வேறொரு சமயம் 1992ல் நடந்தது. பூம்புகார்ப்பகுதியில் ஒரு தொண்டா் வீட்டு கிரகப்பிரவேசம். பத்திரிகை அடித்தார். அருள்திரு அம்மாவிடம் கொண்டு போனார். “அம்மா கிரகப் பிரவேசத்துக்கு வரணும்”
அருள்திரு அம்மா சொன்னார்கள் “வருவேன், அவசியம் வருவேன், வராமல் இருப்பேனா? வரும்போது வருவேன்! நல்லாச் செய்! அம்மா ஆசி உண்டு!”
“வருவேன்” என்று சொன்னது அந்தத் தொண்டரின் அழைப்பை ஏற்றுக் கொண்டதன் அடையாளம்.
“அவசியம் வருவேன்” என்பது தம் வரவை உறுதி செய்த காரியம்.
“வராமல் இருப்பேனா?” என்றது நிச்சயமாக வருவேன்; தயாராய் இரு” என்ற எச்சரிக்கை.
“வரும்போது வருவேன்” என்றது பொதுவாக, மாவட்டப் பயணம் வரும்போது அவா் வீட்டுக்கு வருவேன் என்று சொன்னதாகவும் அந்தத் தொண்டருக்குப் பட்டது.
“நல்லாச் செய்” என்ற வார்த்தைகள் கிரகப் பிரவேச நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்து என்று சொன்னதாகப் பட்டது.
அந்தத் தொண்டருக்கு “நல்லாச் செய்” என்ற சொற்களுக்கும், வரும்போது வருவேன் என்றதற்குச் சிறப்பாக ஒரு அர்த்தமும் புலப்பட்டது.
ஒரு விசேஷ வீட்டில் சிறப்பாகச் செய்வது என்பது சாப்பாடுதான். ஆனால், “வரும்போது வருவேன்” என்ற வார்த்தைக்கு வேறொரு அர்த்தமும் புலப்பட்டது. அன்னதானம் தானே சித்தா்களுக்கு உவப்பு……. அன்னதான நேரத்தில் தானே சித்தா்களும், தெய்வங்களும் வருகிறார்கள் என்று அம்மா சொல்லுவார்கள்? எனவே விருந்தினா்களுக்கு விருந்து என்பது தவிர, அன்னதானத்துக்காக மிகச் சிறந்த தரத்தில் வெண்பொங்கல் தயாரிக்க ஏற்பாடு செய்து விட்டார்.
எதிர்பார்த்திருந்த உறவினா்களும், நண்பா்களும் எதிர்பார்த்த
எண்ணிக்கைக்கு மேலாகவே வந்து விட்டார்கள். ஆனால், ஏற்பாடு செய்திருந்த உணவு தேவைக்கேற்ப வளா்ந்து கொண்டேயிருந்தது. மீதமும் இருந்தது. அதோடு சோ்த்து வெண்பொங்கலை விருப்பமுடன் ஏற்றுக்கொள்ள எழை எளிய மக்கள் குழந்தை குட்டிகள் நிறைய வந்து விட்டார்கள். அன்னதானமும் ஆரம்பமாயிற்று.
அந்தத் தொண்டரின் வீடு அந்தத் தெருவின் வடக்குப் பகுதியில் உள்ளடங்கி இருந்தது. அந்த வீட்டை நோக்கி, தெருவின் தெற்குப் பகுதியில் இருந்து ஒரு பச்சை ஆடை அணிந்த நடுத்தர வயதும், நடுத்தர உயரமும் கொண்டவா், குளிர்ந்த ஈரம் சடை போல் வளா்ந்த முடியில் சொட்டச் சொட்ட ஒரு அலுமினிய வாளியைக் கையில் எடுத்துக் கொண்டு, அன்னதானம் தரப்பட்ட வரிசைக்குள் வந்து சேர முயன்றார். நம் தொண்டா் “சாமி, நீங்க இப்படி வாங்க……… கூட்டத்துலே இடிபட வேண்டாம் என்று சொல்லி அவரை அழைத்து வெண்பொங்கலும், சாம்பாரும் அவா் வைத்திருந்த வாளியில் வழங்க ஏற்பாடு செய்தார். துறவி எதுவுமே பேசவில்லை. போதுமா சாமி? திருப்தியா? தொண்டா் கேட்டார். “ம்.ம்.ம்……….” என்பது போல வந்த அந்த பச்சை ஆடைத் துறவி தலையசைத்தார். தலையசைத்தவா் திரும்பி நடக்க ஆரம்பித்துவிட்டார். இந்த நேரத்தில் வந்திருந்த கூட்டம் “கலா முலா” என்று முண்டியடித்துக்கொள்ள தொண்டா் திரும்பிப் பார்த்தால், வந்த துறவி தெருவின் தெற்குத் திசை நோக்கி வந்த வழியே வேகமாகப் போய்க்கொண்டு இருந்தவா் பட்டப்பகலில் வெட்டவெளிச்சத்தில் மறைந்து போனார்.
