே தவம் என்கிறார் வள்ளுவர்.
‘‘உற்றநோய் தோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு.”
‘‘வாணிபத்தால் தனம் வரும்; விவசாயத்தால் தானியம் வரும்; தானதருமத்தால் புகழ் வரும்; கல்வியால் அறிவு வரும், உணவு நியதியால் ஆரோக்கியம் வரும்; தவத்தால் சிவம் வரும் என்ற நியதியை மனிதன் தெரிந்து வாழ வேண்டும்”, என்கிறார் அருள்மொழியரசு திருமுருக கிருபானந்தவாரியார்.
பிறப்பதையும், இறப்பதையுமே பெரிய தொழிலாகக் கொண்டு வாழ்வதற்காக அல்ல மானிடப் பிறப்பு! அல்ல வாழ்வை விரும்பி, படாத பாடுகளைப் பட்டு, எப்படியாகிலும் மகிழ்ந்து வாழ்ந்தால் போதும் என்பதற்காக அல்ல மனிதப்பிறப்பு! மகாகவி பாரதியார் பல மக்களின் அவலநிலை குறித்துப் பராசக்தியிடம் முறையிடுகின்றார்.
‘‘தேடிச் சோறுநிதந் தின்று – பல சின்னஞ்சிறு கதைகள்பேசி – மனம் வாடித் துன்பமிக உழன்று – பிறர் வாடப்பல செயல்கள் செய்து – நரை கூடிக்கிழப் பருவ மெய்தி – கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல வேடிக்கை மனிதரைப் போலே – நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?”
மண்ணில் மனிதராய்ப் பிறந்த மக்களுள் பலர் வீணாகவே நம் காலம் எல்லாம் அவலமாக வாழ்ந்துவிட்டு மடிந்து மறையும் நிலையை நன்கு படம் பிடித்துக் காட்டுகிறார் பாரதியார். நம் நாட்டில் ஒருவரது சராசரி வயது அறுபது எனக் கொண்டால், அதில் பாதி நாட்கள் தூக்கத்தில் கழிகின்றன. பின்னைப் பிராயக் கேளிக்கை விளையாட்டுப் பேதமையில் பதினைந்து ஆண்டுகள் போயொழிகின்றன. வாலிப வயதின் மோக வாழ்வில் சில காலம் சென்று விடுகிறது. பின், தெய்வ வழிபாட்டிற்கும், திருப்பணிகள் செய்வதற்கும் கிடைக்கும் காலம் குறைவானதே. எனவே, அக்குறுகிய காலத்தை வீணாக்காமல் இறைவனின் வகையறிந்து, அவன் தொகையறிந்து, அவனிடம் சரணடைந்து, பக்தி செய்து, முக்தி அடைதல் வேண்டும். ‘‘உனக்கு இரு கண்கள், ஆனால், உனது நோக்கு ஒன்றாய் இறைவனைக் காண வேண்டும். உனக்கு இரு கால்கள். ஆனால், ஒரே காலாய் இறைவனை நோக்கிச் செல்ல வேண்டும். உனக்கு இரு கைகள். ஆனால், ஒரே கையாய் நம்பிக்கையுடன் இறைவனை நாட வேண்டும்.” எனத் திருவலம் தவத்திரு சிவானந்த மவுன சுவாமிகள் கூறுவதைக் கடைப்பிடித்து ஒழுகி, நாம் நற்கதியும், முக்தியும் பெறுதல் அவசியம்.
‘‘அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொரு நிறைந்தது”, எனத் தாயுமானார் போற்றும் இறைவனது திருவருளை நாம் பக்தி செய்து பெற்றால், நிச்சயம் நம் வினைப் பயன் வெகுண்டோடி, நாம் நம் பிறவிப் பயனான முக்தியை அடையலாம். (பக்தி பண்ணிக் கொண்டிருந்தால் முத்தி பெறலாமே எனப்பாடுகிறார் நந்தனார்) அதற்கு ஓம் சக்தி மருவத்தூர் அன்னை நமக்கு அருள்புரிவாளாக!
ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி
]]>