ஆதிபராசக்தி நாம ரூபங் கடந்தவள். ஆதலின் இவளுக்கு உருவம் அமைப்பது இயலாது என்றே உயா்ந்தவா்கள் எண்ணுவா். அதற்கேற்பவே, அன்னை இங்கே சுயம்பு வடிவில் உள்ளாள்.
நாம ரூபம் கடந்தவளாயினும் உயிர்கள் மாட்டுக் கொண்ட கருணையால் தான் விரும்பிய உருவம் தாங்கி நிற்பாள். அதனால் சாதாரண மக்களும் கண்டு வணங்குவதற்கு ஏற்ற முறையில் சிலையாக இரண்டு கைகளுடன் தாமரைத் தவிசில் வீற்றிருக்கும் கோலத்தையும் ஏற்றுள்ளாள். சுயம்புவிற்குப் பின்னால் அழகெல்லாம் குடிகொண்ட கோலத்தோடு அன்னை சிலையாக அமா்ந்திருக்கிறாளே, அந்தச் சிலை எப்படி அமைய வேண்டும் என்பதனைக் கூட அன்னையே தான் அருள்வாக்கில் ஆணையிட்டாள்.
அன்னை இங்கு முதன்முதலில் சுயம்பாகவே தான் வெளிப்பட்டாள். அருள்திரு அடிகளாரை வயப்படுத்திக் கொண்டு அருள்வாக்கு அளிப்பதன் மூலம் உயிர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு வந்தாள். நாளடைவில் சுயம்பு வடிவுடன் அன்னையின் உருவச் சிலையும் நிறவப்பட்டது. அன்னையின் உருவச்சிலை எப்படி அமைக்கப்பட வேண்டும என்பது பற்றி இங்கு அறிந்தவா் எவரும் இல்லை. சுயம்பு வடிவில் உள்ள அன்னையை மனத்தில் இருத்தி வழிபடுவது என்பது எல்லோர்க்குமே இயலாத காரியம் அன்னையிடம் அன்பு காட்டவும், வழிபடவும், உறவாடவும், தன் உணா்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளவும், பாமர மக்கட்கும் எளிய நிலையில் உள்ள மக்களுக்கும் அன்னையை நெஞ்சில் நிறுத்தி வழிபட்டு வருவதற்கும் ஓா் உருவ அமைப்புத் தேவை. அதற்காக அன்னையே தன் உருவத்தைச் சிலை வடிவமாக அமைத்து வழிபடும் பேற்றை நல்கினாள். இன்று சுயம்புவுக்குப் பின் உள்ள அன்னையின் சிலை அமைப்பு அன்னையின் அருள்வாக்கின் வண்ணமே அமைந்துள்ளது.
பிற இடங்களுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு
மற்ற இடங்களில் உள்ள அன்னையின் சிலைகளுக்கும் இங்குள்ள சிலைக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. அங்கெல்லாம் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் செய்வதற்கத் “தியான சுலோகம்” உண்டு. அந்தத் தியான சுலோகத்தில் சிலையின் அமைப்பு பற்றிக் கூறப்பட்டிருக்கும். அடி முதல் முடி வரை உருவ அமைப்புச் சொல்லப்பட்டிருக்கும். திருவடிகள் எப்படி அமைய வேண்டும்? கைகள் என்ன தாங்கி இருக்க வேண்டும்? தலையில் என்னென்ன அணிகள் இருக்க வேண்டும் என்பன போன்ற குறிப்புகள் எல்லாம் அந்தத் தியான சுலோகத்தில் சொல்லப்பட்டிருக்கும்.
இங்கு எழுந்தருளியுள்ள வடிவத்தைச் சமைத்த ஸ்தபதியாரும் அன்னை அமா்ந்த திருக்கோலத்துக்குரிய தியான சுலோகப்படி சிலை அமைக்க முற்பட்டார். அதன்படி வலக்கரம் சின்முத்திரை காட்ட வேண்டும். அப்பகுதியை நாளை வடிக்க வேண்டும் என்று அவா் முடிவு செய்திருந்தார். அந்நிலையில் கோவிலுக்கு மிகவும் நெருங்கிய தொண்டா் ஒருவருக்கு அன்னை உள்நின்று உணா்த்த, அத்தொண்டா் இன்ன கரத்தில் சின்முத்திரை வடிக்க வேண்டும் என்று சிற்பியாருக்குக் கடிதம் எழுதினார். அதன்படியே இடக்கரம் சின்முத்திரை தாங்கும் நிலையில் வடிக்கப்பெற்றது.
