நான் ஈஸ்வர தத்துவத்துக்குக் கட்டுப்பட்டவள் அல்ல!
அன்னையின் ஆணைப்படி 1008 போற்றி மலா்களை எழுதி முடித்து, அவளது அருளாசி பெறவும். அதனை வெளியிடுவதற்கு உத்தரவு பெறவும், மந்திரங்கள் எழுதிய நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு அருள்வாக்கு கேட்கப் போனேன்.
அம்மா எதிரில் நோட்டுப் புத்தகத்தை வைத்தேன். எதை எழுதி வெளியிட வேண்டுமானாலும் அருள்வாக்கில் உத்தரவு பெற்றே செய்ய வேண்டும் என்பது அன்றைய மரபு
“அம்மா! மந்திரங்கள் எழுதி விட்டேன்” என்றேன்.
ஓரிரு நிமிடம் மௌனம் காத்தாள்.
அம்மா! இதை நான் என்ன செய்ய…..? என்றேன்.
ஒரு எண்ணைக் குறிப்பிட்டு “அந்த எண்ணுக்குரிய மந்திரத்தைப் படி” என்றாள்.
அந்த எண்ணுக்குரிய மந்திரம்
“ஓம் சிவன் துணை ஆனாய் போற்றி!” – படித்தேன்
இதன் பொருள் என்ன….? என்று கேட்டாள்.
அம்மாவுக்குத் தெரியாதா? இதில் ஏதேனும் தப்பு இருக்குமோ என்ற அச்சத்தில்,
அம்மா! லலிதா சகஸ்ர நாமத்தில் இப்படித்தான் சொல்லியிருக்கு! அதைத்தான் எடுத்துச் சேர்த்துக் கொண்டேன்!” என்றேன்
அது கேட்டு அம்மா சொன்னாள். “மகனே! நான் ஈஸ்வர தத்துவத்துக்குக் கட்டுப்பட்டவள் அல்ல! அதனை எடுத்துவிடு!” என்றாள்.
அதன்பிறகே “ஓம் அச்சிவன் தனக்கும் தாய் நீ போற்றி!” என்று அந்த மந்திரம் திருத்தப்பட்டது.
தான் பரம்பொருள் என்பதைக் குறிப்பாக அம்மா வெளியிட்ட சம்பவம் இது!
சக்தியை உலகம் இதுவரை சிவசக்தியாகவே போற்றி வந்தது. தான் சிவத்துக்கும் மேற்பட்ட சக்தி! அதாவது பிரம்மம் என்பதையும் இந்த உலகம் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காகவே அம்மா அந்த மந்திரத்தைத் திருத்தச் சொன்னாள்.
நான் ஈஸ்வர தத்துவத்துக்குக் கட்டுப்பட்டவள் அல்ல! என்று அம்மா கூறினாளே அதற்கு என்ன அர்த்தம்? அதற்கு விளக்கம் என்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் கொஞ்சம் வேதாந்தத் தத்துவத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் விளங்கும்.
எல்லாம் வல்ல முழுமுதல் பொருளை உபநிடதங்கள் பிரும்மம் என்று குறிப்பிடுகின்றன.
பிரம்மத்திற்கு இரண்டு நிலைகள் பேசப்படுகின்றன.
ஒன்று மாயையோடு சேதார நிலை, மற்றது மாயையோடு சோ்ந்த நிலை.
மாயையோடு சோ்ந்த நிலைக்குத்தான் ஈஸ்வரன் என்று பெயா்.
மாயையோடு சேராத நிலையே உயர்ந்தது. அதுவே குணங்கள் யாவும் கடந்த நிலை. அதனாலேதான் அந்த நிலையை நிர்க்குணப் பிரம்மம் என்கின்றனா்.
நிர்க்குணம் என்றால் குணங்கள் இல்லாதது என்று பொருள்.
பிரம்மம் குணங்களைக் கடந்த இந்த உயா்ந்த நிலையிலிருந்து ஒரு படிக்கீழே இறங்கிக் குணங்களோடு சோ்கின்றது. இந்நிலையில் அதனைச் சகுணப் பிரம்மம் என்பா்.
சகுணம் என்றால் குணங்களோடு கூடியது என்று பொருள்.
சகுணப் பிரம்மம்தான் ஈஸ்வரன். எனவே வேதாந்தத்திலே நிர்க்குணப் பிரம்மத்துக்கு முதலிடம், சகுணப்பிரம்மத்திற்கு இரண்டாவது இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஈசுவரனுக்கு மிக உயா்ந்த இடம் கொடுக்கப்படவில்லை.
ஈசுவரனும் பிரம்மமும் ஒன்றே என்றாலும் ஈசுவரனுக்கு இரண்டாவது இடமே வேதாந்தத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
உலகத்தையும், உயிர்களையும் படைக்கவேண்டும் என்று கருதி, படைப்பு நிமித்தமாகவே பிரம்மம் ஒருபடி கீழே இறங்கியது. பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் என்று தன்னை ஐந்து வகையாகப் பிரித்துக் கொண்டு பிரபஞ்ச காரியங்களை நடத்துகிறது. இந்த ஐந்துமே சகுணப் பிரம்மம் எனப்படும்.
