இயற்கையன்னை நமக்களித்துள்ள ஏராளமான கொடைகளில் ஒரு முக்கிய இடத்தைப்பிடிப்பது விதவிதமான சுவை மிகுந்த பழங்கள். ஆதி மனிதன் தீயின் பயன்பாட்டை அறியுமுன், சமைக்காத காய்கறி, இறைச்சி இவற்றை விட, தித்திக்கும் பழங்களையே மிக விரும்பியிருப்பான் என்பது உறுதி. வெறும் சுவைக்காக மட்டுமா பழங்கள்? இல்லை, பழங்கள் ஒரு முழு உணவாகக் கூடியவை, ஒவ்வொரு பழமும் –
அது சின்னச் சின்ன திராட்சையோ, மிகப்பெரிய பலாவோ, எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.
பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பழங்கள் மிக வேகமாக சீரணமாகக் கூடியவை. இவற்றைத் தனியாக உண்பதுதான் நல்லது. இல்லையெனில், மற்ற உணவுகளை உண்ணத் தொடங்குமுன் பழங்களைச் சாப்பிட வேண்டும். வேறு எதையாவது சாப்பிட்டபின் பழங்களைச் சாப்பிடுவது நல்லதல்ல. பொதுவாக இரவில் மற்ற உணவுகளைத் தவிர்த்து, பழங்களை மட்டும் உட்கொள்வது சாலச் சிறந்தது. எந்தெந்தப் பழங்களில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன? அவற்றைச் சாப்பிடுவதன் பயனென்ன? மாம்பழம்: ‘மாதா ஊட்டாத சோற்றை மாங்கனி ஊட்டும்’ என்பது பழமொழி. கனிகளின் அரசன் எனக்கருதப்படும் மாம்பழம் முக்கனியில் முதல் கனி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இதில் பழச்சர்க்கரை, புரதம் இவற்றுடன் விட்டமின் ஏ, பி, சி ஆகிய அனைத்தும் உள்ளன. மாம்பழம் இரத்த இழப்பைக் கட்டுப்படுத்தக்கூடியது. இரவில் மாம்பழமும் ஒரு குவளை பாலும் அருந்துவது உடல் நலத்தில் மிக நல்ல அபிவிருத்தியை உண்டாக்கும் என்று நம்பப்படுகிறது. மாம்பழத்தைத் தோலுடன் உண்பதே நல்லது, ஏனெனில் தோலில்தான் அதிக அளவு விட்டமின் சி காணப்படுகிறது. மேலும், கால்சியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரம் இதில் அதிக அளவு உள்ளது. பலா: தமிழகத்தில் முக்கனிகள் என்று சிறப்பித்துக் கூறப்படும் மூன்று கனிகளில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பது பலா. அதிக அளவு சாப்பிட்டால் வயிற்று வலியை உண்டாக்கும் என்று கருதப்படும் பலாப்பழத்தில் விட்டமின் ஏ,சி மற்றும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் முதலிய தாதுப்பொருட்கள் காணப்படுகின்றன. பலாக்கொட்டையின் விட்டமின் பி1 மற்றும் பி2 அடங்கியுள்ளன. நன்கு பழுத்த பலாச்சுளைகளை மட்டுமே உண்ணவேண்டும், பழுக்காத பலாப்பழம் மற்றும் சமைக்காத பலாக்கொட்டையைச் சாப்பிடுவது செரிமானத்தைப்பாதிக்கக்கூடியது. வாழை: முக்கனிகளில் மூன்றாவதாகக்குறிப்பிடப்படும் வாழை ‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி (புகழ்) பெரிது’ என்ற பழமொழியைப் போல, விலை மலிவானதாக, ஏழைமக்களும் எளிதில் வாங்கி உண்ணக்கூடியதாக இருப்பினும் பயன்களில், அடங்கியுள்ள சத்துக்களில் மற்ற பல பழங்களுக்கு சற்றும் சளைத்ததில்லை. மூலநோயினையும் மலச்சிக்கலையும் எளிதில் தீர்க்கக் கூடியதான இப்பழம், அனைத்து விட்டமின்கள், தாதுப்பொருட்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக ஏராளமான பொட்டாசியம் இதில் அடங்கியுள்ளது. கண்பார்வைக்கோளாறுகளைத் தீர்க்கக் கூடியது என்று இப்பழம் கருதப்படுகிறது. வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால் உடல் பருமனை