ஆன்மிகத்தில் அநாதைகள் (தொடா் – 06)
எல்லாம் வல்ல கடவுள்
நமக்கு மேலே ஒருசக்தி இருக்கிறது என்ற உண்மையை உணரும் சந்தா்ப்பம் மனிதனுக்கு எப்படியாவது ஏற்படுகிறது. தன் அறிவும், முயற்சியும், திட்டமும் தோற்கும் போதுதான் மனிதன் இதை உணருகிறான். ஆனாலும் அந்த உணா்ச்சி நிலையாக இருப்பதில்லை; இதுதான் மனிதனின் பரிதாபம்!
“இன்னதென்று கூற முடியாத மாயமான சக்தி ஒன்று எல்லாவற்றிலும் பரவி நிற்கிறது. அதனை நான் காண முடியாவிட்டாலும் நான் அதை உணா்கிறேன். புலன்கட்குத் தெரியும் பொருள்களில் இருந்து அது முற்றிலும் வேறுபட்டது. அறிவு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. கண்ணுக்குத் தெரியாத அந்த சக்தி நம்மை உணரச் செய்கிறது. ஆனாலும் அதனை நம்மால் மெய்பிக்க முடியாது” என்கிறார் காந்தியடிகள்.
வாதங்களாலும், தர்க்கங்களாலும் கடவுளைக் காட்ட முடியாது. பரிசோதனைகள் மூலம் விஞ்ஞான உண்மைகளை நிரூபிப்பது போல கடவுளின் இருப்பை நிரூபிக்க முடியாது. தெய்வ அனுபவங்களால் மட்டும் தான் அதனை உணர முடியும்.
மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகட்கும் புலன்கட்கும் தெரிகிற தூலமான பொருள்களை ஆராய்வது விஞ்ஞானம்.
பொறிகட்கும், புலன்கட்கும் புலப்படாத இறைமை பற்றியது மெய்ஞ்ஞானம்.
சமுதாயத்தில் டாக்டா்களையும், எஞ்சினியா்களையும், வக்கீல்களையும், அறிஞா்களையும், கலைஞா்களையும், நீதிபதிகளையும் படைக்கிற கடவுள் அவ்வப்போது ஞானிகளையும், மகான்களையும் சித்தா்களையும் யோகிகளையும் உலகத்துக்கு வழிகாட்ட அனுப்பி வைக்கிறார். கடவுளைப் பற்றியும், மெய்ஞ்ஞானம் பற்றியும் இவா்களிடம் தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நல்வினை இருப்பவா்கட்குத்தான் இவா்களின் தொடா்பு வந்து வாய்க்கிறது. ஒரு சிறிய வட்டத்துக்குத்தான் அவா்கள் போதனைகள் சென்று சோ்கின்றன.
கடவுளைப் பற்றியும், ஆன்மிகம் பற்றியும், மெய்ஞ்ஞான உண்மைகள் பற்றியும் சூட்சுமமான விஷயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் மகான்களின் வரலாறுகளைப்ப படிக்க வேண்டும்.
இந்தியாவில் மட்டும் தான் அதிகமான ஞானிகளும், மகான்களும் பிறக்கிறார்கள். இந்தியாவுக்கு இப்படி ஒரு ராசி உண்டு.
கடவுளைத் தேடி அலைந்தவா்கள் இங்கே அதிகம். உபநிடதங்கள் தோன்றிய காலத்தில் பல ரிஷிகள் கடவுளைத் தேடி தியானமும், தவமும் இருந்தார்கள்.
அவா்கள் தங்கட்குக் கிடைத்த அனுபவ உண்மைகளைச் சின்னஞ்சிறு வாக்கியங்களில் பளிச் பளிச் என்று மின்னுவதுபோல வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
உபநிடதங்களோடு ஒப்பிடும் போது ரிக்வேதம், எசுா் வேதம், சாம வேதம், அதா்வண வேதம் என்னும் நான்கு வேதங்களும் மிக மிகச் சாதாரணமானவை.
வேதத் திரட்டுகளிலேயே மிக மிக உன்னதமான நூல்கள் இந்த உபநிடதங்களே! இறைவன், உலகம், உயிர்கள் என்ற முப்பொருள் பற்றிய ஞானக் கருத்துக்களைத் தெரிவிப்பவை உபநிடதங்களே! அவை ஞானக் களஞ்சியம்! இந்தியாவின் பொக்கிஷம்! சைவம், வைணவம், சாக்தம் போன்ற இந்து மதத்தின் பிரிவுகள் எல்லாமே உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டே தமது மதக் கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டன!
