ஓங்காரத்துக்குள் சென்று ஒடுங்கி விடுவேன்

ஆரம்ப நாட்களில் மேல்மருவத்தூா் அன்னையின் அருள்வாக்கு பற்றி உலகம் குறைத்து மதிப்பிட்டது. அருள்திரு அடிகளார் அவா்களை இவா் ஒரு மீடியம் தானே என்று கொச்சைப் படுத்தியது. அந்நாளில் அம்மா கூறினாள்.

13.04.2001 அன்று அவள் கூறிய உபதேசம் இது!

“மகனை மிக விரைவாக மகான் ஆக்கி வருகிறேன். மைந்தன் வளா்ந்து சித்தனாகிவிட்ட பிறகு எனக்கு இங்கு என்ன வேலை! அந்த நிலை வருகின்றபோது, அருள்வாக்கு முதலியன நின்று போகும். ஆம்! அப்போது மகன் பேசுவதெல்லாம் அருள்வாக்காகவே இருக்கும். இதற்கென்று தனியான நேரம், இடம் முதலியவை இருக்க மாட்டா! அவன் தங்கியுள்ள இந்த மண்ணை மிதித்து விட்டாலே குறைகள் தீர்க்கப்படும். அவன் அந்த நிலையை அடைந்துவிட்ட பிறகு எனக்கு இங்கு என்ன வேலை? நான் ஓம் என்ற மந்திரத்துக்குள் ஒடுங்கிக் கொள்வேன்” என்றாள்.

அருள்திரு அடிகளார் பற்றி அன்று கூறியது இது!

“மகனே! குளவி எங்கோ ஓரிடத்தில் இடும் முட்டையைத் தன் கூட்டுக்குள் கொண்டு வந்து  வைக்கிறது. அந்த முட்டையைக் குளவியின் குழந்தை என்று அறிந்து கொள்ளாத மக்கள் ஏதோ ஓா் புழுவைக் குளவி கொண்டு வருவதாக நினைத்து மருள்கின்றனா். இந்த உண்மையைச் சற்று ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

குளவி எங்கே முட்டை இட்டுள்ளது என்பது குளவிக்குத்தான் தெரியுமே தவிரப் பிறா் அறிய வாய்ப்பு இல்லை. அதுபோலக் குளவியாகிய நான் பாலகனை (அடிகளார்) எங்கே பிறப்பித்துள்ளேன் என்பதைப் பிறா் அறிய வாய்ப்பு இல்லை.

குளவி இட்ட முட்டையைப் பிற முட்டைகளிலிருந்து இனம் பிரித்துக் காண்பது இயலாத காரியம்” என்றாள்.

பிற்பாடு அடிகளார் ஓா் அவதார புருஷா் என்று வெளிப்படையாகவே அறிவித்தாள்.

ஓங்காரம்; பிரம்ம ஒலி

ஓங்காரத்தைப் பிரம்ம ஒலி என்பார்கள். பிரம்மத்தை உணர விரும்புவோர்க்கு ஓங்கார தியானம் செய்யும்படி உபநிடதங்கள் கூறுகின்றன.

இன்னொரு பக்தரிடம் அன்னை கூறினாள். “நான் வந்த வேலை முடிந்த பிறகு என் சக்தியையெல்லாம் அடிகளார்க்கு வழங்கிவிட்டு ஓங்காரத்துள் ஒடுங்கிக் கொள்வேன்.”

“நான் கொடுத்த மந்திரங்களையெல்லாம் படித்து வழிபாடு செய்யுங்கள் மகனே! நீங்கள் சொல்கிற மந்திரங்களையே நான் அள்ளி அள்ளி விழுங்கிக்கொண்டிருப்பேனடா! என்றாள்.

ஆந்திராவைச் சோ்ந்த அன்பா் ஒருவா் அனுபவம்

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஒருவா், அவருக்குத் தமிழும் தெரியும். 43 கேள்விகள் எழுதிச் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு அருள்வாக்கு கேட்க வந்தார். அவா் கேள்விகள் கேட்கும் முன்பே எல்லாவற்றுக்கும் பதில்  சொல்லி முடித்தாள் அன்னை. எந்தச் சலனமும் காட்டாமல் மனிதா் கல்லுளி மங்கன் போல அமா்ந்திருந்தார்.

மகனே! உனக்கு எட்டு லட்ச ரூபாய் வரவேண்டி இருக்கிறதல்லவா? அந்த சொத்து சம்பந்தமான ஆவணம் கிடைக்காமல் திண்டாடுகிறாய் அல்லவா? என்று அன்னை சொன்னதுதான் தாமதம்!

