வினைப்போகமும் திருவருளும்

மனிதனாகப் பிறந்துவிட்டால் நல்வினை தீவினை என்ற இரண்டின் பிடியில் அகப்பட்டுத்தான் தீரவேண்டும் என்று நம்புகிற சமயங்களுடன் இந்து சமயமும், சைன சமயமும் முக்கியமானவை, என்றாலும் இந்த வினைகளின் தோற்றம்; இவை ஆன்மாவைப் பாதிக்கும் முறை என்ற கொள்கைகளில் இவை இரண்டு சமயங்கட்கும் கருத்து வேறுபாடு உண்டு. உயிர்கள், இறைவன், உலகம் என்ற மூன்றையும் ஏற்றுக்கொள்ளும் இந்து சமயம் வினையை அனுபவிக்குமாறு ஆன்மாக்களை ஏவுகின்றவன் இறைவன் என்று கூறுகின்றது. இங்கு இந்து சமயம் என்று குறிப்பிடுவது சைவம், வைணவம், சாக்தம் என்பவற்றையும் அவற்றின் உட்கிளைகளையுமேயாகும். சைன சமயம் கடவுள் என்ற ஒன்றை ஏற்றுக்கொள்வதில்லை. எனவே கடவுள் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் சமயங்களின் அடிப்படையில் நின்று வினைபற்றியும், அவற்றின் ஆற்றல் பற்றியும், இறைவன் திருவருள் பற்றியும் ஒரு சிறிது சிந்திக்கலாம்.

ஒரு மனிதன் செய்கின்ற செயல்கள் நினைக்கின்ற நினைவுகள் என்பவற்றின் எதிர் விளைவுகளே வினைகள் எனப்படும். வினை என்ற தமிழ்ச் சொல்லுக்குக் ‘‘காரியம்” என்பது பொருளாகும். ஒரு காரியம் (வினை) நடைபெற்றால் அதன் விளைவு ஒன்று இருக்கத்தானே செய்யும். சாதாரண பௌதிக உலகில் கூட இதைக் காண முடிகிறது. ஒரு கல்லை மேலே எறிந்தால் அதே வேகத்தில் திரும்பி வருகிறது. தண்ணீரில் ஒரு படகின் நுனியில் அமர்ந்து கொண்டு எதிரே உள்ள படகைக் கையினால் தள்ளிப் பாருங்கள். தள்ளப்பட்ட படகு போகும் திசைக்கு எதிர்த் திசையில் நீங்கள் அமர்ந்திருக்கும் படகும் போகும். எதிர்ப் படகைத்தானே தள்ளினீர்கள்! உங்கள் படகை யாரும் தள்ளவில்லையே! அப்படி இருக்க உங்கள் படகு ஏன் நகர வேண்டும்? இதனைத் தான் நீயூட்டன் என்ற விஞ்ஞானி கண்ட இடப்பெயர்ச்சிச் சட்டங்கள் மூன்றினுள் (Newton’s three laws of motion) மூன்றாவது சட்டம் எனக் கூறுகிறோம். ஒவ்வொரு செயலுக்கும் அதே அளவான எதிர்ச் செயல் உண்டு (Every action has got an equal and opposite Reaction) என்பதெ அந்தப் பௌதிகச் சட்டம்.

பௌதிக உலகின் இந்தச் சட்டம் பிற செயல்கட்கும் பொருந்தும். நாம் ஒருவரை வெறுத்தால் அவரும் நம்மை வெறுப்பார்; ஏசினால் அவரும் ஏசுவார். இது அனுபவ உண்மை. வினைபற்றியும் கூட இதே சட்டம் செயற்படுகிறது. ஒரு நல்ல காரியஞ் செய்தால் நல்வினை உண்டு என்கிறோம். தீய காரியஞ் செய்தால் நல்வினை உண்டு என்கிறோம். தீய காரியஞ் செய்தால் தீவினை அதன் பயன் என்கிறோம். கல்லைவிட்டு எறிந்தால் கல்தால் மீண்டும் வரும். கல்லை எறிந்து விட்டு ரோஜாமாலை மீண்டும் வரும் என்று நினைப்பது அறியாமையாகும். நீண்டதூரம் எறியப்பட்ட கல் நீண்ட நேரம் கழித்துத்தான் திரும்பிவரும். என்றாலும் திரும்பி வருதல் உறுதி. அதேபோல நாம் எந்தச் செயலைச் செய்தாலும் அதன் எதிர்விளைவாகிய வினை உண்டு என்பது உறுதி.

இதையாரும் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஒருவர் நினைக்கும் எண்ணங்கள் எப்படி எதிர்வினைகளைத் தரும்? என்று பலரும் நினைக்கிறோம். எண்ணங்கள் என்பவை ஏதோ காற்றில் போய்விடக் கூடியவை என்று பலர் நினைக்கிறார்கள். உண்மை அதுவன்று. எண்ணங்கள் செயல்களைப் போலவே மிகவும் பலம் பொருந்தியவை. ஒருவர் மனத்தில் ஒன்றை எண்ணும் பொழுது அவைகள் அலை வடிவில் வெளிப்படுகின்றன. நீரில் அல்லது காற்றில் தோன்றிய அலைகள் போல இந்த எண்ண அலைகள் விரைவில் அழிந்து போவதில்லை. உலகில் நடைபெறும் மாபெருஞ் செயல்கள் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பவை எண்ண அலைகளேயாகும்.

