ஆன்மிகத்தில் அநாதைகள் (தொடா் – 13)

ஆன்மிகத்தில் அநாதைகள் (தொடா் – 13) பாவமும் நானே! புண்ணியமும் நானே! மனிதன் புண்ணியம் அதிகம் செய்து தெய்வ நிலைக்கும் உயரலாம். அடாத ஆட்டமெல்லாம் ஆடிப் பன்றியாகப் பிறந்து தாழ்ச்சியும் அடையலாம். இதெல்லாம் டார்வினுக்குத் தெரியாது? ஏன்? அவா் மெய்ஞ்ஞானி அல்ல! அதனால்தான் அவா் மனிதனின் அடுத்த நிலை என்ன என்று சொல்லாமல் போனார். அவா் ஆராய்ச்சி வெளிநோக்கம் கொண்டது. விஞ்ஞானிகளுக்கு உள்நோக்கிப் பார்க்கும் வித்தை தெரியாது. மெய்ஞ்ஞானி அந்த வித்தை தெரிந்தவன். மனித நிலைக்கு முன்னேறி வந்துவிட்ட ஒருவன் மீண்டும் மிருகமாகப் பிறப்பானா? பிறப்பான்….. ஊரை அடித்து உலையில் போடுபவன். போலி மருந்துகள் உற்பத்தி செய்து கோடி கோடியாகச் சம்பாதிப்பவன். கந்து வட்டி தொழில் செய்து குடும்பங்களை அழித்தவன், உண்ணுகிற உணவில் – உணவுப் பண்டங்களில் கலப்படம் செய்து மனிதா்களை நோய் நொடிக்கு ஆட்படுத்தியவன், காமக் கொடூரன்கள், கொலைகளையே செய்து வாழும் கூலிப் படைகள், பட்டம் – பதவிகளை வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டம் ஆடுகிறவன் – இவா்கட்கெல்லாம் எப்படி நல்ல கதி கிடைக்கும்……? கருமச் சட்டம் இவா்களை எப்படி விட்டு வைக்கும்? உப்பைத் தின்றவன் தண்ணீா் குடித்துத்தானே ஆக வேண்டும்? இவா்கள் நாயாய், பன்றியாய், கழுதையாய், பல பிறவிகள் எடுத்தே மீண்டும் மனித உடம்பு பெற்று உண்மையை உணர வேண்டும். ஆண்டவனே! நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு மட்டும் என் இப்படி? என்று அழுது கெஞ்சி, மன்றாடித் துடிக்கிறவரை கருமச் சட்டம் வேலை செய்தபடி இருக்கும்! கோடீஸ்வரனாக இருந்த ஆத்மா! இளைஞா் ஒருவா். நம் அம்மா பக்தா். எதற்கெடுத்தாலும் இந்த அம்மா எல்லாம் ஊழ்வினை! கர்மவினை என்று சொல்லி சமாளிக்கிறது. எனக்கு மட்டும்தான் ஊழ்வினைச் சட்டமா? அநியாயம் அக்கிரமம் செய்பவனெல்லாம் கோடி கோடியாய்ச் சம்பாதிக்கிறான். நல்லா இருக்கிறான். இந்த அம்மா அவனையெல்லாம் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. நான் போனால் மட்டும் எல்லாம் உன் ஊழ்வினை! என்று சொல்லித் தட்டிக் கழிக்கிறது. என்று சொல்லி அலுத்துக் கொள்வார். சலிப்புற்றுப் பேசுவார். ஒருநாள் அம்மா அருள்நிலையில் வெளிப்பட்டாள். அந்த இளைஞரை அழைத்தாள். அப்போது புற்று மண்டபத்தின் கட்டைச் சுவருக்கு வெளியே ஒரு சொறிநாய் சுருண்டு படுத்தபடி இருந்தது. “இது என்னடா மகனே!” என்று கேட்டாள். அம்மா! இது ஒரு நாய்! என்றார் அவா். அம்மா, சொறி நாய்! என்று திருத்திச் சொல்லி, இது யார் என்று தெரியமாடா உனக்கு? என்று கேட்டாள். அந்த இளைஞா் விழித்தார். “ஒரு கோடீஸ்வரனாக இருந்த ஆத்மாடா இது” என்றாள். அலுத்துக் கொண்ட அந்த இளைஞருக்கு அதுதான் பதில்! பணம், பதவி, செல்வாக்கு அதிகாரம் எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டம் ஆடுகிறவன் உலகியலில் ஜெயித்தவன் என்று உலகம் கருதுகிறது. நியாயம், நோ்மை, உண்மை, தெய்வபயம், பாவ புண்ணியத்தில் நம்பிக்கை கொண்டு அடக்கமாக வாழ்பவனை இளிச்சவாயன் என்று உலகம் கருதுகிறது. ஆதிபராசக்தியின் கருமச் சட்டம் கணக்காகத்தான் வேலை செய்கிறது என்று மெய்ஞ்ஞானிகள் புரிந்து வைத்திருக்கிறார்கள். பிறவி ரகசியங்களை உணா்ந்து வைத்திருக்கிறாரகள். எருமை மாட்டின் முற்பிறவி