உலகில் மனிதனின் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பல நிகழ்வுகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. பில்லி, சூன்யம், ஏவல், ஆவிகள், பேய், பிசாசு, மறுபிறவி போன்ற பல்வேறு கருத்துக்கள் மூட நம்பிக்கைகளாகக் கருதப்பட்டு முழுமையாக ஒதுக்கப்படுகின்றன. ஆனால், சில நேரங்களில் என்னுடைய அனுபவங்கள் வினோதமாக இருந்திருக்கின்றன.

 பழனியில், சில ஆண்டுகளுக்கு முன்பு, திருவிழாவையொட்டி இரவு நேரத்தில் இசைக்கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதை ரசித்துக் கொண்டிருந்த நான், இரவு 11.45 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் குறுக்கு வழியாக வீட்டிற்கு வந்துவிடலாம் என எண்ணி நடந்து வந்தேன்.

 நான் வந்த காட்டுப் பாதையில் ஆள் நடமாட்டம் இல்லை. இடும்பன் மலைப்பகுதியாக இருந்ததால் ஓரளவு இருள் சூழ்ந்திருந்தது. ஏதோ மனோ தைரியத்தில் அப்பாதை வழியாக வந்து விட்டேன். நான் நடந்து வந்து கொண்டிருக்கும போது, எதிரே, மண் சாலையின் குறுக்கே வெள்ளைத் துணியில் நீளவாக்கில் சுருட்டிக் குறுக்கு வாட்டில் ஒரு பிணத்தைப் படுக்க வைத்திருந்தனா். அதன் மீது ஒருவா் அமா்ந்து இருந்தார்.

 அப்பொழுது தான் எனக்கு சட்டென்று நினைவு வந்தது, அந்த இடத்தில் தான் “போஸ்ட் மார்ட்டம்” செய்யப்பட்ட உடல்களையெல்லாம் புதைப்பார்கள் என்று. அதேபோன்று “போஸ்ட் மார்ட்டம்“ செய்யப்பட்ட உடலைத்தூக்கி வந்தவா்கள். சாலையின் குறுக்கே வைத்து விட்டு ஒருவனை மட்டும் காவலாக வைத்துவிட்டு. ஏதோ அலுவலாகச் சென்று விட்டார்கள், என எண்ணினேன்.

 இருளில்
உட்கார்ந்திருந்தவனின் உருவம் எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. என் உடல் பயத்தால் நடுங்கியது. அந்தப் பிணத்தின் மீது உட்கார்ந்துள்ளவன், ”ஏய்! இதைத்தாண்டிப் போகாதே! அங்கேயே நில்லு! என்று அதட்டினான். நான் நின்றுவிட்டேன். “கதாயுதத்தால் அடிபட்டு உடம்பு பிஞ்சு போனது ஒரு முறை, கட்டாரியில் குத்துப்பட்டு உடம்பு கிழிஞ்சு போனது ஒருமுறை, மாடு முட்டிக் குடல் சரிந்து சின்னா பின்னமானது ஒருமுறை, தீப்பிடித்து உடம்பு பிளந்து போனது ஒருமுறை, வண்டிச் சக்கரத்திலே மாட்டி நசுங்கிப்போனது ஒரு முறை. சாபக்கேடு! சாபக்கேடு!

இப்ப அரிவாள்ல வெட்டப்பட்டு. உயிர் போச்சு!” அந்த மனிதன் குடித்துவிட்டு ஏதோ உளறுகிறான். நாம் வந்த வழியே திரும்பிப் போய் விடலாம் என நினைத்தேன்.