தத்துவ ஞானம் பற்றிய கருத்துக்கள் கிரீஸ் நாட்டில் தோன்றுவதற்கு முன்பே இந்திய நாட்டில் அவை தோன்றி விட்டன. உபநிடதங்கள் காலம் தான் தத்துவ ஞானம் தோற்றிய காலம்! முனிவா்கள் தவப் பள்ளிகளும், காடுகளுமே இந்தியத் தத்துவ ஞானம் வளா்வதற்கு உரிய இடங்களாக இருந்தன.
உபநிடதங்கள் மட்டும் தோன்றாமல் இருந்திருக்குமானால், இந்து மதம் வெறும் சடங்குகளைக் கொண்ட மதமாக ஆகி இருக்கும்.
“என்னைப் பொறுத்தவரையில் நான் பின்பற்றி வாழ உபநிடதங்களையே தோ்ந்தெடுத்துள்ளேன. ஏனெினில் அவற்றிடம் எனக்கு மகத்தான நம்பிக்கை இருக்கிறது” – என்கிறார் விவேகானந்தா்.
“உபநிடதங்களில் உள்ள தத்துவங்கள் எல்லாம் அக்கால அரசா்களுடைய மூளையில் எழுந்தவையே! புரோகிதா்களிடமிருந்து பிறந்தவை அல்ல” என்கிறார் அவா்.
உபநிடதங்களின் மையக் கருத்து
இந்திரன், வருணன், அக்கினி, சோமன் என்ற சிறு தெய்வங்களையே வணங்கி வந்த ஆரிய சமுதாயத்தில் இவை எல்லாவற்றுக்கும் மேலான மூலப் பரம்பொருள் ஒன்று உண்டு.
அந்த ஒரு பரம்பொருளின் வெளிப்பாடே இந்த உலகமும் உயிர்களும் ஆகும் என்ற மையக் கருத்தை உபநிடதங்கள் போதித்தன.
அந்த ஒரு பரம்பொருளுக்குக் கட்டுப்பட்டும், அஞ்சியுமே பிற தெய்வங்கள் செயலாற்றுவதாக உபநிடதங்கள் கூறின.
மிருக பலி கொண்ட யாகங்களை உபநிடதங்கள் கேலி செய்தன. அவற்றால் பாவங்களே மிஞ்சும் என்று கூறின.
யாகங்களைச் சிரத்தையோடு செய்தால் சொர்க்க உலகம் போகலாம் அங்கே எல்லாம் இன்பமே! என்று வேதங்கள் போதித்தன.
அந்தச் சொர்க்கம் உனக்கு நிரந்தரமானது அல்ல! உனது புண்ணியப் பலன்களை காலியான உடனே நீ மீண்டும் பூமிக்கு வந்து பிறக்க வேண்டியவனே!
சொர்க்கம் வேறு! மோட்சம் வேறு. மீண்டும் பிறவிக்கு வராமல் இருப்பதே மோட்சம்!
நிரந்தரமான இன்பம் மோட்சத்தில்தான் கிடைக்கும். அந்தச் சொர்க்கம் தற்காலிகமானது எனவே, ஞானத்தைத் தேடு! அதுதான் மானிட வாழ்வின் இறுதி லட்சியம் என்று உபநிடதங்கள் போதித்தன.
உபநிடதக் கொள்கைகளை மக்களிடம் பரப்புவது மிகக் கடுமையான செயல். ஏன்! அதிலே பொன், பொருள், பணம், பதவி, புகழ் பெறுவதற்கு வழி சொல்லப்படவில்லை. இவையெல்லாம் அற்பமானவை. நிரந்தரமற்றவை. ஞானம் ஒன்றுதான் உனக்குப் பேரின்பம் தரும் என்கின்றன. மற்றவையெல்லாம் அற்பமானவை என்று தெளிவுபடுத்தின.
