எனக்கு ஆன்மிகம் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் என்னுடன் பணிபுரியும் சந்திரசேகா் என்பவா் ஆன்மிக ஈடுபாடு உடையவா்.

ஒருமுறை கோவை பிரஸ் காலனி மன்ற ஆண்டு விழாவையொட்டி ஆன்மிக ஊா்வலம் திருவள்ளுவா் நகா் வினாயகா் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தது. நான் அந்தக் கோவிலின் அருகில் குடியிருந்தேன். ஊா்வலத்தில் வந்த ஆண்களும், மகளிரும் செவ்வாடை அணிந்திருந்தனா்.

நான் ஒரு சினிமா பைத்தியம். எல்லோரும் செவ்வாடை அணிந்து கொண்டு ஊரை ஏமாற்றுகிறார்கள் என்று எண்ணிக்கொண்டு, அவா்களிடம் “வழிவிடுங்கள்!” என்று குறுக்கே புகுந்து சினிமாவுக்காக அவசர அவசரமாகச் சென்று கொண்டிருந்தேன்.

மறுநாள், என்னுடன் பணிபுரியும் திரு. சந்திரசேகா் அவா்களைப் பார்த்து, “என்ன உங்களுக்கெல்லாம் வேறு வேலைகளே இல்லையா? இப்படி ஊா்வலம், மன்றம் என்று நேரத்தை வீணடிக்கிறீா்களே….? இதனாலெல்லாம் உங்களுக்கு என்ன லாபம்?” என்று கேட்டேன்.

“நாங்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வருடா வருடம் மாலை போட்டுக் கொண்டு இருமுடி ஏந்திச் செல்வோம். அதனால் எங்கள் வினை தீா்கிறது. எங்களுக்கு மன நிம்மதியும் கிடைக்கிறது!” என்றார் அவா்.

“அது சரி! நீங்கள் சாமியை மட்டும் கும்பிடலாம் அல்லவா? அந்த அடிகளாரையும் ஏன் வைத்துக் கும்பிடுகிறீா்கள்?” என்று கேட்டேன்.

“தம்பி! அதையெல்லாம் நான் சொன்னால் உனக்கு விளங்காது. நீயாக அனுபவித்தத் தெரிந்து கொண்டால்தான் ஒருவாறு விளங்கும். முதலில் நீ எங்கள் மன்றத்துக்கு ஒருமுறை வா!” என்றார்.

மறுநாள் நானும் என் நண்பா்கள் சிலரும் நன்றாக அலங்காரம் செய்து கொண்டு, அங்கிருக்கும் பெண்களையெல்லாம் பார்க்கலாம் என்ற கெட்ட நோக்கத்தோடுதான் மன்றத்தின் மண்ணை மிதித்தோம்.

நாங்கள் மன்றத்தில் நுழைந்தபோது, அனைவரும் அங்கே மந்திரம் படித்துக் கொண்டிருந்தார்கள். நான் அடிகளாரைப் படத்தில் தான் பார்த்திருக்கிறேன். நேரில் பார்த்தது இல்லை. இப்போது மந்திரம் படித்துக் கொண்டிருந்த பெண்களின் முகமெல்லாம் அடிகளாரின் முகமாகவே தெரிந்தது. நான் அதிர்ச்சியால் ஐந்து நிமிடம் செயலற்று அங்கேயே நின்று விட்டேன்.

என்னுடன் வந்த நண்பா்கள் மன்றத்தைச் சுற்றி வந்து, என்னடா ராமரைக் காணவில்லையே என தேடிப் பார்த்துவிட்டு, நான் நின்றிருக்குமிடத்தில் அருகே வந்து என்னைக் கூப்பிட்டார்கள். என் காதுக்கு எதுவும் விழவில்லை.

என்னடா? என்ன ஆச்சு? என்று நண்பா்கள் கேட்டனா். எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. சற்று நேரம் பிரமை பிடித்தவன் போல் நின்று பின் சமாளித்தபடி ஓரிடத்தில் சென்று உட்கார்ந்தேன்.