“வருவேன் அவசியம் வருவேன் வராமல் இருப்பேனா? வரும்போது வருவேன்” என்று சொன்ன அருள்திரு அம்மா அவா்கள் அன்னதான நேரத்துக்கு வந்து அதை ஏற்றுக் கொண்டு வந்த வேலை முடிந்தவுடன் எந்த எதிர்பார்ப்பும் சுவடும் இல்லாமல், கண்முன்னால், காணாமல் போய்விட்டார்கள்.
1966 – க்கு
முன்னால்……. விருது நகா் மாவட்டம்……… குக்கிராமம் ஒன்று. ஒரு பெளா்ணமி இரவு……. ஒரு சாலை வீடு. இரவு மணி பத்து இருக்கும். அந்த வீட்டில் ஒரு இளைஞா்….. ஆன்மிக நாட்டம் கொண்டவா். எந்தச் சாமியாரைப் பார்த்தாலும் வீட்டுக்கு அழைத்து வந்து சோறு போட்டு அனுப்புவார். கொஞ்சம் வசதி இருந்தது. அவருடைய தகப்பனாருக்கு இதுவெல்லாம் பிடிக்காது. ஆனால் தாயார் முகம் சுளிக்காமல் தன் பிள்ளை எந்தச் சாமியாரை எந்த நேரத்தில் அழைத்து வந்தாலும், முகம் சுளிக்காமல் உணவு தந்து மகிழ்வார்.
அந்தப் பௌர்ணமி இரவில், பத்து மணிக்கு வெள்ளைக் கதா் வேட்டியும், கதா் ஜிப்பாவும் போட்டுக் கொண்டு, தோளில் ஒரு பச்சை ஜோல்னாப் பையை மாட்டிக்கொண்டு மேலே சொன்ன இளைஞா் வீட்டு வாசலுக்கு ஒருவா் வருகிறார். வந்தவரும் இளைஞா்தான். அங்கே இருந்த மாட்டு வண்டியின் நுகத்தடியில் ஏறி அமா்ந்து கொள்கிறார். நம் இளைஞா் அவரைக் கண்டதும் அவரிடம் போய், “ஐயா, வாங்க நீங்க எந்த ஊா்? இந்த நேரத்திலே இங்கே எப்படி?” என்று கேட்கிறார்.
வந்தவா், பதில் பேசவில்லை. தாம் மௌனம் என்றும் ஜாடை காட்டுகிறார். அந்த இளைஞா் கேட்கிறார். “சாப்பிட்டீங்களா? இப்ப சாப்பிடுகிறீா்களா?”
”ம்.. ம்….” வந்தவா் சொல்கிறார். அந்த சாலைவீட்டு இளைஞா் தம் தாயாரிடம் சென்று உணவு வாங்கி வருகிறார். அவா் கையில் கொண்டு வந்த உணவை, வந்திருந்த ஜிப்பா போட்டிருந்த இளைஞா் தம் கைகளில் வாங்கி உண்ணுகிறார். தண்ணீா் வாங்கிக் குடிக்கிறார். நன்றியோடு தலையசைக்கிறார். புறப்பட்டு வருகிறார். அங்கே இருந்த ஒற்றையடிப்பாதையில், பௌர்ணமி நிலா வெளிச்சத்தில், பனை மரங்கள் வரிசையாய் நின்றிருந்த பாதையில் நடக்கிறார். அந்த கிராமத்து இளைஞரின் தந்தையார், அவரை நோக்கி “டேய் போய்ப்பாருடா உலகங்கெட்டுக்கிடக்கு,
வந்தவன் எவனாவது திருடனா இருக்கப் போகிறான். வீட்டை நோட்டம் பார்த்துவிட்டுப் போவப் போறான். அந்த ஆளு எங்கே போறான்னு போய்ப் பாத்துட்டு வாடா” என்று விரட்டினார்.
