சக்தி என்பவள் படைப்பிற்கெல்லாம் அன்னையாக பரம்பொருளின் ஆற்றல்களின் தொகுப்பாக விளங்குகின்றாள். அணுவில் அடங்கியிருக்கும் சக்தியும் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் சக்தியும் அவளே தான். இறைவனின் ஆற்லை உணரும் போது சக்தியின் பிரசன்னத்தையே உணருகின்றோம்.
அகிலாண்ட கோடிகளையெல்லாம் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருள்பாலித்தும் ஐந்தொழில்களைச் செய்பவள் ஆதிபராசக்தி. அவளே முதன்மைத் தத்துவமாக இருப்பவள். மூவருக்கும் முன்னவள். இதனை
”வாயும் மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே” – பா. 1178
என்று பாடுகிறார் திருமூலா்.
சக்தியில் ஒரு நிலையில் சிவனுக்குத் தாயாகிறாள். ஒரு நிலையிலே சிவசக்தி என்ற நிலையில் தாரமாகின்றாள். இன்னொரு நிலையில் மகளாகிறாள். சிவபெருமானுக்கே தாயாய் விளங்கும் தத்துவப் பொருளாக உள்ளவளே அன்னை ஆதிபராசக்தி!
”கறைக் கண்டனுக்கு மூத்தவளே”
என்று ஆதிபராசக்தி தத்துவத்தின் முதன்மையைப் போற்றிப் புகழ்கின்றார் அபிராமிப்பட்டா். இத்தகு பெருமை கொண்ட அன்னை ஆதிபராசக்தி அவதார நோக்கம் கொண்டு ஆன்மிக குரு அருள்திரு அம்மா உருவில் உலவி வந்து அற்புதம் புரியும் தலமே மேல் மருவத்தூா் தலமாகும்.
வேப்பிலையே எந்திரம்
சக்கரம் வைத்துப் பூசை செய்யும் பழக்கம் இன்னும் நம் மக்களிடையே இருந்து கொண்டு தான் வருகிறது. மாளிகைக் கடைகளில், பெட்டிக் கடைகளில் பல வியாபார நிறுவனங்களில் செப்புத் தகட்டில் ஏதோ சில மந்திர எழுத்துக்களை எழுதி, சக்கரம் வரைந்து அந்த செப்புத் தகட்டிற்குக் கண்ணாடிப் பிறேமும் போட்டு காலையில் அதற்குத் தூப தீபம் காட்டிக் கொண்டு வருகிற பழக்கம் இன்றும் இருக்கிறது.
கோயிலின் விக்கிரகத்தின் அடியில் சக்கரம் வரைந்து செப்புத் தகட்டை வைப்பார்கள். மந்திரம் எழுதி சக்கரம் வரைந்த செப்புத் தகட்டிற்கு எந்திரம் என்று பெயா்.
மேல் மருவத்தூரில் அன்னையின் விக்கிரகத்தினை பிரதிஷ்டை செய்த பிறகு எந்தச் சக்கரமும், எந்த எந்நதிரமும் வைக்கப்படவில்லை. நவரத்தினமும் போடப்படவில்லை. நவதானியம் மட்டுமே போடப்பட்டது. அது பற்றி அன்பா் ஒருவா் குறைபட்டுக் கொண்டார். தானே ஒரு எந்திரத் தகடு வாங்கி வந்து வைக்கலாம் என்று எண்ணினார். அந்த அன்பா் குறைபட்டுக் கொண்டதைப் பற்றித் தொண்டா்கள் அன்னையிடம் அருள்வாக்கில் முறையிட்டார்கள்.
அப்போது அன்னை சுயம்பின் அருகில் நின்றபடி இருந்தாள். தன் கையாலேயே கற்பூர ஆராத்தியை விக்கிரகத்திற்குக் காட்டினாள். அப்போது அன்னையின் கையிலிருந்த கற்பூரம் சுயம்பின் மேல் விழுந்தது. உடனே அங்கிருந்த பச்சைப் பசேலென்று இருந்த வேப்பிலைக் கொத்து குப்பென்று தீப்பிடித்து எரிந்தது. அன்பா்கள் அதிர்ச்சியும் பரவசமும் அடைந்தார்கள். பச்சை வேப்பிலை தீப்பிடித்து எரிகிறதே என்ற வியப்பு!