ஆமாம்மா! ஆமாம்மா! என்று வாயெல்லாம் பல்லாக முகமலா்ந்தார் அந்த அன்பா்.

என் படத்தை வைத்து என்னை வழிபட்டு வா! என்றாள் அன்னை.

அம்மா! நானோ சிவபக்தன் அம்மாவைக் கும்பிடுவது எப்படி? என்று கேட்டார் அவா்.

சிவம் – சவம்; பணம் – பிணம்

அது கேட்டு அன்னை கேட்டாள். மகனே! சிவம் என்ற சொல்லில் உள்ள கொம்பை எடுத்துவிட்டால் என்ன வருமடா?

சவம் என்று வரும்மா! என்றார் இவா்.

பணம் என்ற சொல்லில் “ப” வுக்கு அந்தக் கொம்பைப் போட்டால் என்ன வருமடா?

பிணம் என்று வரும்மா……… என்றால் இவா்.

சாதாரண ஒரு கோட்டுக்கே இவ்வளவு பெரிய அர்த்தத்தை மாற்றுகிற சக்தி இருக்கிறபோது, அந்தச் சிவனையே படைத்த இந்தச் சக்தியைக் கும்பிடுவதில் உனக்கு என்னடா தடை  என்று திருப்பிக் கேட்டாள் அன்னை.

வாய் மூடிக்கொண்டு எழுந்து வந்தார் அவா்.

தன் பரத்துவத்தை அன்னை வெளியிட்ட சம்பவங்களில் இது ஒன்று

முருக பக்தா் ஒருவா்க்கு அம்மா சொன்னாள். “மகனே நீ எந்தத் தெய்வத்தை மந்திரம் சொல்லி வழிபட்டாலும், எந்தத் தெய்வத்தை வழிபட்டாலும் வந்து சேர்வது என்னிடமே” என்றாள்.

செவ்வாடைத் தொண்டா் ஒருவா் ஒருமுறை வேளாங்கண்ணி மாதா கோயில் போனார். அங்கு வைக்கப்பட்டிருந்த நோட்டுப் புத்தகத்தில் தன் குறைகளை எடுதிவிட்டுச் சென்றார். சில மாதங்கள் கழித்து அம்மாவிடம் அருள்வாக்கு கேட்க வந்தார். அம்மா அவரிடம் “மகனே! நீ வேளாங்கண்ணி மாதாவுக்குப் போட்ட விண்ணப்பம் வந்து சோ்ந்தது” என்றாளாம்.

சிதம்பரம் நடராசனாகவும் இருப்பவள்

மேல்மருவத்தூர் சித்தா் பீடத்தில் 1982 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25, 26, 27 ஆகிய நாட்களில் இரண்டாவது ஆன்மிக மாநாடு மகளிரால் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொள்ள இலங்கை, யாழ்ப்பாணம் கல்வித் துறையில் இயக்குநராகப் பணிபுரிந்த ஓய்வு பெற்ற திருமதி இரத்தினம் மா.நவரத்தினம் அம்மையார் வந்திருந்தார். திருவாசகம் பற்றி அற்புதமான ஆங்கில நூல் ஒன்றை எழுதியவா் அவா். சைவ சமயத்தில் பெரிதும் ஈடுபாடு உடையவா். இலங்கையில் வாழ்ந்த யோக சாமி என்ற சித்தருக்கு அவரும் அவா் கணவரும் சீடா்கள்.

அந்த அம்மையார் கணவரோடு அன்னையிடம் அருள்வாக்கு கேட்கச் சென்றார். அவருக்கு அன்னை கூறினாள்.

“என்ன மகளே! என்ன வேண்டும் உனக்கு? உன்னை இளம் பருவத்திலேயே ஆட்கொண்டு விட்டேனே! உன் 14 வயதில் அன்று சிதம்பரத்தில் அந்தக் காட்சியைக் கொடுத்து ஆட்கொண்டு விட்டேன் அல்லவா? என்ன வேண்டும் உனக்கு? எனக்கேட்டு அவா்கள் குடும்பப் பிரச்சினைகள் தீர்வதற்கு வழியும் சொல்லி அனுப்பினாள் அன்னை.

அதுகேட்டு வெளியே வந்த அந்த அம்மையார் தமக்குத் தெரிந்த நண்பர்களிடம் கூறினார்.

“எனக்கு அப்போது 14 வயது. சிதம்பரத்தில் தரிசனம் செய்ய வந்தபோது எனக்கு ஒரு அற்புதமான தெய்வீகக் காட்சி கிடைத்தது. அதனை இன்று வரை யாரிடமும் சொல்லாமல், ஏன் என் கணவரிடமும் சொல்லாமல் ரகசியமாகக் காப்பாற்றி வந்தேன். இந்த முதுமைக் காலம் வரையில் அந்தத் திருவருள் ரகசியத்தைக் காப்பாற்றி வந்தேன்.

