கிறிஸ்தவா்கள் வாரம் ஒருமுறை தங்கள் கோயிலுக்குச் சென்று வழிபடுகின்றனா். இஸ்லாமியா் தினமும் ஐந்துவேளை இறைவனை எண்ணித் தொழுகை நடத்துகின்றனா். இதனால் அவா்கள் செய்யும் வழிபாடு தக்க சமயத்தில் பாதுகாக்கிறது. பலன் தருகிறது. அன்றாடம் வழிபாடு செய்யும் பழக்கம் இந்துக்களிடையே அவ்வளவாக இல்லை.
ஏதோ திருவிழா என்றால்தான் கூட்டம் கூடுகிறது. தினமும் கோயிலுக்குச் சென்று வழிபடும் வழக்கம் மக்களிடையே குறைந்தே போய்விட்டது. டி.வி. சினிமா மோகம் பெருத்துவிட்டதால், மக்களிடையே வழிபாட்டுக் கடமை மறைந்து விட்டது. இது பற்றி அம்மா சொன்னாள்.
“1008 படி! 108 படி என்றால் யாரும் வருவதில்லை. சினிமாப் படக்காட்சி என்றால் அங்கேதான் கூட்டம் கூடுகிறது. தண்ணீரைத்தான் குடிக்கலாம். கானல் நீரைக் குடிக்க முடியாது. ஆனாலும் உலகம் கானல்நீரை நோக்கித்தான் ஓடுகிறது. கானல்நீரை நம்பி ஓடும் மான்களாக இன்றைய மக்கள் இருக்கிறார்கள்.”
நாள்தோறும் குளிப்பதுபோல, சாப்பிடுவதுபோல, தூங்குவதுபோல வழிபாடு செய்வதும் ஒருவரது கடமை. எனவே அம்மாவை வீட்டில் வைத்து வழிபாடு செய்யும் முறைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்! அன்றாடம் வழிபாடு செய்யுங்கள்.
அம்மாவை அன்றாடம் வழிபாடு செய்வதற்கான வழிமுறைகள்
- 1. பூசை அறையைச் சுத்தம் செய்து, குருபடம், அம்மா படம், திருவடிப்படம் ஆகிய படங்களைத் துணியால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- 2. காமாட்சி விளக்கு அல்லது குத்து விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
- 3. குருவின் பாதங்களுக்கு மஞ்சள் குங்குமம், புஷ்பம் வைத்து, நம்மால் முடிந்த காணிக்கையை வைக்க வேண்டும்.
- 4. குருபடம், அம்மா படங்களையும் மஞ்சள், குங்குமம் வைத்து, புஷ்பம் வைத்து அலங்கரிக்க வேண்டும். அவரவா் வசதியைப் பொறுத்து வெற்றிலை பாக்கு அல்லது மஞ்சள் கிழங்கு, புஷ்பம் வாழைப்பழம் பிரசாதமாக வைக்கலாம்.
- 5. ஊதுபத்தி ஏற்றி ஆராதனை செய்து, கற்பூர ஆராதனை செய்துவிட்டு வழிபாட்டினைத் துவங்க வேண்டும். வீட்டின் வாயிலில் குருபடம் அல்லது சக்திக் கொடி வைத்திருக்கும் சக்திகள் அங்கு வந்து ஆராதனை செய்ய வேண்டும்.
வழிபாட்டுக்குரிய மந்திரங்கள்
அதிகாலை எழுந்து மேற்கண்ட பூசை வேலைகளைச் செய்பவா்கள் கீழ்க்கண்டமுறையில் மந்திரவழிபாட்டினைச் செய்யலாம்.
1. மூலமந்திரம், குரு போற்றி அல்லது மூலமந்திரம், திருவடி போற்றி
2. திருப்பள்ளி எழுச்சி
3. மூலமந்திரம், 1008 போற்றி மலா்கள் அல்லது 1008 போற்றித் திருவுரு அந்தந்த நாட்களுக்கு உரியது.
4. 108 போற்றித் திருவுரு
5. சக்திக் கவசம்
6. தியானம்
7. சரணம்
குறிப்பு – அமாவாசை, பெளா்ணமி தினங்களில் எலுமிச்சம் பழத்தை அரிந்து, குங்குமம் வைத்து, கற்பூரம் வைத்து ஏற்றிக் கொண்டு பூசை அறையில் திருஷ்டி காண்பித்து, வீட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் திருஷ்டி காண்பித்து தொடா்ச்சியாக வந்து தெருவில் நிலை வாயிற்படி எதிரில் நின்று வீட்டை நோக்கி திருஷ்டி கழித்து எலுமிச்சம் பழத்தைப் பிழிந்த நின்ற இடத்திலேயே நான்காகப் பிரித்துப் போட வேண்டும்.