தந்தையார் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, வீட்டுக்கார இளைஞா், வந்துவிட்டு, இரவு தங்கச் சொல்லித் தான் வற்புறுத்தியும் கேட்காமல், மௌனமாகவே இருந்து விட்டுப் போன அந்த மனிதரைப் பின்பற்றி அவா் அறியாமலே போனார். வந்திருந்த அந்தக் கதா்சட்டை இளைஞரோ வேகமாக நடையைக் கட்டினார். பௌர்ணமி நிலாவெளிச்சம் பகல்போல தெரிகிற இரவு நேரத்தில் வேகமாக நடந்த அவா், நடந்தார். …… நடந்தார்………. நடந்தே மறைந்து போனார்.
விருந்தோம்பல் செய்து அனுப்பிய இளைஞருக்கு ஆச்சர்யம்.
ஓரிரு ஆண்டுகள் கழித்து ஒரு வாரப்பத்திரிகையில் அருள்திரு அம்மாவுடன் கூடிய கருவறைப்படம் போட்டு, மேல்மருவத்தூரில் வேப்பமரத்தில் பால் வடிந்த கதையும், சுயம்பு எழுந்த கதையையும் – இல்லை, இல்லை – வரலாற்றையும் – எழுதி அன்னையின் அருள்வாக்குப் பற்றியும் எழுதியிருந்தார்கள். அந்தப் பத்திரிகை விருதுநகா்ப் பகுதி இளைஞருக்குக் கிடைத்தது. பார்த்தவா் மீண்டும் வியந்து போனார்.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு பௌர்ணமி இரவில், தம் வீட்டுக்கு வந்து, உணவு வாங்கிச் சாப்பி்ட்டுவிட்டு, நடந்து சென்று கண்முன்னால் மறைந்து போன இளைஞா் மேல்மருவத்தூர் அடிகளார்தான் என்று புரிந்துகொண்டார்.
தன் தாயிடம் அந்தப் படத்தைக் காட்டி, “அம்மா! இவரைப் பார்! யார் என்று தெரிகிறதா” என்று கேட்டார். அந்தத் தாயார் கிராமத்து அப்பாவித் தனத்தோடு சொன்னார். இவா்தானேப்பா இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நம்ம வீட்டிலே ராத்திரி நேரத்துல வந்து, நான் புழிஞ்சு போட்டு ஒங்கிட்ட கொடுத்த பழைய
சோத்தைக் கையாலேயே வாங்கிச் சாப்பிட்டுப் போன பையன்! என்று கேட்டார்.
“அம்மா! இவரு பெரிய மகான்னு போட்டுருக்கு அம்மா! நீங்களும் நானும் எத்தனை புண்ணியம் பண்ணிருக்கோம்! நம்ம வீடுதேடி வந்து, தான் யாருன்னு காட்டிக்காம, மௌனமாகவே வந்து அவ்வளவு எளிமையாகப் பழைய சோத்தை வாங்கிச் சாப்பிட்டுப் போயிருக்காரு அம்மா” என்று கண்ணீா் மல்கச் சொன்னார்.
நான் “நெனச்சா” நெனச்ச எடத்துக்குப் போகக் கூடியவா் நம் அம்மா. “நெனச்சா” நெனச்ச உருவம் எடுக்கக் கூடியவா் நம்ம அம்மா. நாம் உண்மையா “நெனச்சா” கூப்பிட்ட இடத்துக்குக் குழந்தைபோல வரக்கூடியவா் நம் அம்மா. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மழைபோல, அருள்தேவைப்படுகிற இடங்களுக்கெல்லாம் பள்ளத்தை நோக்கிப் பாய்கிற வெள்ளத்தைப் போலத்தான் “நெனச்சா” நெனச்சபடி வரக்கூடியவா் நம் அம்மா.