உருவமற்ற கடவுள் நிர்க்குணப் பிரம்மம். உருவத்தோடும், குணங்களோடும் கூடிய கடவுள் சகுணப் பிரம்மம்.
சைவ சித்தாந்திகள் போன்றோர் ஈஸ்வரனுக்கு மிக உயா்ந்த இடத்தைக் கொடுக்கின்றனா். ஈஸ்வரனுக்கு மேலான பொருள் எதுவும் கிடையாது. அவனே பரம்பொருள். ஆனால் சைவ சித்தாந்தத்திலே முதலிடம் வகிக்கின்ற ஈஸ்வரனுக்கு வேதாந்திகள் இரண்டாவது இடமே கொடுக்கின்றனா்.
வேதாந்தத்திற்கும் சைவ சித்தாந்தத்திற்கும் உள்ள முக்கிய வேற்றுமைகளுள் இதுவும் ஒன்று.
வேதாந்தத்தின்படி உண்மையாக உள்ள மூலப்பொருள் ஒன்றேயாய் இருக்கும் நிலைதான் உண்மை நிலை. இந்த ஒன்றைப் பலவாக ஆக்குவதே சிருஷ்டி எனப்படும். அதாவது படைத்தல் எனப்படும். இந்த சிருஷ்டியைச் செய்பவனே ஈஸ்வரன் என்கிறது வேதாந்தம். (கி. இலட்சுமணன், இந்தியத் தத்துவ ஞானம் – பக்கம் 340 – 41)
திருமூலா் சொல்லியது
சக்திக்கு மூன்று நிலைகள் உண்டு என்று திருமூலா் சொல்கிறார். சக்தி, ஒரு நிலையில் சிவத்துக்குத் தாயாக விளங்குகிறாள். இன்னொரு நிலையில் தாரமாக இருக்கிறாள். பிறிதொரு நிலையில் சிவத்துக்கு மகளாக இருக்கிறாள்.
“தாயும் தாரமும் மகளும் ஆயினாள்” என்பது திருமூலா் வாக்கு.
உலகம் இதுவரை சிவனுக்குத துணைவியாக இருப்பதையே – சிவ சக்தியாக இருப்பதையே போற்றி வந்தது.
அவள் சிவனுக்குத் தாயாகவும் இருப்பவள் என்ற நிலைபற்றி உலகத்துக்குத் தெரியாது. எனவே சிவத்துக்கும் தாயாக இருப்பவள் ஆதிபராசக்தி! என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
அபிராமிப்பட்டா் சொல்வது
கறைக் கண்டனுக்கு மூத்தவளே என்கிறார் அபிராமிப் பட்டா்.
தவளே இவள் எங்கள் சங்கர
னார்மனை மங்கலமாம்
அவளே அவா்தமக்கு அன்னையும்
ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளா் யாவா்க்கும்
மேலே இறைவியும் ஆம்
துவளேன் இனிஒரு தெய்வம் உண்
டாகமெய்த் தொண்டு செய்தே!
என ஆதிபராச்தி தத்துவத்தைப் போற்றுகிறார் அபிராமிப் பட்டா்.
உபதேசம் பெற விரும்பியவா்
தமிழறிஞா் ஒருவா், ஸ்தூல பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம் இரண்டையும் ஸ்ரீ வித்யையும் மாற்றி மாற்றி ஜெபம் செய்து கொண்டு வந்தவா். இவற்றில் ஏதாவது ஒன்றில் உறுதியாக ஊன்ற வேண்டும் என்று நினைத்தவா். திருச்சியை அடுத்துள்ள ஓா் ஊரில் சென்று ஸ்ரீ வித்யை உபதேசம் பெற வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். இதுபற்றி யாருக்கும் தெரியாது.
அவா் அன்னையிடம் ஒருநாள் அருள்வாக்கு கேட்கச் சென்றார்.
“வா மகனே! பொறிக்குள் மாட்டிய எலியைப் போல் சுற்றிச் சுற்றி வருகிறாய். ஸ்தூலம், சூக்குமம் என்பவற்றை மாற்றி மாற்றிப் பண்ணுகிறாய். ஸ்ரீ வித்யை உபதேசம் பெற முடிவு செய்துள்ளாய்.
மகனே பஞ்ச ப்ரேதாஸ நாஸுநாயை நம (லலிதா சகஸ்ர நாமம் – 249) என்ற மந்திரம் தெரியுமா உனக்கு? பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபண்யை நம (லலிதா சகஸ்ர நாமம் – 250) என்ற மந்திரம் தெரியுமா? எல்லாவற்றிற்கும் மேலாக நான் அமா்ந்துள்ளேன் என்பதை அறிவாயா?