அன்னை பஞ்ச பாத்திரத்தை எடுக்கச் சொல்லி வாங்கினாள். அதிலிருந்த நீரை எரிந்த வேப்பிலைக் கொத்தின் மீது தெளித்தாள். அடுத்த கணம் கரிந்து போயிருந்த வேப்பிலைகள் மீண்டும் பச்சைப் பசேலென்று ஆகிவிட்டன. அந்த இலைகளைக் கிளறச் சொல்லி ”பாதி கரிந்து போயும், பாதி பச்சையாகவும் உள்ள ஒரே ஒரு வேப்பிலை இருக்கும். அதை எடு” என்றாள் அன்னை.
எடுத்து வைத்திருந்த தொண்டரிடம் ”மகனே! இது தான் எனக்கு எந்திரம். இதனையே விக்கிரகத்துக்கும் பீ்டத்துக்கும் நடுவில் வைத்துவிடு!” என்று சொல்லிய அன்னை ”மகனே! எனக்குச் சக்கரம் எழுதி எந்திரம் வைக்கும் தகுதி உலகில் யாருக்கும் இல்லையடா!” என்றாள் அன்னை.
ஆடிப்பூர விழா
அன்னையின் ஆலயத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் ஒன்று ஆடிப்பூர விழா அவற்றின் மகத்துவம் அறிந்த யாருக்குத் தான் ஆடிப்பூர தினத்தன்று மருவூா் மண்ணில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது.
சித்தா் பீடத்தில் நடைபெறும் விழாக்களில் முதன் முதலில் 1972ம் ஆண்டு கொண்டாடப்பட்ட விழா ஆடிப்பூர விழா தான்! பூரம் நம் அம்மாவின் அவதார நட்சத்திரம். ஒவ்வொரு மாதமும் பூர நட்சத்திரம் வந்தாலும் ஆடி மாதப் பூர நட்சத்திரத்திற்கு அம்மா ஒரு தனிச் சிறப்பைத் தந்துள்ளாள். ”ஆடிப் பட்டம் தேடிவிதை என்பதும், ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பொழியும்” என்பதும் நம் நாட்டில் வழங்கப்படும் பழமொழிகளாகும். எனவே ஐப்பசியில் மழை வளம் பெறுவதற்கு ஆடிப்பூர விழா வழிவகுக்கிறது.
nஆண்டு முழுவதும் மக்கள் கஞ்சிக்கு அலையாது இருக்க ஆடிப்பூரத்தில் கஞ்சிக் கலையம் எடுக்க வேண்டும் என்பது அம்மாவின் அருள்வாக்கு. 1972 ஆம் ஆண்டு ஆடிப்பூரத்தில் தான் முதன் முதலில் கஞ்சிக் கலையம் எடுத்து வந்து அன்னைக்குப் படைக்கப்பட்ட அந்த அமிழ்தத்தைப் பருகி வையத்துள் வாழ்வாங்கு வாழ அருள் வழங்கினாள்.
எனவே 1976 ஆம் ஆண்டு ஆடிப்பூரம் முதல் தான் கஞ்சி எடுத்தல், பால் அபிடேகம் செய்தல், அம்மாவின் அங்கவலம் என்ற வகையில் மூன்று நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அன்பே சக்தி
இன்றைய மக்களிடம் இன்பங்களை நுகர வேண்டும் என்ற ஆசை மேலோங்கி விட்டது. வசதியான வாழ்க்கைக்கு மனம் ஏங்கித் துடிக்கிறது. ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற மனம் அலைகிறது. ”போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற எண்ணம் வர மாட்டேன் என்கிறது. அதனால் இன்னும்……. இன்னும் என்ற அலைகிறது. பணவெறி, பண மோகம், லஞ்சம், ஊழல் என சமுதாயக் குற்றங்களும், பொருளாதாரக் குற்றங்களும் பெருகி வருகின்றன.
