ஒரு முஸ்லிம் சித்தர் எழுதிய ஞான ரத்தினக் குறவஞ்சியென்ற நூலிலே தாய் சம்மதிக்கவில்லை யென்றால் தகப்பன் இந்தப் பிரபஞ்சத்தை உற்பத்தி, செய்திருக்க முடியாது என்று சொல்லப்பட்டு இருக்கிறது. p>
‘‘எப்படி உலகத்தில் இப்படி உருவானோம் – சிங்கி – அது அப்பன் தன் நட்புக்கு ஒப்பிய தாயாலே – சிங்கா”
இந்தக் கருத்தையே திருமூலரும்,
‘‘ஒருவன் ஒருத்தி விளையாட லுற்றார் இருவர் விளையாட்டும் எல்லாம் விளைவிக்கும்”
என்று சொன்னார்.
10. சிவம் என்பது செயலற்ற தத்துவம் என்றும், மகாமாயையாகிய சக்திதேவி சிவத்தைத் தொட்டவுடன் ஆணவமாயை பிறக்கிறதென்றும், ஆணவத்திலிருந்து மனசு என்ற தத்துவம் உதயமாகி, மனசிலிருந்து ஆகாசம், ஆகாசத்திலிருந்து காற்று, காற்றிலிருந்து தீ, தீயிலிருந்து நீர், நீரிலிருந்து மண் – இவ்வாறாகப் பஞ்சபூதச் சேர்க்கையால் பிரபஞ்சமும் உயிர்களும் தோன்றுகின்றன என்றும், இந்தப் பரிணாம நெறியே (Evolution) சக்தியின் விளையாட்டு என்றும் சித்தர்கள் கருதுகிறார்கள். பிரளய காலத்தில், மண்ணை நீர் உண்ணுகிறது, நீரைத் தீ உண்ணுகிறது. தீ காற்றில் ஒடுங்குகிறது, காற்று ஆகாசத்திலும், ஆகாசம் மனசிலும், மனசு ஆணவ சக்தியிலும், ஆணவ சக்தி சிவத்திலும் ஒடுங்குகிறது. இதையே (Involution) அல்லது ஒடுக்கம் என்று கூறுகிறார்கள்.
ஊழிக்கூத்து என்ற பாடலில் சுப்பிரமணிய பாரதியார் பிரபஞ்ச ஒடுக்கத்தில் காளியின் கூத்து எவ்வாறு நடக்கிறதென்பதை உணர்ச்சியோடு பாடியிருக்கிறார்!
‘‘வெடிபடு மண்டத் திடிபவ தாளம் போட – வெறும் வெளியில் இரத்தம் கனியொடு பூதம் பாட – பாட்டின் அடிபடு பொருளின் அடிபடு மொலியிற்கூடக் – களித் தாடும் காளி! சாமுண்டி! கங்காளி! ஐந்துறு பூதம் சிந்திப்போம் யொன்றாகப் – பின்னர் அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப்போக – அங்கே முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் – தோடே முடியா நடனம் புரிவாய், அடுதீ சொரிவாய்! பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் – சலனம் பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய – அங்கே ஊழாம் பேய்த் தாய் ‘‘ஓ ஹோ ஹோ” என் றலைய – வெறித் துறுமித் திரிவாய், செகுவெங் கூத்தே புரிவாய்! சக்திப் போய்தான் தலையொடு தலைகள் முட்டிச் – சட்டச் சடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி – அங்கே எத்திக் கினிலும் நின்விழி அனல்போய் எட்டித் – தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம். காலத்தொடு நிர்முலம்படு மூவுலகும் – அங்கே கடவுள் மோனத் தொனியே தனியா யிலரும் – சிவன் கோலங்கண்டுன் கனல்செய்சினமும் விலகும் – கையைக் கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக் கூத்திடுவாய்! அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை!
11. இவ்வாறு பஞ்சபூதங்கள், காலம், இடம், மனம், ஆணவம் என்ற தத்துவங்கள் எல்லாம் ஒடுங்கிய நிலையில், சிவன், சக்தி தேவியின் கர்ப்பப் பையிலே சொகுசாக ஜாக்ரநித்ரை செய்துகொண்டிருக்கிறான். இந்த நிலையில் சிவனுக்கும் தாயாகக் காட்சி கொடுக்கிறாள் சக்தி தேவி. பிறகு, மறுபடியும் பிரபஞ்சம் உற்பத்தியாகும்போது சிவனுக்குத் தாரமாக இருக்கிறாள் தேவி. பிரபஞ்சம் தோன்றி அதன் மூலம் கோடானுகோடி சக்திகள் இயங்கும் போது, தேவி சிவனுடைய மகளாகக் காட்சியளிக்கிறாள். இந்தக் கருத்தைத் திருமந்திரம் விளக்குகிறது.