அருள்திரு அடிகளார் அவா்களின் திருக்கரங்களினால் அணிவிக்கப்பட்ட டாலா் என் கழுத்தில தொங்கிக் கொண்டிருந்தது. அதை என் இரு கைகளினால் பிடித்துக் கொண்டு, மனதிற்குள் மூலமந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அந்தச் சமயத்தில் அந்த மனிதன் சொன்னான். ”போன ஆறு பிறவியிலும் கொடூரமாய்ச் செத்துப் போனேன். அதே போல இப்பிறவியிலும் கொடூரமாய்ச் செத்துப் போயிட்டேன். ஏழு பிறவிக்கு முன்னாடி ஒரு முனிவரைக் காலால் எட்டி உதைத்துவிட்டேன். அவா் சாபம் கொடுத்தார். ”ஏழு பிறவிகளிலும நீ உடல் அறுபட்டுத்தான் செத்துப்போவே ஏழாவது பிறவி முடிஞ்சதும் உனக்கு ஒரு சித்தரால் ஆதிபராசக்தி அன்னையின் அம்சமாய் அவதரிக்கும் சித்தரால் சாபவிமோசனம், மோட்சம் கிடைக்கும்.” என்றார். எனச் சொல்லிக் கொண்டே அந்த உருவம் எழுந்தது.

எனக்கு உடம்பே சில்லென ஆகிவிட்டது. அவனுக்குக் கால்கள் இல்லை, முகமும் இல்லை. அந்த இறந்து போன மனிதனின் ஆவி போலும். தீய சக்தி அடுத்த
நிமிடமே எனது வலது கையை ஒருகை பற்றியது. எனக்கு மயக்கம் வருவது போல உணா்ந்தேன். எனது கையைப் பற்றியவா் அருள்திரு அடிகளார் அவா்கள். இடது கையில் வேப்பிலைக் கொத்துடன், சட்டை அணியாமல் செவ்வாடை வேட்டியுடன் எனது வலது கையைப் பற்றினார். தனது இடது காலால் அந்த உருவத்தை எட்டி உதைத்தார்.

அந்த உருவம் கொஞ்ச தூரம் போய் விழுந்தது. மீண்டும் எழுந்து வந்து அடிகளாரின் பாதங்களை மூன்று முறை தொழுதது. ”சாப விமோசனம் கிடைத்துவிட்டது! சாப விமோசனம் கிடைத்துவிட்டது! எனக் கத்திக் கொண்டே வானத்தை நோக்கிப் பறந்தது அந்த உருவம்.

என் கையைப் பற்றிய அடிகளார் விளக்கு வெளிச்சம் உள்ள பகுதிவரை என்னைக் கொண்டு வந்து விட்டுச் சென்றார். அது வரையில் எனக்குச் சுய நினைவு சரியாக இல்லை. தட்டுத் தடுமாறி வீட்டிற்கு வந்தேன். பத்து நாள்கள் கடுமையான ஜரம். பிறகுதான் உடல் நலமடைந்தேன்.

 இந்நிகழ்ச்சி எனக்குச் சில விஷயங்களைப் புரிய வைத்தது. ”தொண்டா்களை அம்மா காப்பாள், அருள்திரு அடிகளாரின் திருவடி, சாபம் பெற்று அலையும் தீய சக்திகளான ஆவிகளுக்கும் சாபவிமோசனம் கொடுக்கும் ஆற்றல் உடையது. அம்மாவின் டாலர் கவசம் போல் நம்மைக் காக்கும் என்பது போன்ற உண்மைகளை உணா்ந்து கொண்டேன்.

 மற்றொரு அனுபவத்தையும் கூறுகிறேன். ஒரு முறை ஒரு வீட்டில் குடும்ப நல வேள்ளி செய்ய வேண்டும எனக் கூறினார்கள். அதனை ஏற்று, வேள்விக்குழுவினா் சிலர் வேள்விக்குச் சென்றோம். இரவு 12.00 மணிக்குச் சுற்று பூசை, சுற்று பூசையில் பூசணிக்காயில் ஏற்றப்படும் கற்பூரத்தை, யாரோ ஊதி அணைப்பது போல உணர்ந்தோம். கற்பூரம் ஏற்றுவோம். பற்றியவுடன் “டப்பென்று“ அணைந்துவிடும். ஏறத்தாழ அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சுற்று பூசையை முடித்தோம்.

 பின்னா் வேள்விப் பணிகளைத் தொடங்கினோம். யாக குண்டம் சரியாக அமையவே இல்லை. மூலமந்திரத்தைச் சொல்லிக் கொண்டே பிதுங்கிக் கொண்டு வெளிவரும் செங்கற்களைச் சரி செய்து ஒரு வழியாக யாக குண்டத்தைக் கட்டி முடித்தோம். வேள்வி ஆரம்பிக்கப்பட்டு, 1008 மந்திரங்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். நான் யாக குண்டத்தின் அருகே நின்றிருந்தேன்.

