நம் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆகம விதிகட்கு உட்பட்டதல்ல. சித்தர்களின் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது. இங்கு நடைபெறும் வேள்விகளும் வேத வேள்விகள் போன்றவை அல்ல. சித்தர்களின் தாந்திரிக வேள்வி முறைகளை ஒட்டியது. சித்தமார்க்கம் தழுவியது.
அன்னை இங்கே அருள்வாக்கில் என்ன பணிக்கின்றாளோ அது தான் இங்கே வேதம்! அது தான் இங்கே ஆகமம்! அதன் படி நடந்தால் தான் பலனுண்டு.
ஆகம விதிப்படி நடைபெறுகிற கோயில்களில் அர்ச்சகர்கள் தீட்சை பெற்றிருக்க வேண்டும் என்பது விதி. மந்திரங்களை உரிய முறையில் சொல்லி அர்ச்சிக்க வேண்டும் என்பது விதி! மந்திர சப்தங்களைச் சரியாக உச்சரிக்காவிட்டால் வேறுவிதமான பலன்களையும் விளைவிக்கக் கூடும்.மனம் ஒன்றிய வழிபாடு புரியவும், எல்லோரும் எளிதில் அருள்பெறவும் வேண்டியே அன்னை இங்கே தமிழில் மந்திர வழிபாட்டுக்கு வழி வகுத்துக் கொடுத்து, அம் மந்திரங்களுக்கு உருவேற்றிக் கொடுத்து அர்ச்சனை செய்யும் பயிற்சி தந்தாள். கருவறைத் தொண்டு செய்ய வருகிற தொண்டர்களும், வார வழிபாடு மன்றங்களில் அன்னைக்கு அர்ச்சனை புரிபவர்களும் பின்வரும் முறையில் அன்னைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
அன்னைக்கு வழிபாடு நடக்கிற போது 1008, 108 மந்திரங்களைச் சொல்லி வழிபடுகிற வேளையில் நாம் அன்னைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அது மலர் அர்ச்சனையாகவும் இருக்கலாம் குங்கும அர்ச்சனையாகவும் இருக்கலாம். சித்தர் பீடத்திலும், சக்தி பீடங்களிலும் குங்கும அர்ச்சனையே செய்யப்படுகிறது.
அவ்வாறு அர்ச்சனை செய்கின்ற போது நம் ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் இணைத்த நிலையில் குங்குமம் அல்லது மலரினையும் எடுக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நீட்டிய நிலையில் அமைதல் வேண்டும்.
அர்ச்சனைக்குரிய குங்குமத்தையோ, மலரையோ எடுத்து, அன்னையின் திருமுகத்துக்கு நேராக ஒரு முறை நிமிர்த்துக் காட்டி ‘அம்மா’ உன் அருளைத் தா!” என்று கேட்கிற பாவனையில் ஒரு ஒருமுறை காட்ட வேண்டும்.
“சுயம்பாக எழுந்தருளிய உனக்கே இந்தக் குங்குமம் அல்லது மலர் அர்ப்பணம் என்கிற பாவனையில் அமைய வேண்டும்.
மூன்றாவது முறையாக கையை நிமிர்த்தியபடி அன்னையின் திருவடிகட்கு அர்ச்சனை செய்வது போல் காட்டி, கீழுள்ள தட்டிலோ, இலையிலோ அந்தக் குங்குமம் அல்லது மலரை இட வேண்டும்.உன் திருப்பாத கமலங்கட்குச் சரணம் என்று சொல்கிற முறையில் இந்த அர்ச்சனையைக் கீழே இட வேண்டும்.
அது முடிந்து கற்பூர ஆராதனை காட்டும் போது நம் இடக்கை எவ்வாறு இருக்க வேண்டும் தெரியுமா சின் முத்திரை தாங்கிய படி உள்ளங்கை மேலே இருக்க வேண்டும். வலக்கையால் கற்பூரத் தட்டு ஏந்துகிற போதும் ஒரு நுட்பமான முறையில் அந்தத் தட்டைப் பிடிக்க வேண்டும். அக் கற்பூரத் தட்டை இரண்டு விரல்களால் மட்டுமே பிடித்திருக்க வேண்டும். ஆள்காட்டி விரல், பெரு விரல் என்னும் இந்த இரண்டு விரல்களால் மட்டுமே கற்பூரத் தட்டை இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டும். மற்றைய மூன்று விரல்களும் ஆராதனையின் போது கீழ் நோக்கியபடி அமைதல் வேண்டும்.
அன்னைக்குக் கற்பூர ஆராதனை செய்கிற போது, ஓம் என்று எழுதுவது போல கற்பூரத் தட்டு மூலம் அர்ச்சனை செய்ய வேண்டும். ‘ஓ‘ என்று காட்டும்போது, அன்னையின் வலக்கரத்துக்கு எதிரே முதலில் ஒரு சுழியைக் காட்டி, அப்படியே மேலே உயர்த்திச் சென்று அன்னையின் இடக்கரத்தின் எதிரே அடுத்த சுழி அமைவதாக கற்பூரத் தட்டைக் கொண்டு வர வேண்டும். அதன் பின் அன்னையின் பாதத்தின் எதிரில் ‘ஓ’ வில் உள்ள கீழே உள்ள சுழியை முடிப்பது போல கற்பூரத் தட்டைக் காட்டுதல் வேண்டும்.‘ஓம் ‘என்பதில் ‘ம்’ என்ற எழுத்து உண்டல்லவா? அதற்குப் பதிலாக சுயம்பிற்கு நேராகக் கீழ் நோக்கி இழுத்துக் கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும்.
கற்பூர ஆராதனை காட்டி அதன் பின் பஞ்சபாத்திரத்திலிருந்து சிறிதளவு தீர்த்தத்தை ஊற்றி வளாவ வேண்டும்.
இந்த ஜீவாத்மா பரமாத்மாவான உன்னை அடைய வேண்டும் என்று துடிக்கிறது.அதற்குத் தடையாக ஆணவம், கன்மம், மாயை, என்ற மூன்று எழுத்துகள் தடுக்கின்றன. அவற்றை விட வேண்டி இந்த ஆரத்திக் காட்டி உன்னை வழிபடுகிறேன் என்கிற பாவனையில் கற்பூர ஆராதனை அமைய வேண்டும்.
ஓம் சக்தி
நன்றி
சக்தி ஒளி மே 1989
பக்கம் 54- 56.
]]>