‘‘வாயும் மனமும் கடந்த மனோன்மணி பேயும் கணமும் பொpதுடைப் பெண்பிள்ளை ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத் தாயும் மகளும்நல் தாரமும் ஆமே.”
பேரண்டத்தில் இவ்வாறு ஞான நாடகமாடிய பெண்பிள்ளை, சிற்றண்டத்திலும் பலவித நிலைகளிலிருந்து உயிர்களுக்கு உதவுகிறாள். கொங்கணநாயனார் வாலைக்கும்மியில் இதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
‘‘மாதாவாய் வந்துஅமுதம் தந்தாள் – மனை யாட்டியாய் வந்துகங்கொ டுத்தாள் ஆதர வாகிய தங்கை யானாள் – நமக்கு ஆகக் கொழுந்தியு மாமி யானாள்”
12. இவ்வாறு இயங்கும் சக்தியை திரோதாயி சக்தி அல்லது மறைப்பு சக்தியென்று சைவ சித்தாந்தத்தில் சொல்லுவார்கள். பேருண்மை தமக்குப் புலப்படாமல் திரையைப் போட்டு நம் கண்ணை மறைப்பதும் அவள். திரையைக் கிழித்துச் செம்பொருளைக் காட்டுகிறவளும் அவள். மாயா சக்தியாக நின்று நம்மை அறியாமையில் அழுத்திவைக்கின்றாள், ஞான சத்தியாக நின்று நமக்குப் போpன்பத்தை நல்குகிறாள். அவளுடைய கருணை இல்லையென்றால் நாம் பாதத்துவத்தை அணுகமுடியாது. பக்குவம் தமக்கு ஏற்பட்டுவிட்டால், நாம் விரும்பாவிட்டாலும் நம்மை வலிய இழுத்து நமக்கு முக்தியைக் கொடுத்துவிடுவாள்.
‘‘இருட்டறை மூலை இருந்த குமரி குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்து குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி மருட்டி அவளை மணம்புரிந் தானே”
என்பது திருமந்திரம். தம்மை மிரட்டியும் மருட்டியும் நமக்கு அருள்பாலிக்கிறாள் அவள்.
13. அஞ்ஞானத்திலிருக்கும் நாம் ஜடதத்துவத்தை, கேவலம் ஜடதத்துவம் என்றே எண்ணுகிறோம். உண்மையில் ஜடமாகத் தோன்றுவதெல்லாம் இறைத் தத்துவத்தின் வெளியீடுதான். சாம்பல் பூத்த நெருப்பிலே நெருப்பின் சிவந்த நிறமும் வெப்பமும் தெரிவதில்லை; வெண்சாம்பல்தான் தெரியும். ஆனால், ஒரு குச்சியினால் அதைக் கிளறிப் பார்த்தால் சாம்பலுக்கப்பாலுள்ள நெருப்புத் தெரிகிறது. தாய் ஞான சக்தியாக நின்று ஜடதத்துவத்தைக் கிளறிக் காட்டும் போது, நெருப்புருவமாக உள்ளேயிருக்கும் சிவதத்துவம் நம் உணர்வுக்குப் புலப்படுகிறது. இந்த அரிய உண்மையை அழகோடும் உணர்ச்சியோடும் நத்திக் கலம்பகம் நமக்கு விளக்குகிறது.
‘‘பொருப்பரையன் மடப்பாவை புணர்முலையின் முகடுதைப்ப நெருப்புருவம் வெளியாக கீறணிந்த வரைமார்பா”
சிவன் வெண்ணிறணிந்து தன் சிவந்த மேனியை மூடிக்கொண்டிருக்கிறாள். ஆனால் பர்வதராஜனுடைய குமாரி தன் ஸ்தனங்களின் முகடுகளால் அவனுடைய நிறணித்த மார்பைத் தைக்கும்போது அவனுடைய மார்பிலேயிருந்த வெண்ணீறு உதிர்ந்து போகிறது; உள்ளேயிருக்கும் நெருப்புருவம் நமக்குத் தெரிகிறது. உண்மைக்கு அழகும் உணர்ச்சியும் கொடுப்பதற்காகக் காதல் துறையில் வைத்து அதைக் காட்டுகிறார் நத்திக் கலம்பக ஆசிரியர்.
