இந்த உலகம் ஒரு நாடகமேடை என்றும், இங்கே வந்து பிறந்து, வாழ்ந்து மறைந்து போகின்ற மனிதர்கள் எல்லாம் நகர்கள் என்றும் ஆங்கிலக் கவிஞன் ஷேக்ஸ்பியர் கூறி இருக்கிறார்.
டாக்டர், வக்கீல், நீதிபதி, ஆசிரியர், வணிகர், அமைச்சர், மாணவர், தொழிலாளி, முதலாளி, நடிகர், பிச்சைக்காரர், கொலைகாரர், கொள்ளைக்காரர் போன்ற பதவிகள் பட்டங்கள் எல்லாம் மனித வர்க்கமாகிய நமக்கு உலக மேடையில் நடிப்பதற்காகக் கிடைத்த வேடங்களே.
இந்த நாடகத்தைப் பின்னால் இருந்து இயக்கி வைப்பவன் அன்னை ஆதிபராசத்தியே என்பதையும், இந்தப் பிரபஞ்ச நாடகத்தில் நமக்கு வேடம்போட்டு அனுப்புபவள் அவளே என்பதையும் நாம் உணராத காரணத்தால்தான் நாம் மீண்டும், மீண்டும் நடிக்க வேண்டி வந்து பிறக்கிறோம். மறைகிறோம். இந்த நாடகத்தில் சலிப்பும் அலுப்பும் கொண்டு களைப்படைந்துவிட்ட ஞானிகள் எல்லோரும் ………. இந்த வேடம் போதும் போதும் என்றும் மீண்டும் இந்த நாடக வாழ்க்கை வேண்டாம் என்றும் வேண்டிக் கொண்டனர். ‘மீண்டும் பிறப்பு; மீண்டும் இறப்பு, மீண்டும் தாயின் கருப்பையில் படுக்கை. இந்த சம்சார முறை கடப்பதற்கு அரிதாக இருக்கிறது, ‘ஏ முராரி” என்னைக் காப்பாற்று என்று ஆதிசங்கரர் அலறுகிறார்.
‘புல்லாகி பூடாய்ப் புழுவாய் மரமாகி……….. எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்”
என்று புலம்புகிறார் மாணிக்கவாசகர். இந்த வாழ்க்கை என்னும் நாடகத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று எண்ணிய அவர்க்கு இறைவன் திருவருள் கிடைத்தும்
‘மெய்யே உன்பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்” என்று சொல்லிப் பரவசம் அடைகின்றார்.
இந்த வாழ்க்கை என்னும் நாடகத்தை நாடகமாக உணர்ந்துவிட்ட காரணத்தால், நடித்து நடித்துக் களைத்துப் போனதால் இனி இந்தப் பிறவியே வேண்டாம் உன் திருவடி நிழலில் வைத்து ஓய்வுகொடு. மேலான வீடு பேற்றைக் கொடு என்று அந்த முனிவர், யோகி, ஞானிகளால் கேட்க முடிந்தது. அத்தகைய ஞானம் அவர்கட்கு இருந்தது.
நாமோ இவ்வாழ்வு நிலையானது என்று எண்ணிக்கொண்டு, இன்பமும் துன்பமும் நிறைந்த இந்த வாழ்க்கையில் இன்பம் நிலையற்றது என்பதை அறியாமல், துன்பத்துக்குக் காரணமும் புரியாமல் தகாத வழிகளில் எல்லாம் சென்று, அற்ப இன்பத்துக்கு ஆசைப்பட்டு அதனாலே பாவ மூட்டைகளைச் சுமந்து கொண்டு பிறந்து, பிறந்து அல்லற்படுகிறோம். இந்த வாழ்க்கை மரணத்துக்குப் பின்னாலும் நம்மைத் தொடர்கிறது என்பதை நம்ப மறுக்கிறோம், பட்டினத்தார் சொல்லியது போல், நாப்பிளக்கப் பொய் உரைக்கின்றோம்; நவநிதியம் வேண்டும் என்று அலைகின்றோம்; மனைவியோடு கூடிப் புல புல என்க கல கல என மக்களைப் பெறுகின்றோம்; காப்பாற்ற வழியின்றித் திணறுகின்றோம்; கை விடவும் இயலாமல் கலங்குகின்றோம்; கவர் பிளந்த மரத்துண்டில் காலை நுழைத்துக் கொண்டு ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப்போல அகப்பட்டுக் கொண்டு வேதனையில் கலங்குகின்றோம்.
தெய்வத்தின் திருவருளை நாடிய அடியார்கள் எல்லாம் ‘பிறவா வரமதா; பிறந்தால் இறைவா வரந்தா” என்றே வேண்டினார்கள்.
இந்த ஞானம்தான் நமக்கு வரவில்லை. நம்மையெல்லாம் படைத்து நம் நல்வினை, தீவினை இவற்றுக்கு ஏற்ப, இன்ப துன்பங்களைப் பங்கிட்டுக் கொடுத்து, இந்த உலக வாழ்க்கையில் ஆன்ம பரிபக்குவம் உண்டாக வேண்டி நம்மை அனுப்பி வைத்து இருக்கிறானே, அந்த ஒருத்தியை – அந்த ஆதிபராசத்தியை நினைத்துப் பார்க்கின்றோமா? அப்படி நினைத்தாலும் பக்தியுடன் மனம் உருகி வழிபடுகின்றோமா? இல்லை.