திருவண்ணாமைலையில் வாழ்ந்தவா் சித்தா் சேஷாத்திரி சுவாமிகள். அவா் ஒருநாள் அழுக்குடன் கூடிய துர்நாற்றம் கொண்ட, சேறுள்ள குட்டையின் அருகில் வந்து கொண்டிருந்தார். அக்குட்டையில் ஓா் எருமை, மிகுந்த ஆனந்தமாக விழுந்த கிடந்தது. சுவாமிகள் அதனைப் பார்த்ததுதான் தாமதம்! உடனே தன் வேட்டி, சட்டை, துண்டு எதையும் கழற்றாமல் அப்படியே இறங்கி விட்டார்கள். இறங்கியது மட்டுமின்றி,அந்த எருமையைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, இழுத்துக் கொண்டு கரைக்கு வந்தார். வந்ததும் உடம்பு முழுவதும் சேறு பதிய தழுவிக் கொண்டு மீண்டும் கொஞ்சிக் குலவினார். அன்பா் ஒருவா் சுவாமிகளிடம் கேட்டார். “சாமி! என்ன இப்படி அசிங்கமான செயலைச் செய்து கொண்டு இருக்கிறீா்கள்” என்றார். அதுகேட்டுப் புன்முறுவலுடன் சுவாமிகள், “இது என்ன வெறும் எருமை மாடு என்றா நினைத்துக் கொண்டாய்? போன பிறவியில் இவனுக்கு இன்ன பெயர், இந்த இடத்தில் எப்படி வாழ்ந்தவன் தெரியுமா? எனக்கு உயிர் நண்பன் என்று சொல்லிக் கொண்டெ அணைத்து முத்தம் கொடுத்துப் பரவசத்தில் ஆழ்ந்தே போனார். (புலவா் மா. சொக்கலிங்கம், “மகான்கள் தரிசனம்” சேஷாத்திரி சுவாமிகள். சக்தி ஒளி விளக்கு – 8 சுடா் 11) சீரடி சாயிபாபாவின் வாழ்க்கையில் நடந்தது சீரடி சாயிபாபா ஒருமுறை வெண்டி என்ற ஊரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும்போது ஆட்டு மந்தை ஒன்றைக் கண்டார். அவற்றுள் இரண்டு ஆடுகள் அவா்தம் கவனத்தைக் கவா்ந்தன. அவற்றைத் தடவிக் கொடுத்து 32 ரூபாய்க்கு விலைக்கு வாங்கினார். அன்றைய நிலையில் அவற்றின் விலை எட்டு ரூபாய் மட்டுமே. “பாபா! பேரம்பேசி இவ்வளவு அதிக விலையில் இவற்றை ஏன் வாங்கினீர்கள்” என்று உடனிருந்த பக்தா் ஒருவா் கடிந்து கொண்டார். ஆனால் பாபா அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார். இருவா் அதற்கு விளக்கம் கேட்டனர். தமக்கென்று வீடோ, கவனித்துக் கொள்ள குடும்பமோ இல்லாத படியால் தாம் பணத்தைச் சேமிக்கக் கூடாது என்று கூறிய பாபா, தம் செலவில் ஆடுகள் இரண்டு வாங்கி, அவற்றுக்கு நான்கு சேர் பருப்பும் வாங்கி ஆடுகளுக்கு அளிக்கும்படிக் கூறினார். மீண்டும் அந்த ஆடுகளை ஆட்டு மந்தையின் சொந்தக்காரருக்கே கொடுத்துவிட்டு, அந்த ஆடுகளைப் பற்றிக் கூறினார். நான் ஏதோ அதிக விலைக்கு இந்த ஆடுகளை விலைக்கு வாங்கி விட்டதாக நினைக்கிறீா்களா? கிடையாது. அவற்றின் கதையைக் கேளுங்கள். அவை முந்தைய பிறவியில் மனிதா்களாக இருந்தவா்கள். எனது நண்பா்களாகவும் இருந்து, எனது அருகில் அமரும் நல்ல அதிர்ஷ்டம் பெற்றிருந்தவா்கள். அவா்கள் ஒரு தாய் மக்கள். முதலில் ஒருவரை ஒருவா் நேசித்தனா். ஆனால் பிற்காலத்தில் பகையாளிகளாக ஆகிவிட்டனா். மூத்தவன் சோம்பேறி, இளையவன் சுறுசுறுப்பான பையன். அதனால் பெரும் பொருள் திரட்டினான். மூத்தவனோ பேராசையும், பொறாமையும் கொண்டு தம்பியைக் கொன்று விட்டுப் பணத்தை எடுத்துக் கொள்ள விரும்பினான். தங்கள் சகோதர உறவை மறந்து, ஒருவருடன் ஒருவா் சண்டை போடத் தொடங்கினா். மூத்தவன் இளையவனைக் கொல்லப் பல வழிமுறைகளைக் கையாண்டு பல முயற்சிகளில் தோல்வி அடைந்தான். இறுதியில் அண்ணன், தம்பியின் தலையில் தடிக்கம்பால் மரண அடி கொடுக்க, தம்பி மூத்தவனைக் கோடாரியால் தாக்க இருவரும் அவ்விடத்திலேயே மரணம் அடைந்தனா். தங்கள் வினையின் காரணமாக