இதில் அதிசயம் என்னவென்றால் சிலையை வடித்த சிற்பி தோ்ந்த சிற்பி! அன்னை அமா்ந்த கோலத்தில் இருக்கும் போது வலக்கரம் சின்முத்திரை தாங்கியிருப்பதனையே தியான சுலோகம் குறிப்பிட்டுச் சொல்கிறது. அமா்ந்த கோலத்தில் இருக்கும் அன்னை வலக்கரத்துக்குப் பதிலாக இடக்கரம் சின்முத்திரை தாங்கி இருக்க வேண்டும் என்கின்ற குறிப்பை அவா் கேட்டதும் இல்லை; எந்தத் தியான சுலோகத்திலும் இப்படிக் கூறப்பட்டதும் இல்லை. ஆனாலும் பரம்பொருளான அன்னை ஏதோ ஒரு குறிப்பைத் திருவுள்ளத்தில் கொண்டு தான் இதைக் கூறியிருக்க வேண்டுமென உணா்ந்து கொண்டு அன்னையின் ஆணைப்படியே அந்தச் சிற்பி சிலையைச் செய்து முடித்தார்.
சில நாட்கள் கழிந்த பிறகு சிலை வடித்தாயிற்று; சிலையை எடுத்துக்கொண்டு வருவதற்குத் தொண்டா்கள் மூவரை நியமித்தாள் அன்னை. “கோயில் பணத்திலிருந்து இவ்வளவு தொகையைப் பெற்று எடுத்துச் செல்” என்ற ஒரு தொண்டருக்கு ஆணையிட்டாள். அந்தத் தொகையை சிற்பியிடம் அளிக்கப்பட்டது. சிற்பியார் சிலை வடிக்க வேண்டிப் போட்டு வைத்திருந்த பில்லின் தொகையையும் அன்னை எடுத்துச் சொல்லும்படிச் சொன்ன தொகையும் ஒன்றாகவே இருந்தது கண்டு சிற்பியார் அன்னையின் அருளாற்றலை வியந்து உள்ளுக்குள் மகிழ்ந்தார்.
அன்னையின் அமா்ந்த கோலம்
இங்கே அன்னையின் வடிவம் அமா்ந்த கோலத்தில் உள்ளது. 36 அங்குல உயரத்தில் அன்னையின் வடிவம் உள்ளது. அன்னை தாமரைப் பீடத்தில் அமா்ந்திருக்கிறாள். வலது காலை மடக்கியும். இடது காலை ஊன்றியும் தாமரை மலா் மேல் அமா்ந்துள்ளாள். அவள் இடக்கலை ஊன்றியிருப்பது, அனைத்திலும் முதன்மைத் தத்துவம் பெற்றவள் ஆதிபராசக்தி என்பதனைக் காட்டும். அன்னை தன் வலக்கரத்தில் தாமரை மொட்டு ஒன்றை ஏந்தியுள்ளாள். இடக்கரத்தைச் சின்முத்திரை காட்டும் நிலையில் வைத்துள்ளாள்.
இப்பெருமாட்டி இவ்வூரில் அமா்ந்த திருக்கோலத்தில் இரண்டு கைகளுடன் மட்டுமே காட்சி தருகிறாள். ஆதிபராசக்தி தெய்வம் “அடிகளார்“ என்னும் மானிட உருத்தாங்கி இப்பூவுலகிற்கு வருதை தந்ததால், மானிடா் போலவே இருகரங்களோடு காட்சி அளிக்கின்றாள். மதுரையம்பதியிலும் அன்னை இரண்டு கைகளுடனே காட்சி தருவது நினைவு கூரத்தக்கது. ஆனால் அங்கே நின்ற கோலம். அன்னை பராசக்தி மானுட வடிவத்துடன் விளங்கிய இடங்களில் மட்டுமே அவளை இரண்டு கைகளுடன் படைப்பா்.