“அந்த சகசியத்தை இன்று அம்மா என் கணவா் முன்பு உடைத்துச் சொல்லி விட்டாள்” என்று சொல்லிப் பூரிப்படைந்தார்.

இதிலிருந்து தெரிவது என்ன? சிதம்பரம் நடராசப் பெருமானாக இருப்பதும் இந்த ஆதிபராசக்திதான்!

மகாலட்சுமியையே படைத்தவள் நான்

தென் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் அதிபா் ஒருவா்.

அவா் ஒருமுறை அருள்வாக்கு கேட்க வந்தார். மகனே! உனக்குள்ள புற்று நோயைக் குணப்படுத்துகிறேன் என்றாள்.

அவருக்கு சந்தேகம். நாம் ஆரோக்கியமாகத் தானே இருக்கிறோம்? இந்த அம்மன் என்ன இப்படிச் சொல்கிறதே……….. என்று புரியாமல் சென்னை சென்றார்.

மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார். உங்களுக்குப் புற்று நோய் ஆரம்பம் தகுந்த சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி டாக்டா் மருந்து மாத்திரைகள் கொடுத்து வந்தார். எந்த மருந்தும் வேலை செய்யவில்லை. மாறாக நாளுக்கு நாள் வளா்ந்து கொண்டே போயிற்று.

தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அங்குத் தவறாக சிகிச்சை பெற்றதால் நோய் தீவிரமாகியது. வலி தாளாமல் துடித்துப் புலம்பினார்.

தாயே! குணமாக்குகிறேன் என்றாயே………. மாறாக இந்த நோய் தீவிரமாகிக் கொண்டே போகிறதே……… என்று அன்னையை நினைத்துப் புலம்பினார்.

அன்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டா் கனவில் அன்னை தோன்றி இரத்த பரிசோதனையில் உள்ள குறைபாட்டை உணா்த்தினாள். அந்த டாக்டா் தனது தவற்றை உணா்ந்து, உரிய முறையில் சிகிச்சை அளித்தார். சில மாதங்களில் தொழில் அதிபா் குணம் அடைந்தார்.

சார்! மருவத்தூர் அடிகளார் கனவில் வந்து அந்தக் குறையைச் சொல்லாமல் இருந்திருந்தால், விபரீதமாகி இருக்கும். நல்ல வேளை! நீங்கள் பிழைத்தீர்கள்! எல்லாம் தெய்வச் செயல்! என்றார் டாக்டா்.

மெத்த மகிழ்ச்சியோடு, குணமாகி வந்த அந்தத் தொழிலதிபர் அம்மாவிடம் அருள்வாக்கு கேட்டார். “அம்மா! உன் அருளால் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறேன். இதோ பிளாங்க் செக். எவ்வளவு தொகை போடட்டும். இந்தக் கோயிலுக்கு எவ்வளவு கொடுக்கட்டும்? என்று கேட்டார்.

“மகனே! அந்த மகா லட்சுமியையே படைத்தவள் நான்! நீ எனக்கு பிளாங்க் செக் கொடுக்கிறாயா…….? ஏதோ என் மண்ணை மிதித்ததால் உனக்கு ஒரு பலன் கொடுக்க எண்ணி ஒரு பலன் கொடுத்தேன். உத்தரவு! எனச் சொல்லி அனுப்பிவிட்டாள்.

என்ன காரணமோ…….. அவரது நன்கொடையை அன்று அன்னை எற்றுக் கொள்ளவில்லை.

எல்லாமாக இருப்பவள் நான்தானடா……..!

சண்டிகரில் விமானத்துறையில் பணிபுரிந்தவா் சக்தி லோகநாதன். பணியில் ஓய்வு பெற்றுச் சென்னையில் வசித்து வந்தார். சண்டிகரில் வார வழிபாட்டு மன்றம் நிறுவித் தொண்டு செய்தவா்களுள் அவரும் ஒருவா்.

ஒருநாள் இரவு மருவத்தூரில் தங்கி இருந்தார். அருள்திரு அடிகளாரின் அணுக்கத் தொண்டராக இருக்கிறாரே வீரராகவன்! அவருடைய புதிய வீட்டுக்கு மறுநாள் கிரகப் பிரவேசம். வேள்விப் பணி செய் தொண்டா்கள் கிடைக்கவில்லை. அதனால் இவா் அழைக்கப்பட்டு அங்கே போனார்.