14. பிரபஞ்சம் முழுவதும் ஆண் – பெண் கோலத்தில், அர்த்தநாரி வடிவத்தில் இருப்பதை அப்பர் அடிகள் கண்டார். அதற்கு முன் கண்டறியாத இந்தக் காட்சியைத் திருவையாற்றில் கண்டு களித்தார்.
‘‘கண்டே னவர்திருப் பாதம் கண்டறியாதன கண்டேன்” என்று ஆனந்த மேலீட்டில் அவர் ஓலமிடுகிறார். எவ்வாறு கண்டார்?
‘‘மாதர் பிறைக்கண் ணியானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புருவார் அவர்பின் புகுவேன் யாதும் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.”
ஆண்யானையும் பெண்யைhனையும் ஜோடியாகப் போவதைப் பார்த்த போது, அம்மையப்பனின் இரண்டு திருப்பாதங்களுமே அவர் கண்ணுக்குப் புலப்பட்டுவிட்டன.
‘‘கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன். கண்டேன் அவர்திருப் பாதம் கண்டறி யாதன கண்டேன்.”
என்றும்
‘‘வரிக்குயில் பேஸ்டயோ டாடி வைகி வருவன கண்டேன்” கண்டேன் அவர்திருப் பாதம் கண்டறி யாதன கண்டேன்”
என்றும்,
‘‘வரிக்குயில் பேஸ்டயோ டாடி வைகி வருவன கண்டேன்” ‘‘பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்” ‘‘பைங்கிளி பேடையோ டாடிப் பறந்து வருவன கண்டேன்”
என்றும் சொல்லி, பிரபஞ்சத்தில் எங்குமே, அணுவிலிருந்து பேரண்டம் வரை, சிவனும் சக்தியும் ஜோடியாகப் பிணைந்து பின்னிக் கிடந்த நிலையையுணர்ந்து மகிழ்ந்தார், திருநாவுக்கரசர். 15. அண்டத்தில் அவர் கண்ட ஆண் – பெண் கோலத்தைப் பிண்டத்திலும் கண்டார்கள் நம் சித்தர்கள். ஒவ்வொரு மனிதனுடைய உடம்பிலும் இவ்விரு சக்திகளும் இணைந்திருக்கின்றன. இடப்பாகத்தில் சக்தியும், வலப்பாகத்தில் சிவனும் இருப்பதைக் கண்டார்கள். மூச்சுப் பயிற்சியின் மூலமாகவும், மந்திரச் சொற்களின் மூலமாகவும் சக்தியைச் சிவத்தோடு இணைத்து, ஆன்மாவைப் பாதத்துவத்திலே ஒடுக்கி முக்தி அடைந்தார்கள்.
‘‘வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல் தாயோடு கண்மூடித் தழுவிநிற்ப தெக்காலம்”
என்று புலம்புகிறார் பத்ரகிரியார்.
மூலாதாரத்திலிருக்கும் குண்டலினி சக்தியை வாலைப் பிடித்து எழுப்பி சஹஸ்ர ராத்துக்குக் கொண்டு போய் அங்கிருக்கும் சிவத்தோடு அணையச் செய்ய வேண்டுமென்றும், அவ்வாறு செய்தால் முக்தி கிடைக்கும் என்றும் சித்தர்களும் யோகிகளும் நம்புகிறார்கள்.
16. சிவராஜயோகம் என்ற யோக முறையில் ஆறாதாரத்தை ஒப்புக்கொள்ளவில்லை. உடம்பிலே வெட்டாத சக்கரங்கள் இரண்டு இருக்கின்றன. இடப்பக்கத்திலுள்ள சக்கரத்துக்குச் சக்தி சக்கரம் அல்லது சந்திரன் என்று பெயர். வலப்பக்கத்திலுள்ள சக்கரத்துக்குச் சிவசக்கரம் அல்லது சூரியன் என்று பெயர், இவ்விரண்டு சக்கரங்களையும், குருவின் துணைகொண்டு சேர்த்து விட்டால், முக்தி கிடைத்துவிடும் என்று நம்புகிறார்கள். ஔவையார் குறளில் இதையே,
‘‘சக்தியாம் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில் முக்திக்கு மூலம் அது”
என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நம் உடம்பிலே அம்மையிருக்கும் இடத்தை மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழில் குமரகுருபரர் குறிப்பிடுகிறார்.
