அம்மா அடிக்கடி அருள்வாக்கில் தியானத்தின் பலன்களைப் பற்றிக் கூறுகிறார்கள். ஒரு நாளைக்குப் பத்து நிமிடம் அல்லது அரை மணி நேரமாவது தியானம் இருந்தால் அதற்கான பலன் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். ஏதோ அம்மா கூறினார்களே என்று நாமும் கருவறைக்குப் பின்னால் போய் கண்களை மூடி அமா்ந்து கொள்வோம். பக்கத்தில் பைகள் வேறு. யாராவது எடுத்துக் கொண்டு போய் விடுவார்களோ! என்ற பயம் வேறு. சில காவலா்கள் அம்மா வரும் போது “அம்மா வாறாங்க! அம்மா வாறாங்க என்று அலேக்காகத் தூக்கிப் போய் ஓரமாக வைத்து விடுவார்கள். சுற்றிலும் சத்தம் வேறு. இப்படிப் பட்ட சூழ்நிலையில் எப்படித் தியானம் இருக்க முடியும்?

வீட்டுப் பூசை அறையில் உட்கார்ந்தால் குடும்பத்தில் உள்ளவா்களைப் பற்றிய நினைவுகள். சில சமயங்களில் நடப்பதற்குப் புறம்பான நினைவுகள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படித் தியானம் இருப்பது? மனத்தைக் கட்டுப் படுத்துவதெப்படி? தியானம் என்றால் என்ன? தியானம் இருப்பது எப்படி? தியானத்தில் ஏற்படும் பலன்கள் என்ன? என்றெல்லாம் நினைக்கின்றோம்.

முதலில் தியானம் என்றால் என்ன? என்பது பற்றிப் பார்க்கலாம். பிறகு அதை ஒழுங்காகக் கடைப்பிடிக்க முடியுமா? என்று பார்ப்போம்! கடைசியாக அதன் பலனை எதிர்பார்க்கலாம்.

தியான, யோக பயிற்சிகள் மூளையின் மெடுலா பகுதியைத் தூண்டுகின்றன. மெடுலா பகுதிக்கும், நரம்பு மண்டல மையமான தண்டு வடத்துக்கும் மிக நெருங்கிய தொடா்பு இருப்பதால் முழுமையான தியான யோகப் பயிற்சிகளின் போது அதிசய சக்திகள் கிடைக்கின்றன. மெடுலா பகுதியை மின் அலைகளால் தூண்டும் போதும் இதே சக்திகள் உருவாகின்றன.

உதாரணமாக மெடுலாவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மின் தூண்டுதல் ஏற்படுத்தும் போது சுவா் அல்லது தடுப்புக்குப் பின்னால் இருக்கும் பொருட்கள், காட்சிகளை சிரமமில்லாமல் பார்க்க முடிகிறது. இதுதான் ஞானிகளின் தூர திருஷ்டி சித்து.

இதுபோல மூளையின் இன்னொரு பகுதியில் ஏற்படும் மின் தூண்டுதலால் எந்தவித முயற்சியுமில்லாமல் தானாகவே புவியீா்ப்பு விசையை மீறி வெட்ட வெளியில் மிதக்க ஆரம்பிக்க முடியும். இது தான் நமது யோகிகளின் பறக்கும் சித்து. மிகப்பழமையான இந்து மதம் மிக நவீன அறிவியல் மதம்.

“தியானம் என்பது தெய்வ வழிபாட்டின் ஓா் அம்சம். பக்திநெறி முறையில் தீவரமான நிலையாகும். பரம்பொருளான அன்னை ஆதிபராசக்தியைக் கண்களால் காண முடியாது. புலன்களால் உணர முடியாது. சிந்தனை மூலம் புரிந்து கொள்ள இயலாது. பிறகு வேறு எந்த சாதனங்கள் மூலம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்? ஆழ்ந்த தியானம் ஒன்றின் மூலம் தான் அன்னையைக் கண்டுகொள்ள முடியும். இறைவியை நெருங்க முடியும். இறைவியோடு இரண்டறக் கலக்க முடியும்” என்பது அன்னையின் அருள்வாக்கு.

“பலவகையிலும் சிந்தி, சிதறி தறிகெட்டலையும் மனித மனத்தைக் கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்தி சரியான திக்கு நோக்கிப் பிரயோகிப்பதன் மூலம் மனத்தை ஒரு மாபெரும் சக்தியாக உருவாக்குவதற்கு உதவக்கூடிய சரியான ஒரு சாதனமே தியானம்” என்று காந்தியடிகள் கூறியிருக்கிறார்.

