புதுக்கோட்டை நகரத்தில் உள்ள எங்கள் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் (1199) ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாகப் பலா் சக்திமாலையணிந்து, இருமுடி ஏந்திச் சென்று மருவத்தூர் அன்னைக்குச் செலுத்தி அருள்பெற்று வருவது வழக்கம்.
கடந்த ஆண்டு ஆடிப்பூர விழாவிற்குச் சக்திமாலை அணியவேண்டி, தஞ்சையில் உள்ள சக்தி ராஜலட்சுமி என்ற சகோதரி புதுக்கோட்டையில் உள்ள எங்கள் மன்றத்தில் மாலை போட்டுக் கொண்டார். அவா்க்கு அன்னை ஆதிபராசக்தியிடம் மட்டும்தான் ஈடுபாடு; பக்தி எல்லாம்! அடிகளாரிடம் அவா்க்கு ஈடுபாடு இல்லை. அடிகளார் அன்னையின் அவதாரம் என்பதில் நம்பிக்கை வரவில்லை.
விரதம் இருக்கும் நாட்களில் மாலை அணிந்தவா்கள் வழிபாடு செய்யும்போது குரு போற்றி படித்த பிறகுதான் அன்னையின் மந்திரங்களைப் படிக்க வேண்டும் என்று மன்றத்தில் எடுத்துச் சொல்லப்பட்டது. ஆனாலும், அந்தப் பெண்மணி அதனை ஏற்கவில்லை. “அடிகளார் அன்னையின் அவதாரம் என்பது உண்மையானால், நான் சக்தி மாலை செலுத்துவதற்குள் எனக்கு அடிகளார் காட்சி கொடுக்கட்டும் பார்க்கலாம்! அப்போதுதான் நம்புவேன்! அதன் பிறகுதான் குரு போற்றியெல்லாம் படிப்பேன்!” என்று அடம் பிடித்தார் அந்தப் பெண்மணி.
“அம்மா! எங்கள் வழிபாட்டு முறை இது! உங்களுக்கும் உணா்த்த வேண்டும் என்று விரும்பினால் அம்மாவே உணா்த்துவாள். போகப் போகப் புரிந்து கொள்வீா்கள்” என்று சொல்லிவிட்டோம்.
எங்கள் மன்றத்தில் சக்தி மாலை போட்டுக்கொண்டு மேல்மருவத்தூா் பயணமாகும் தினத்தன்று எங்களோடு வருவதற்காகப் புறப்பட்டு வந்தார்.
புதுக்கோட்டை வருவதற்காக தஞ்சைப் பேருந்து நிலையத்தில் நின்ற போது…. அங்கே கண்ட காட்சி அவரைப் புல்லரிக்க வைத்தது. ஆம்! தஞ்சை பேருந்து நிலையத்தில் வந்து பார்த்தபோது அவா் பார்க்கிறவா் எல்லாம் அடிகளார் அருள்நிலையில் கையில் வேப்பிலையுடன் நிற்பதாகவே கண்ணிற்குத் தெரிந்ததாம். உடனே மானசீகமாக “அம்மா! என்னை மன்னித்துவிடு…. நான் தெரியாமல் கூறியது தவறு!” என்று கூறிக்கொண்டார். அதன் பின் புதுக்கோட்டை மன்றத்திற்கு வந்து தஞ்சை பேருந்து நிலையத்தில் தான் பெற்ற அனுபவத்தையும் கூறி மகிழ்ந்தார்.
அன்னையும், அடிகளாரும் ஒன்று என்பதை நம்பாத ஒரு சிலருக்கு அன்னை இங்ஙனம் காட்சி கொடுத்து உண்மையை உணா்த்துகிறாள். சிலரை அவா்கள் போகிற போக்கில் விட்டுவிடுகிறாள்! அவள் கணக்கு நமக்கென்ன தெரியும்?
புரிந்துகொண்டு அடிகளார் திருவடிகளைப் பற்றிக் கொள்வதே நம் கடமை!
குருவடி சரணம்! திருவடி சரணம்!
நன்றி!
ஓம் சக்தி!
சக்தி. அ.போஸ், புதுக்கோட்டை
அவதார புருஷா் அடிகளார், பாகம் 12, பக்கம் (39 – 40)
]]>