மனிதகுலம் உய்ய வேண்டி மருவத்தூரில் அவதாரம் செய்த அன்னை, இவ்வுலகத்துக்கு அருளிய பல நன்மைகளுள் தமிழில் எழுதப்பட்ட மந்திரங்களுக்கு மந்திர உரு ஏற்றிக் கொடுத்ததும் ஒன்றாகும். அன்னை ஆதிபராசக்தியின் அருளை வேண்டித் தற்போது இரண்டு 1008 மந்திரங்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. “ஆயிரத்தெட்டு போற்றி மலா்கள்” என்ற மந்திர நூல் ஒன்று. இது செவ்வாய், புதன், வியாழக் கிழமைகளில் போற்றி வழிபடப் படுகின்றது. இந்த முறையை அறிவித்தவளும் அன்னையே ஆவாள்.

ஆயிரத்தெட்டு போற்றி மலா்கள்

அன்னைக்கு ஆயிரத்தெட்டு போற்றி மந்திரங்கள் எழுதவேண்டும் என்ற எண்ணம் அன்னையின் திருவருளால் ஆலயப் புலவா் ஒருவருக்கு உதித்தது. ஒரு காலத்தில் நம் அன்னையின் ஆலயம் வளா்ச்சி அடையும். அப்பொழுது மற்றக் கோயில்களில் இருப்பது போல இலட்சார்ச்சனையும் நடக்கும் அல்லவா? எனவே, நம் அன்னைக்கு 1008 தமிழ் மந்திரங்கள் எழுதத் தொடங்கினால் என்ன என்று நினைத்தார். கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இருந்த நம்மை, கடவுள் நிந்தனை செய்த நம்மை – ஈா்த்துப் பணி கொண்ட அன்னை, கருணை காட்டிய அன்னை, நம் முயற்சிக்குத் துணை செய்யமாட்டாளா! என்று கருதி ஏதோ ஓா் துணிச்சலோடு முயற்சியில் இறங்கினார். அந்நாள் வரையில் ஆலயத்தில் 108 மந்திரங்கள், வேண்டுதற் கூறு, சக்தி வழிபாடு முதலானவையே  கூட்டு வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டன. எனவே தம் முயற்சி நல்ல முறையில் முடியும் வரையில் யாருக்கும் அதுபற்றி வெளிப்படுத்த வேண்டாம் என்று கருதி மிக இரகசியமாகவே செய்து வந்தார்.

முன்னோர் வாக்குகள்

லலிதா சகஸ்ரநாமம், சௌந்தா்யலகரி, தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம், வள்ளலாரின் திருவருட்பா, கீதை முதலான நூல்களில் இருந்தெல்லாம் அந்தப் பெரியோர்கள் பரம்பொருளை எப்படியெல்லாம் வேண்டினார்களோ அவ்வாறே அவா் தம் வாக்குகளையெல்லாம் தொகுத்து, அன்னையை வணங்கி வேண்டுவது போல இந்த மந்திரங்களை அமைக்க வேண்டும். நமக்கோ எந்தச் சாத்திரமும் தெரியாது! மந்திர மரபும் தெரியாது!  அன்னை விட்ட வழி என்று கருதிச் சிறுகச் சிறுக எழுதி வந்தார். சென்னையில் அவா் இருந்தபோது இரகசியமாய்ச் செய்த முயற்சி இது!

ஆயிரத்தெட்டு போற்றியை விரைவில் முடி!

அந்த அன்பா் சிறுகச் சிறுக மந்திரங்களை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு நாள் அன்னையின் ஆலயத்துக்கு வந்தார். அன்று அன்னை மந்திரிப்பு நல்கிக் கொண்டிருந்தாள். அவரும் வரிசையில் போய் நின்றார். அன்னையின் எதிரே மந்திரிப்புக்காக நின்ற உடனே அன்னை அந்த அன்பரை நோக்கி “மகனே! ஆயிரத்தெட்டு போற்றியை விரைவில் முடி!” என்று ஆணையிட்டாள்.