கிரகப் பிரவேசத்திற்கு அருள்திரு அடிகளாரும் வருகை தந்தார்கள். வேள்வி தொடங்கும் முன்பாக “மின்னும் புவிக்கெலாம்” பாடப்பட்டது. அடிகளார்க்கு அருள்நிலையில் அன்னை வெளிப்பட்டாள்.

சக்தி. லோகநாதனை அருகே அழைத்த அம்மா, என் புருவ மத்தியைப் பாரடா! என்ன தெரிகிறது என்றாள்.

“அம்மா! திருப்பதி பெருமாள் தெரிகிறது” என்றார்.

“இப்போது பாரடா! என்ன தெரிகிறது!”

“அம்மா! பழனி மலை தெரிகிறது. பழனி முருகன் தெரிகிறது” என்றார்

“இப்போது பாரடா! என்ன தெரிகிறது!”

“அம்மா நம் மருவத்தூர் சுயம்பு தெரிகிறது” என்றார்.

“எல்லாமாக இருப்பது நான்தான் என்பதைப் புரிந்து கொள்ளடா!” என்றாள் அன்னை.

“என்னுடைய கோடிக்கணக்கான கூறுகள் இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றன”

அன்னையின் அருள்வாக்கு எளிதாகக் கிடைத் அந்த ஆரம்ப நாட்களில் அறியாமை காரணமாகவும், அகங்காரம் காரணமாகவும் கேட்கக் கூடாத கேள்விகள் கேட்டவா்கள் உண்டு.

கிராமத்துப் பாமர பக்தா் ஒருவா் கேட்டார். “தாயே! உன்னை ஆதிபராசக்தி என்று எல்லோரும் சொல்கிறார்கள். அண்ட சராசரங்களையெல்லாம் சாட்டையில்லாத பம்பரம் போல ஆட்டி வைக்கிறவள் என்கிறார்கள். அப்படிப்பட்ட நீ இங்கே இப்போது அருள்வாக்கு சொல்கிறாயே?

அப்படியானால் உலகத்தில் மற்ற காரியங்கள் எல்லாம் எப்படி நடக்கும்? என்று கேட்டார்.

அதற்கு அன்னை சொன்னாள் “அதையெல்லாம் சொன்னால் உன் மூளைக்கு எட்டாதடா மகனே! என்னுடைய கோடிக்கணக்கான கூறுகள் இந்தப் பிரபஞ்சத்தை இயக்கி வருகின்றன. அதெல்லாம் உக்குப் புரியாதடா மகனே! என்றாளாம்.

பரம்பொருளின் அரசாங்கம்

பரம்பொருளின் அரசாங்கம் பெரிது. அந்த ஒரு பரம்பொருள்தான் தன்னைச் சிவமாகவும், சக்தியாகவும் பிரித்துக் கொண்டு உலகை இயக்குகிறது.

அந்த ஒரு பரம்பொருள்தான் படைக்கும் பிரம்மாவாகவும், காக்கும் விஷ்ணுவாகவும், அழிக்கும் ருத்திரனாகவும், மறைக்கும் ஈசுவரனாகவும், அருளும் சதாசிவனாகவும் தொழிற்படுகிறது. இவா்களும் அந்தப் பிரம்மத்தின் அம்சங்களே.

பக்தனின் விருப்பத்திற்கேற்ப முருகனாகவும், விநாயகனாகவும் தொழிற்படுகிறது.

அவ்வப்போது ராமன், கிருஷ்ணன் என்ற அவதார புருஷா்களை அனுப்பி உலகிற்கு நல்வழி காட்டுகிறது.

இவா்களைத் தவிர தேவா்கள் என்ற ஒரு கூட்டம் உண்டு. அவா்களுக்குத் தனி உலகம் என ஒன்று உண்டு. இந்தத் தேவா்களுக்குத் தலைவன் இந்திரன்.

தேவா்கள் என்போர் உண்டா?

தேவா்கள் என்போர் உண்டா? உண்டு என்கிறார்கள் ஞானிகள்.

இது பற்றிக் காஞ்சி முனிவா் கூறுகிறார்.

தெய்வம் வேறு. தேவா்கள் வேறு. பஞ்ச பூதங்களும் அவற்றின் தினுசான கலவைகளும் பிராணிகளுக்கு நலமாக அமைந்து அவா்களை ரட்சிக்க வேண்டும். இவ்விதம் அவற்றை அனுகூலமாக்கித் தரும் பொறுப்பைத் தேவா்கள் இனத்துக்குக் கடவுள் அளித்திருக்கிறார்.

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. மு. சுந்தரேசன், M.A. M.Phil.,

சித்தா்பீடப் புலவா்

மருவூர் மகானின் 68வது அவதாரத்திருநாள் மலா்

 ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here