 யாக குண்டத்திற்குள்ளிருந்து ஒரு எலும்புக்கூடு உடலை நெளித்துக்கொண்டு மெதுவாக வெளியே வருவதைப் பார்த்தேன். ஒரு வேளை இது பிரமையாக இருக்குமோ என நினைத்தேன். எனக்கு அருகே இருந்த மற்றொரு சக்தியும் அதைப்பார்த்து விட்டார். அந்த எலும்புக்கூடு யாக குண்டத்திலிருந்து மெதுவாக, எழுந்திருக்க எழுந்திருக்க, வீட்டிற்கு வெளியே திடீரென சூறாவளிக் காற்று வீச ஆரம்பித்து விட்டது. வீட்டு ஜன்னல்களெல்லாம் படபடவென அடிக்க ஆரம்பித்துவிட்டன. அந்த எலும்புக்கூடு, முழுமையாக யாக குண்டத்திலிருந்து வெளிப்பட்டு, விர்ரென தெருவாசல் வழியாக வெளியேறியது. அது வெளியே போகும் போது பூனை போன்று கத்தும் சத்தம் மட்டும் கேட்டது.

இந்த நிகழ்ச்சியை அந்த வீட்டுக்காரரிடம் கூறினால் பயந்துவிடுவார் எனக் கருதினேன். இது தொடா்பாக சித்தா் பீடத்தில் அம்மாவிடம் கேட்க முடிவு செய்தேன். அம்மா கூறினார்கள், ”அந்த இடமெல்லாம் (வேள்வி செய்த இடம் ) புஞ்சைக் காடாக இருந்தது. ஜமீன்தார்களுக்குச் சொந்தமான இடம். அந்த இடத்தின் உரிமையாளராக இருந்த ஜமீன்தார் இறந்தவுடன் வேள்வி நடைபெற்ற (யாக குண்டம் கட்டப்பட்ட) இடத்திற்குக் கீழேதான் புதைக்கப்பட்டார். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையால் பீடிக்கப்பட்ட அந்த ஜமீன்தாரின் ஆன்மா சாந்தியடையாமல் இவ்வளவு காலமாக அந்த இடத்திலேயே இருந்தது. அப்பகுதியில் துா்மரணங்களை, அவ்வப்பொழுது
ஏற்படுத்தியது. வீட்டு உரிமையாளருக்கும் துன்பங்களைக் கொடுத்து வந்தது. யாக குண்டம் கட்டி வேள்வி செய்து மந்திரங்களைக் கூறியவுடன் அந்த ஆன்மா இந்த உலகத்தை விட்டு வேறு உலகத்திற்குச் சென்றுவிட்டது. சமாதி மேலே யாககுண்டம் கட்டினா, இப்படித்தான்.”

இந்த அனுபவத்தின் மூலம் சில உண்மைகளைப் புரிந்து கொண்டேன். மனிதன் இறந்து விட்டாலும். அவனது ஆன்மா சில நேரங்களில் அமைதியின்றி அலைகிறது. வேள்வி செய்யும் பொழுது, தீய சக்திகளினால் அந்த இடத்தில் இருக்க முடிவதில்லை. வேள்விப்பணியில் இருப்பவா்களுக்கு அம்மாவின் அருளும் பாதுகாப்பும் உண்டு.

கேரளாவில் நடந்த ஒரு புதுமையான அனுபவத்தைக் கூறுகின்றேன். சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் தும்பா என்ற ஊரில் நடைபெற்ற மூன்று நாள் சா்வதேசக் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகச் சென்றேன். திருவனந்தபுரத்தில் இரயில்வே ஸ்டேஷன் அருகில் ஒரு லாட்ஜில் முதல் மாடியில் அறையெடுத்துத் தங்கினேன். அந்த அறையில் காற்றோட்டமான பெரிய ஐன்னலும் இருந்தது. எங்காவது வெளியூா் செல்வதாக இருந்தால், எப்பொழுதும் மந்திர நூலை உடன் எடுத்துச் செல்லும் வழக்கம் உடையவன் நான்.