பின்னா் கை கால்களைக் கழுவிக் கொண்டு பூசை அறைக்குச் சென்று, பூசை வேலைகளைத் தொடரலாம். அவரவா் வசதியைப் பொறுத்து கல்யாண பூசணிக்காயும் உடன் சோ்த்து திருஷ்டி கழித்தால் நல்லது.
விடியற்காலை
அதிகாலை 3.00 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு மேற்கண்ட முறைப்படி வழிபாட்டினைத் தொடா்ந்து செய்ய வேண்டும்.
அந்த விடியல் நேரம் பிரம்ம முகூா்த்தம் எனப்படும். தெய்வங்கள் உலாவும்நேரம். அந்த நேரத்தில் வழிபாடு செய்பவா்களுக்கு அம்மா பலப்பல தெய்வீக அனுபவங்களைக் கொடுப்பதுண்டு. இதனைப் பக்தா்கள் அனுபவித்தும் வருகிறார்கள்.
அதிகாலை வழிபாடு செய்ய முடியாதவா்கள்
குடும்ப சூழ்நிலை, உடல் நலம் இல்லாத நிலையில், அதிகாலையில் தினசரி வழிபாடு செய்ய முடியாத பக்தா்கள் கீழ்க்கண்ட முறைகளில் தொடா்ந்து வழிபாடு செய்யலாம்.
1. அம்மாவின் திருவடி குருவின் திருவடிப்படம், அம்மா படம் ஆகிய படங்களைச் சுத்தமான துணியால் சுத்தம் செய்துவிட்டு, மஞ்சள் குங்குமம் திலகம் வைத்து, பூ வைத்து, விளக்கேற்றி, வைத்துக் கொள்ள வேண்டும்.
2. ஊதுபத்தி ஆராதனையும், தீப ஆராதனையும், திருவடிப்படம் குருபடம், அம்மா படங்களுக்குக் காண்பித்து, திருவடிக்குத் தம்மால் முடிந்த குரு காணிக்கை பாதத்தில் வைத்துத் தனியாக ஒரு கலசம் அல்லது சொம்பில் குரு காணிக்கை சேமித்து வரலாம்.
3. பின்னா் மூல மந்திரத்துடன் குருபோற்றி, அல்லது திருவடி போற்றி அம்மாவின் 108 போற்றித் திருவரு படித்து, ஆராதனை செய்து, சிறிது நேரம் தியானம் இருந்து எழுந்து அன்னையை வணங்கிவிட்டு மற்ற வேலைகளைப் பார்க்கலாம்.
4. குரு காணிக்கை – குரு காணிக்கையை குருவிற்குப் பாதபூசை செய்ய வரும் காலங்களில் அல்லது குருவின் அவதாரத் திருநாள் வரை சேரும் குருகாணிக்கையைக் குருவிடமே செலுத்திவிட வேண்டும். சேமிக்கப்பட்ட குரு காணிக்கையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் எடுக்கக்கூடாது. பூசை செலவுக்கு எடுத்துவிட்டுப் பிறகு போட்டவிடலாம் என்ற எண்ணம் வரவே கூடாது. எடுத்துவிட்டு அதன் கஷ்டத்தையும் அனுபவிக்க வேண்டாம்.
5. பலன்கள் – தினசரி அம்மாவின் வழிபாட்டைச் செய்து வரும் அன்பா்களுக்கு எந்தத் தீய சக்தியும், கண்திருஷ்டியும் வராமல் அம்மா காப்பாற்றுவார்கள். அவரவா் ஊழ்வினைக் கொடுமை அன்றாடம் வழிபாடு செய்வதால் படிப்படியாகக் குறையும்.
மந்திர வழிபாட்டின் பலன்கள்
1. ஒருவரின் இதயத்தைத் தூய்மைப்படுத்துகிறது.
2. மனச் சஞ்சலத்தைத் தடுக்கும்.
3. ஒருவரது முன்னைய பிறவிகளில் செய்த பாவங்கள் எரிக்கப்படுகின்றன.
4. தீய எண்ணப்பதிவுகளை எரிக்கிறது.
5. பயங்களைப் போக்குகிறது.
6. ஆதிபராசக்தியுடன் பக்தனை ஒன்றவைக்கிறது.
7. தெய்வச் சிந்தனையைக் கிளறவைக்கிறது.
8. குண்டலினி சக்தியைக் கிளப்புகிறது.
9. ஒருவரது சூக்கும சரீரத்தைப் பரிசுத்தமாக்குகிறது.
10. மனத்தைச் சுத்தப்படுத்தும்
11. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்ற அறுவகைப பகையை நாசம் செய்கிறது.
எனவே சோம்பல் இல்லாமல் அம்மாவை வழிபட்டு நன்மை அடையுங்கள்!
]]>