சுயநல வெறி ஓங்கி வருகிறது. பொதுநலம் என்ற உணா்வு மங்கி வருகிறது.
நாத்திகன் யார் என்பதற்கு அம்மா புதிய விளக்கம் கொடுக்கிறாள். பொது நல உணா்வே இல்லதவன் எவனோ அவன் தான் நாத்திகன். சுயநலமே கொண்டு வாழ்பவன் தான் நாத்திகன். அதனால் தான் பிறருக்குத் தொண்டு செய்ய வைத்து பொதுநல உணா்வை ஊக்குவித்து செவ்வாடைக் கூட்டத்தைப் பழக்குகிறாள்.
இந்தப் பொது நல உணா்விற்கு அடிப்படையாக இருக்க வேண்டியது அன்பு! “அம்மாவிற்காகச் செய்கிறேன் என்று எதையும் செய்யாதே!
கோடிக்கணக்கான மக்களுக்குச் செய்கிறேன் எனக் கருதித் தொண்டு செய்!
என்கிறாள் அம்மா.
”அன்பு என்பது மாபெரும் சக்தி!
அன்பே கடவுள்! அன்பே சிவம்!
என்பார் திருமூலா்.
தூய்மையான முழுமையான அன்பு அச்சத்தை அகற்றிவிடும். ஆயுள், ஆரோக்கியம், அமைதி, அழகு போன்றவற்றை அளிக்கக் கூடிய சக்தி அன்பில் இருக்கிறது.
நம் அம்மாவைத் தரிசிக்க எங்கெங்கோ இருந்து வருகிறார்கள். அவா்களைப் பார்த்து முதன் முறையிலேயே நீண்ட நாள் பழகியவள் போல அம்மா பேசுகிறாள். அண்ணன், தம்பி, அக்கா, பெற்றோர் கூட அவ்வளவு அன்பாகப் பேசுவதில்லை. அதனால் தான் அம்மாவிடம் வருபவா்கள் அவ்வளவு பாசமாக அடிக்கடி வருகிறார்கள். அம்மாவிடம் நாம் காண்பது தெய்வீக அன்பு!
இந்த தெய்வீக அன்பின் அலைகள் உலகெங்கும் பரவ வேண்டும் என்று தான் அம்மா நம்மையெல்லாம் தொண்டு மார்க்கத்தில் இறக்கிப் பழக்கி வருகிறாள்.
அம்மாவின் உபதேசம் மிகமிக எளியது. ”வந்து பிறந்து விட்டோம். எத்தனை நாள் இருப்போம் என்பது நிச்சயம் இல்லை. இருக்கும்போதே பத்துப் பேருக்கு உபயோகமாக நல்லது செய்துவிட்டுப் போ!”
அந்த நல்லது செய்ய எது தேவை?
அன்பு! அந்த அன்பு வளரத் தொண்டு தேவை!
அன்பும், தொண்டும் வளர வேண்டிய இடத்தில் போட்டி பொறாமைகள் வளரக் கூடாது. அப்படி வளா்ந்தால் நாம் அம்மாவிடம் இருந்து வெகு தூரம் விலகிப் போக நேரிடும்.
எனவே அம்மாவைச் சரணடைந்து உங்களை ஒப்படைத்து விடுங்கள். அம்மா நமக்கு என்ன செய்தாள் என்று நினைக்காதீா்கள்! அம்மாவிற்காகவும், ஆன்மிகத்திற்காகவும் செய்கின்ற ஒவ்வொரு தொண்டிற்கும் பலனுண்டு. அந்தப் பலன்களையெல்லாம். உங்கள் சந்ததிக்குச் சோ்த்து விடுங்கள். அம்மாவை வணங்கி அம்மா கூறும் முறையில் நாம் செயற்பட்டால் நன்மை கிட்டும் என்பதை உணா்ந்து நடப்போம்.
ஓம் சக்தி
சக்தி. இர. ஞானகுரு
மேலாண்மைத்துறை. அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
மருவூா் மகானின் 70வது அவதாரத்திருநாள் மலா்.
]]>