ஆன்மிகத்தில் அநாதைகள் (தொடா் – 07)
உடம்புக்குள் இருந்து கொண்டு உடம்பை இயக்குவது மட்டும்தான் ஆத்மாவின் வேலை! ஆனால் இந்தப் பிரபஞ்சத்துக்கள் நின்று பிரபஞ்சம் முழுவதையும் இயக்குவது மட்டும் பிரம்மத்தின் வேலையல்ல. இப்பிரபஞ்சம் முழுவதையும் உற்பத்தி செய்வதும் அதன் வேலை ஆகும்.
ஆத்மா உடலை உற்பத்தி செய்வதில்லை. ஆனால் பிரம்மமோ பிரபஞ்சத்தை இயக்குவது மட்டுமின்றி அதனை உற்பத்தி செய்கிறது என்பா்.
பிரும்மம்: சொற்பொருள்
“பிருஹ்” என்ற சொல்லிலிருந்து பிறந்தது பிரம்மம். இதற்கு “வளா்” என்று பொருள். பிரும்மம் தன்னிலிருந்து இந்த உலகம் முழுவதும் வளா்வதற்கு மூலமாக இருக்கிறது. எனவே அதற்கு இந்தப் பெயா் ஏற்பட்டது.
பிரம்மம் என்பதற்கு விரிவடைதல் என்றும் பொருள் உண்டு.
“பிரபஞ்சம்
விரிவடைந்து கொண்டே போகிறது. இது எங்கே போய் முடியும்? எப்படி முடியும்? என்பதெல்லாம் என்னைப் போன்ற விஞ்ஞானிகட்குத் தெரியவில்லை. எல்லாமே அதிசயமாக இருக்கிறது” – என்றார் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.
பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே போகிறத என்ற உண்மையை ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பே உபநிடதம் கூறியது. பிரும்மாண்டம் என்ற சொல்லிற்கு விரிவடைந்து கொண்டிருக்கிறது – தொடா்ந்து வளா்ந்து கொண்டிருக்கிற ஒன்று என்று பொருள். அதன் வளர்ச்சிக்கு ஒரு முடிவும் இல்லை; ஒரு எல்லையும் இல்லை.
பிரும்மம் : கடவுள்
இனி வரும் தொடா்களிலெல்லாம் பிரம்மம் என்ற சொல் அடிக்கடி வரும். எனவே படிப்பவா்கள் குழப்பமடையக் கூடாது.
பிரும்மம் என்று வரும்போதெல்லாம் கடவுள் என்ற சொல்லை நினைவில் கொண்டு வாருங்கள்!
எல்லாம் வல்ல அந்த மூலப் பரம்பொருளை, உபநிடதங்கள் பிரம்மம், ஆத்மா, பரமாத்மா, பூரணம், பரிபூரணம், பரம புருஷன் என்றெல்லாம் குறிப்பிடுகின்றன.
பிரம்மத்துக்கு – அதாவது பரம்பொருளுக்கு இரண்டு நிலைகள் உண்டு.
- எல்லாவற்றையும் கடந்து நிற்பது.
- எல்லாவற்றுக்கும் உள்ளே இருப்பது
இந்த இரண்டு இயல்பையும் கொண்டிருப்பதால் பிரம்த்துக்குக் கடவுள் என்று பெயா் வைத்தார்கள் தமிழா்கள். மிக அற்புதமான வார்த்தை கடவுள்!
பிரும்மம் எல்லாவற்றையும் கடந்தது
விண்வெளி:
நாம் வசிக்கிற பூமிக்கு மேலே நீல நிற ஆகாயம் தெரிகிறது. கடற்கரையில் நடந்து கொண்டே போனால் அதோ அந்தப் பனை மரத்துக்கு அருகே வானம் பூமியைத் தொட்டுக் கொண்டு இருப்பது போலத் தெரிகிறது. கிட்டப் போனால் தொடுவானம் எட்டிப் போகிறது.
அந்த விண்வெளியில் என்னதான் இருக்கிறது? ஒன்றுமே இல்லை! அது ஓா் வெற்றிடம். விரிவடைந்து கொண்டே செல்கிற ஓா் வெற்றிடம்.
