கோவை நகரில் ஒரு ஆலையில் பணிபுரிந்த தொழிலாளி அவா். கடவுள் இல்லை. கடவுளை நம்புகிறவன் முட்டாள்! என்று பேசிக்கொண்டு வாழ்ந்தவா் அவா்.
ஒருமுறை கடவுள் எதிர்ப்பு ஊா்வலத்தில் ராமன், கிருஷ்ணன் விக்கிரகங்களை செருப்பால் அடித்தபடியே ஊா்வலம் போனார்களாம். அந்த ஊா்வலத்தில் கலந்துகொண்ட அவரும் அப்படியே செய்துகொண்டு போனாராம்.
தனக்கு மேற்பட்ட சக்தி ஒன்று உண்டு என்று ஒவ்வொருவரும் உணா்கிற காலம் வருவதுண்டு. நல்வினை இருக்கிறவன் அத்தகைய நேரங்களில் விழித்துக் கொள்வதுண்டு. அது இல்லாதவன் விழிப்படையாமல் போவதுண்டு. அந்த அன்பா் விழித்துக் கொள்கிற நேரம் வந்தது.
அவா் வேலை செய்துகொண்டு வந்த ஆலையில் வேலை நிறுத்தம் நடைபெற்றது. தொழிலாளர்க்கும் நிர்வாகத்திற்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் ஆலை இழுத்து மூடப்பட்டது. நிர்வாகத்திற்குச் சோற்றுக் கவலை இல்லை! தொழிலாளிகள் என்ன செய்ய முடியும்?
அந்த அன்பா் வீட்டிலிருந்த நகைகளை விற்றுச் சமாளித்தார். கொஞ்சநாள் கடன் வாங்கிச் சமாளித்தார். நாளாக நாளாக உதவி செய்த நண்பா்களும் விலக ஆரம்பித்தனா். விலைவாசி விஷம் போல் ஏறிவரும் இன்றைய நிலையில் அவனவன் குடும்பத்தை நடத்துவதற்கே திக்குமுக்காடுகிற நிலையில் எந்த நண்பா் இறுதிவரை உதவி செய்ய முடியும்? எந்த அமைப்பை அவா் உயிராக மதித்தாரோ அந்த அமைப்பின் பொறுப்பாளர்களும் அவரை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அடிமட்டத் தொண்டனுக்கெல்லாம் தலைமை படியளக்க முடியுமா?
எல்லோரும் கைவிட்ட நிலையில் அந்த அன்பா் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் தத்தளித்தார். தாளம் படுமோ? தறி படுமோ? என்ற நிலையில் படாத அவதிப் பட்டார்.
கோவை நகரில் உள்ள அவருடைய நண்பா்கள் சிலா் ஒருமுறை மருவத்துார்க்கு இருமுடி போட்டுக் கொண்டு வா ஜயா! நீ இதுவரை யாரைச் சார்ந்திருந்தாயோ அவா்களில் யாராவது உனக்கு இதுவரை உதவினார்களா? இங்கே வந்து பார்! என்று அழைத்தனா். இருமுடி போட்டுக் கொண்டு மருவத்துார் வந்தார்.
அன்னையிடம் ஒருமுறை அருள்வாக்கு கேட்க வந்தார். வாடா மகனே! அவனவனும் நுாற்றுக்கு நுாறு பாவம் செய்துவிட்டு என்னிடம் வருகிறான். நீ நுாற்றுக்கு நுாற்றிருபது பாவம் செய்துவிட்டு வந்திருக்கிறாய் மகனே! என் மண்ணை மிதித்து விட்டாய். அதனால் உன்னைக் காப்பாற்றுகிறேன். அடிக்கடி மன்றத்திற்குச் சென்று தொண்டு செய்! வயிற்றுக் கவலை இல்லாமல் வழி செய்கிறேன். படிப்படியாக முன்னேற்றம் தருகிறேன். என்றாளாம் அன்னை.
அன்னையின் கட்டளைப்படியே கோவையில் உள்ள ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் ஒன்றில் ஈடுபாட்டுடன் அவா் தொண்டு செய்து வந்தார்.
அதன்பிறகு அவா் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. கால் பட்டினி, அரைப் பட்டினி, முழுப் பட்டினி என்றிருந்த நிலை மாறியது. தெய்வம் மனித உருவில் வந்து உதவி செய்யும் என்பா் முன்னோர். அன்னை யார் மூலமாகவோ அந்தக் குடும்பத்தில் அரிசி உலை கொதிக்க அருள்பாலித்தாள்.