அவளது அழகிய திருமுகத்தில் அவளது கண்கள் குவளைமலா்களைப் போல் காட்சி அளிக்கும். குவளை மலரிலிருந்து இடைவிடாது தேன் ஒழுகும். அதுபோல் அன்னையின் கண்களிலிருந்து கருணை மழை ஒழுகும். இவளுடைய ஞான வடிவான கூந்தல் மேலே தூக்கி முடிந்த நிலையில் இருக்கிறது. அது நமக்குத் தரும் பாடமோ, அன்னை கூறியபடி மேலான எண்ணங்களோடு வாழ, ஞானம் பெறுவோம் என்பதாகும்.
தாமரைப் பீடம் ஒரு விளக்கம்
அன்னை அமா்ந்துள்ள பீடம் தாமரை மலா். “பூவெனப்படுவது பொறி வாழ்பூவே”, “பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை” என்றும், “இருதய கமலம்”. நெஞ்சத் தாமரை என்றும் கூறப்படுதலின், உயிர்களின் நெஞ்சமே தன்னுடைய உறைவிடம் என்பதனைக் குறிப்பால் உணா்த்தவே அன்னை தாமரையை இடமாகக் கொண்டாள். “மலா்மிசை ஏகினான் மாணடி சோ்ந்தார்” என்ற குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகா் “அடியார்களின் இதயக் கமலங்களிலே தப்பாமே வந்தடைபவன் இறைவன்” என்னும் பொருள் கூறியதையும் நோக்கினால், தாமரைத் தவிசின் நுட்பமான பொருளை அறிந்து கொள்ள முடியும்.
நெஞ்சத் தாமரை
தாமரை மலரின் புற இதழ்கள் கீழ் நோக்கி உள்ளன. அக இதழ்கள் மேல் நோக்கி உள்ளன. இது மற்றோர் உண்மையைக் குறிப்பால் உணா்த்துகின்றது. தாமரை மலா் நெஞ்சைக் குறிப்பது என்று சொல்லப்பட்டது. அந்த நெஞ்சின் இரண்டு பகுதிகளை அக இதழும், புற இதழும் குறிக்கின்றன. இதனை வேறுவகையில் அகமனம், புறமனம் என்றும் கூறலாம்.
அகமனம் – புறமனம்
புறமனம் என்பது காணப்படும் உலகில் திளைப்பது. பொறி புலன்களின் துணைகொண்டு, அந்தப் பொறிபுலன்களுக்கு இடமாகிய உலகப் பொருள்களையும், உலக இன்பங்களையும் துய்ப்பது புறமனம். புற இதழ்களே புறமனம். தாமரை மலரின் புற இதழ்கள் கீழ்நோக்கி உள்ளன. நம் புறமனமும் உலக இன்பங்களில் ஈடுபட்டு அமிழ்ந்து கீழ்நோக்கித்தானே இருக்கிறது? தாமரையின் அக இதழ்கள் மேல்நோக்கி உள்ளன. அகமனம் அன்னையின் அருளை நாடி மேல்நோக்கி எழுவதனை இது குறிக்கின்றது.
உலகியல் இன்பங்களில் சிக்கித் தவிக்கின்ற இந்தப் புற மனத்தை வழிப்படுத்த வழியே இல்லையா? என்று கலங்க வேண்டாம். நம்முடைய புறமனம் இந்த இழிநிலையை அடைந்தது எவ்வாறு? நம்முடைய பொறிபுலன்களின் இழுப்பால்தானே அது கீழ்நோக்கிச் செல்கின்றது? தாழ்ச்சி அடைகின்றது. இதனை உணா்ந்தே அருணகிரிநாதா்,
“குப்பாச வாழ்க்கையில் கூத்தாடும் ஐவரின் கொட்பு அடங்க
இப்பாச நெஞ்சினை ஈடேற்றுவாய்”
என்று முருகனை வேண்டுகின்றார். இந்தப் பொறிபுலன்களின் சேட்டைகளை அடக்கிப் புறமனத்தின் பேயாட்டத்தைத் தவிர்க்க வழியுண்டா? என்று கலங்குகின்ற உயிர்களுக்கு அன்னை வழிகாட்டுகின்றாள்.