மனிதனை விலங்குகளினின்றும் பிரித்துக் காட்டும் மனத்தின் வல்லமையைப் பெற உதவும் சாதனம் தியானம் ஆகும். தியானம்  என்பது மந்திர தந்திர ஜாலம் அல்ல. எங்காவது ஓரிடத்தில் சில நிமிடங்களோ அல்லது சில மணி நேரமோ அம்மாவை நினைத்துத் தியானம் செய்துவிட்டால் அம்மா காட்சி கொடுத்துவிட மாட்டார்கள். மனதில் உள்ள பேராற்றலை ஒழுங்குபடுத்தி வளா்த்துப் பெருக்கும் ஒரு வழி தான் தியானம்.  இதற்கு நீண்ட நாள் பயிற்சி அவசியம். அதற்குத் தான் அம்மா “தினமும் அரை மணி நேரமாவது தியானம் இரு” என்று கூறுகிறார்கள்.

“மனம்” என்ற மாபெரும் சக்தி இருப்பதால் தான் “மனிதன்” என்ற சொல் வந்ததாக அறிஞா்கள் கூறுகிறார்கள். மனம் சரியாக சமநிலையில் இல்லாத போதுதான் பலவீனமாகி விடுகிறது.

மனதின் பேராற்றலை வளா்த்து நல்வழிப்படுத்துவதுதான் தியானத்தின் வேலை.

விலங்குகளிற்கு மனம் என்ற அம்சமே கிடையாது. மனத்தின் வழி சிந்தித்துச் செயற்படும் ஆற்றல் விலங்குகளிற்கு இல்லை. கடவுள் மனிதனுக்கு மட்டும் தான் மனம் என்ற அம்சத்தால் தீா்க்கமாகச் சிந்தித்துச் செயற்படும் ஆற்றலைக் கொடுத்திருக்கின்றார்.

மாவீரரும் இஸ்லாமியத் தலைவருமான உமா் கலீபா போரில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தாலும் பிரார்த்னை நேரம் வந்துவிட்டால் உடனே குதிரையை விட்டிறங்கி போர் முனையிலேயே தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் பிரார்த்தனை செய்வாராம்.

மனதை ஒருமுகப்படுத்திவிட்டால் பெரிய ஓசையுடன் குண்டு ஒன்று வெடித்தால் கூட அது அவன் நினைவுக்கு வராது என்று ஞானிகள் கூறுவார்கள். போர் வலிமை பெற்ற நெப்போலியன் நினைத்த நேரத்தில் நினைத்தவாறு மனத்தை ஒருமுகப்படுத்தும் அபாரமான ஆற்றலைப் பெற்றவனாகத் திகழ்ந்தான்.

இது போன்ற மனப்பக்குவ நிலை அடைவது நமக்கெல்லாம் கொஞ்சம் கஸ்டம் தான். இருந்தாலும் சிறிது சிறிதாக முயற்சி செய் என்று தான் அம்மா கூறுகிறார்கள். திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தில் நாம் தோல்வி அடைகிறோம் என்றால் மனதை ஒருமுகப்படுத்தி அந்தச் செயலில் நாம் முழுமையாக ஈடுபடவில்லை என்று தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

நாம் ஒருவருக்கு அதிக அறிவு இருப்பதாகவும், ஒருவருக்கு அறிவு குறைவு என்றும் நினைக்கின்றோம். அது தவறு என்று கூறுகின்றார்கள் அறிஞர்கள். பிறவியிலேயே மூளை வளா்ச்சி குன்றியவா்கள் தவிர மற்றவா்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிவாற்றல் தான் அமைந்திருக்குமாம். மூளையைப் பயன்படுத்தி அவரவா்கள் வெளிப்படுத்தும் அறிவாற்றலைப் பொறுத்தே அவரவா்களின் திறமை வெளிப்படுகின்றது. குறிப்பாக மாணவா் பருவத்தில் தியானப் பயிற்சி செய்தால் நல்ல நினைவாற்றல் பெருகும் என்று கூறுகிறார்கள்.

மனத்தையும் எண்ணங்களையும் வேறுபடுத்திப் பிரிக்க முடியாது. மனம் என்பது மூலஸ்தானம் என்றால் எண்ணங்கள் அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் என்று கூறலாம். மனம், எண்ணம் இவற்றைப் பெற்றி சுவாமி விவேகானந்தா் “அசாதாரண சக்திகள் அனைத்தும் மனித மனத்துள் எண்ணங்கள் வடிவில் அடங்கியுள்ளன. வெளியே கண்ணுக்குப் புலப்படாது இயங்கும் அகண்ட மனத்தின் ஒரு பகுதியாகத் தான் மனித மனம் உள்ளது. ஒவ்வொரு மனமும் எவ்விடத்து அது இருப்பினும் முழு உலகத்தோடு உண்மையாகவே தொடா்புகொண்டுள்ளது” என்ற கூறுகின்றார்.