எண்ணங்களின் ஆற்றல், அந்த எண்ணங்களை யார் எண்ணுகிறார்களோ அவர்களைப் பொறுத்தேயாகும். சாப விமோசன ஆற்றல் பெற்றவர்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம் அல்லவா? அவர்கட்கு எப்படி இந்த ஆற்றல் வந்தது? அவர்கள் ‘‘அழிக” என்று கூறுவதற்கும் நாம் அன்றாடம் கோபத்தில் யாரையாவது ‘‘ஒழிக” என்று கூறுவதற்கும் வேறுபாடு உண்டா? இரண்டும் வார்த்தைகள்தான்; இரண்டையும் இருவர் வாயால்தான் கூறினார்கள். ஆனால் ஒருவர் சொன்னவுடன் அது தீப்போல அப்படியே பிடித்துக் கொள்கிறது. நாம் சொன்ன வார்த்தை சக்தியற்றுப் போகிறது. இது ஏன்? இரண்டு பேருடைய எண்ண ஆற்றலை ஒட்டி அவர்கள் கூறும் சொற்களுக்கு ஆற்றல் பிறக்கிறது. பெரியவர்கள் எண்ணும் எண்ணங்கள் மிகவும் வலுவான ஆற்றல் உடையவை; எனவே அவர்கள் கூறும் சொற்களுக்குச் சாப விமோசன ஆற்றல் பிறக்கிறது. எனவே எண்ணங்கள் ஆற்றல் பெற்றவை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

அப்படியானால் எண்ணங்கட்கும் எதிர்ச்செயல்கள் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் செய்யும் நல்ல, கெட்ட காரியங்கட்கு ஏற்ப நல்வினை தீவினை சேர்வது போல, நாம் நினைக்கும் நல்ல, கெட்ட எண்ணங்கட்கு ஏற்பவும் நல்வினை தீவினை சேரும். சுருங்கச் சொன்னால் ஒரு மனிதன் எண்ணும் எண்ணம், செய்யும் செயல் என்ற இரண்டின் தன்மையை ஒட்டி அவனுக்கு நல்வினை தீவினை என்பவை சேர்கின்றன. இதனால்தான் பெரியவர்கள் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்று கூறுவதுடன் மனத்தில் நல்ல, தூய எண்ணங்கட்கே இடம் தரவேண்டும் என்றும் கூறினார்கள். ‘‘மனத்துக் கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறள்” என்று குறள் பேசும் பொழுது எண்ணங்கள் தோன்றுவதற்கு இடமாக உள்ள மனத்தை வலியுறுத்தியது இது கருதியேயாகும்.

பௌத்த சமயத்தை நிறுவிய புத்ததேவர் மனிதன் நினைக்கும் எண்ணங்கட்கு மிகப் பெரிய மதிப்புத் தந்தார். மனிதன் நினைக்கும் எண்ணங்கள் ஏதோ காற்றோடு போய் விடுபவை அல்ல் அவை வலுவான செயலுக்கு ஆதாரமாக அமைந்தவை; எனவே தூய்மையான எண்ணம் வேண்டும் என்றும் வலியுறுத்திச் சென்றார்.

‘‘நான் யாருக்கும் கெடுதல் செய்ததில்லை” என்று பிறர் பேசக் கேட்கிறோம். செய்கின்ற செயலை மட்டும் கூறுகின்ற இவர்கள் மனத்தில் நினைக்கும் எண்ணங்களைப் பற்றிக் கூறுவதில்லை. ஒருவர் மணிக்கணக்கில் பெரிய பூசை செய்யலாம்; ஆனால், அவருடைய மனத்தில் நல்ல எண்ணம் இல்லையானால் அந்தப் பூசைக்குப் பலனே இல்லை. இறைவன் உள்ளத்துள் உறைபவன் ஆகலின் உள்ளத்தூய்மையையே பெரிதும் விரும்புகிறான்.

ஓர் ஆன்மா ஒரு பிறவியில் செய்யும் வினைகள் அந்த ஆன்மாவின் மறுபிறவியிலும் தொடரும் என்று நம் முன்னோர் கூறினர். ‘‘பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவங்களே” என்பது ஆன்றோர் வாக்கு.

இந்த வினையை மூன்று வகையாகப் பிரித்துக் கூறுவர். சஞ்சிதம், பிராரத்துவம், ஆகாமியம் என்ற மூன்று வகையும் ஏறத்தாழ வங்கியில் நாம் வைத்திருக்கும் கணக்கைப் போன்றவை உடனடியாகத் தேவை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தேவைப்படுவதை பிக்சட் டெபாசிட் (Fixed Deposit) என்றும், அன்றாடத் தேவைக்கு வேண்டியதை நடைமுறைக் கணக்கு (Current Account) என்றும் கூறுகிறோம். எவ்வளவு பணம் வங்கியில் இருந்தாலும் ஒரு தொழிலோ, உத்தியோகமோ செய்து அன்றாடம் சம்பாதிக்கிறோம் அல்லவா அது Earning எனப்படும். சஞ்சிதம் என்பது பிக்சட் டெபாசிட். பிராரத்துவம் என்பது நடைமுறைக் கணக்கு. ஆகாமியம் என்பது இன்றைய சம்பாத்யம் என்பவைபோலாம்.]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here