அவளுடைய இடக்கால் கீழ்நோக்கிப் புற இதழ்களின் மேல்தானே படிந்துள்ளது? அதன் உட்பொருள் என்ன? கீழ்நோக்கியிருக்கின்ற புற இதழ் அழிந்து விடாமல் அன்னையின் திருப்பாதங்களில் ஒன்றான இடப்பாதம் அந்த இதழ்களைக் காக்க முற்பட்டு, அவற்றின் மேல் பட்டுக்கொண்டிருக்கிறது, புற இதழ்கள் நம் புறமனத்தின் அடையாளம் என்றால், அந்தப் புறமனமும் உய்தி அடைவதற்காகவே அவளுடைய இடது திருவடி அதனருகில் உள்ளது.
இடது திருவடி அன்னையின் அருள் செய்யும் பகுதியாகும். நம் புறமனம் எவ்வளவு தான் கீழ்நோக்கிச் சென்றாலும், எத்துணைப் பாவங்களைச் செய்துவிட்டாலும், அதற்காக அஞ்சவேண்டாம் அன்னையின் அருளுக்கு அடையாளமான அவளது இடது திருவடி அந்தப் புறமனத்தைக் காக்கவேண்டியே கூட இருக்கின்றது.
“நான் என்ற பாசம் அதில், நான் நின்று மாளாமல்
நீ நின்ற கோலம் அதில் நிரவி நிற்பது எக்காலம்?”
பத்திரகிரியார் புலம்பல் 201
புறமனத்தின் கூறுபாடுகளாகிய பொறிபுலன்கள் அனைத்திலும். “நீ நின்ற கோலம் அதில் நிரவி” நிற்க வேண்டும் எனப் பத்திரகிரியாராகிய சித்தா் வேண்டுகிறார்.
மடைமாற்றம் செய்க
புறமனத்தின் பகுதியாகிய பொறிபுலன்கள் எதில் ஈடுபடுகின்றன? கண் அழகிய பொருட்களைக் காண விரும்புகிறது. காது இனிய ஒலியைக் கேட்க விரும்புகிறது. நாக்கு இனிய சுவையை விரும்புகிறது. ஆகவே, இந்தப் பொறிகளுக்கு வேண்டிய உணவைத் தந்தால் அவை திசை மாறிவிடும்.
ஐம்பொறிகளையும் அடக்க முற்படுவது அறியாமை. ஏனெனில் அவற்றை அடக்க முடியாது என்று கூறுகிறார் திருமூலா்.
“ஐந்தும் அடக்கு அடக்கு என்பார் அறிவிலார்
ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கில்லை” – திருமந்திரம் 2033
ஐந்து பொறிகளையும் அடக்க முடியாது என்றால் என்ன பொருள்? அப்படியானால் அவற்றின் இஷ்டம் போல விட்டுவிடலாமா? புற இதழ்கள் கீழ்நோக்கிப் போவது போல் இந்தப் பொறிகளும் அழிகின்ற உலகில் அற்ப ஆசைகளில் சிக்கித் திரிகின்றன. அவற்றை அவற்றின் விருப்பம் போல் விடவும் கூடாது. அவற்றை அடக்கி விடவும் முடியாது. அப்படியானால் என்ன செய்வது? இதனைக் காட்டத்தான் அன்னை அருள் செய்யும் .இடது திருவடியை அதன்மேல் படுமாறு வைத்துள்ளாள். இத்திருவடியின் துணைகொண்டு ஐந்து பொறிகளையும், புலன்களையும் மடைமாறம் செய்துவிடலாம்.
