கடவுள் என்றால் யார்? கடவுகின்றவர் கடவுள், கடவுதல் என்றால் செலுத்துதல். உடம்பை உயிர் செலுத்துகின்றது. உயிரைக் கடவுள் செலுத்துகின்றார். காரை ஓட்டுநர் செலுத்துகின்றார். ஓட்டுநரை முதலாளி செலுத்துகின்றார். அங்ஙனம் கடவுள் உயிருக்கு உயிராய் உன்நின்று நம்மைச் செலுத்துகின்றார். ‘‘நீராயுருக்கி என் ஆருயிராய் நின்றானே” என்கிறார் மாணிக்கவாசகர்.
யாவும் கடந்து நிற்கும் கடவுளைக் கண்டதுண்டா? கடவுள் எப்படிப்பட்டவர்? கடவுள் கறுப்பா, சிவப்பா? இப்படிப்பட்ட வினாக்கள் நம்முன் சாதாரணமாய் எழும்.
ஒரு சமயம் ஒரு பெரியவர் ஊருக்கு ஒதுக்கமாய் ஒரு அரச மரத்தின்கீழ் அமர்ந்து, கண்மூடிக் கடவுளைத் தியானம் செய்து கொண்டிருந்தார். அவ்வழியே சென்ற ஒரு இளைஞன் அவன் தன்னை ஒரு அறிவாளி, பகுத்தறிவு படைத்த முற்போக்குவாதி எனக் கருதுபவன்.
‘‘ஐயா பெரியவரே! ஏன் உட்கார்ந்துகொண்டே உறங்குகிறீர்! சுகமாய்த் தரையில் நன்றாய்ப் படுத்து உறங்கலாகாதா?” என வினாவினான் இளைஞன்.
பெரியவர் கண்விழ்த்து, ‘‘தம்பி! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்,” என்றார்.
‘‘என்ன! கடவுளைத் தியானிக்கிறீரா? கடவுள் யார்? எங்கு இருக்கிறார்? எப்படிப்பட்டவர்! கறுப்பா, சிவப்பா! நீர் கண்டதுண்டா?” எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டான் இளைஞன்.
‘‘தம்பி! உன்கையில் இருப்பது என்ன!” எனக் கேட்டார் பெரியவர்.
‘‘இது தேன் பாட்டில்,” என்றான் இளைஞன்.
‘‘தம்பி! தேன் இனிக்குமா, கசக்குமா?” என வினவினார் பெரியவர்.
‘‘என்ன, பெரியவரே! தேன் இனிக்கும் என்று அனைவரும் அறிவர். அதிலென்ன சந்தேகம்?” என்றான் இளைஞன்.
‘‘தம்பி! தேன் இனிக்கும் என்றாய் அந்த இனிப்பு எப்படி இருக்கும்? கறுப்பா, சிவப்பா? கொஞ்சம் விளக்கிக் கூறமுடியுமா? எனக் கேட்டார் பெரியவர்.
‘‘ஐயா! அதெப்படி முடியும்! இனிப்பை உண்டால்தான் உணர முடியும்” என்றான் பகுத்தறிவு படைத்த இளைஞன்.
பெரியவர் புன்னகைபுரிந்து ‘‘தம்பி! சடப்பொருளான தேனின் இனிமையே உரைக்க இயலாது, உண்டால்தான் உணரமுடியும் என்கிறாயே; எங்கும், எதிலும் வியாபித்து ஞானப்பரம்பொருளாய் உயிரினுள்ளே விளங்கும் இறைவனை எங்ஙனம் வாயால் எடுத்துரைக்க இயலும்! அனுபவித்தால்தான் இறையை உணர முடியும். கடவுளைக் கண்டவர் விண்டதில்லை! விண்டவர் கண்டதில்லை,” என அறிவுரை வழங்கினார் அப்பெரியவர்.
இவ்விதம் நம் ஊனிலும், உள்ளத்திலும், உயிரிலும் உறையும் உத்தமனைக் காணுவது நம் கடன். அடுத்து முயன்று அந்த உத்தமனைக் கண்டு உணர்ந்தால், அவர் நம்மைக் கைவிடமாட்டார். இந்த உண்மையை விளக்க, திருவலம், தவத்திரு, சிவானந்தமவுன சுவாமிகள் பின்வரும் கதையைக் கூறினார்.
‘‘நீலக்கடல் மத்தியில் ஒரு கப்பல் போய்க்கொண்டிருந்தது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரே தண்ணிர்ப் பரப்புதான் அண்மையில் கரை எதுவும் தென்படவில்லை. அமைதியாய்க் கப்பல் ஆடியாடிக் கடல்நீரைக் கிழித்துக்கொண்டு விரைந்து ஓடியது. அந்த அமைதியையும், கப்பல் பயணிகளின் நிம்மதியையும் குலைக்க, அனைவரையும் கதிகலங்கச் செய்ய எங்கிருந்தோ திடீரெனப் பேய்க்காற்று புயலாய்வீசத் தொடங்கியது. அலைகளின் கொந்தளிப்பு கட்டுக்கு அடங்காது மிகுந்தது. ஆகாயத்துக்குக் கருமேகமும், நீலக் கடலும் ஒன்றிக் காட்சி அளித்தது. கொடிய புயற்காற்றுடன் கொட்டும் மழையும் சேர்ந்து கொண்டது. எனவே, உதைபட்ட கால்பந்துபோல் கப்பல் கடலில் தத்தளித்தது. இறுதியில் கப்பல் உடைந்து சுக்குநூறாய்ச் சிதைந்து கடலில் மூழ்கியது! கப்பலில் இருந்த அனைவரும் கடலில் மூழ்கி மாண்டனர். ஒரேஒருவரைத் தவிர! அந்தத் தனிநபர் மட்டும் எப்படியோ விதிவசத்தால் உயிர்தப்பி, சிரமத்துடன் நீந்திக் கரை சேர்ந்தார்.
