பாகம் – 3
ஊழ்வினைப் பற்றி உணர்த்திய படலம்
மனித வாழ்வில் இன்ப துன்பங்கள்:
வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்ததாகவே இருக்கிறது! பாமரனுக்கும் சரி! படிப்பாளிக்கும் சரி! ஏழைக்கும் – பணக்காரனுக்கும் இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கையே அமைகின்றது! எல்லா மனிதனும் இன்பம் நாடித்தான் அலைகின்றான். ஒவ்வொருவனுடைய இன்ப துன்பத்துக்கும் காரணம் அவனவன் செய்த வினைப்பயன் என்பிறது இந்து மதம்! ஊழ்வினையின் ஆற்றலை சமணம் ஏற்றுக்கொள்கிறது. புத்தமதம் ஒப்புக்கொள்கிறது; கிறித்துவ மதம் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படியானால் ஏழை, பணக்காரன், மூடன், அறிஞன் என்ற வேறுபாடு வந்தது எப்படி? மனிதரிடையே அறிவும் ஆற்றலும் வெவ்வேறு வகையில் அமைந்து கிடக்கின்றனவே காரணம் என்ன? கருணையுள்ள கடவுள் – உலகைப் படைத்த கடவுள் மனிதர்களிடையே இவ்வாறு ஏற்றத் தாழ்வுகளைப் படைப்பானேன் என்று கேட்டால், கடவுளையும் அவன் படைப்பு பற்றியும் நாம் ஆராய முடியாது; குயவனிடம் கிடைத்த மண் பல்வேறு பாண்டங்களாகப் படைக்கப்பட்டது போல படைப்பினும் பலவாறு ஏற்றத்தாழ்வுகள் அமைந்துள்ளன. கடவுளை நம்பிச் சரணடைந்து நன்மை பெறுவதே மனிதன் செய்ய வேண்டிய கடமை என்கிறது கிறித்துவ மதம்!
ஊழ்வினை பற்றி இந்து சமயம்:
வானத்துச் சூரியனும், சந்திரனும், விண்மீன் கூட்டமும் – இந்தப் பூமிப்பந்தும் அண்ட சராசரமும் ஏதோ ஓர் ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு இயங்குகின்றன. ஏதோ ஓர் விதிக்கும் கட்டுப்பட்டுச் சுற்றுகின்றன. மனித வாழ்க்கையின் இன்ப – துன்பங்கட்கும் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். மனிதனுடைய இன்ப துன்பங்கட்கு அவனவன் செய்த நல்வினையும் தீவினையுமே காரணங்கள். எல்லா ஆன்மாக்கட்கும் இன்ப, துன்ப அனுபவங்களைக் கொடுத்துத் தன் திருவடியில் சேர்த்துக் கொள்வதே பரம்பொருளின் நோக்கம். ஆன்மாக்களைப் பக்குவப்படுத்துவதற்காகவே இந்த இன்ப – துன்ப அனுபவங்கள்! அவை கூடப்பரம் பொருளின் கருணையால்தான் கொடுக்கப்படுகின்றன என்று இந்துமத தத்துவ நூல்கள் கூறுகின்றன. இன்ப – துன்பவங்களை அனுபவிப்பது அவரவர் உடம்பும் மனமுமே தவிர அவரவர் ஆன்மா அனுபவிப்பதில்லை. அவரவர் செய்கின்ற செயல்களையெல்லாம் அவரவர்க்குள்ளிருக்கும் ஆன்மா சாட்சியாக நின்று பார்த்துக்கொண்டு இருக்கின்றது. எல்லாவற்றுள்ளும் இருக்கின்ற பரம்பொருள் ஒவ்வொரு மனிதன் உள்ளேயும் ஆன்மாவாக இருக்கிறது என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன.
முரண்பாடுகள் ஏன்?
நல்லது செய்தால் நன்மைவரும்! தீயது செய்தால் துன்பம் வரும் என்பது கடவுளின் விதியானால் நல்லவர்கள் எல்லாம் படாதபாடுபட்டுத் துன்பங்களில் சிக்கி அவலம் அடைகின்றார்களே காரணம் என்ன?
தீயவர்களும் – கொடியவர்களும் உல்லாசமாக வாழ்கின்றார்களே காரணம் என்ன? என்று சிந்தித்த பெரியவர்கள் இதற்கும் ஊழ்வினையே காரணமாக இருக்க வேண்டும் என்றார்கள். முற்பிறவியில் ‘‘புண்ணிய கணக்கு” இவர்கள்பால் இருப்பதால் இத்தகையவர்கட்கு இந்த வாய்ப்பு! புண்ணியப் பலன் தீரும்வரை இவர்களை ஒன்றும் செய்ய இயலாது என்று நினைத்தனர். இத்தகையவர்களால் துன்பம் ஏற்படும் காலத்தில் தெய்வத்தைச் சரணடைந்து துன்பத்திலிருந்து விடுபட எண்ணினர்.