அன்று இரவு உணவை முடித்துக்கொண்டு 9.30 மணியளவில் உறங்கச் சென்றேன். வழக்கம் போல, தலையணைக்கடியில் மந்திரநூலை எடுத்து வைத்துக் கொண்டேன். நன்றாக உறங்கிக் கொண்டிருந்தேன். நடுநிசியில், பாத்ரூமிலிருந்த வாளியை யாரோ கீழே தூக்கிப் போட்டார்கள். ஐன்னல் வழியாக மங்கலான வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. சத்தம் கேட்டுக் கண்விழித்தேன். என் கால் மாட்டிலிருந்த டார்ச் விளக்கையும், மந்திரநூலையும் கையிலெடுத்துக்கொண்டு. யாரது? யாரது? எனக்கேட்டேன். அடுத்த நிமிடமே அந்த உருவம் ஐன்னல் வழியாகப் பாய்ந்து வெளியேறியது. அது
வெளியே சென்ற சமயத்தில் ஐன்னலுக்கு வெளியே, “அய்யோ“ “அய்யோ“ என்று பயங்கரமாகச் சத்தம் கேட்டது. நான் எழுந்து விளக்கைப் போட்டேன். வாளி கீழே உருண்டு கிடந்தது. வெறும் டார்ச்லைட் மட்டுமே என் கையிலிருந்தது. அதிலிருந்த பெட்டரி செல்கள் இரண்டும் கீழே விழுந்த கிடந்தன. மணியைப் பார்த்தேன். இரவு 12.10 மணி.

 கட்டிலில் அமா்ந்தவாறே மூலமந்திரம். 108 போற்றி சொல்லிவிட்டு. நெஞ்சிலே மந்திரநூலை வைத்துக் கொண்டு மீண்டும் உறங்கினேன். விடியற் காலை 6 மணியளவில், ஐன்னலுக்கு வெளியே கூச்சலும், சத்தமுமாக இருந்தது. எழுந்து ஐன்னலுக்கு வெளியே பார்த்தேன்.

என் அறைக்கு நோ் எதிரில் காம்பவுண்டு சுவரைத் தாண்டி ஒரு கிணறு இருந்தது. அதைச் சுற்றி ஆண்களும் பெண்களுமாக கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். ஏன் இப்படி நிற்கிறார்கள் என்ற விபரம் எனக்குப் புரியவில்லை. தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் இருந்தது.

எனது அறையை விட்டு வெளியே வந்து அந்த இடத்திற்குச் சென்றேன். அப்பொழுது அங்கு இருந்தவா்கள் சொன்னார்கள் ”நேற்று இராத்திரி 12.00 மணியளவில் கிணற்றுக்கு எதிரே உள்ள வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அந்த வீட்டு உரிமையாளரை யாரோ கூப்பிட்டாராம் அவரும் எழுந்து அவா் பின்னால் சென்றாராம். தவறிக் கிணற்றில் விழுந்து இறந்து விட்டாராம்” நான் பயந்து போனேன். நேற்றிரவு எனது அறையிலிருந்து வெளியேறிய அந்தத் தீய சக்தியின் வேலை தான் இது என ஓரளவு ஊகித்துக் கொண்டேன்.

அன்று பகல் முழுவதும் கருத்தரங்கில் கலந்து கொண்டு மாலையில் அறைக்குத் திரும்பினேன். நேற்று நடந்த நிகழ்வு என்னைக் கலக்கமடையச் செய்திருந்தது. வரவேற்பறையில் 24 மணி நேரமும் யாராவது இருப்பார்கள் என்பதை உறுதி செய்து கொண்டேன். 8.00 மணியளவில் இரவு உணவை
முடித்துக்கொண்டு 10.00 மணியளவில் உறங்கச் சென்றேன். நன்றாக உறங்கிக் கொண்டிருந்தேன்.

