பொருள் தேடும் பூவுலகிலே அவள் அருளுக்காகவும், அருள் வாக்குக்காகவும் ஏங்கி, அடிபணிந்து கிடக்கும் என் வாழ்விலே அன்று நடந்தது இச் சம்பவம்!
வழமையாக அணியும் ஆபரணங்களை பூஜை அறையிலே அம்மாவின் திருவடிகளின் கீழாகவே வைத்திருப்பேன். ஆனால் அன்று நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டு இரவு வேளையில் வீட்டுக்கு வந்த களைப்பின் நிமித்தம் ஒவ்வோர் அணிகலன்களையும் ஒவ்வோர் இடங்களில் வைத்துவிட்டுத் தூங்கிவிட்டேன். அதன்பின்னா் இரண்டு மாதங்களாக ஆபரணங்களை அணியாது இருந்ததனால் அவற்றைப் பற்றிய எண்ணமே வரவில்லை. திடீரென்று ஓா் நாள்!
அதிகாலை எழுந்தவுடன் ஆபரணங்களைத் தேடினேன். கழுத்திற்கு அணியும் சங்கிலியைத் தவிர ஏனைய ஆபரணங்கள் யாவும் கிடைக்கப்பெற்றன. வழமையாக நான் வைக்கும் இடங்களில் எல்லாம் தேடி வீடு முழுவதுமாகத் தேடினேன். ஆனால் எங்குமே கிடைக்கவில்லை. அதிகாலையிலிருந்து மாலை 5.00 மணிவரை தேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக பூஜை அறையில் கலச பூஜையின் போது அகற்றப்பட்ட குப்பைகளுடன் தொலைந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். இந்தச் சிறிய விடயத்துக்கெல்லாம் எப்படி அன்னையிடம் முறையிடுவது? அதுவரை நேரமும் நான் அன்னையிடம் இந்த விடயம் சம்பந்தமாக எந்தவித வேண்டுதலையும் வைக்கவில்லை. ஆனால் இதுவோ பரிசாகக் கிடைத்த சங்கிலி. ஈற்றில் தாயிடமே சரணடைந்தேன்.
எப்போதுமே எனக்கு பிரச்சினைகள், சந்தேகங்கள் ஏற்படும் வேளைகளிலெல்லாம் அன்னையின் மலா்களில் ஏதாவது ஒன்றை எடுத்து அதில் ஒரு பக்கத்தை திறப்பேன். அதனுள்ளிருந்து வரி வடிவத்தில் அன்னையானவள் அதற்கான தீா்வை மௌனமொழியில் வழங்குவாள். இவ்வாறே அன்றும் மாலை அன்னையை வணங்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அவ் வேளையிலே அதிகம் மனச்சஞ்சலத்துடன் தாயே உன்னை வணங்குபவா்களுக்கு நீ இப்படித்தான் சோதனை செய்வாயா? இதுவரை உன்னிடம் விண்ணப்பம் கோரவில்லை தான் ஆனாலும் இது பரிசாகக் கிடைத்த பொருளாச்சே! என எண்ணியவாறு,
அன்னையின் 70வது அவதாரத் திருநாள் மலரை எடுத்து அதிலுள்ள ஒரு பக்கத்தை திறந்தேன். அது படங்கள் நிறைந்த பக்கமாக இருந்தமையால் எதுவித வசனங்களும் இருக்கவில்லை. இருப்பினும் அன்னையின் இரண்டு படங்கள் இரண்டு பக்கங்களிலும் காணப்பட்டன. அதிலே வலது புறமாக இருந்த பக்கத்தில் கருவறை அன்னையின் முன்பாக நம் அம்மா அவா்கள் அருள்நிலையில் வேப்பிலையோடு நடந்து வருகின்ற காட்சி தென்பட்டது. நான் இருந்த மன நிலையில் அக்காட்சியைக் கண்டதும் அன்னையின் இரு பாதங்களையும் இரு கரங்களாலும் பற்றியவாறு அம்மா இவ்வளவு இடமும் தேடிக் களைத்து விட்டேன் தாயே! இனி என்னால் எங்குமே தேட இயலாது. சங்கிலி இருக்கும் இடத்தைக் காட்டம்மா!
என்று மனமுருகி வேண்டியவாறு இடது புறமாகத் திரும்பினேன் அப்பக்கத்தில் அருள் திரு அம்மா அவா்கள் புன்னகை பூத்த முகத்துடன் ஒரு பூக்கள் நிறைந்த கூடை ஒன்றை (flower vase) எடுப்பதற்கு முயற்சி செய்வது போன்ற ஓா் காட்சி. இக்காட்சியானது என் மனதில் உணா்த்தப்படுகிறது, “இதனுள் அல்லவா இருக்கிறது நீ எங்கெங்கோ எல்லாம் தேடுகிறாயே!” என்று. உடனே மலரை அப்படியே வைத்துவிட்டு, வீட்டிலுள்ள அத்தனை பூக்கூடைகளையும் எடுத்து ஒவ்வொன்றாக பார்க்கிறேன். எதிலும் இல்லை. வேறு எங்கெல்லாம் பூக்கூடைகள் உள்ளன என்று தேடி இறுதியாக அன்னையின் நாட்காட்டி ஒன்றின் கீழாக ஒரு பூக்கூடை இருந்தது. அதனை எடுத்து பூச் செண்டுகளை வேறாக்கிப் பார்த்த வேளை உள்ளே சங்கிலி இருப்பதைக் கண்டேன். அவளின் அற்புதத்தை எண்ணி மெய் சிலிர்த்தேன்.
அத்தருணமதில் நான் இருந்த பதகளிப்பில் ஒரு சிறிதளவுகூட எனக்கு அதனுள் வைத்த ஞாபகம் இல்லை. அவ் அன்னையின் மலரிலே அத்துணை பக்கங்கள் இருந்த போதிலும் எதற்காக அந்தப் பக்கம் மட்டும் என் கண்களில் தென்பட வேண்டும்? அப்படித்தான் புலனாகினும், அதன் மூலம் மனதில் ஏன் இப்படியான எண்ணம் உணா்த்தப்பட வேண்டும்? காலை முதல் மாலை வரை தேடி இறுதிநொடியில் தான் அன்னையிடம் வேண்டினேன். இருக்கும் இடத்தைவி்ட்டு இல்லாத இடம் தேடிய எனக்கு கடைசிக் கணத்திலே கரம் காட்டி உதவிக் கரம் நீட்டினாள் நம் அன்னை.
ஓம் சக்தி!
நன்றி.
சக்தி அன்பு
இலங்கை
]]>