இந்த விண்வெளியில் தான் பால்
வழி மண்டலங்கள் (Milk way Galaxies) நட்சத்திரங்கள், சூரியக் குடும்பங்கள் எல்லாம் இருக்கின்றன.
பூமிக்கு மேலே ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் காற்று வீசும்! மேலே போகப் போக அங்கே காற்று கிடையாது. ஒரு எல்லை வரை தான் காற்று மண்டலம்! அதற்கு அப்பால் விண்வெளி ஒரே இருட்டாகத்தென்படுமாம்! இரவானாலும் பகலானாலும் காற்று மண்டலத்துக்கு அப்பால் உள்ள விண்வெளி இருண்டே காணப்படுமாம்.
இந்த விண்வெளியில்தான் பல பிரபஞ்சங்கள்! அவற்றுள் நாமிருக்கும் பூமிப் பந்து ஒன்று!
அது சரி! நமது பிரபஞ்சம் எப்போது உருவானது?
சுமார் 1600 கோடி வருடங்கட்கு முன்பு இருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இந்தப் பிரபஞ்சம் என்பது முதல் ஏட்டையும், கடைசி ஏட்டையும் இழந்த கையேடு. கையெழுத்து நூல். அதன் தொடக்கம் எப்படி? அதன் முடிவு எப்படி? என்று சொல்ல முடியாது என்றார். ஒரு பாரசீகக் கவிஞா்.
இப் பிரபஞ்சம் அப்போது மிகுந்த அடா்த்தியும், மிக உயா்ந்த வெப்பநிலையும் உடையதாக இருந்ததாம். அதில் ஒரு பகுதி வெடித்துச் சிதறியதாம். அதன் பின் அது விரிவடைந்து காலம் செல்லச் செல்ல குளிர்ச்சி அடைந்ததாம்.
அதன் வெப்பக் கதிர்களிலிருந்தே துகள்கள், அணுக்கள் உருவாயின.
இதன் பின் விண் முகில்கள் அண்டமாகப் பரிணமித்தன.
பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டெ செல்வதால் அண்டங்களும் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்கின்றன. விரிவடைந்து கொண்டே செல்லும் பிரபஞ்சங்கள் பல கோடி ஆண்டுகட்குப் பின் சுருங்கலாம்; சுருங்கி மறுபடியும் ஒரு புள்ளியாக மாறும் வாய்ப்பண்டு என்கிறார்கள்.
தோன்றும் யாவும் ஒரு காலத்தில் ஒடுங்கம் என்று நமது தத்துவ நூல்கள் இதனை முன்பே சொல்லிவிட்டன.
அண்டங்கள்
இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு பகுதி அண்டங்கள். அண்டங்கள் என்றால் என்ன?
பல லட்சக் கணக்கான நட்சத்திரங்கள்
அடங்கிய ஒரு பெரிய கூட்டம்.
ஆயிரத்தெட்டு அண்டங்கள் இருப்தாக நமது புராணங்கள் சொல்கின்றன. கூரை வீட்டின் ஓட்டையிலிருந்து சூரியனின் ஒளிக்கிரணம் வருவதைக் கவனித்துப் பாருங்கள். அதில் சின்னச் சின்ன தூசுகள் இருப்பது போல பரவெளியிலே பல லட்சக் கணக்கான அண்டங்கள்!
ஒரு அண்டத்துக்கும் மற்றொரு அண்டத்துக்கும் இடையே எவ்வளவு தூரம் இருக்கும்?
நம கண்ணுக் கென்னவோ சின்னச் சின்ன நட்சத்திரங்கள் பக்கத்துப் பக்கத்தில் இருப்பதுபோலத்தான் தெரிகின்றன. இவற்றை – இவற்றின் தூரத்தை அளந்து சொல்ல நமது அளவு கோல் பயன்படாது. எனவே ஒளி ஆண்டு என்று கணக்குப் போட்டு தூரத்தை நிர்ணயிக்கிறார்கள். அதைக் கேட்டாலே தலை சுற்றுகிறது.
நன்றி!
ஓம் சக்தி!
சக்தி. மு. சுந்தரேசன் எம். ஏ. எம். பில்., சித்தா்பீடப் புலவா்
சக்தி ஒளி – பிப்ரவரி 2008 பக்கம் (59 – 61)
]]>