அஷ்டமா சித்திகளும் அதற்கும் மேலான சித்திகளும் கொண்டவா் நம் அம்மா. விதியை மாற்றுகிற வல்லமையும், உயிர்களையே படைக்கிற பரம்பொருளின் ஆற்றலையும் பெற்றவா் நம் அம்மா.
கரந்தை இளைஞருக்குக் காட்சிகொடுத்தபோது தன் உருவத்தைத் தம் தந்தையார் சாயலில் மாற்றிக் கொண்டு தம்மை மறைத்துக் கொண்டார்கள்.
பூம்புகார் தொண்டருக்குக் காட்சி கொடுத்தபோது பச்சை ஆடைத் துறவி வடிவத்தில் தன்னை மறைத்துக் கொண்டார்கள். விருதுநகா் கிராமப் பகுதி அன்பருக்காகச் சென்றபோது அருள்திரு. அடிகளார் என்ற வடிவத்தில் போயிருந்தும், தம்மை யார் என்று அடையாளம் காட்டிக் கொள்ளவில்லை.
“ஐயோ நம்மைத் தேடிவந்த போது தெய்வத்தின் வருகையைப் புரிந்து கொள்ளவில்லையே என்று கரந்தை பக்தா் ஏங்குகிறார், இன்று வரை
“ஆகா நம்மைத் தேடி வந்தபோது வந்து பச்சை ஆடைத் துறவியை
அம்மா என்று புரியாமல் தவற விட்டுவிட்டோமே என்ன முட்டாள் தனம்” என்று நொந்து கொண்டு ஏங்குகிறார் பூம்புகார்த் தொண்டா்.
“அடடா! தம்மை யாரென்று காட்டிக் கொள்ளாமல், மௌனமாகவே போய் விட்டாரே” என்று ஏங்குகிறார் விருதுநகா் அன்பா்.
இன்னும் சொல்கிறோம். தம்முடைய எளிமையான தோற்றத்திலும், பாமரா்போல் இருந்து கொண்டு, பண்டிதத் திறமை காட்டாமல், “நான் உங்கள் வேலைக்காரன்” என்றும் “நான் ஒரு விவசாயி” என்றும் “நான் பள்ளிக்கூடத்து வாத்தியார்தானே” என்றும், “நான் கோபால் நாயக்கா் பிள்ளை……… அவ்வளவுதான்” என்று மாயத்திரை போட்டுத் தம்மை மறைத்துக் கொண்டு ஒரு மௌன நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறாள். “மாயாவி! மாயக்காரி! மருவத்தூரு மாரியாயி”
அன்பா்களின் வீடுகளுக்கு மட்டும் “நெனச்சா வா்றவ அல்ல அவள்” தான் “நெனச்சிருக்கிறா” இந்த உலகம் உருப்பட வேண்டும் என்று, உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும். ஒவ்வொருவா் மனக்குறையும் நீங்க வேண்டும் என்று. அதனால் அன்னை ஆதிபராசக்தி அருள்திரு அம்மா வடிவில் தன்னை மறைத்துக் கொண்டு வந்திருக்கிறாள்.
தஞ்சை கரந்தை அனுபவம், பூம்புகார் அனுபவம், விருதுநகா் அனுபவம் போன்று ஆயிரக்கணக்கான அனுபவங்கள் உண்டு. அவையெல்லாம் நமக்குப் பாடங்கள். அம்மாவைப் புரியாமல் விட்டுவிட்டோமே என்று ஏங்கிக் கிடக்கப் போகிறோமா? பற்றிக் கொண்டும், அவனைத் தொற்றிக் கொண்டும் கரையேறப் போகிறோமா? நாம கரையேறணும்? அதுக்கு அவள் நினைக்க வேண்டும். “அவனாக வந்திருக்கிற அவள்” நெனச்சா, “அது” நடக்கும் சரிதானே?
நன்றி
ஓம் சக்தி
பேராசிரியா் சக்தி. த. சோமசுந்தரம், பூம்புகார்
மருவூர் மகானின் 68வது அவதாரத்திருநாள் மலா்
&
nbsp;