ஊழ்வினையை நம்பாத அறிவு ஜீவிகள்:
ஆன்மா என ஒன்று இல்லை; ஊழ் என்பதும்; பிறவி என்பதும் சமயவாதிகள் கட்டிவிட்ட கற்பனை என்று பேசுகின்றனர். இவர்கள் பேசுகின்ற வாதங்களை எல்லாம் அன்றே ‘‘லோகாதயம்” என்ற நாத்திக மதம் பேசிப் பார்த்தது! ஆன்மாவை நம்புகிற சில மதங்கள் ஊழ்வினையை ஒப்புக் கொண்டன. கடவுளை ஒப்புக் கொள்ளவில்லை. சமணமும் பௌத்தமும் கடவுளை ஒப்புக்கொள்ளவில்லை. ஊழ்வினையை நம்புகின்றன. சில அறிவு ஜீவிகள், ஊழ்வினையை ஒப்புக்கொள்வதில்லை. ‘‘இந்த உலகத்தில் வல்லமையுள்ள பொருள்தான் வாழும்! இதுதான் இயற்கை நியதி! டார்வின் சொன்ன “Survival of the filtteet” என்பது தான் உண்மை!” என்கின்றனர். அமீபா என்ற சின்ன உயிரியிலிருந்தே இந்த அளவுக்கு மனிதன் வளர்ந்திருக்கின்றான் வாழ்க்கைப் போராட்டத்தில் இன்பமும் – துன்பமும் நியதி! வலிமையான புலிக்கு வலிமையற்ற ஆடு இரையாக வேண்டியதுதான்! மனித குலத்திலும் இதே கதைதான்! என்று அழகாக வாதாடுகின்றனர். அவனும் அப்படித்தான் ஒரு காலத்தில் நினைத்தான். வல்லமையுள்ளவனுக்குத்தான் இந்த உலகம் என்றால் நீதி, நேர்மை, அறம், ஒழுக்கம் இவையெல்லாம் எதற்காக? என்று அடுத்த கேள்வி பிறக்கிறது! மனிதர்கள் தாங்கள் சமுதாயமாகச் சேர்ந்து வாழ்வதற்குத் தாமே படைத்துக் கொண்ட சட்டங்களும் கட்டுப்பாடுகளுமே இந்த நீதி! அறம் எல்லாம்! எனவே வலிமையுள்ளவனுக்குத்தான் உலகம்! பணபலமும் – அறிவுபலமும் – படை பலமும் இருக்கின்றவர்கட்கு மட்டும்தான்; இந்த உலகம்! என்றால் வலிமை வல்லமை உள்ளவனுக்குத்தான் இந்த உலகம்! என்றாகிவிடும். இப்படியெல்லாம் உள்ளவர் மட்டும்தானே வாழ முடியும்? உலகியலில் இந்த வலிமையாளர்கள் நிலையான வெற்றியைப் பெறவில்லையே! காலம் அவர்களுக்கும் பரிதாபமான முடிவைத் தருகின்றதே! என்றெல்லாம் அவன் குழம்பியது உண்டு! தடுமாறியது உண்டு!
அறிவு – ஆற்றல் – திறமை – வசதி – வாய்ப்பு அனைத்தும் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டுக் காணப்படுகின்றன! கடவுளையே நம்பாத மனிதர்கள் உல்லாசமாக வாழ்கிறார்கள்! கடவுளை நம்புபவர்கள் சோதனையிலும் வேதனையிலும் சாகின்றார்கள்! ஊரையடித்து உலையில் போடுபவனுக்கெல்லாம் சமுதாயத்தில் செல்வாக்கு இருக்கிறது. கடவுளைப்பற்றி நாக்கிழியப் பேசும் சில பெரிய மனிதர்களின் அந்தரங்க வாழ்க்கை வேறு விதமாக இருக்கின்றது.
இந்த முரண்பாடான நிலை அவனைப் பல நேரங்களில் குழப்பியதுண்டு. அம்மாவை அவன் நாடியதால் தெய்வ நம்பிக்கை ஏற்பட்டது. ஊழ்வினை பற்றி அவன் அமமாவிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும் என்று ஆசைப்பட்டான். அம்மாவிடம் இதுகுறித்து ஒருமுறை கேட்டான்.
‘‘ஊழ்வினை” பற்றி அம்மாவிடம் கேட்டதும்: அறிந்ததும்:
‘‘அம்மா! ஊழ்வினை ஊழ்வினை என்கின்றாயே! அந்த ஊழ்வினை எங்களுக்கு எப்படி வருகின்றது? விளக்கமாகச் சொல்ல வேண்டும்” என்று முறையிட்டான்.