‘‘……………….. துவாத சாந்தப் பெருவெளியில், துhpயங் கடந்த பரநாத மூலத் தலத்து முளைத்த முழுமுதலே! முக்கட் சுடர்க்கு விருந்திடு மும்முலையாய்! முத்தம் தருகவே” என்று சொல்லுகிறார்.
நம் உடலே அம்மையும் அப்பனும் கூடி விளையாடும் வீடு, அதிசயங்கள் நிறைந்த வீடு என்று கருவூரார் என்ற சித்தர் ஓலமிடுகிறார். ‘‘ஓசை மணி பூரமதில் உதிக்கும் வீடு ஓகோகோ அதிசயங்கள் உள்ள வீடு ஆசுகவி மதுரமது பொழியும் வீடு அவனவளும் கூடிவிளை யாடும் வீடே” என்றார்.
இராமலிங்க அடிகளும் தம் உடலுக்குள்ளேயுள்ள ஏழுமாடங்களை தாண்டித் திருவாயிலை அடைகிறார். அங்கு அம்மை அவருக்கு அருள் செய்த வண்ணத்தைப் பாடுகிறார்.
‘‘அத்திரு வாயிலில் ஆனந்த வல்லிஎன் அம்மை யிருந்தாளடி – அம்மா! அம்மை யிருந்தானடி” ‘‘அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன் அமுதமு முண்டேனடி – அம்மா! அமுதமு முண்டேனடி, ‘‘தாங்கும் அவளரு ளாலே நடராஜர் சந்நிதி கண்டேனடி – அம்மா! சந்நிதி கண்டேனடி” ‘‘சந்நிதி யிற்சென்று நான்பெற்ற பேற சாமிய றிவாரடி – அம்மா! சாமி யறிவாரடி”
17. யந்திரங்கள் மூலமாகவும் சக்தி வழிபாடு தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. திருமந்திரத்தில் திரிபுரைச் சக்கரம். எதிரொளிச் சக்கரம், வயிரவிச் சக்கரம், சரம்பவி மண்டலச் சக்கரம், புவனாபதி சக்கரம், நவாக்கரி சக்கரம் முதலியவற்றைப் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
18. ஆதிசங்கரர் போன்ற சிறந்த ஞானிகள் தமிழ்நாட்டிலுள்ள முக்கிய ஆலயங்களில் ஸ்ரீ சக்கரத்தை ஸ்தாபித்திருக்கிறார்கள். காஞ்சிகாமாட்சி அம்மை கோயிலில் உள்ள பிரசித்தி பெற்ற காமகோடி பீடத்தில் ஸ்ரீ சக்கரம் ஸ்தாபிதமாகியிருக்கிறது. திருக்குற்றாலத்தில் பராசக்தி பீடத்திலும் ஸ்ரீ சக்கரம் பதிக்கப்பட்டு இருக்கிறது. சிதம்பரத்தில் சிவசக்கரமும் ஸ்ரீ சக்கரமும் சேர்ந்த சம்மேளன சக்கரம் இருக்கிறது. அண்ட பிண்டங்களையும் அவற்றிற்கு மூலகாரணமாயிருக்கும் தத்துவத்தையும் முக்கோண, அஷர பரிபாஷையில் இந்தச் சக்கரங்கள் குறிப்பிடுகின்றன.
கடைசியாக, தமிழ்நாட்டில் அரவிந்தர் சாக்தத்தை அனுஷ்டித்து வந்த முறையைப் பற்றிச் சில வார்த்தைகள். தெய்வத்தாய் ஒருத்திதான். ஆனால், அவளுக்குப் பல அம்சங்கள் உண்டு. முக்கியமாக நான்கு உருவங்களில் வந்து பூலோக வாழ்க்கையை அவள் வளப்படுத்துகிறாள். ஆதிசக்தியாயிருக்கும் போது அவள் பேரண்டத்தைக் கடந்து நிற்கிறாள். அபரநிலையிலிருக்கும் இறைத் தத்துவத்துக்கும் படைக்கப்பட்ட பேரண்டத்துக்கும் இடையே நின்று அவள் இரண்டையும் பிணைக்கும் சங்கிலியாகத் தொழில் புரிகிறாள். மகாசக்தியாக இருந்து பேரண்டத்திலுள்ள பொருள்கள், உயிர்கள் யாவற்றையும் படைத்துக் காத்துக் கோடிக்கணக்கான சக்திகளை முடுக்கிவிடுகிறாள். ஆதிசக்தியையும் மகா சக்தியையும் ஆன்மாக்களுக்குப் புலப்படுத்தி, மனித தத்துவத்துக்கும் இறைத் தத்துவத்துக்கும் இடையில் பஞ்சாயக் காரியாக நின்று அவள் சமரசப்படுத்துகிறாள்.
