1008க்கு அன்னையின் மூலமந்திரம்: அன்னை ஒருநாள் அருள்வாக்கில், ‘‘1008 மந்திரங்களை இரண்டு பாலகர்கள் எழுதினார்களே! அவர்களில் ஒருவருக்காவது விநாயக தோத்திரம் எழுத வேண்டுமே என்ற கருத்து இருந்ததா? அவர்கள் எப்படிச் செய்வார்கள்? நான்தான் அவர்களை எழுதாமல் இருக்க மறைத்துவிட்டேன்! 1008 மந்திரங்கட்கு மூல மந்திரம் நான் சொல்கிறேன்; எழுதிக் கொள்ளச்சொல்” – என்று என்னையும் திரு.புலவர் சுந்தரேசனையும் அருகழைத்து மூலமந்திரத்தை எங்களுடைய 1008 மந்திரங்கட்குச் சிகரம் போல் அண்டங்களையெல்லாம் படைத்த தாய் திருவாய் மலர்ந்தருளினாள்!
அதை அப்படியே நூலில் சேர்த்தோம்! ‘‘மந்திரத்தின் இருபக்கமும் பிணவ அடைப்புப் போட வேண்டும்; மந்திரத்தை இந்த நாத ஒழுங்கில் தான் ஓதவேண்டும்” – என்றும் அன்னை உச்சரித்துக் காட்டி – மந்திரநெறி அறியாத எங்களை நெறிப்படுத்தினாள்!
சித்தர் முறை:- ‘‘மந்திரத்திற்கு இரு பக்கமும் பிரணவம் (ஓம்) சேர்க்க வேண்டும்” என அன்னை கூறியது எனக்குப் புதுமையாக இருந்தது! என் அறிவினமும் அப்படிப்பட்டதுதானே! இது ‘‘சித்தர் முறை” என்பது பிறகே தெரிந்தது! அதுவும் ‘‘மீனாட்சியின் குழந்தை” என அழைக்கப் பெற்ற நான்கு இடங்களில் சமாதி நிலை பெற்ற சித்தர் – குழந்தையானந்த சுவாமிகள் வரலாற்றைப் படிக்கும் போதே இதன் உண்மையைப் புரிந்தேன்! மந்திரத்திற்கு முதலில் பிரணவம் சேர்த்து ஒலிப்பது – வடமொழி முறை என்றும், மந்திரத்திற்குப் பின்னால் பிரணவம் சேர்ப்பது தமிழ்முறை என்றும், இருபக்கமும் சேர்ப்பது சித்தர் முறை என்றும் ‘‘சுவாமிகள்” வரலாற்றின் மூலமே – ‘‘மருவத்தூர் சித்தாசி” எனக்குப் புரிய வைத்தாள்!