அன்பருக்குப் பரம சந்தோஷம்

யாருக்கும் வெளிப்படுத்தாமல் இப்படி இரகசியமாய்ச் செய்யப்படும் நம் முயற்சியை அன்னை அறிந்து கொள்கிறாள். அன்னைக்கு இது தெரிகிறது என்பதைத் தம் அனுபவத்தில் கண்டறிந்து பரம மகிழ்ச்சி அடைந்தார். அம்மா நம்மையும் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பது குறித்து எல்லையில்லாத ஆனந்தக் கடலில் திளைத்தார். ஒருவாறு 1008 மந்திரங்களையும் எழுதி முடித்து அன்னையிடம் சமா்ப்பிக்க வந்தார்.

திருத்தம் செய்!

அன்னை மற்றும் ஒரு புலவரை அழைத்து “மகனே! இந்த மந்திரங்களில் சில திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. நீ இதனைப் பார்த்து இவனோடு சோ்ந்து மீண்டும் கவனித்துத் திருத்தம் செய்து எடுத்து வாருங்கள்” என்றாள்: அவ்வாறே மீண்டும் எடுத்துச் சென்று தங்கள் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் சில திருத்தங்கள் செய்து அன்னையிடம் சமா்ப்பித்தனா். அந்த நோட்டுப் புத்தகத்தை அன்னையின் எதிரில் வைத்தார்கள். அதனைப் பிரித்துக் கூட வைக்கவில்லை.

அன்னை கேட்ட வினாக்கள்

“மகனே! இத்தனையாவது எண்ணுள்ள மந்திரத்தைப் படி” என்றாள் அன்னை. உடனே நோட்டுப் புத்தகத்தைத் திறந்து அன்னை குறிப்பிட்ட எண்ணுக்குரிய மந்திரத்தைப் படித்தார். “சிவன் துணை ஆனாய் போற்றி ஓம்!” என்று இருந்தது. “இந்த மந்திரத்துக்கு என்ன பொருள் மகனே!” என்று கேட்டாள் அன்னை. அந்த அன்பா்க்கு அப்போது சைவ சித்தாந்தமும் தெரியாது. சக்தி தத்துவமும் தெரியாது, சமய சாத்திரங்களும் தெரியாது. அந்த மந்திரத்தில் தவறு உள்ளது என்றும் தெரியாது. ஆனாலும் தவறு இருக்கிறது போலும்! அதனால் தான் அன்னை கேட்கிறாள் என்று நடுங்கிய அன்பா் சற்றுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “அம்மா! லலிதா சகஸ்ரநாமத்தில் இப்படித் தானம்மா இருக்கிறது! அதை வைத்துத் தான் இந்தக் குறிப்பிட்ட மந்திரத்தை எடுத்தாண்டேன்!” என்றார். அதுகேட்டு அன்னை சொன்னாள் அவள் வார்த்தைகளைச் சமயவாதிகளும், சாத்திர விற்பன்னா்களும், தத்துவ மேதைகளும் நன்றாகப்  புரிந்து கொள்ள வேண்டும்.

நான் ஈஸ்வர தத்துவத்துக்குக் கட்டுப்பட்டவள் அல்ல!

“மகனே! நான் ஈஸ்வர தத்துவத்துக்குக் கட்டுப்பட்டவள் அல்ல. எனவே அந்த மந்திரத்தை நீக்கிவிடு” என்றாள். அதனுடைய அா்த்தம் அப்போது புரியவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகே ஓரளவு புரிந்தது. அதுபற்றிப் பிறகு பார்ப்போம். அதன் பிறகு அன்னை மற்றும் ஒரு எண்ணைக் குறிப்பிட்டாள். அந்த எண்ணுக்குரிய மந்திரம் இது “தனிமை தவிர்ப்பாய் போற்றி ஒம்!” “இதன் பொருள் என்ன?” என்றாள் அன்னை.

உலகில் ஆதரவு அற்ற நிலையில் தனிமையில் இருக்கும் தன்மையை நீக்குவாய் என்ற பொருளில் அவ்வாறு எழுதப்பட்டது. “அதை எப்படித் திருத்த வேண்டும் என்பதை அம்மாவே சொல்லி அருளவேண்டும்” என்றார் எழுதியவா்.

தெய்வ அருளும் – தனிமையும்

“மகனே! தெய்வ அருளை நாடி அதனைப் பெற வேண்டும் என்று கருதுபவன் தனிமையை – ஏகாந்தத்தை அல்லவா விரும்புவான்? அப்படி இருக்கத் தனிமை வேண்டாம்; அதைத் தவிர்த்துக் கொடு என்றா கேட்பான்? தெய்வ நினைப்புக்கும் – வழிபாட்டுக்கும் தனிமை தானே மகனே சிறப்பு?” என்று கேட்டாள். அன்னையின் ஆணைப்படி அந்த மந்திரம் நீக்கப்பட்டது.

