புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊா் வேந்தன்பட்டி. அந்த ஊருக்கு அருகே உள்ள சிறிய கிராமம் அது.
அங்கு ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் அமைத்துச் சிறுவா், சிறுமியா்களே வழிபாடு நடத்தி வந்தனா். வழிபாடு நடக்கும்போது ஒரு பையன் வருவது வழக்கம். அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது . ஆயினும் வழிபாட்டில் வந்து கலந்து கொள்வான். மந்திரமெல்லாம் அவனுக்குத் தெரியாது.
ஏதோ நம்மைப் போலப் பையன்களெல்லாம் சாமி கும்பிடுகிறார்கள். நாமும் கும்பிட வேண்டும் என்று
நினைத்து வந்தானோ என்னவோ….?
அந்தப் பையனுக்குத் தாயுமில்லை. தகப்பனும் இல்லை. அவனை வளா்த்து வருபவா் அவன் அத்தை மட்டுமே! அந்த அத்தையின் ஆதரவு தவிர வேறு எந்த ஆதரவுமே அந்தப் பையனுக்கு இல்லை.
தினந்தோறும் அக்கிராமத்தாரின் மாடுகளை ஓட்டிச் சென்று, மாலையில் திரும்ப ஓட்டி வந்து ஊரில் விடுவதே அவன் தொழில்.
அந்தப் பையனுக்கு ஒரே ஒரு ஆதரவாக இருந்த அந்த அத்தை ஒருநாள் நோயால் படுத்துவிட்டாள். மாலையில் வீடு வந்து பார்த்த போது, அவளைச் சுற்றிப் பெண்கள் சிலா் சூழ்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனா்.
அத்தை இனி பிழைக்க மாட்டாள் என்பது வந்தவா், போனவா்கள் பேசுகிற பேச்சு மூலம் அந்தப் பையனுக்குத் தெரிந்து விட்டது.
அவனுக்கிருந்த ஒரே ஒரு ஆதரவு அந்த அத்தைக்காரிதான்…….. அவள்தான் அவன் உலகம்
அத்தையும் தன்னை விட்டுப் போய்விட்டால்…. தனி மரமாக அல்ல தனித்து வாழும் இளஞ்செடியாக வாட வேண்டிய பையன் அவன்.
திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்பது பழமொழி.
அந்தப் பழமொழி கூட அவனுக்குத் தெரியுமோ….? தெரியாதோ அவன் பள்ளிக் கூடமே செல்லாதவன் ஆயிற்றே……..
இந்த நிலையில் அந்தப் பையன் அந்த ஊா் வார வழிபாட்டு மன்றத்திற்கு வந்தான். அழுத கண்ணீரோடும், விம்மல்களோடும், “தாயே எனக்கு யாரும் துணையில்லை. என் அத்தையைக் காப்பாற்று. என் அத்தை செத்துப் போனால் இங்கே இனி உன்னை நான் கும்பிட மாட்டேன், கும்பிட வரவும் மாட்டேன் என்று அன்னை, அடிகளார் படத்தின் முன் சொல்லிவிட்டு, வீட்டுக்குச் சென்று பயம், பீதி, கவலை நிறைந்த மனச் சுமையோடு படுத்துத் தூங்கிவிட்டான்.
அந்தத் தூக்கத்தில் ஒரு கனவு. கனவில் அடிகளார் தோன்றினார்.
“மகனே! நீ மன்றத்துக்குச் சென்று மன்றத்தில் உள்ளவா்களை அழைத்துக் கொண்டு வந்து உன் அத்தைக்கு கற்பூர ஆராதனை காட்டி எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழிக்கச் சொல்லடா மகனே!
முடியுமானால் மூலமந்திரம் சொல்லிக் கொண்டு எலுமிச்சம் பழம் பிழிந்து விடு! அதுவும் தெரியவில்லை என்றால் ஓம் சக்தி! என்று சொல்லிக் கொண்டு திருஷ்டி கழி!” என்று அடிகளார் சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.
மறுநாள் காலை…. அந்தப் பையன் எழுந்தான். மன்றத்துக்குச் சென்றான். அங்கிருந்த மற்ற பையன்களிடம் தான் கண்ட கனவைச் சொன்னான். அங்கிருந்த அடிகளார் படத்தைச் சுட்டிக்காட்டி, “இதோ இவா்தாண்டா கனவில் வந்து எல்லாம் சொன்னார்” என்று கூறினான்.
கனவில் சொல்லியபடி அந்தப் பையனுடைய அத்தைக்குத் திருஷ்டி கழிக்கப்பட்டது.
ஆச்சரியப்படத்தக்க வகையில் அந்தப் பையனுடைய அத்தை பிழைத்துக் கொண்டாள்.
படிப்பு வாசனையே இல்லாத ஆடு, மாடு மேய்க்கும் மூடன் ஒருவனைச் சிறந்த கவிஞனாக – காளிதாசனாக அன்று ஆக்கினாள்.
இந்த அவதாரகாலத்தே மாடு மேய்க்கும் பையன் ஒருவனுக்குக் கனவில் போய் அருள்பாலித்தாள் அன்னை ஆதிபராசக்தி
நன்றி
ஓம் சக்தி
வேம்பு
அவதார புருஷா் அடிகளார், பாகம் 13, பக்கம் (14 – 15)