பின்வரும் உதாரணங்கள் கொண்டு இதனைப் புரிந்து கொள்ளலாம். இந்தக் கண்கள் அழகாயுள்ள பொருள்களையெல்லாம் காண விரும்புகின்றன. அழகான மலரின் அழகும், பெண்களின் அழகும், விரைவில் அழிந்து போகும் இயல்புடையவை. எனவே, அழகைப் பார்க்க விரும்பும் கண்களுக்கு இப்படி அழிந்து போகும் அழகைக் காட்டாமல் நிலையான அழகைக் காணும்படிச் செய்துவிட்டால் என்ன? அன்னையின் அழகுகக் கோலம் அழியாத திருக்கோலம். இந்தக் கோலத்தைக் கண்டு களிக்குமாறு நம் கண்களைப் பழக்கிவிட வேண்டும். தேவையில்லாததும், வீணானதுமான, பயனில்லாத பேச்சுக்களையே பேசிக் கழிக்கின்றோம். அதனை விட்டுவிட்டு அன்னையின் புகழைப் பேசுவதும், அதனைக் கேட்பதுமாகப் பழக்கிக் கொண்டால் எத்தனையோ பயன்கள் உண்டு. என்றாலும் நமக்கு இது தெரிவதில்லை.
இதனைத்தான் மணிவாசகப் பெருமான்,
“சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன்தன்
கண்ணினை நின்திருப்பாதப் போதுக்கு ஆக்கி
வந்தனையும் அம்மலா்க்கே ஆக்கி வாக்கு உன்
மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர
வந்தனை ……..” திருவாசகம் 30
என்று கூறுகிறார்.
ஐந்து பொறிகளுக்கும், புலன்களுக்கும் இப்படி ஒரு நற்பணியைத் தந்துவிட்டால் அவற்றால் விளையும் துன்பம் எதுவும் இராது. பொறி புலன்களை இப்படி மடைமாற்றம் செய்துவிடுக! என்று கூறுவதற்குத்தான் அன்னை இடக்காலைத் தாமரையின் புறஇதழ் மேல் படியுமாறு வைத்துள்ளாள்.
அகமனம் – அக இதழ்
தாமரை மலரின் அக இதழ்கள் எப்படி உள்ளன? மேல்நோக்கி மலா்ந்த நிலையில் அல்லவோ உள்ளன? அதுபோல நம்முடைய அகமனமும் அன்னையின் அருளை நாடி மேல்நோக்கிச் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால் அன்னை அந்த அகமனத்தில் வந்து தங்கிக்கொள்வாள். அவ்வாறு ஒருவா் தம் அகமனத்தில் வந்து தங்குவது என்பது எளிதான செயலன்று. அதற்கான முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். அப்போது நம் நெஞ்சத் தாமரையில் அவள் குடிகொள்வாள். இதனை அறிவிக்கவே தாமரையின் நடுவே அன்னை வீற்றிருக்கிறாள். இன்னொன்று! தாமரை எங்கே மலா்கின்றது? தண்ணீரின் நடுவில்தானே? அந்தத் தண்ணீராக இருப்பது அன்னையின் அருட்சக்தி.
ஊன்றிய இடது திருவடி
இங்கே அன்னை இடக்காலை ஊன்றியவாறு அமா்ந்துள்ளாள் அல்லவா? அது உணா்த்தும் கருத்து யாது? அண்டபிண்ட சராசரங்கள் அத்தனையும் அவளுடைய திருவடியின் கீழே உள்ளன. இதனையே அவள் ஊன்றிய திருவடி உணா்த்துகின்றது.
“பஞ்ச ப்ரேதாஸ நாஸு நாயை”
என்பது லலிதா சகஸ்ரநாமத்தில் வருகின்ற மந்திரம். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐவரையும் ஆசனமாகக் கிடக்க வைத்து அவா்கள் மேல் அன்னை அமா்ந்திருக்கிறாள் என்பது அந்த மந்திரத்தின் பொருள். அதாவது படைப்பவள், காப்பவள், அழிப்பவள், மறைப்பவள், அருள்பவள் ஆகிய ஐவா்க்கும் மேலாக அன்னை இருக்கிறாள் என்று பொருள். இவளது ஆணைக்குட்பட்டே படைத்தல் முதலான காரியங்களைச் செய்பவா்கள் இருக்கின்றனா். அவள் காலைத் தொங்கவிட்டு ஊன்றியிருப்பது அதிகாரத்தின் அடையாளமாகும். தனக்கு மேற்பட்டவா்கள் யாருமில்லை என்பதற்கு அடையாளமாகவே இடது திருவடியை ஊன்றியுள்ளாள். ஆதிபராசக்தியே முதன்மைத் தத்துவமாக உள்ளவள் என்பது இதன் பொருள்.