அதிகப்படுத்தும் என்பதால், எடைக்குறைப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் இதனை அதிக அளவு உட்கொள்ளக்கூடாது. பப்பாளி : பப்பாளியில், பழச்சர்க்கரைகளான குளுகோசும், ஃபிரக்டோசும் சம அளவில் காணப்படுகின்றன. நன்கு கனிந்த பப்பாளியில் ஏராளமான விட்டமின் சி, விட்டமின் ஏ, குறைந்த அளவில் விட்டமின் பி1, பி2 மற்றும் செரிமானத்துக்கு உதவும் பப்பாயின் என்ற நொதியப்பொருள் ஆகியவை அடங்கியுள்ளன. வயிற்றுக்கடுப்பு, மலச்சிக்கல், செரிமானமின்மை இவற்றுக்குக்கு அருமருந்தாகத் திகழும் பப்பாளி, கல்லீரல், கணைய மற்று சிறுநீரக நோய்களைக்கட்டுப்படுத்துவதுடன், பெண்களுக்கு மாதவிலக்கின் பொழுது ஏற்படும் சிக்கல்களைப் போக்கவும் உதவுகிறது. பழுக்காத பப்பாளியைச் சாப்பிட்டால், குடல்புழுக்கள் வெளியேறும். இதில் உள்ள கார்பின், பைப்ரின் போன்றவை இதயத்திற்கும், இரத்தம் உறைதலுக்கும் துணைபுரிகிறது. மாதுளை: இரும்புச் சத்து அதிகமுள்ள மாதுளை, இரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிக அளவு உற்பத்தி செய்யத் துணை புரிகிறது. உடலில் ஆக்சிஜனேற்றத்தைத் தடுப்பதில் பங்கு வகிக்கிறது. இதய நோய்களைக்கட்டுப்படுத்துவதிலும், கொழுப்புச்சத்தினைக்குறைப்பதிலும் முக்கியப்பங்காற்றும் மாதுளை, பெண்களுக்கு மார்பகப்புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடிய தன்மை படைத்தது. ஆப்பிள் : ‘An apple a day, keeps the Doctor away’ என்னும் ஆங்கிலப்பழமொழி, ஆப்பிளின் பெருமையை விளக்கும். இதில் விட்டமின் சி குறைவுதான் எனினும், இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆப்பிளில் அடங்கியுள்ள சில வேதிப்பொருட்கள் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கக்கூடியவை. இது புற்றுநோயினைக்கட்டுப்படுத்தக்கூடியது என்பதை பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கலோரி குறைவு (Negative Calorie) என்பதால் உடல் எடையினைக் கட்டுப்படுத்துவதற்கும் இது உதவுகிறது. ஆப்பிளில் உள்ள ஃபீனால் வகை வேதிமங்கள் மூளையின் நரம்பு மண்டலத்தைப் பாதுகாப்பதால், அல்சைமர், பார்கின்சன் நோய்களில் இருந்தும் ஆப்பிள் சாப்பிடுவது மூலம் விடுபடலாம். திராட்சை: கறுப்பு மற்றும் பச்சை நிறத்தில் கிடைக்கும் திராட்சையில் பலவகைகள் உண்டு. இது பெரும்பாலும் நீராலும், மாவுப்பொருட்கள் மற்றும் சியல் தாதுப்பொருட்களை உள்ளடக்கியதாவும் உள்ளது. திராட்சையில் ஃபிரக்டோஸ், டெக்ஸ்ட்ரோஸ், கார்போஹைடிரேட் மற்றும் மாலிக் அமிலம், சிட்ரிிக் அமிலம், இரும்புச்சத்து, கால்சியம், தாமிரம், பொட்டாசியம் முதலியனவும் அடங்கியுள்ளன. இது இரும்புச்சத்து அதிகம் உள்ளமையால், பெண்களுக்குப் பொதுவாக ஏற்படும் மாதாந்திரத்தொல்லைகளைக் கட்டுப்படுத்துவதுடன் உடலுக்கு பலம் தருகிறது. அடிக்கடி சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் உலர்திராட்சையை மட்டுமே உண்பது நல்லது, திராட்சை எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியைத் தருவதுடன், இதயத்துடிப்பை சீராக்கவும் உதவுகிறது. அத்தி, துரியன், நெல்லி, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, நாவல், கொய்யா, அன்னாசி, எலுமிச்சை என்று இன்னும் பல பழங்களைப்பற்றியும், அவற்றால் விளையும் இப்பகுதியில் தொடர்ந்து காணலாம்.
நன்றி
eelanation.com