முன்னுரை
உலகில் மக்களாகப் பிறந்து விட்ட நமக்குப் பல கடமைகள் உள்ளன. அவற்றுள் தலையாயது ஆண்டவன் திருவருளை நினைந்து – நம் ‘‘பிறவிப் பிணி” யைத் தீர்ப்பதே என்பர் சான்றோர். அதனால்தான் வள்ளுவரும், பிறவிப் பிணியைப் ‘‘பிறவிக்கடல்” என்கிறார்; கடல் பரந்த எல்லையினை உடையது; கடத்ததற்கும் மிக அரியது அன்றோ? ஆயினும் அப்பிறவிக்கடலைக் கடக்கவும் எளிய வழி ஒன்றையும் நமக்கு அறிவிக்கிறார்! அது என்ன தெரியுமா? ‘‘இறைவனடி” என்னும் தெப்பமே அது! ‘‘அத்தெப்பத்தை நாம் சிக்கெனப் பிடித்துக்கொண்டு அக்கடலைக் கடக்க வேண்டும் என்பது அப்பெருமகனின் குறிப்பு. இக்கருத்தைத்தான், ‘‘பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார்; இறைவனடி சேராதார்” – எனத்தன் குறள் மூலம் எடுத்துரைக்கிறார். இறைவனடியைப் பற்றுவது என்பது, ‘‘சின்னாள் வாழ்பிணிச் சிற்றறிவு”டைய நமக்கு அத்துணை எளிமையான காரியமா? அதனால்தான் சமயச் சான்றோர் இறைவழிபாட்டிற்கென்றே சாத்திரம், மந்திரம், தோத்திரம் என்று அமைத்துத் தந்தனர் போலும்!
***
சாத்திரம் – மந்திரம்- தோத்திரம்:
இம்மூன்று வகை நூல்களும் தெய்வ வழிபாட்டிற்கு உரிய நூல்களாகும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனியே இம்மூன்றையும் பண்டைநாள் தெய்வப்புலவர்கள் படைத்து வைத்துள்ளனர். அத்துடன் மந்திரங்களின் இறுதியில் அல்லது முதலில் இரண்டு அல்லது மூன்று வரிகளில் ‘‘தியான சுலோகங்களை”யும் இணைத்து அவ்விறைவனைத் தியானம் செய்வதற்கும் வழிவகுத்தனர். ”முத்திர நூல்களும் இறையருளை நமக்குத் தருவதோடு… மனிதனை இறைவன் மயமாக்கும் திறந்தன” – என்பர் அறிஞர். இது எவ்வாறு எனில், எந்த நூலை ஒருவன் தொடர்ந்து தோய்ந்து தோய்ந்து பயில்கிறானோ நாளடைவில் அவன் அந்நூலின் உட்பொருளை (அந்த சார்த்தம்) உணர்வான்; உணர்ந்தபின் அவ்வாறே தான் நடக்கவும் முயல்கிறான்; அப்போது அந்நூற் பொருளின் மயமாகவே அவன் வாழ்க்கையும் அமைந்துவிடுகிறது; அந்நூல் மயமாகவே அவன் ஆகும் போது தெய்விகத் தன்மையும் கூடி விடுகிறது. இந்நன்மையாலேயே சமய உலகின் சான்றோர், மேற்கண்ட சாத்திரம், மந்திரம், தோத்திரங்கட்குப் பெரிய மதிப்பை அளித்தனர். இவற்றை இயற்றிய முனிவர்கள் பெரும் ஞானியராகவோ, அருள் தாங்கிய பெரும் புலவராகவொ இருப்பதும் இந்நூல்களின் பெருமைக்குச் சான்றாகவும் அமைகிறது எனலாம். ஆகவேதான் – பிற்காலத்திலும் சாத்திர முதலியவற்றைத் தெய்வங்கட்கு என்று பண்டைப் பெரியோரின் மரபுவழியே பலர் இயற்றினர்.
***
வழிபடும் தரம் மூன்று
கடவுளை வழிபடச் சாத்திரம் முதலிய மூன்று வகை நூல்கள் இருப்பது ஏன்? கடவுளை வழிபடும் உலக மாந்தரும் மூவகையினராக இருத்தலேயாகும். அவர்களே, ‘‘அறிவு, ஆராய்ச்சியுடைய கல்வியில் மாந்தர்”, ‘‘அறிவு, ஆராய்ச்சி” என்று இல்லாமல் ஓரளவு படிப்பறிவையுடைய சமுதாய மாந்தர். ‘‘கல்வி அறிவே இல்லாத பாமரமாந்தர்” – என்பவராம். இம்மூவரும் என்ற நல்நோக்கிலேயே இந்நூல்கள் எழுந்தன.