எல்லாம் கடந்து நிற்கும் ஆதிசக்தியானவள், எல்லா உலகங்களுக்கும் அப்பால் நின்று கொண்டு, இறைத் தத்துவத்தைத் தன் உணர்வில் தியானப் பொருளாகக் கொண்டு தவம் செய்கிறாள். அவள் மூலம் இறைத் தத்துவமானது சச்சிதானந்தமாக வெளிப்படுகிறது. ஈஸ்வர – சக்தியாகவும் புருஷ பிரகிருதியாகவுமிருந்து அவள் பிரபஞ்சலீலையை நடத்துகிறாள். எல்லாம் அவள் அவளன்றி அணுவும் அசையாது.
ஆதிசக்தி உதவிய பொருளை உருவாக்குவது மகாசக்தியின் வேலை. இயற்கையிலிருக்கும் சக்திகளை ஒழுங்குபடுத்தியும், நியதிப்படி இயக்கியும், பிரபங்ச நாடகத்தில் வரும் காடசிகளை வகுத்தும் தொகுத்தும், இதர தெய்வீக சக்திகளின் உதவியால், அவள் நாடகத்தை நடத்துகிறாள், ஆனால், சூத்திரதாரைப் போல், தன்னை மறைத்துக்கொண்டே இயங்குகிறாள் மகாசக்தி, அவளுடைய குழந்தைகளாகிய நம்மிடத்திலே அவளுக்கு எல்லையற்ற அன்பிருக்கிறத. அசுர சக்திகளினின்றும் அவள் நம்மைக் காப்பாற்றுகிறாள்.
அவளுடைய நான்கு அம்சங்கள்ககும் நான்கு பெயர்கள்: மகேஸ்வரி, மகாகாளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி.
மகேஸ்வரி மனித மனசுக்கு அப்பாலிருக்கும் வெட்டவெளியில் அமர்ந்திருக்கிறாள். மனிதமனதைப் புடம் போட்டுப் பொன்னாக்குகிறாள். நம் உள்ளத்தைத் திறத்து, பராபரத்தின் ஜாஜ்வல்லியத்தைப் பார்க்கச் செய்கிறாள்.
அவள் அமைதி நிறைந்தவள், ஞானம் நிறைந்தவள் ஞானம் நிறைந்தவள் பிரபஞ்ச ரகசியம் தெரிந்தவள், முக்காலமும் உணர்ந்தவள், கருணைக் கடல். எல்லோரும் அவளுடைய குழந்தைகள். அசுரர்களையும் அரக்கர்களையுங்கூட அவள் கருணையோடு பார்க்கிறாள். அவள் கொடுக்கும் தண்டனைக்கூட அருளிலிருந்து பிறக்கும் தண்டனை.
இனி, மகாகாளியின் குணங்கள் மகேஸ்வரியின் குணங்களினின்றும் வேறுபட்டவை. அவளுக்குரியது சக்திதாள், ஞானம் அல்ல. எல்லையற்ற வல்லமை படைத்தவள் அவள். எந்த இடையூற்றையும் தகர்த்து நொறுக்கி, எந்த எல்லையையும் மீறி இயங்குபவள். அசுரர்களுக்கு அவள் தன் கோர உருவத்தைக் காட்டுகிறாள். பொய், புலைமை, கயமை இவற்றை எல்லாம் தயை தாஷண்யமில்லாமல் உடனுக்குடனே சம்ஹாரம் செய்கிறவள். அவளுடைய வெஞ்சினமும் ஆங்காரமும் எல்லையற்றவை.
