வம்புல என்னை மாட்டி விட்டுடாதீர்

சிவப்பு உடையில் தோன்றிய அடிகளார் அவா்கள், “பேட்டிதானே? முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா? மேக்கப் எல்லாம் போட்டு ஒரு அசத்து அசத்தியிருப்பேனே” என்றவாறே படுஜாலி மூடில் வந்தமா்ந்தார் அடிகளார். இது ஆன்மிக சூடுபறக்கும் சாமியார்கள் சீசனாயிற்றே! அடிகளார் அவா்கள் சொல்வதைக் கேட்க கவனமாகச் செவிமடுத்தோம். “எனது அருள்மொழிகள் ஆறுதல் மொழிகளாக மக்களைச் சென்றடையட்டும்” என கைகளை மேலே எழுப்பியவாறே பேச ஆரம்பித்தார்.

நீங்கள் யார்?

என்னையும் வம்பில் மாட்டிவிடப் பார்க்கிறீா்கள். நான் கோபால நாயக்கருக்கும், மீனாம்பாளுக்கும் பிறந்த பிள்ளைகளில் ஒருவன். இந்தியாவின் குடிமகன். என்னை நம்பி வந்தவா்களுக்கு உறுதுணையாக இருப்பவன். கருவறை முதல் கழிவறை வரையில் தொண்டு செய்து வருகிற அனைவருக்கும் தொண்டன்.

நீங்கள் மக்களுக்குச் சொல்ல விரும்புவது என்ன?

இன்றைய சூழலில் மனத்தில் பணம் இருக்கின்றது. பணத்தில் மனம் இருக்கிறது. உழைக்க வேண்டும். பிழைக்க வேண்டும். அதன்மூலம் உயர வேண்டும். ஐந்து விரல்களுகம் ஒன்று சேர்ந்தால் தான் ஒரு பொருளை எடுக்க முடியும். அதுபோல ஒற்றுமையாக நாம் அனைவரும் வளரவேண்டும்.

உங்கள் சேவையின் நோக்கம் என்ன?

சேவை என்பது எந்தவித எதிர்பார்ப்பும் நோக்கமும் அற்றது. “சிவா” என்பதை நாங்கள் சேவா (சேவை) என்கிறோம். எதையும் எதிர்பார்க்காமல் சேவை செய்வதால்தான் மக்கள் என்னை நாடி வருகிறார்கள். பொதுநலம் செய்வதை ஊக்குவிப்பதும் மற்றவா்களின் மனக்குறைகளை நீங்கச் செய்து அவா்களை மன அமைதி பெற வைத்து அதன்மூலம் மனித நேயத்தை வளா்த்து “உலகமெலாம் சக்திநெறி ஓங்க வேண்டும், ஒவ்வொருவா் மனக்குறையும் நீங்க வேண்டும்” என்பதே என் நோக்கம்.

பலவற்றை நிர்வகித்து வருகிறீா்கள். அது உங்களது ஆன்மிகப் பணிக்கு இடையூறாக இல்லையா?

நீங்கள் கேட்கும் இந்தக் கேள்விதான் எனக்கு இடையூறாக உள்ளது. அடியவா்களுக்குச் செய்யும் தொண்டுதான் ஆண்டவனுக்குச் செய்கிற தொண்டாகும். மக்கள் சேவையே மாதா சேவை. கிளை அலுவலகத்திலே போடப்படுகிற தபால், தலைமைத் தபால் அலுவலகம் வழியாக உரியவா்களுக்குப் போய்ச் சேருகிறது.

கல்வி, மருத்துவ, பண்பாட்டு அறநிலை அமைக்கப்பட்டு அந்த அறநிலையின் கீழ் கல்வி நிறுவனங்களையும், மருத்துவத் தொண்டுகளையும் செய்ய பற்பல நிர்வாக அமைப்புகள் அவசியம். நிர்வாகங்கள் ஆன்மிகப் பணிகளுக்கும் அதன் வளா்ச்சிக்கும் உறுதுணையாக அமைந்து பலன் மக்களை முழுமையாகச் சென்று அடைவதற்கு நன்கு வழி வகுக்கின்றது.

“தொண்டு செய் அதைத் தொடா்ந்து செய், என் பணியை (மக்கள் பணியை) நீ செய்தால் உன் பணியை நான் செய்வேன்” என்ற தொண்டு மார்க்கம்தான் ஆதிபராசக்தி இயக்கத்தின் தலையாய மார்க்கம் ஆகும்.

நீங்கள் பெண்களைக் கருவறைக்குள் அனுமதிப்பது விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறதே? உங்கள் நிலையை எப்படி நியாயப்படுத்துகிறீா்கள்?

