திருவடிப் படம் – விளக்கம்
“அம்மா! குருநாதா் திருவடிப் படம் இருக்கிறதே! அதற்கு ஏதேனும்
சூட்சுமப் பலன் இருக்கின்றதா? அதனை எல்லோரும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்களே……” என்று கரூரைச் சோ்ந்த தொண்டா் அன்னையிடம் அருள்வாக்கில் கேட்டார்.
அப்போது அன்னை உளம் மகிழ்ந்து கூறினாள்.
“மகனே! கண்ணால் பார்ப்பது பாவத்தையே!
காதால் கேட்பது மோசத்தையே!
மனத்தால் நினைப்பது மோகத்தையே!
உடலால் கேட்பது போகத்தையே!
தலையிலிருந்து கண், காது மூக்கு, மனது போன்ற அத்தனை உறுப்புகளாலும் நீ பாவம் செய்தாலும், புண்ணியம் செய்தாலும் தலையிலிருந்து கால் வரை அத்தனையும் தாங்கிக் கொள்வது எது தெரியுமா?” என்று அன்னை வினவினாள்.
“அம்மா! அது திருவடி!” என்றார் தொண்டா்
“அது யாருடைய திருவடி? என்று வினவினாள் அன்னை.
“அம்மா! அது உங்களுடைய திருவடி!” என்றார் தொண்டா்
“திருவடியை எங்கு வைக்க வேண்டும்? என்று கேட்கிறாயா? தலையில் வை! கண்ணில் வை! உன் நெஞ்சில் வை! அல்லது எங்கு வேண்டுமானாலும் வை! வாயில் வை! பூசை அறையினில் வை! இல்லையெனில் கூடத்தில் வை! நீ எந்த இடத்தில் வைக்கின்றாயோ…….. அந்த இடத்திற்கான பலனைத் தருவேன் மகனே! உன் எண்ணத்தில் திருவடிக்கு என்ன இடம் கொடுக்கின்றாயோ அதற்கான பலனைத் தருவேன்”
“மகனே! திருவடிகளைப் பொறுத்தமட்டில் உன் எண்ணத்திற்கு ஏற்றாற்போலப் பலனளிப்பேன். மகனே!”
“பற்றுக பற்றுக பரம்பொருள் பதத்தினை!
அற்றது அற்றது அனைவரின் பவவினை!
உற்றது உற்றது உயரிய பலனதாம்
அது அது அவனவன் எண்ணும் எண்ணமே!”
குருவின் மகிமையையும், திருவடி மகிமையையும், அவதார மகிமையையும் புரியாமல்
கிடக்கின்ற………. ஆன்மிகத்தில் அனாதைகளாகக் கிடக்கின்ற நமக்கு அவற்றின் மகிமைகளை நம் தாய் புரிய வைத்தாள். அனுபவங்கள் மூலமாகவே புரிய வைத்தாள்.
இறைவனைத் தஞ்சமாகப் பற்ற வேண்டும் என்று விரும்புகின்ற அடியார்கட்கு முன் வந்து உதவி புரிவது அவன் திருவடிகளே ஆதலின் திருவடிகளுக்கு அளப்பரிய மகிமை உண்டு.
தன் குருவையே இஷ்ட தெய்வமாகப் பாவிக்க வேண்டும் என்பது ஆன்மிக உலகில் கூறப்டும் இரகசிய உபதேசம்!
எனவே, குருவின் திருவடியே வழிபடுபவனுக்கு இஷ்ட தெய்வத்தின் திருவடி!
இறைவன் வாக்கு மனங்களுக்கு எட்டாதவன்! சூக்குமமாக உள்ள அவனது திருவடிகளைப் பற்றுவது எப்படி? இறைவன் திருவடி சூக்குமம்! குருவின் திருவடி ஸ்தூலம். சூக்குமத்தைப் பற்ற முடியாதவா்கட்குத் தூலமாக வெளிப்பட்டு அருள் பாலிப்பது குருவின் திருவடியே ஆகும்.
அவதார புருஷரான இராமபிரான் பாதுகையைப் புகழ்ந்து ஆயிரம் பாடல் பாடினார் வேதாந்த தேசிகர்.
“பாதுகா சகஸ்ரம்” என்பது அந்த நூலின் பெயா். இராமனது பாதுகையைப் போற்றிப் புகழ்வது அது. பாதமும் அவற்றைத் தாங்கும் பாதுகையும் ஒன்றுதான்.
“குருவின் பாதபூசை தீா்த்தத்திற்கு ஏழு கடல்களும் இணையாகாது” என்று குரு கீதை போற்றுகின்றது. அந்த ஆன்மிக உண்மையைச் சிலா் அனுபவத்தில் புரிய வைத்தாள் அன்னை.
“அது அஞ்ஞானத்தை வேருடன் களைவது; அது பிறவியைப் போக்குவது; அது கா்ம வினைகளைப் போக்குவது; அந்தப் பாதபூசை தீா்த்தத்தை ஞானம் அடைய வேண்டும் என்று விரும்பிப் பருகவேண்டும். வைராக்கியம் வரவேண்டும் என்று விரும்பிப் பருகவேண்டும்”.
அன்னை நமக்கு வேறுவகையில் அதன் நுட்பத்தைச் சொல்லிக் காட்டினாள்.
“அடிகளார் பார்வைக்கும் பாதம்பட்ட மண்ணுக்கும் மகிமையுண்டு.”
“அடிகளார் பார்வைக்குப் பாவம் போக்கும் சக்தியுண்டு”
strong>
“பாதபூசையைப் பார்ப்பது ஒரு கும்பாபிடேகத்தைத் தரிசிப்பதற்குச் சமம்!”
நன்றி. ஓம் சக்தி!