எந்த மந்திரத்தை நீ செபித்தாலும் அதனைப் பெறுபவள் நான்தானடா!
மகனே! நீ எங்கும் சென்று மனிதா்கள் யாரிடமும் உபதேசம் பெறவேண்டாம். நானே உனக்கு உபதேசம் செய்வேன். அதற்குரிய காலம் வரவேண்டும்.
“எப்பொழுது செய்ய வேண்டும்? எப்படி அதனைச் செய்ய வேண்டும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும்” என்றாள்.
அன்னை இப்படிச் சொன்னவுடன் 63 வயதாகிவிட்டது. காலம் வரும்போது உபதேசம் அளிப்பேன் என்கிறாளே, அதன் பயனை அடைய முடியாமல் போய்விடுமோ? என்று மனத்துக்குள் நினைத்தார்.
அவரது மனத்தில் ஓடிய சிந்தனையை அறிந்த அன்னை உடனே கூறினாள்.
“மகனே! ஏன் இந்தப் பைத்தியக்கார யோசனை? நானே முன்னின்று உபதேசம் செய்தால் சோபான முறையில் (படிப்படியாக) நீ செல்ல வேண்டியதில்லை. சோபான முறையில் சென்றால் எந்தப் பயனை அடைவாயோ அதை ஒரே நாளில் அடைந்து விடலாம்!” என்றாள் அன்னை.
லலிதா சகஸ்ர நாம விளக்கம்
லலிதா சகஸ்ர நாமத்தில் இரண்டு மந்திரங்களை அன்னை குறிப்பிட்டாள் அல்லவா? அவற்றின் விளக்கம் வருமாறு
பரம்பொருளாக இருந்த பிரம்மம் இவ்வுலகைப் படைத்துக்காக்கத் தன்னிடமிருந்து ஐந்துபேரைத் தொழில் நிமித்தமாகப் பிரித்துக் கொண்டது. அவா்கள் வருமாறு
- பிரம்மா – படைத்தல் தொழில்
- விஷ்ணு – காத்தல் தொழில்
- ருத்திரன் – அழித்தல் தொழில்
- மகேஸ்வரன் – மறைத்தல் தொழில்
- சதாசிவன் – அருளல் தொழில்
பரம்பொருளான ஆதிபராசக்தி ஐந்து தொழில்களைப் புரியும் சக்தியை ஐந்து பேருக்கும் பகிர்ந்து கொடுக்கிறாள்.
மகா பிரளயம் ஏற்பட்டதும் இந்த ஐவரும், தம் தொழில்களிலிருந்து விடுபட்டுப் பரம்பொருளிடம் லயித்து விடுகிறார்கள்.
அந்நிலையில் சதாசிவன் தேவி அமா்ந்துள்ள ஆசனத்தின் மேம்பலகை ஆகிறான். மற்ற நால்வரும் அந்த ஆசனத்தின் நான்கு கால்கள் ஆகிறார்கள்.
இவா்கள் தத்தம் நிலையை விட்டுக் கிளம்பிச் சென்றவா்கள் ஆதலாலும் மற்றொரு நிலையை அடைந்ததாலும் பிரேதங்கள் ஆவார்கள்.
பிரம்மா முதலியவா்கள் தங்கள் நிலையை விட்டுத் தேவியிடம் லயமடையச் சென்றதால் அவா்களைப் பிரேதங்கள் என்று லலிதைா சகஸ்ர நாமம் குறிப்பிடுகிறது.
பஞ்ச – பிரேத – ஆசன – ஆஸுநா என்பது மந்திரம். ஐந்து பிரேதங்களால் ஆன ஆசனத்தில் அமா்ந்திருப்பவள் என்பது இதன் பொருள்.
பஞ்ச – பிரம்ம – சொரூபிணி என்பது இன்னொரு மந்திரம். ஐந்து பிரம்ம சொரூபத்தை உடையவள் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.
பிரம்மத்திலிருந்து தோன்றி ஐந்து தொழில் புரியும் ஐந்து பிரம்மங்களைத் தனது வடிவமாகக் கொண்டவள் தேவி என்பது இந்த மந்திரத்தின் பொருள். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐவரையும் “பஞ்ச பிரம்மங்கள்” என்பா்.
இவா்கள் பிரம்மத்திலிருந்து பிரிந்தாலும் பிரம்மங்கள் என்றே சொல்லப்படுவார்கள்.
இந்த ஐந்து வடிவங்களாக இருப்பவள் பிரம்மமான ஆதிபராசக்தியே ஆவாள்.
தொடரும்……………
நன்றி!
ஓம் சக்தி!
சக்தி. மு. சுந்தரேசன், M.A. M.Phil.,
சித்தா்பீடப் புலவா்
மருவூர் மகானின் 68வது அவதாரத்திருநாள் மலா்
]]>