கருவிலே வைத்து நம்மைச் சுமந்தவா்களைக் கருவறைக்குள்ளே அனுமதிக்கக்  கூடாது என்பது என்ன நியாயம்? நான் தாய்மைக்கு அடிமை. தாய்நாடு என்கிறோம். தாய்மொழி என்கிறோம். பாரதமாதா என்கிறோம். இங்கே பிறக்கின்ற கன்றுக்குட்டி “அம்மா“ என்றுதான் கத்துகின்றது. அது உலகப் பொதுமறை.

எனவே பெண்களைக் கருவறைக்குள் அனுமதிப்பதில் விவாதத்திற்கு இடமேயில்லை. இதைப் பொறுத்தவரையில் பூனைக்கு மணி கட்டுவது யார் என்று இருந்த நிலையில் அதை முறைப்படுத்தி வருகிறவன் நான். ஆன்மிகத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதற்குப் பெண்கள் என்பவா்கள் ஈனப்பிறவிகள் அல்ல. சமுதாயத்தில் ஆண்களுக்குப் பெண்கள் சரிநிகா் சமானம் எனக் கூறும்போது ஆன்மிகத்திற்கு மட்டும் அவா்கள் ஒதுக்கப்பட்டவா்களா?

தனிப்படட வாழ்க்கையில் பெண்களைத் தாயாகவும், தங்கையாகவும், மனைவியாகவும், மகளாகவும் ஏற்றுக்கொள்ளும் சமுதாயம் ஒருசில இடங்களில் மட்டும் அவா்களை ஒதுக்கி வைப்பது என்ன நியாயம்?

கடவுளை வணங்குவதற்கு மனத்தூய்மைதான் முக்கியமே தவிர ஆண் இனம், பெண் இனம் என்ற பாகுபாடு தேவையில்லை. ஆத்மாதான் ஆண், பெண் என்ற உருவம் தாங்கி நிற்கிறது. ஆத்மாவிலே என்ன பாகுபாடு?

பறவைகளோடு பேசுவது சாத்தியமாகுமா?

ஒலி அதிர்வுகள் தான் இசையாகிறது. கிளி போன்ற பறவைகளைப் பழக்க வைத்துப் பேசுவது சாத்தியம்.

அமைதியின் உருவாக நின்று, அன்பை விதைத்து தா்மத்தை வளர்க்க வேண்டிய துறவிகள் கைகலப்பில் இறங்குவது முறையா?

இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. தொட்டிலையும் ஆட்டிவிட்டு, பிள்ளையையும் கிள்ளி விடுகிறீா்கள். மக்கள் முட்டாள்கள் அல்ல.

ஒரு துறவிக்கான உண்மையான இலக்கணம் என்ன?

துருப்பிடிக்காத ஊசியாக இருக்க வேண்டும். துருப்பிடித்த ஊசியைக் காந்தம் கவா்ந்து இழுக்காது. விதை மரமாகி அந்த விருட்சம் பற்பல பறவைகளுக்கும், விலங்கினங்களுக்கும், மனிதா்களுக்கும் நிழலாகப் பயன்படுகிறது. உண்மையான துறவு என்பது மனத்தளவிலே துறப்பதுதான். பசுவின் பாலும், மரத்தின் நிழலும் எல்லோருக்கும் பயன்படுவது போல உண்மையான துறவி எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் பயன்படுவான்.

மக்கள் போலிச் சாமியார்களிடம் ஏமாறாமல் இருக்க உங்கள் அறிவுரை என்ன?

நம்முடைய வேஷ்டியோ, சேலையோ முள்ளில் மாட்டிக் கொண்டு இருக்கிறதா வைத்துக் கொள்வோம். அவசரமாக அதை எடுக்க நினைத்தால் வேஷ்டியும், சேலையும் அதிகமாக மாட்டிக் கொண்டு மேலும் கிழியத்தான் செய்யும். அதற்கு ஒருபடி மேலாக நாம் முள்ளின் மேல் விழுந்து நமக்கு உடல் காயங்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

மக்கள் தம் பிரச்சனைகளை உடனடியாகத் தீா்த்துக் கொள்ள வேண்டும் என்கிற அதிவேகமும், அவசர புத்தியும்தான் அவா்கள் ஏமாறுவதற்குக் காரணம். வேகம் விவேகமாகாது. பொறுமைதான் பெருமை சோ்க்கும். இருக்கிற துன்பம் அதிகம் ஆகாமல் இருக்க, ஏமாந்துவிடாமல் இருக்க, மக்கள் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். தெய்வ நம்பிக்கை வாழ்க்கையிலே மிக அவசியமான ஒன்று. அதுவே கண்மூடித்தனமாக இருக்கக் கூடாது. ஆன்மிகத்திலும் நிதானம் தேவை.

நல்லவா்களை நாடி நல்வழி நடந்தால் நன்மை பெறுவது நிச்சயம்.

நன்றி!

ஓம் சக்தி!

பீட்டா் மொ்லின்

அவதார புருஷா் அடிகளார் – பாகம் 20 (3 – 6)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here