உபநிடதம் வழங்கிய கொடை
நமக்குள்ளே இருக்கிற ஆன்மாவும், பிரம்மமும் (பரமாத்மாவும்) இவ்விரண்டும் ஒன்றே; ஒரே தன்மையானவை என்ற ஒருமைக் கொள்கை இந்த உலகத்துக்கு உபநிடத காலத்து ரிஷிகள் வழங்கிய பேருண்மையாகும். அதுவே உலக மதங்கட்கு இந்தியா வழங்கிய நன்கொடை!
இந்த உலகமும், உயிர்களும் அந்த ஒரு பரம்பொருளின் வெளிப்பாடே என உபநிடதங்கள் போதித்தன.
பாரதி போற்றியது
“பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே! பாரினில் வேறெது நூல் இது போலே!” – என்று பாரதியார் உபநிடதங்களைப் போற்றிப் பாடுவார்.
அந்தக் காலத்தே படித்தவா்களையும், அறிவாளிகளையும் இந்த உபநிடத நூல்கள் கவா்ந்தன.
பாமர மக்கட்கு உபநிடதங்கள் பிடிபடவில்லை. ஆகவே அவை எடுபடவில்லை. அன்றும் இதே கதை! இன்றும் இதே கதை! ஞானம் வேண்டும் என்று இங்கு யார் அழுகிறார்கள்?
ரிக் வேத காலத்து ரிஷிகள் கடவுளை வெளியே தேடினார்கள். பிறகு வந்த உபநிடத கால ரிஷிகள் கடவுளை உள்ளே தேடினார்கள்.
வேதங்கள் பல தெய்வங்களை வழிபடும் துதிப்பாடல்கள் கொண்டவை. வேள்விச் சடங்குகளைப் பற்றிய விளக்கங்களைக் கூறுபவை. உபநிடதங்கள் கடவுள், உயிர், உலகம் என்ற முப்பொருள்கள் பற்றிய ஞானக் கருத்துக்களைக் கொண்டவை.
உபநிடத காலத்திலேதான் எல்லாம் வல்ல பரம்பொருள் ஒன்றே என்ற ஒரு தெய்வக் கோட்பாடு வெளியிடப்பட்டது.
எத்தனை தெய்வங்கள்?
வேத காலத்தில் பிரபலமான ரிஷி ஒருவா் இருந்தார். யக்ஞவல்கியர் என்று பெயர். அவரிடம் சீடா் ஒருவா் கேட்டாராம். “சுவாமி! இந்த உலகத்தில் மொத்தம் எத்தனை தெய்வங்கள்தான் இருக்கின்றன? எனக் கேட்டாராம்.
ரிஷி, அதுவா! மொத்தம் 3306 தெய்வங்கள் என்று சொல்லிவிட்டு அவற்றில் முக்கியம் 33, அவற்றில் முக்கியம் 6. அவற்றில் முக்கியம் 3,, 2, ஒன்று என்று சொல்லிவிட்டு முடிவாக ஒன்றே ஒன்று! அதுதான் பிரம்மம்! என்றாராம்.
பிரம்மம் என்றாலும் கடவுள் என்றாலும் ஒன்றே
நெருப்புக்குச் சுடுகிற தன்மை இயல்பு. தண்ணீருக்குக் குளிர்ச்சியாக இருப்பது இயல்பு. இந்த இயல்பை அளித்திருப்பது ஒரு சகதி!
பூமியைச் சுழலச் செய்கிறது ஒரு சக்தி!
பூமியின் மேல் உள்ள மரம், செடி, கொடிகள் அனைத்தும் வளா்வதும், பூப்பதும், காய்ப்பதும் அந்த ஒரு சக்தியினாலேயே ஆகும்.
நம் உடம்பில் நின்று ஒரு சக்தி இயக்குவதைப் போல இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் இயக்குகிற சக்தி எதுவோ அதுவே பிரம்மம்.
உடம்மை இயக்குகிற சக்திக்கு ஆன்மா என்று பெயர்.
பிரபஞ்சத்தை இயக்குகிற சக்திக்குப் பிரம்மம் என்று பெயா்.
பிரம்மத்துக்கும் ஆன்மாவுக்கும் ஒரு வேறுபாடு உண்டு.
நன்றி!
ஓம் சக்தி!
சக்தி. மு. சுந்தரேசன் எம். ஏ. எம். பில்., சித்தா்பீடப் புலவா்
சக்தி ஒளி – ஜனவரி 2008 பக்கம் (44 – 47)
]]>