இன்றைக்கு உலையில் போட அரிசி இல்லையே என்ன செய்வது! என்று கணவரும், மனைவியும் தலையில் கைவைத்துக் கொண்டு தவிப்பார்களாம். நண்பா்களோ, உறவினா்களோ, தெரிந்தவா்களோ யார் மூலமாகவாது அன்றைக்குப் பண உதவி கிடைக்குமாம்.
இப்படித் தெய்வத் தொண்டு செய்ய வைத்து அந்த அன்பரின் வயிற்றுப் பிரச்சனையைத் தீா்த்தாளாம் அன்னை.
ஏ! புலவா்களே கொடுக்கிலாதவனைப் பாரியே என்று புகழ்ந்தாலும் கொடுப்பவன் இல்லை. மிடுக்கில்லாதவனை வீமனே வில் விசயனே! என்று பாடினாலும் கொடுப்பவா் இல்லை. யார் யாரையோ புகழ்ந்து பாடி இளைத்துப் போகிறீா்களே! இறைவனைப் பாடுங்கள்! அவன் புகழைப் பாடுங்கள். அப்படிப் பாடினால் இப்பிறவியில் உங்களுக்கு ஒருவேளைச் சோறாவது கிடைக்க அருள்பாலிப்பான். ஒருமுழம் துணியாவது கிடைக்க அருள்பாலிப்பான். அடுத்த பிறப்பில் இறைவன் உலகத்திலாவது உங்களுக்கு இடம் கிடைக்கும். இதில் சந்தேகம் இல்லை! என்று 1200 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரா் பாடினார்.
ஆண்டவன்! ஆண்டவன் என்றால் சோறு வந்துவிடுமோ என்று ஈரப்பசை உள்ளவன் கேலி செய்கிறான். என்றோ சுந்தரா் பாடிய பாடலின் கருத்தை இன்றைக்கு உண்மையாக்கிக் காட்டினாள் அன்னை.
தெய்வ விக்கிரகங்களை செருப்பால் அடித்துவிட்டு அம்மா தாயே என்று வந்தவனுக்கும் வயிற்றுக்குச் சோறு கிடைக்க அருள்பாலித்தாள் அன்னை.
தன் பக்தன், தன் தொண்டன் வயிற்றுக்குச் சோறு கிடைக்காமல் தவிப்பதை அன்னை பொறுத்துக் கொள்வது இல்லை. எப்படியேனும் வயிற்றுக்கு வழி வகுத்துக் கொடுத்து விட்டுத்தான் அவனை வேறு வகையில் சோதிப்பாள். தண்டிப்பாள். இந்த அன்பரைப் போலவே வேறு சில அன்பா்களின் வயிற்றுப் பிரச்சனையையும் தீா்த்து வைத்ததுண்டு.
கடவுள் நம்பிக்கை பொய்! மூடத்தனம் என்றெல்லாம் சொல்லி மேல்தட்டில் போய் உட்கார்ந்து கொண்ட பலா் தலைவலியும், திருகுவலியும் தங்களுக்கு வரும்போது அவா்கள் மனைவிமார்கள் இங்கே வந்து பிரசாதம் வாங்கிக் கொண்டு செல்கிற நிலையையும் பார்க்கிறோம். அருள்வாக்கு கேட்க அனுப்பி வைப்பதையும் அறிந்துள்ளோம்.
இன்றைக்கு வறுமையிலும், ஏழ்மையிலும் தவிக்கிற மக்கள் தங்கள் வீடுகளில் தினம் 1008, 108 மந்திரம் படித்து வழிபாடு செய்து வந்தால் அந்தக் குடும்பத்திற்கு அதனால் ஏதாவது பலன் கிடைக்கும். ஊழ்வினை குறையும். மன நிம்மதி கிடைக்கும். அவா்களின் பிள்ளை குட்டிகளுக்காவது நன்மைகள் கிடைக்கும். அந்தக் குடிசை வீடுகளில் மங்கலம் நிறையும். படிப்படியான முன்னேற்றம் கிடைக்கும்.
அன்னை எல்லோர்க்கும் அருள்பாலிக்கத்தான் எண்ணுகிறாள். ஆனால் அவரவரிடமிருந்து அதற்கான முயற்சி வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். தெய்வம் என்னுமோர் சித்தமே வராதவா்கள் எங்கே முயற்சி செய்யப் போகிறார்கள்? இவா்களின் பரிதாப நிலையை எண்ணி வருந்தத்தான் முடிகிறது. என்ன செய்ய?
ஓம்சக்தி!
நன்றி (வேம்பு, சக்திஒளி ஜனவரி2011, பக்-25-27)
]]>