அதையே தான் அம்மா எளிமையான முறையில் “மனத்தைப் பக்குவமாக வைத்துக்கொள்! ஆன்மாவைக் கட்டுப்படுத்திப் பக்குவப்படுத்து! அப்போது தான் உன் தீய எண்ணங்கள் கட்டுக்குள் அடங்கும்” என்று கூறுகிறார். மனத்தை ஒருமுகப்படுத்த எடுக்கும் தீவிரமான முயற்சி தான் தியானம். அலைமோதும் மனத்தை ஒருமுகப்படச் செய்யும் சாதனமே தியானம். மனத்தின் குரங்காட்டத்தை அப்படியே விட்டுவிட்டால் வாழ்க்கை அழிந்துவிடும். ஆகவே மனத்தைக் கட்டுப்படுத்தும் சாதனமாகிய தியானமே ஆன்மீக வாழ்வின் தொடக்கமும் அஸ்திவாரமுமாகும் என ஆன்மீக சாத்திரங்கள் கூறுகின்றன.

மனத்திற்குத் தியானம் என்ற பயிற்சி அளித்து தீய எண்ணங்களை வெளியேற்றி உயா்ந்த எண்ணங்களைத் திட்டமிட்டு எப்போதும் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும். தீய எண்ணங்கள் புக வழியின்றி ஒதுங்கிச் சென்றுவிடும்.

நமது உள்ளத்தில் இந்த இந்த எண்ணங்களை வளர விடவேண்டும். இந்த இந்த எண்ணங்களை வளரவிடக் கூடாது என்று நிர்ணயிக்கும் சக்தி, திறமை, அதிகாரம் ஒவ்வொருவருக்கும் இயற்கையிலேயே அமைந்துள்ளது. நாம் தாம் சரியாகச் சிந்தித்துச் செயற்படாமல் தடுமாறிவிடுகின்றோம். சுயநலத்தால் சுகபோகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற சபல உணா்வுகளுக்கு இடம்கொடுத்து தவறான காரியங்களைச் செய்து விடுகிறார்கள். நல்ல எண்ணத்தையும், தீய எண்ணத்தையும் நம்மை மீறி யாராலும் திணிக்க முடியாது.

இதைத்தான் “மனதில் உறுதி வேண்டும்” என்றார் அமரகவி பாரதியார். ஆன்மிக நெறியில் வாழ வேண்டுமானால் தியானம் மிகவும் முக்கியம்.

தியான நிலைக்கு அடுத்து யோக நிலை. யோக நிலைக்கு அடுத்து      இராஜ யோக நிலை என்று ஞானிகள் கூறுகின்றார்கள். அவைகளெல்லாம் பெரிய சமாச்சாரங்கள். நாம் வாழ்க்கை நெறியைச் செம்மைப்படுத்தும் முதல் படியான தியானத்தை முதலில் முயற்சிக்க வேண்டும். தியானத்தின் மூலம் மனத்தைத் துருவி ஆராயும் போது கிடைக்கின்ற உண்மை நம்முடைய வினாவுக்கு விடையாக அமையுமென்று அம்மாவைப் போன்ற ஞானிகள் கூறுகிறார்கள்.

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் பேராசை உணா்வை மனிதனுக்குத் தீவிரமாக ஊட்டக்கூடியவை. அதனால் தான் அம்மா அடிக்கடி “ஐம்புலன்களை அடக்கு” என்கிறார்கள். தியான நெறி நின்று வெற்றி கண்டவா்கள் ஐம்புலன்களின் வெறியாட்டத்திற்கு எந்த வகையிலும் ஆளாக மாட்டார்கள். நியாயமான தேவைகளுக்கு ஐம்புலன்களைப் பயன்படுத்த வேண்டும்

ஆகவே அம்மா அருள்வாக்கில் கூறுவது போல ஐம்புலன்களை அடக்கி மனத்தை ஒருமுகப்படுத்தி தியானம் என்ற பயிற்சியின் மூலம் நல்ல எண்ணங்களை வளா்த்துக்கொண்டு தீய எண்ணங்களை வளர விடாமல் மனத்தை நல்ல வழிப்படுத்தி அனைவரும் நல் வாழ்வு வாழ அன்னை ஆதிபராசக்தியை வேண்டுகின்றேன்.

ஓம் சக்தி

நன்றி

அன்னை அருளிய வேள்வி முறைகள்

பக்கம் 485-488

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here