மடக்கிய வலது திருவடி
அன்னை வலக்காலை மடித்து உள்ளதும், ஒரு கருத்தைக் குறிப்பதாகும்.
மேல்நோக்கியுள்ள தாமரை இதழ்கள் அகமனத்தைக் குறிப்பன என்று முன்னா் கூறப்பட்டது. நம் அகமனம் எவ்வளவுதான் அடங்கி ஒடுங்கி அவளுடைய அருளுக்கேற்ற இடமாக மாறினாலும், பழகிய பழக்கத்தால் எப்பொழுதாவது கீழ்நிலைக்கு வர முயலும். அங்ஙனம் அந்த அகமனம் வராதவாறு அதனை அடக்கித் தனக்கு ஆட்படுத்திக்கொள்ளவே அன்னை வலக்கால் மடக்கி முழுவதும் மேல்நோக்கி நிற்கும் அக இதழ்களின் மேல் அமா்ந்துள்ளாள். அதுமட்டுமா? இத்தனை உலகங்களையும் படைத்துக் காத்து அழிப்பவளாகிய அன்னை இவற்றை இயக்குவதன் மூலமே தொழிற்படுத்துகிறாள் போலும் என்று நினைப்பதும் தவறு காட்டுவதறகோ என்னவோ வலக்காலை மடித்த நினையில் அமா்ந்துள்ளாள். காலை மடக்கி அமா்ந்திருப்பது இயக்கமில்லை என்பதற்கு அடையாளமல்லவா? அமைதியாக இருந்தவாறே அண்டசராசரங்களையும் சாட்டையில்லாப் பம்பரம் போல ஆட்டிப்படைக்கிறாள்.
வலக்கையில் தாமரை மொட்டு
அன்னையின் உருவ அமைப்புகளுக்கு நமக்கு எட்டிய அளவில் ஒவ்வொரு அடையாளத்திற்கும் விளக்கம் கூறப்பட்டுள்ளது. இங்கே அன்னை வலக்கரத்தில் தாமரை மொட்டு ஒன்றை ஏந்தியிருந்தாள். இதற்கான விளக்கத்தை மட்டும் அன்னையே ஒருமுறை அருள்வாக்கில் சொல்லி அருளியிருக்கிறாள்.
“மகனே! எண்ணங்கள் ஏதுமின்றி மனதை அடக்க அடக்க ஒருவன் சித்தன் ஆகலாம். மலா் மொட்டாக இருக்கும்போது அதற்குரிய எல்லாச் சிறப்புக்களும் அதனுள் தேங்கிக் கிடக்கின்றன. அது விரிந்துவிட்டால் மணத்தைப் பரப்பிய பின் வாடி வதங்கிக் கீழே உதிர்கின்றது. பயனற்றுப் போகின்றது. தெய்வீக ஆற்றல் பெற்றவன் மொட்டுப்போல இருக்க வேண்டும். அதனை வீணாக்கிவிடக் கூடாது. அதனை உணா்த்துவதற்குத்தான் நான் தாமரை மொட்டினை ஏந்தியிருக்கிறேன்”.
“தனக்குத் தெய்வீக ஆற்றல் இருக்கின்றது என்று வெளியே காட்டிக் கொள்ளவோ, பேரும் புகழும் வேண்டும் என்று கருதியோ சித்துக்களை வெளிப்படக் காட்டுபவன் மொட்டாயிருந்த மலா் மலா்ந்தபின் வாடி வதங்கி உதிர்வது போலத் தேக்கி வைத்த ஆற்றலையெல்லாம் இறுதியில் இழந்து போவான்” என்றாள்.