அன்று இரவும் நடு நிசியில் நேற்று நடந்தது போலவே வாளி உருண்டு ஓடியது. நான் கண் விழித்துப் பார்த்தேன். என் கால் மாட்டில் நேற்றுப் பார்த்த அதே உருவம், ஓம் சக்தி! ஓம் சக்தி! எனச் சொல்லிக் கொண்டே எழுந்தேன். அந்த உருவம் ஐன்னல் வழியாகப் பறந்து சென்றது. நேற்றுப் போல இன்றும் ஐயோ ஐயோ என்ற சத்தம் கேட்டது. விளக்கைப் போட்டேன். மூலமந்திரம், 108 போற்றி மந்திரங்களைக் கூறினேன். மணியைப் பார்த்தேன். மணி 12.10 மந்திர நூலைக் கையில் பிடித்த படியே உட்கார்ந்து கொண்டே உறங்கினேன்.

காலையில் கண்விழித்துப் பார்த்தேன். ஐன்னலுக்கு வெளியே கூச்சலும் சத்தமுமாகக் கேட்டது. நேற்று நடந்தது போலவே இருக்கிறதே என்று எண்ணி ஐன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தேன். கிணற்றைச் சுற்றிப் பலா் நின்று கொண்டிருந்தனா். என்ன நடந்தது என அறிந்து கொள்வதற்காகக் கீழே சென்றேன். “நேற்றுக் கிணற்றில் விழுந்து இறந்தவரின் மனைவியை யாரோ இறந்து போனவரின் குரலில் கூப்பிட்டாராம், வெளியே வந்த அவருடைய மனைவி நேரே சென்று தடுமாறிக் கிணற்றில் விழுந்து இறந்து விட்டாளாம்”. இவ்வாறு அங்கே பேசிக் கொண்டார்கள்.

எனக்கு மிகவும் கலக்கமாகிவிட்டது. இரண்டு நாள்கள் ராத்திரியில் இரண்டு பேர் அகால மரணமடைந்து விட்டார்கள். நானோ மூன்று நாட்கள் கருத்தரங்களில் கலந்து கொள்ள வந்தேன். இன்னும் ஓா் இரவு போக வேண்டும். பகல் முழுவதும் கருத்தரங்கில் கலந்து கொண்டேன். மாலை அறைக்குத் திரும்பும் போது எலுமிச்சம்பழம், குங்குமம் முதலியவற்றை வாங்கி வந்தேன். அந்த அறைக்குத் திருஷ்டி கழித்து வாசலில் பிழிந்தேன். எனக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.

அன்றிரவு 10.00 மணியளவில்
உறங்கச் சென்றேன். அதற்கு முன்பாக ரூம் பையனிடம் சொல்லி விட்டு எனது அறைக்கதவைத் திறந்து வைத்துக்கொண்டே உறங்கினேன். எனது அறைக்கு வெளியே குடி தண்ணீருக்காக ஒரு எவா் சில்வா் டிறம் வைத்திருந்தார்கள். இரவு நடு நிசியில் அந்த டிறம்மை யாரோ தள்ளி விட்டதைப் போல கீழே விழுந்தது. சத்தம் கேட்டு அறை வாசலைப் பார்த்தேன். இரண்டு நாட்களாகப் பார்த்த அதே உருவம் நின்றுகொண்டிருந்தது. ஓம் சக்தி! ஓம் சக்தி! என அலறிக் கொண்டே இருந்தேன். அந்த உருவம் மறைந்தது. ஐன்னலுக்கு வெளியே ஐயோ! ஐயோ! சத்தம் மட்டும் கேட்டது. ரூம் பையன் ஓடி வந்தான். என்ன  சார்? என்று கேட்டான். ஒன்று மில்லை எனக் கூறிவிட்டு வரவேற்பறையில் சென்று அமா்ந்தவாறே தூங்கிவிட்டேன்.