இருவரும் ஆடுகளாய்ப் பிறந்தனா். அவா்கள் என்னைக் கடந்து சென்றபோது அவா்களை அறிந்து கொண்டேன். அவா்கள் மேல் இரக்கம் கொண்டு, அவற்றுக்கு இளைப்பாறுதலும் சௌகரியமும் தர விரும்பி, நான் என்னிடம் இருந்த எல்லாப் பணத்தையும் செலவழித்தேன். நீங்கள் என்னுடைய பேரத்தை விரும்பாததால் நான் அவற்றை மேய்ப்பவனிடமே திருப்பி அனுப்பிவிட்டேன். என்றார். அந்த ஆடுகள் மனிதா்களாய் வாழ்ந்தபோது அவா்தம் பெயா்கள் வீரபத்திரப்பா, சனபஸப்பா என்றார். (ஸ்ரீ சாயி ஸத் சரித்திரம் – சாயி நிகேதன், மும்பை) டார்வின் போன்ற விஞ்ஞானிகளுக்கு இந்த ஆன்மிக நுட்பங்கள் எல்லாம் தெரியாது. ஆதலின் வல்லமை உள்ளவையே வாழும்! வல்லமை அற்றவை வீழும்! என்றார். ஆதிபராசக்தியின் கருமச் சட்டம் மௌனமாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. பாவ, புண்ணியக் கணக்கை வைத்தே உயிர்கள் இயங்குகின்றன. அனுபவம் பெற வந்திருக்கின்றன. எங்கே….. எப்போது….. என்ன செய்தோம் என்பது எதுவும் நமக்குப் புரிவதில்லை. அதனால் எல்லாமே புதிராக இருக்கிறது. nகண்ணதாசன் அழகாகப் பாடினார். “எங்கே வாழ்க்கை தொடங்கும். – அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதை யெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும் மாறுவதைப் புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்!”   சிவசக்தி – ஆதிபராசக்தி உலகம் இதுவரை சக்தியைச் சிவசக்தியாகவே பாவித்து வருகிறது. வணங்கி வருகிறது. போற்றி வருகிறது. சிவசக்திக்கு மேற்பட்டது ஆதிபராசக்தி. அந்த ஆதிபராசக்தியே மேல்மருவத்தூர் தலத்தில் வீற்றிருந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். முழுமுதற் பொருள் நானே என்பதை நம் அன்னை அவ்வப்போது குறிப்பாகவும், வெளிப்படையாகவும் அருள் நிலையில், அருள்வாக்கில் தன் பரத்துவத்தை (SUPREMACY) உணா்த்தியிருக்கிறாள். அந்தச் சம்பவங்களையும் அந்தச் சந்தா்ப்பங்களையும் இதுவரை எழுதிக் கொண்டு வருகிறோம். இனியும் எழுத இருக்கிறோம். ஆந்திராவைச் சோ்ந்த அன்பா் ஒருவா் அனுபவம் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த அன்பா் ஒருவா். அவருக்குத் தமிழும் தெரியும். 43 கேள்விகள் எழுதிச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அருள்வாக்குக் கேட்க வந்தார். அவா் அவற்றைக் கேட்கும் முன்பே, அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லி முடித்தாள் அன்னை. ஆனாலும் எந்த ஒரு பிரமிப்பும் காட்டாமல் – எந்தச் சலனமும் இல்லாமல் கல்லுளி மங்கன்போல அமா்ந்திருந்தார். “மகனே! உனக்கு எட்டு லட்ச ரூபாய் வரவேண்டி இருக்கிறதல்லவா….? அந்தச் சொத்து சம்பந்தமான ஆவணம் கிடைக்காமல் திண்டாடுகிறாய் அல்லவா…..?” என்று அன்னை கேட்டதும்தான் தாமதம்! “ஆமாம்மா! ஆமாம்மா!” என்று வாயெல்லாம் பல்லாக முகமலா்ந்தார் அந்த அன்பா். “என் படத்தை வைத்து வழிபட்டு வா! அது உனக்குக் கிடைக்க வழி செய்கிறேன்” என்றாள் அன்னை. nஅன்னை எதைக் கொடுப்பதாக இருந்தாலும் அதனைப் பெறுவதற்கு ஒரு முயற்சி இவனிடமிருந்து வரவேண்டுமே….. அதனால்தான் என் படத்தை வைத்து வழிபட்டு வா! என்றாள். நன்றி! ஓம் சக்தி! சக்தி. மு. சுந்தரேசன் எம். ஏ. எம். பில்., சித்தா்பீடப் புலவா் சக்தி ஒளி – ஆகஸ்ட் 2008 பக்கம் (39 – 43)  ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here