***
பெரிய புராணம் – கம்பராமாயணம் போல்வன:
மேற்சொன்ன மூவகையிலும் அடங்காமல், பெரியபுராணம், கம்பராமாயணம் , தேவி பாகவதம் போன்ற காவிய நூல்கள் உள்ளனவே, இவைகளை எப்பிரிவில் அடக்குவது எனும் கேள்வியும் எழலாம். இவற்றை படிக்கும் போது இறையுண்மையும் தெளிவாவதும் உண்மையே. ஆனால் இக்காவியங்கள் ஆண்டவனோடு நேரடித் தொடர்புக்கு வழிசெய்யாமல் – கடவுளின் பெருமையைச் சுட்டவே எழுந்தன. இதனால் இவற்றைக் கடவுளைப்பற்றி எத்திற மக்கட்கும் பிரச்சாரம் செய்து பலனளித்துப் பக்தியூட்டும் நூல்கள் எனலாம். மேற்கண்ட முத்திற மனிதர்கட்கும் பொதுவாகப் பயன்படும் நூல்கள் எனலாம்.
***
பயன்படுத்துதல்:
அறிவு, ஆராய்ச்சி உள்ளவர்கள், சாத்திரங்களைப் படித்து இறைதத்துவ உண்மைகளை அறியலாம். இறைதத்துவ உண்மைகள் திருவருளைச் சேர்க்கும்! அவருக்கு வழிகாட்ட வந்த நூல்கள், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், பகவத் கீதை, பிரம்மசூத்திரம், ஞானவாசிட்டம், உபநிடதங்கள் போன்றவை.
ஓரளவு கல்வியறிவு உள்ளவர்கள் அபிராமி அந்தாதி, சகலகலாவல்லி மாலை, தேவாரம், திருவாசகம் முதலிய தோத்திரங்களைப் பயின்று திருவருள் பெறுவதோடு, மிகமுக்கியமானதாக வேதமந்திரங்கள், இலலிதா சகஸ்ரநாமம் முதலியவற்றையும் ஓதி அருள் பெறலாம். படிப்பறிவே இல்லாத பாமரர்கள் பிறர் படித்துச் சொல்லக் காதில் வாங்கிக்கொள்ளும் அளவிலும், தட்டுத் தடுமாறித் தாங்களே படித்தறியும் அளவிலும் எளிமை, இனிமை கலந்த தோத்திரங்கள் பயன்படுகின்றன.
***
அதிகம் தோத்திரங்களே!
இறைவழிபாட்டில் தமிழிலும் வடமொழியிலும் சாத்திரம், மந்திரம் இவைகளைவிட அதிகம் தென்படுபவை தோத்திர நூல்களேயாகும். இது ஏன்? தோத்திரங்கள்தாம் மிக எளிதானவை; சாத்திரம்பயிலத் தக்காரின் உதவி வேண்டும்; மந்திரத்திற்குக் குரு உபதேசம், உருவேற்றல் வேண்டும். ஆனால் தோத்திரங்கட்கு மேற்கண்டவை தேவையில்லை; நாமே நமக்குக் குருவாகிப் படிக்கலாம். உலகில் பாமரமக்களே மிக அதிகம்; அவர்களும் தம் வாழ்வில் இறையருளை விரைந்து பெற்றாக வேண்டும் அல்லவா? இதற்காகவே தோத்திர நூல்கள் அதிகம் தோன்றின எனலாம்.
தேவார, திருவாசகம், அருட்பா, திருப்புகழ், பட்டினத்தார் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், ஆழ்வார் பாடல்கள் அனைத்தும் – ஆண்டவனை நினைந்து, நினைந்து, அழுதழுது பாடியவை யன்றோ?
***
ஒப்புமையுண்டா?
தோத்திர நூல் வாpசையில் தேவார, திருவாசகத்திற்கு ஒப்புமை சொல்ல ஒரு நூல் இதுவரை உண்டா? இல்லை. அருணகிரிநாதர் திருப்புகழுக்கு இதுவரை ஒப்புமையாக ஒரு நூல் உண்டா? இல்லை. அண்ணாமலை ரெட்டியாரின் காலடிச் சிந்துக்கு ஒப்புமையாக ஒருநூல் உண்டா? இல்லை; ஆனால் ‘‘காமாட்சித் திருப்புகழ்” – என்ற நூல் ஒன்று உள்ளது! அஃது அருணகிரிநாதரை அடியொற்றியே சென்றுள்ளதைக் காட்டுகிறது! ஆழ்வார்கள் பாடல்களும் ஒப்புமை இல்லாத நூல்களே தாயுமானவர் பாடலுக்குக் கணங்குடியார் பாடலை ஒப்புமை சொல்லலாம். அதுபோல் அபிராமி அந்தாதிப் பாடலுக்குக் ‘‘கமலைப் பராசத்தி மாலை”யை ஒப்புமை சொல்லலாம். இந்நூல், பாடல் எண்ணிக்கையில் தான் அபிராமி அந்தாதியை வேற்றுமைப்படுத்துகிறது. ஏனைய பாங்கு அனைத்திலும் அபிராமி அந்தாதியை ஒத்தே உள்ளது! இது பெரும் வியப்பே!
(தொடரும்)
ஓம் சக்தி!
நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 3 (1982) பக்கம்: 6-8
]]>