அம்மா சொன்னாள்:-
‘‘மகனே! உ-ஊ: உ எழுத்து நீண்டால் ஊ ஆகின்றது. தாயின் வயிற்றிலிருந்து மனிதன் பிறக்கின்றான். அப்போது தனக்கு உணவு வேண்டும், உடை வேண்டும் என்று முறையிட்டுக் கேட்கத் தெரியவில்லை. தாயே பசியறிந்து உணவூட்டுகிறாள்; கவனித்துக் கொள்கிறாள் அல்லவா? குழந்தை வளர்கிறான்! மனிதனாகிறான். அவன் வளர வளர உள்ளம் நீளுகிறது – விரிகிறது. அது வேண்டும்! இது வேண்டும் என்று அலைகிறது. ஆசைப்பட்டவற்றையெல்லாம் அடைய நினைக்கின்றது; உள்ளம் விரிய விரிய நீள நீள ஆசைகளும் தேவைகளும் பெருகுகின்றன் ஆசைகளும் தேவைகளும் பெருகப் பெருக அவற்றை அடைய வேண்டிக் கர்ம வினைகள் பெருகுகின்றன! ஊழ்வினைகள் சேர்கின்றன!” என்று சொல்லி முடித்தாள்:
அம்மாவின் விளக்கமும்: அவன் பெற்ற தெளிவும்:
ஊழ்வினையைப் பற்றி அம்மா சொன்ன விளக்கத்தால் அவன் சிறிது தெளிவு பெற்றான். ஆக, ஊழ்வினை திரள்வதற்கு மணம்தான் முதல் காரணம். மனம் பலவற்றை அடைய எண்ணி ஆசைப்படுகிறது! அதற்கான முயற்சிகளில் ஈடுபடும் போது கர்மங்கள் பெருகுகின்றன! ஒவ்வொரு மனிதனும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய தேவைகளை அடைய நியாயமாக ஆசைப்படலாம்! முயற்சி செய்யலாம்! தவறு இல்லை. இந்தத் தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போனால்…… அடிப்படைத் தேவைகள் கிடைத்த பிறகும் இந்த மனம் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று அலைகிறதே! அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து வைக்க ஆலாய்ப் பறக்கின்றதே? கூடப் பிறந்த அண்ணன் தம்பிகளையே ஏமாற்றத் தூண்டுகின்றதே! வாய்ப்பு கிடைத்தால் அவனவன் முயற்சி வெற்றி பெறுகிறது! இப்படி மனம் விரிந்த ஆசை வலைகளில் அகப்பட்டுப் பாவங்களைப் பெருக்கிக் கொண்டு வாழ்கின்றபோது தெய்வ நீதி சும்மா இருக்குமா? தீய நினைப்பும் – தீய காரியங்களும் என்றுமே வெற்றிபெற தெய்வம் விடுவதில்லை. அப்படியே தற்காலிக வெற்றிக கிடைத்தாலும் தீமை பரிதாபமான முடிவைத்தான் சந்திக்கின்றது!
துன்பங்கட்குக் காரணம்:
இவ்வுலக மக்களின் துன்பங்கட்கு எல்லாம் காரணம் ஆசைதான். ஆகவே, ஆசையை விட்டால் முந்தி பெறலாம் என்றார் புத்தர். ஆசைக்கு அடித்தளமாக இருப்பது எது? மனம்! மனம் நினைக்கின்ற நினைப்பு – பேசுகின்ற சொற்கள்! அதனால் செய்யப்படும் செயல் ஆக மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றாலுமே செய்யப்படுகின்ற விளைவுகள் நல்வினை என்றோ தீவினையென்றோ ஆகின்றன! இன்பமும் – துன்பமும் வந்து நேர்கின்றன! ஆக இன்ப, துன்பங்கட்குள் அகப்பட்டுக் கொண்டு தொடர்ச்சியாக வாழ்வதுதான் வாழ்க்கையின் நோக்கமா? இல்லை! வாழ்க்கையில் இன்ப, துன்பங்களிலிருந்து தப்பிக்கப் பரம்பொருளைச் சார்வதுதான் வழி! நல்வினை செய்த புண்ணியத்தால் தெய்வ உலகு கிடைக்கும்; அந்தப் புண்ணியப் பலனை நுகர்ந்த பிறகு மீண்டும் மனிதனாகப் பிறந்துதான் கடவுளை அடைய வேண்டும்; தீவினை புரிந்த பாவத்தால் இருள் உலகம் அடைந்து மீண்டும் மனிதனாகப் பிறந்துதான் கடவுளை அடைய வேண்டும்! கடவுளை அடையும் நோக்கம்தான் வீடு பேறு! இந்த ஞானம் வந்து முயற்சிக்கின்றவரை மீண்டும் பிறப்பு! மீண்டும் இறப்பு! இந்தத் தொடர்கதை நடந்து கொண்டே போக வேண்டியதுதான்! ஆகவே, மானிடப் பிறவிக்கு அவர்கள் செய்த வினையின் திரட்சியே காரணம்! ‘‘வினைப்போகமே இத்தேகம் கண்டாய்” என்று சொன்னார் ஒரு பெரியவர்!