மூன்றாவதாக இருப்பவள் மகாலஷ்மி. இனிமையே வடிவானவள் இவள், இங்கிதம் நிறைந்தவள், இவள் பக்கத்திலிருந்தாலே நமக்கு ஆனந்தம் பொங்கும். அழகும் அன்பும் இசைவும் (Harmony) இருக்கும் இடமெல்லாம் இவள் இருப்பாள். அவை இல்லாத இடத்தை விட்டுச் சட்டென்று நீங்கிவிடுவாள். அன்பினாலும் அழகாலும் ஆன்மாக்களை இறைவனுக்கு அடிமையாக்குகிறாள் இவள்.
கடைசியாக மகாசரஸ்வதி, நான்கு சக்திகளிலும் இளமையானவள் இவள். இவளே பிரபஞ்சத்தை நிர்வாகம் செய்கிறாள். மகேஸ்வரி பிரபஞ்ச சக்திகள் எப்படி இயங்க வேண்டும் என்று திட்டம் போட்டவன்.
மகாகாளி அந்தச் சக்திகளைச் செலுத்தி வேலை வாங்குகிறாள். மகாலஷ்மி அந்தச் சக்திகளைக் கருதி சேர்த்துத் தாளம் தப்பாமல் இயங்கும்படி செய்கிறாள். ஆனால் மகாசரஸ்வதியோ ஒவ்வொரு சிறு துறையிலும் இறங்கி, சக்திகள் ஒத்துழைக்கின்றனவா என்று கண்காணித்து அவற்றின் தொழிலால் எதிர்பார்க்கும் விளைவுகள் உண்டாகின்றனவா என்று பார்க்கிறான். பொறுமையோடு, களைப்புக் கொள்ளாமல், வெகு கவனமாக வேலைகள் நடந்தேறும்படி செய்கிறாள்.
மனித வாழ்க்கையென்ற வினையை மீட்டி, அதைப் பேரின்பத்தோடு சுருதி சேர்க்க விரும்புவோமேயானால், நாம் நம்மைத் தாயின் கையில் ஒப்படைத்துவிட வேண்டும். நம் இதயத்தின் ஒரு பாகத்தை மாத்திரம் அவனிடம் ஒப்படைத்துவிட்டு மிச்சமுள்ள பாகத்தை நம் பொறுப்பில் வைத்துக் கொள்ளலாகாது. நிபந்தனையற்ற ஸம்பூரண சரணாகதியாக இருக்க வேண்டும். அப்போது தான் அவள் தம் இதயத்திலிருந்து கொண்டு அவள் வேலையை அனாயாசமாகச் செய்ய முடியும். நாம் அவளை பற்றி நினைக்காமலிருக்கும் போதும் அவள் நம்முன்னிருந்து தொழில் படத்தான் செய்கிறாள். ஆனால் நாம் அவளை விரும்பித் தியானம் செய்யும்போது, அவள் மிகுந்த ஆனந்தத்தோடும் உல்லாசத்தோடும் இயங்குகிறாள்.
நாம் அவள் கைக்களிமண்ணாக மாற வேண்டும். எப்படி எப்படி எல்லாம் அவள் நம்மை உருடம்டினால் அப்படி அப்படியெல்லாம் நாம் வளைந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய உன் மனசையும் வெளி மனசையும் டமிச்சம் கிச்சம் இல்லாமல் அவள் கையில் ஒப்படைப்போமாக! அப்படிச் செய்தால் ஞானமும் ஒளியும் வல்லமையும் இசைவும் அழகும் பரிபூரணமும் சிதாகாசத்திலிருந்து நம் இதயத்திலுள் இறங்கும். நம் இதயத்திலிருந்து பூலோக வாழ்க்கையில் அவை இறங்கும். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ஜீவன் முத்திக்காக மட்டுமே பாடுபடுவது சுயநலத்தின் பாற்படும். சக்தி தேவியின் அருளை நாம் பெற்று, நம்மூமாக அதை உலகத்துக்குப் பாய்ச்சி, வானுலகத்தை மண்ணுலகத்துக்கு இழுத்து வந்து, மனிதச் சாதியை கந்தர்வ சாதியாக உயர்த்த வேண்டும். இதுவே அரவிந்தருடைய சாக்தம்.
இதையே தான் பாரதியாரும் சொன்னார்.
‘‘ஆழ்க உள்ளம் சலனமி லாது அண்ட வெளிக்கண். அன்பினையெ சூழ்க! துயர்கள் தொலைந்திடுக! தொலையா இன்பம் விளைந்திடுக! வீழ்க! கலியின் வலியெல்லாம்! கிருத யுகந்தான் மேவுலகவே!” ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 3 (1982) பக்கம்: 17-24
]]>