அந்தத் தனிநபர் உயிருடன் கரை சேர்ந்தது மனிதர்களே இல்லாத ஒரு திக்கற்ற தீவு. அந்தத்தீவில் கைக்குக் கிடைத்த பொருள்களைக் கொண்டு ஒருவிதமாய்க் குடிசை ஒன்று கட்டி அதில் வசித்தார்.
மூழ்கிய கப்பலில் இருந்து முடிந்தவரை தன்னுடன் எடுத்துவந்த சாமான்களை அந்தச் சிறு குடிசையில் வைத்துப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தார்.
தன்னை எப்படியும் காத்தருள வேண்டுமெனத் தினந்தோறும் அவர் கடவுளைப் பிரார்த்தனை செய்தார்.
‘‘கடவுளே! ஏதாவது ஒரு கப்பல் இந்தப் பக்கம் வந்து என்னை ஏற்றிக் கொண்டு போய் என் தாய்நாட்டில் சேர்த்துவிடவேண்டும். அதற்கு உன் அருளைத்தான் நம்பி இருக்கிறேன். கொஞ்சம் கருணை காட்டு கடவுளே!” என்று தினமும் வேண்டிக்கொண்டார். இவ்விதமாகப் பிரார்த்தனையிலேயே அவரது நாட்கள் கழிந்தன.
வழக்கம் போல் காலையில் உணவு தேடி அவர் காட்டுக்குள் சென்றார். காடெல்லாம் அலைந்து திரிந்து அலுத்து மாலையில் தான் குடிசைக்குத் திரும்பினார். வந்து அவர் அங்கு கண்ட காட்சி அவரைக் கதிகலங்க வைத்தது. அவரது குடிசையும், அதிலுள்ள கொஞ்சப் பொருள்களும் தீக்கு இரையாகிச் சாம்பல் குவியலாகக் காட்சி அளித்தது! பாவம்! அவர் என்ன செய்வார்? பதறித்துடித்தார்.
‘‘அட, கடவுளே! இத்தனை நாளும் உன் அருளை நாடி வேண்டிப் பிரார்த்தனை செய்ததற்கு நான் கண்ட பலன் இதுதானா? ஆண்டவனே, உனக்குக் கண் இல்லையா? கருணை என்பதே கிடையாதா? உயிர்க்ளுக்கு இரங்கும் உள்ளமே உனக்கு இல்லையா? மனிதரே இல்லாத இத்தீவில் என்னை இப்படி வஞ்சித்து, சோதனை செய்து, வேதனைக்குள்ளாக்கி விட்டாயே! உனக்கே இது நியாயமா? நீதியா? முறையா?” என்று மனம் போனபடி எல்லாம் தெய்வ நிந்தனை செய்யத் தொடங்கினார். அழுது புலம்பினார்.
அப்போது மிகவும் ஆச்சரியமான நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்தது. கப்பல் ஒன்று அவர் இருந்த தீவின் கரையோரமாக வந்து நின்றது.
கப்பலில் இருந்து அதன் தலைமை மாலுமி இறங்கிக் கரைக்கு வந்தார். அந்தத் தீவில் திக்கற்று அனாதையாக நின்று கொண்டிருந்தவரைக் கனிவுடன் பார்த்தார். புன்னகை புரிந்தார். ‘‘இங்கே அபாயத்தை அறிவிக்கும் புகை தெரிந்தது. சரிதான், யாரோ மனிதரில்லாத இத்தீவின் தனிமையில் சிக்கித் தவிக்கிறார்கள் போலத் தெரிகிறது. நாம் சென்று காப்பாற்றுவோம்,” என்றெண்ணி அவசரமாக இங்கு வந்தோம். ‘‘இதோ உங்களைக் கண்டோம். எல்லாம் கடவுளின் திருவருள்” என்றார் அந்தக் கப்பல் தலைவர்.
வீணாக அவசரப்பட்டு ஆத்திரத்தில் கடவுள் நிந்தனை செய்த தன் மடத்தனத்துக்கு அந்த ஆள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினார். தன் மனத்துக்குள்ளேயே கடவுளுக்கு மனமார நன்றி தெரிவித்தார். தன்னைக் காப்பாற்ற வந்த கப்பல் தலைவருக்கு வெளிப்படையாக உளமார்ந்த நன்றி கூறினார். கப்பல் தலைவரோ இப்படி ஒரு திக்கற்ற மனிதருக்கு உதவும் வாய்ப்புக் கிடைத்ததே என்று மிக்க மகிழ்ந்தார்.
ஆகவே, கடவுள மனப்பூர்வமாக நம்பினால் அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். நமக்குச் சிறுசிறு துன்பங்கள் நேர்தால் வேறு ஏதோ ஒரு பெரிய துன்பத்திலிருந்து நம்மைக் காக்கவே இச்சிறு துன்பங்களைக் கொடுத்திருக்கிறார் கடவுள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். என்றும் கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
ஓம் சக்தி!
நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 6 (1982) பக்கம்: 17-19
]]>