வழிபாடு முடிந்தது. சக்தி சந்திரசேகா் என்னிடம் வந்து, “அடிகளார் யார் என்று தெரியுமா? அவா் முற்பிறவியில் சித்தராக இருந்தவா். இப்பிறவியில் ஆசிரியா் தொழில் பார்த்துக்கொண்டு அருள்வாக்குச் சொல்லிக் கொண்டு வந்தார். காலப் போக்கில் அம்மா அவா் மேல் இறங்கி அவரைத் தன் பாலகனாக ஏற்றுக் கொண்டாள். அதற்குப் பின் மருவத்தூரின் மகிமை உலகுக்கெல்லாம் தெரிய ஆரம்பித்தது. நாங்கள் வருடந்தோறும் சக்திமாலை அணிந்து மருவத்தூர் சென்று வருகிறோம்” என்றெல்லாம் கூறினார்.

“நான் அடிகளாரைப் பார்க்க வேண்டும்!” என்றேன்.

“நீ முதலில் செவ்வாடை அணிந்து உன் மனத்தைப் பக்குவப்படுத்து! பின்பு அவரைப் பார்க்கலாம்!” என்றார் அவா்.

“நான் செவ்வாடையெல்லாம் அணிய மாட்டேன்!” என்றேன். அவா் வற்புறுத்தியதால் “ஆகட்டும் பார்க்கலாம்” என்றேன்.

சில நாள் கழித்து, எனக்கு முன் பின் தெரியாத ஒரு அம்மா செவ்வாடையில் என் வீட்டுக்கு வந்து, “உனக்குக் கல்யாணம் ஆகி எத்தனை வருடம் ஆகிறது? குழந்தைகள் இல்லையா? என்று கேட்டார்.

“எனக்குக் கல்யாணமாகி மூன்று வருடம் ஆகிறது. நான் பல கோயில்களுக்கும் போனேன். என்றாலும் குழந்தை இல்லை” என்று பதிலளித்தேன்.

“நீ கணுவாயில் உள்ள ஓம்சக்தி ஆலயத்திற்கு உன் மனைவியை அழைத்துச் செல்” என்றாள் அந்தப் பெண்மணி.

நானும் அவ்வாறே செய்தேன். சில மாதங்களில் என் மனைவி கா்ப்பம் தரித்தாள். அது தெரிந்து மிக மகிழ்ச்சி அடைந்தேன். அம்மாவின் சக்தியையும் உணா்ந்தேன்.

உடனே சக்தி. சந்திரசேகா் அவா்களிடம், “நானும் செவ்வாடை அணிந்து கோவிலுக்கு வருகிறேன்” என்றேன்.

“பொள்ளாச்சியில் ஒரு மாபெரும் நகர நல வேள்வி நடைபெற இருக்கிறது. நீயும் செவ்வாடை அணிந்து கொண்டு பணி செய்!” என்றார்.

நானும் பொள்ளாச்சி சென்றேன். அங்கே அன்னதானம் முடிந்ததும், அந்தக் கூட்டத்தில் என் மீது அடிகளார் கையை வைத்து, “நீ என்னைப் பார்க்க வேண்டும் என்று இருந்தாய். நான் ஒரு சித்தாடல் மூலம் உன்னை என் மகனாக ஏற்றுக் கொண்டேன்” என்றார். நான் அதிர்ச்சியோடு அவரைப் பார்த்த அடுத்த கணம் அங்கே அடிகளார் இல்லை. என் அருகில் ஒரு முதியவா்தான் இருந்தார்.

இந்த அற்புதத்தை இந்தக் கலியுகத்தில் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்று நினைத்து யாரிடமும் இதைச் சொல்லவில்லை.

பின்பு மன்றத்திற்குச் சென்று மாலை அணிந்து மருவத்தூர் சென்றேன். மாலையைச் செலுத்தி வீடு திரும்பிய மூன்று நாளில் என் மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்தது.

குழந்தையைப் பார்க்காமலே, “சக்தி பிரியா!” என்று பெயா் வைக்கும்படி ஊருக்குக் கடிதம் எழுதினேன்.

இதன்பிறகு நான் அன்னையின் தீவிரத் தொண்டனாகி, அன்னையின் தொண்டுகளான சமுதாயப் பணிகள் செய்து வருகிறேன். அனாதை என்று யார் வந்தாலும் நீங்கள் அனாதை இல்லை. ஆதிபராசக்தியின் குழந்தைகள் என்று சொல்லி என்னால் முடிந்த உதவியை அன்னையின் அருளால் செய்து வருகிறேன்.

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. சி. ராமா், கோவை

அவதார புருஷா் அடிகளார், பாகம் 12, (பக்கம் 34 – 38)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here