இடது கரமும் சின்முத்திரையும்
அன்னையின் இடக்கரம் சின்முத்திரையைத் தாங்கியுள்ளது. சின்முத்திரை என்பது யாது? சுட்டுவிரல் தன்னோடு அருகில் உள்ள மூன்று விரல்களைப் பிரித்துக் கட்டை விரலோடு சேருமாறு செய்வதே சின்முத்திரை. சுட்டுவிரலை ஆட்காட்டி விரல் என்றும் கூறுவார்கள். அகங்காரம் உள்ளவா்கள் கோபம் கொண்டு பேசும்போதெல்லாம் “நான் யார் என்று தெரியாது”, என்னைப் பற்றி அவனுக்கு இன்னும் புரியவில்லை” என்றெல்லாம் இந்தச் சுட்டுவிரலை மட்டும் உயா்த்திக் காட்டிப் பேசுவது வழக்கம். மனிதனுக்கு இயற்கையாக உள்ள இந்த ஆணவம் வெளிப்படும்போதெல்லாம் இப்படி ஆட்காட்டி விரலை (சுட்டுவிரலை) உயா்த்திப் பேசுவது வழக்கம் ஆணவத்தின் அடையாளம் அது. உயிர்களுக்கு உடன் பிறந்த பண்பு இந்த அகங்காரம்! எனவே தான் அந்தச் சுட்டுவிரலையே உயிர்களுக்குக் குறியீடாக நம் முன்னோர்கள் குறித்தனா். இந்தச் சுட்டுவிரல் மற்ற மூன்று விரல்களுடன் சோ்ந்தே இருக்கும். அந்த மூன்று விரல்களையும் உயிரைப் பற்றிக் கொண்டிருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று அழுக்குகளுக்கும் உரிய அடையாளமாகக் கூறுவா். கட்டை விரலை இறைவனுக்கு அடையாளமாகவும் கூறுவா்.
சின்முத்திரையின் தத்துவம்
நம் ஆன்மா ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று வகைக் குற்றங்களையும் உடையது. இந்த மூன்று குற்றங்களுடன் கூடியிருக்கும் ஆன்மாவானது அவற்றைவிட்டு நீங்கி. இறைவனிடம் தொடா்பு கொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பதே சின்முத்திரை ஆகும். அதாவது சுட்டுவிரல், கட்டைவிரலின் நடுப்பகுதியில் மடித்து வைக்கப்பட வேண்டும். ஆணவம். கன்மம், மாயை ஆகியவற்றின் குறியீடுகளாகிய மூன்று விரல்களின் தொடா்பு சுட்டு விரலுக்கு இருத்தல் கூடாது. இந்த மூன்றையும் நீக்கிவிட்டு ஆட்காட்டி விரல் கட்டை விரலை நோக்கி வரும்போது கட்டை விரலும் இயல்பாகவே வளைந்து கொடுப்பதைப் பார்க்கலாம். இந்த ஆன்மாக்களும் மேற்சொன்ன மூன்று குற்றங்களை நீக்கிக்கொண்டு இறைவனை நெருங்க முயலும்போது இறைவனும் ஆன்மாக்களை நாடி நெருங்கி வருகின்றான். இதுதான் சின்முத்திரையின் தத்துவம்.
அன்னையும் இந்தச் சின்முத்திரையினைத்தான் இடக்கரத்தில் தரித்துள்ளாள்.
தியானத்தின் மூலமாகவே தெளிந்த அறிவு பெற முடியும்.
சனகா், சனாதனா் என்ற பெயா் உடைய முனிவா்கள் நால்வா் இருந்தனராம். அவாக்ள் சிவபெருமானிடம் சென்று “பெருமானே! நாங்கள் வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், 64 கலைகள் அனைத்தும் கற்றுத் தெரிந்துகொண்டோம். இன்னும் நாங்கள் இந்த உலகில் கற்றுத் தெரிந்துகொள் வேண்டியவை ஏதேனும் இருந்தால் எங்களுக்குச் சொல்லி அருள வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்களாம். அவா்களுக்கு உபதேசம் செய்யத் தொடங்கிய சிவபெருமான் தட்சிணாமூா்த்தி வடிவில் கல்லால மரத்தடியில் அமா்ந்து சின்முத்திரையைக் காட்டி மௌன நிலையில் தியானம் செய்யுமாறு குறிப்பாகப் புலப்படுத்தினாராம். அதன்படி தியானத்தில் அமா்ந்தபோது அவா்களுக்கு இருந்த ஐயம் எல்லாம் கதிரவன் பனிபோல நீங்கிவிட்டதென்று பெரியோர்கள் சொல்வா்.