இதனை உணராத காரணத்தால் தான் மீண்டும் பிறப்பு! மீண்டும் இறப்பு! இப்படிச் சங்கிலித் தொடர் போல வாழ்க்கைச் சுழலில் அகப்பட்டுத் திண்டாடுகிறோம். இன்றையச் சமுதாயத்தில் தெய்வபக்தியும், தெய்வத்தினிடம் அச்சமும் குறைந்தே போய்விட்டது. அரசியலும், சினிமாவுமே சத்துள்ள விஷயங்களாக மாறிவிட்டன. அறிவியல் வசதிகளிலும், பணம் நிறைந்த வாழ்விலும், நிம்மதியைப் பெறமுடியாமல் மனநிம்மதியை நாடி மேற்கத்திய மக்கள் எல்லாம் நமது மண்ணை நாடி வருகின்றார்கள். வாழ்க்கை இன்னது; அதன் குறிக்கோள் இன்னது; இன்ப துன்பத்துக்கான காரணங்கள் இன்லை என்று அறிந்து உலகுக்கு அறிவுரை வழங்கிய இந்த மண்ணில் பிறந்த நாமோ, போலி நாடகத்தில் ஈடுபட்டுகொள்ள வேண்டியதைத் தள்ளிக் கொண்டும், தள்ள வேண்டியதை இறுகப் பற்றிக் கொண்டும் வருகின்றோம்.
‘எங்கே தர்மம் குறைந்து அதர்மம் மேலோங்குகின்றதோ அங்கெல்லாம் யுகந்தோறும் அவதரிப்பேன்” என்று கண்ணன் கீதை மூலம் சொன்னான்; மதுவும் மங்கையருளே வாழ்க்கையின் லட்சியங்கள் எனக் கருதிய ரோம் நாட்டுச் சமுதாயத்தைத் திருத்தப் பரம்பொருள் ஏசுவாக அவதாpத்தார். இறைவன் என்று ஒரு கர்த்தா இல்லை என்று கூறும் பௌத்தமத அலைகள் வீசியபோது, பரம்பொருள் ஆதிசங்கரராக அவதரித்தார். வேத நெறி குறைந்தபோது சைவநெறி ஓங்கப் பரம்பொருள் ஞான சம்பந்தரை அனுப்பியது. இன்று அறிவியல் வசதிகளை அனுபவித்துக் கொண்டு தெய்வத்தை மறந்து – காட்டு விலங்குகளாய் மாறிவரும் இந்தக் குழுவில் மூலப்பொருளான முழுமுதற் பொருளான ஆதிபராசத்தியே மருவத்தூரில் சுயம்பாகத் தோன்றி மக்களைப் பக்தி நெறியில் திருப்ப வந்திருக்கின்றாள். மதுரையை இடமாக வைத்து, அன்று அப்பன் 63 திருவிளையாடல்களை ஆடிக் காட்டினான். இன்று அந்த அப்பனையே பெற்ற அன்னை ஆதிபராசக்தி, நம் வாழ்நாளில் மேல் மருவத்தூர் மண்ணை இடமாகக் கொண்டு கணக்கற்ற திருவிளையாடல்களை நடத்திக் காட்டிக் கொண்டு வருகின்றாள். ஸ்ரீராமனும், கிருஷ்ணனும், ஆக இருபேருமே இராமகிருஷ்ணராக அவதரித்துச் சக்தியின் சக்தியை மக்களுக்குப் பரப்பினார் என்று பரவசமடைந்தோம். இன்றோ, அந்த ஸ்ரீராமனும், கிருஷ்ணனும், இராமகிருஷ்ணரும் ஆக மூவருமே அருள்திரு பங்காரு அடிகளாக அவதரித்து, அவர் மூலம் நம் தாய் ஆதிபராசத்தி மருவத்தூர் மண்ணிலே புhpகின்ற திருவிளையாடல்கள்தான் எத்தனை?
நாத்திகம் பேசித் திரிந்தோரை ஈர்த்துத் தன் புகழ்பாட வைத்து விட்டான்! கொலைகாரனும், கொள்ளைக்காரனும் தன்பின்னை என்றாள். முற்றும் துறந்து பக்குவம் பெற்றவரையும் தன் பிள்ளை என்கிறாள். கர்த்தரை நினைக்கின்ற கிருஸ்துவப் பிள்ளைகளையும் தன்பால் ஈர்த்துத் தன்னை அவர்கட்குக் கிறிஸ்துவாகக் காட்டி அருள்பாலித்துத் தனக்குத் தொண்டாற்ற வைத்துக்கொள்கிறாள்! அல்லாவைத் தொழுகின்ற முஸ்லீம் பிள்ளைகளையும் அழைத்து, நானே குரானுக இருக்கிறான், தாயின் கருணையின் பக்தியால் இங்கு எல்லா மதத்தின் பிள்ளைகளும் ஒரே குடும்பக் குழந்தைகாளக அவரவர்கள் வழியில் வணங்கிப் பலன் பெறுவதை அவனின் திருவிளையாடல்களில் ஒன்றாக நாம் இந்த மண்ணில் காண்கிறோம்.
(தொடரும்)
ஓம் சக்தி
நன்றி:சக்திஒளி 1982 (பக்: 16-18)
]]>