கீதை தரும் விளக்கம்:
ஒருவன் செய்கின்ற கருமங்களுக்கு ஏற்ப இன்ப – துன்பம் அமைகின்றன என்கிறாய், அதனால் பிறவிகள் உண்டாகும் என்கின்றாய்! எனக்கு ஊழ்வினையே வந்து சேராமல் இருக்க என்ன வழி என்று அர்ச்சுனன் கண்ணனைக் கேட்கிறான்! ‘‘கரிம பலனைத் துறந்துவிடு; செய்யும் செயலனைத்தும் என்னை நினைந்தே செய்! பயனை எதிர்பார்க்காதே பலன் கருதாமல் கடமைகளைச் செய்” ஊழ்வினை பற்றாமல் என்னை வந்து அடைய இதுதான் வழி என்கின்றான் கண்ணன்.
பரம்பொருள்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நடப்பன எல்லாம் கடவுள் செயலே என்றெண்ணி விருப்பு வெறுப்பற்றுக் கடமைகளைச் செய்து கொண்டு போவது தான் சிறந்தவழி! இந்த மனநிலை எவனக்கு வருகின்றதோ அவன் தெய்வத்தை நெருங்குகின்றான் என்று பொருள்! அவன் துன்பத்தால் துவள்வதில்லை; இன்பங்கண்டு கூத்தாடுவதில்லை. மனம் எண்ணுகின்ற எண்ணங்கட்கு இவ்வளவு ஆற்றல் உண்டா என்று சிலர் நினைக்கக்கூடும்? எண்ணங்கள் வலிமையானவை. ‘‘ஆலம் விதை மிக நுண்ணியதுதான்! ஆனால் அந்தச் சிறிய விதைகூட ஒரு பெரிய கல் கட்டடத்தில் இருந்து முளை விட்டுப் பிளவு படுத்துகிறதல்லவா? அது போன்றே மனிதன் எண்ணங்களும் ஊழ்வினைக்குக் காரணம் ஆகின்றன” என்கிறார் இராமகிருஷ்ணர். ‘‘உள்ளம் விரிய – விரிய ஊழ்வினைகள் சேர்கின்றன” என்று அம்மா சொன்னாளே அதன் விளக்கம் கீதை படித்தபோது தான் சிறிது விளக்கமாயிற்று. மிகப் பெரிய தத்துவத்தை அவனது சிற்றறிவுக்கு எட்டும் அளவில் அம்மா எளிமையாகச் சொன்னாள்.
விதை: வினை:
அன்பர் ஒருவரது வீட்டில் நோயுற்றுப் படுத்த படுக்கையாக இருந்தார். அவரால் ஆலயத்துக்கு வரமுடியாது. ஆகவே, அடிகளாரை வீட்டுக்கு வரவழைத்துச் சென்று ‘‘மின்னும் புவிக்கெலாம்” பாரி அம்மனை எழுந்தருளச் செய்து வீட்டில் இருக்கும் நோயாளியை மந்தரித்துக் குணப்படுத்த வேண்டும். இது அந்த அன்பரின் ஆவல்! அம்மாவிடம் இது குறித்துத் தொண்டர்கள் சிலர் அனுமதி கேட்டனர். அம்மா சொன்னாள். ‘‘மகனே! விதை – விளை, விதைதான் நிலத்தைத் தேடிப்போக வேண்டும், விதையை நோக்கி நிலம் வராது; வினைக்குரியவன்தான் தெய்வத்தை நோக்கி வர வேண்டும்; தெய்வம் வினைக்குரியவனைத் தேடி வர வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது” என்று சொன்னாள்.
வினைப்பயனை அனுபவிக்கச் செய்துவரும் இந்த அம்மா, தன்னை நாடி வந்து விட்ட அன்பர்களை தீவினைப் பயனிலிருந்து எவ்வாறு மீட்கின்றாள் என்ற உண்மையைச் சிலரது அனுபவங்கள் அவனுக்கு உணர்த்தின.
தொடரும்…
ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 6 (1982) பக்கம்: 20-22
]]>