பிற்பாடு ஓரளவு திருத்தம் செய்யப்பட்ட பிறகு அன்னை அதனை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக வேப்பிலையைத் தூவி அந்த மந்திரங்களை ஆசீா்வதித்து ஏற்றுக் கொண்டாள்.

இவ்வாறு உருவானது தான் “ஆயிரத்தெட்டு போற்றி மலா்கள்”

ஆயிரத்தெட்டு போற்றித் திருவுரு

அன்னைக்கு ஆயிரத்தெட்டு மந்திரங்களை ஏற்கனவே தானும் எழுதி வைத்திருந்த இன்னொரு ஆலயப்புலவா், “தாயே! நானும் 1008 மந்திரங்களை எழுதி உள்ளேன். ஆசி வேண்டும்” என்று வேண்டினார். அன்னை அந்த மந்திரங்களையும் ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக வேப்பிலையைத் தூவி ஆசி நல்கினாள். அந்த மந்திரங்கள் தான் “ஆயிரத்தெட்டு போற்றித் திருவுரு”.

ஓர் அன்பரிடம் அன்னை கேட்ட வினா

“மகனே! எந்த நூலைத் தொடங்கினாலும், எந்த மந்திரங்களைத் தொடங்கினாலும் காப்புச் செய்யுள் என்ற ஒன்றை இயற்ற வேண்டுமே! மந்திரம் எழுதிய இருவருமே ஏன் அதனைச் செய்யவில்லை?” என்று கேட்டாள். அந்த அன்பரும் விழித்தார். மந்திரம் எழுதியவா்களும் விழித்தார்கள். அவா்கள் விழித்ததைக் கண்ட அன்னை “நான் தான் மறைத்தேன்! இப்பொழுது நானே சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி “இது தான் இம் மந்திரங்களுக்குக் காப்புச் செய்யுள். இது தான் இனி மூலமந்திரம்!” என்று சொல்லிக் குறித்துக் கொள்ள ஆணையிட்டாள். அதன்படி அன்னையின் திருவாயினின்றும் மலா்ந்தவை தான் இப்போதுள்ள மூலமந்திரம். அது பின்வருமாறு:

ஓம் சக்தியே! பராசக்தியே!

ஓம் சக்தியே! ஆதிபராசக்தியே!

ஓம் சக்தியே! மருவூா் அரசியே!

ஓம் சக்தியே! ஓம் விநாயகா!

ஓம் சக்தியே! ஓம் காமாட்சியே!

ஓம் சக்தியே! ஓம் பங்காரு காமாட்சியே!

அன்னையின் திருவாயிலிருந்து வெளிப்பட்ட மூலமந்திரம் இது!

உரு ஏற்றினாள்

மந்திரங்களை எடுதிவிட்டால் போதுமா? அவற்றிற்கு உரு ஏற்ற வேண்டும் அல்லவா? அன்னைக்குள்ள வடமொழி மந்திரங்கள் உரு ஏற்றியவை. லலிதா சகஸ்ரநாமம் உரு ஏறிய மந்திரங்கள். எனவே அவற்றை உரு ஏற்றிக் கொடுப்பதற்கு முன்னதாக அன்னை, தன் ஆலயத் தொண்டா்களுக்குக் கூறினாள்.

“மகனே! இன்றுள்ள மந்திரங்களை எவனும் சரியான முறையில் ஒலிப்பு முறையோடு ஒலித்து வழிபாடு செய்வதில்லை. தாய்மொழியில் மந்திரங்களைச் சொல்லி வழிபடும் போது மனம் ஒன்றுபட வாய்ப்பு உண்டு. எனக்கு மொழி பேதம் கிடையாது மகனே! இன்று மந்திரநசிவு ஏற்பட்டு விட்டதால் ஆன்மிக நசிவும் ஏற்பட்டு விட்டது. நீங்களெல்லாம் இந்த மந்திரங்கள் மூலமாக என்னை வழிபட்டுப் பயன் அடையுங்கள் என்றாள்.

நன்றி!

ஓம் சக்தி!

மேல் மருவத்தூா் அன்னையின் அற்புதங்கள்

பக்கம் (190 – 194)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here