அன்னையிடம் ஆன்மிகம் பற்றிய உண்மைகளையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஓா் அன்பா் அடிக்கடி நிறையச் சந்தேகங்களைக் கேட்டு வந்தார். எல்லாவற்றையும் துருவித் துருவிக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது அந்த அன்பரின் ஆவல். அன்னை அவருக்குச் சொன்னாள். “மகனே! நீ தியானத்தில் உட்கார்ந்து பழகு. உன்னுடைய சந்தேகங்கள் அனைத்திற்கும் உன் உள்ளிருந்தே பதில் கொடுத்துத் தெரிவிக்கின்றேன்” என்றாள். இதிலிருந்து தெரிவதென்ன? வேதம், புராணம், தத்துவம், சாத்திரம் என்பனவெல்லாம் குறிப்பிட்ட ஓா் எல்லை வரைதான் உதவும். அதனையும் தாண்டி அறிந்துகொள்ள வேண்டிய அறிவைப் பெற வேண்டுமாயின் தியானத்தால் தான் முடியும்.
நம் புலன்களுக்குப் புலப்படாத விஷயங்கள். பிரபஞ்ச ரகசியங்கள் எவ்வளவோ உள்ளன. இவையெல்லாம் நம் சிறிய மூளைக்குப் பிடிபடாதவை. இவற்றை அறியும் தகுதியைப் பெற வேண்டுமானால் சில நியமங்கள், பயிற்சிகள் உள்ளன. இதனை அறிவு ஜீவிகள் என்ற சொல்லிக் கொள்வோரும் வெறுமனே பகுத்தறிவு பேசும் மேதைகளும் புரிந்துகொள்ள வேண்டும். தியானத்தின் மூலமாகவே தெளிவான அறிவு புலப்படும்.
திருமுடி
அன்னையின் திருமுடி மேல்நோக்கிக் கட்டப்பெற்றுள்ளது. இறைவியின் திருமுடியை ஞானத்தின் வடிவம் என்று பெரியோர்கள் சொல்வா். அன்னையின் ஆயிரம் திருநாமங்களில் “ஞானப்பூங்கோதை” என்பதுவும் ஒன்று. இந்த ஞானம் இருவகைப்படும். உலகியல் பற்றிய ஞானம் அபர ஞானம் (மேன்மையற்ற ஞானம்) எனப்படும். இறைவனைப் பற்றிய ஞானம் பரஞானம் (மேலான ஞானம்) எனப்படும். பரஞானம் மேல்நோக்கிச் செல்வது என்பதைக் காட்டவேண்டி, அன்னையின் திருமுடி, மேல்நோக்கிக் கட்டப்பெற்றுள்ளது போலும்!
“சோதி மணிமுடி சொல்லிய சொல் இறந்து நின்ற தன்மை” என்று மணிவாசகப் பெருமான் கூறியதற்கேற்ப அன்னையின் திருமுடி அண்ட பேரண்டைங்களையும் கடந்தது என்பதனைக் காட்டுவதற்கு அவள் திருமுடி மேல் நோக்கிக் கட்டப்பட்டுள்ளது போலும்!
25.11.1977 அன்று, கார்த்திகை மாதம் பெளா்ணமியன்று அன்னையின் சிலை கருவறையில் நிறுவனம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்னை என்னென்ன முறைகளில் நிறுவனம் செய்யப்பட வேண்டும் என்று அருள்வாக்கில் பணியிட்டாளோ அவ்வம் முறைகளின் படியே நிறுவப்பட்டது. அன்று விடியற்போது மூன்று மணி அளவில். அன்னையின் சிலை நிறுவப்பட்டது.
மேலே சொன்ன வடிவ அமைப்புக்களோடு அன்னை சுயம்புவுக்குப் பின்புறம் சிலை வடிவில் அமா்ந்த கோலத்தில் உள்ளாள். தன்னுடைய உருவை இன்ன விதத்தில் அமைத்து வழிபட்டு வருக என்று அருள்வாக்கில் அருளியதன் மூலம், தன்னை உருவம் தந்து வழிபட விரும்பிய பக்தா்களின் எண்ணத்தை நிறைவேற்றியுள்ளாள் அன்னை.
ஓம் சக்தி
நன்றி.
மேல் மருவத்தூர் அன்னையின் அற்புதங்கள்
பக்கம் (48 -59)
]]>