தாரக மந்திர உபதேசம்: அன்னையைத் ‘‘தாரக மந்திரத்தாரை” – என அழைப்பது வழக்கம். தாரகம் என்பது உயிர். நாட்டு வழக்கில் இது ‘‘தாரக்கம்” என வழங்குகிறது. உயிர் போன்ற மந்திரம் இதுவாகும். சேஷாத்திரி சுவாமிகள் தம் 17-ம் ஆம் வயதில் ‘‘வாலை மந்திர உபதேசம் பெற்றவர் என அறிகிறோம்! மகான் பாஸ்கரராயர், தேவியால் தம் நாவில் ஸ்ரீசக்கரம் வரையப் பெற்று மந்திர உபதேசம் பெற்ற பெரியார் என அறிகிறோம்! குழந்தையானந்த சுவாமிகளும் பகவான் இராமகிருட்டினரும் இளமையிலேயே தேவி மந்திர உபதேசம் பெற்றவர்கள் என அறிகிறோம். nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகளும், வாரியார் சுவாமிகளும் கனவின் மூலம் அருணகிரி சுவாமிகளால் மந்திர உபதேசம் பெற்றவர்கள் என்று வரலாற்றுக் குறிப்புச் சொல்கிறது. இவற்றின் தொடர்பால் மந்திரங்களின் பெருமையை உணர முடிந்தது! இவ்வாலயத்தில் – ஓம் சக்தி மந்திரம் – மூலமந்திரம் – அர்ச்சனை மந்திரம் – வேள்வி மந்திரம் எனப் பலவகையான மந்திரங்களை அன்னை வகுத்துத் தந்தமையும் அறிந்துகொள்ள முடிந்தது. பொதுவாக மந்திரங்களுக்கு அதிதேவதைகள் ‘‘வாக்தேவியர்” என்று அழைக்கப்படுவதையும் நான் அறிந்து கொண்டேன்! தாரக மந்திரத்தை ஞானிகள் ‘‘வாக்” தேவதைகள் மூலமும் – தெய்வத்தின் மூலமும் பெற்றதாக அறிந்து கொண்டேன்! ஏன்? வடமொழி இலலிதா சகஸ்ர நாமம்கூட வாக்தேவிகள் மூலமே, ‘‘தத்தாத்திரேயர்” கிரகித்ததாகத் தானே வருகிறது!
பகல் 11 மணிக்கு: 25-7-1980 சனியன்று பகல் 11.00 மணியளவில் என் வீட்டில் அமர்ந்து நான் சிக்கலான செய்தி ஒன்றைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டு இருந்தேன்! அப்போது யாரோ காதில் வந்து சொன்னது போல் தமிழும், வடமொழியும் கலந்த தொடர் ஒன்று வந்து விழுந்தது! உடன் வடமொழிக்கு அது குறித்த தமிழ்ச் சொல்லும் விழுந்தது! இது ‘‘வாக்” தேவியால் கிடைக்கப் பெறுவதாகவும் சொல் விழுந்தது! எனக்கு ஒன்றுமே புரியவில்லை! இத்தனைக்கும் நான் அசைந்து கொடுக்கவும் இல்லை! காரணம், ‘‘என்எண்ணத்தின் செயலாகவும் இது இருக்கலாம்”- என்றும் எண்ணினேன்! ஆனால் அத்தொடரை மட்டும் குறித்து வைக்கத் தவறவில்லை. மறுநாளும் அதேநேரத்தில் வேறொரு தொடரும் கிட்டியது! இரண்டையும் சேர்த்து பல அறிஞர்களிடம் பூட்டகமாக விளக்கம் கோரினேன்! அவர்கள் ஓரளவுக்கு எனக்கு விளக்கமத் தந்தனர்! அதையே நான் எனக்கு அன்னையளித்த ‘‘தாரகமந்திரம்” என்று உருவேற்றி வருகிறேன்!
கனவில் உண்மை: 29-4-81 செவ்வாய் இரவு கனவில் எனக்கு ஆதிசங்கரர் தரிசனமும் அவர் சமாதியிடம் சிலை வழிபாட்டு இடமும் தோன்றின. அத்தோற்றும் இன்னும் என்நினைவில் பசுமையாகவே உள்ளது. அப்போது ‘‘நீ! சத்தியின் மூலமந்திரத்தை உலகிற்கு உணர்த்தி விளக்கவே பிறந்திருக்கிறாய்! என யாரோ (கனவில்) சொன்னது போல் இருந்தது! அப்போது வெளிவந்த பாடல் இது:
‘‘தானே தோன்றுவது ஞானம்! -அது திருவடியை அடைந்தால் மெய்ஞ்ஞானம்!
நான் கண்ட மருவத்தூர் அன்னை, என் தொல்லைகள் தீர அவன் வகுத்துத் தந்த வழி என இவைகளை எண்ணித் தாயின் கருணையைப் போற்றுகிறேன்! ஓம் சத்தி!
நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 2 (1982) பக்கம்: 6-7
]]>