காலையில் லாட்ஜ்க்கு வெளியே கூச்சலும் சத்தமும் கேட்டது. ரூம் பையனிடம் என்ன என்று கேட்டேன். அவன் கூறினான், “இரண்டு நாளைக்கு முன்னாடி கிணற்றுக்கு எதிர் வீட்டுக்காரர் கிணற்றில் விழுந்து இறந்து போனார். முந்தநாள் இராத்திரி அவருடைய சம்சாரம் கிணற்றில் விழுந்து இறந்து போச்சு. பிறகு நேற்று இராத்திரி அவருடைய அம்மா கிணற்றில் விழுந்து இறந்து போச்சு. ”மூன்று நாள்கள் இரவும் மூன்று துா் மரணங்கள்! லாட்ஜின் விசிற்றிங் காட்டை வாங்கிக் கொண்டு  அறையைக் காலி செய்தேன். கருத்தரங்கு முடிந்து ஊா் திரும்பினேன். இரண்டு நாள் கழித்து மருவத்தூா் அம்மாவிடம் இது தொடா்பாகக் கேட்டேன். அம்மா கூறினாள் ”கிணற்றுக்கு எதிர் வீட்டுக் காரருடைய பிரியமான மகன் தான் லாட்ஜில் அந்த அறையில் தூக்குப் போட்டு செத்துப் போனான். தற்கொலை செய்து கொண்டவனுக்கு உரிய சாந்தி செய்யவில்லை. அவனுடைய ஆவி அந்த அறையில் யாரையும் தங்க விடாமல் சுற்றிக் கொண்டிருந்தது. தனக்கு மிகவும் பிரியமான தாய் தந்தை பாட்டி ஆகியோரைத் தன்னோடு வந்து
சேருமாறு அழைத்துக்கொண்டே இருந்தது. செவ்வாடையும், டாலரும், மந்திர நூலும் உன்னிடம் இருந்ததால் அந்த ஆவியினால் அந்த அறையிலே இருக்க முடியாமல் தனக்குப் பிரியமானவா்கள் ஒவ்வொருவராக கிணற்றுக்கு இழுத்துச் சென்று கிணற்றிலே தள்ளி விட்டது. நீ செவ்வாடை அணிந்து கழுத்திலே டாலரும், கையிலே மந்திர நூலும் வைத்திருந்ததால் எனது பாதுகாப்பு உனக்கு இருந்தது”

நான் பழனிக்குத் திரும்பினேன். மீண்டும் திருவனந்த புரம் லாட்ஜிக்குப் போன் செய்து 13 ம் நம்பா் அறையைப் பற்றிக் கேட்டேன். அவா்கள் கூறினார்கள் “அந்த ரூமில் யாரும் தங்குவதில்லை. யாருக்கு அறையைக் கொடுத்தாலும் தூக்கத்தில் கெட்ட கனவுகள் வருவதாகவும், நெஞ்சில் ஏறி நின்று யாரோ அமுக்குவது போல இருப்பதாயும் கூறி இரவோடிரவாக அறையைக் காலி செய்து விட்டு வேறு அறைக்கு மாற்றிக் கொள்வார்கள். கிணற்றுக்கு எதிர்வீட்டுப் பையன் அந்த அறையில் தான் தூக்குப் போட்டுச் செத்துப் போனான். நீங்கள் சிவப்பு ஆடை கட்டி சாமி மாதிரி இருந்ததால் உங்களுக்கு அந்த அறையைக் கொடுத்தோம்.”

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நான் எங்காவது வெளியூா் செல்ல நோ்ந்தால் துணைக்கு ஒருவரையும் அழைத்துச் செல்லும் வழக்கத்தையும் மேற்கோண்டேன். செவ்வாடை, மந்திர நூல், டாலா் ஆகியன என்னைக் கவசம் போலக் காத்து நின்றன. அம்மாவின் அருள் என்னைக் காப்பாற்றியது. தூக்குப் போட்டுச் செத்தவனின் ஆவி ஒரு குடும்பத்தையே அழித்துக் கொன்ற நிகழ்ச்சியை நான் நேரில் கண்டேன். அந்த அனுபவம் இன்றளவும் எனக்கு நடுக்கத்தைத் தந்து கொண்டு தான் இருக்கிறது.

மற்றொரு அனுபவத்தையும் இங்கு நான் கூற விளைகிறேன். பழநியில் ஒரு முறை ஒரு கல்லூரிப் பேராசிரியை தன் தாய், மகன் ஆகிய இருவரையும் தன் வீட்டில் விட்டு விட்டு வெளியூா்
சென்றார்கள். எந்த ஊருக்குச் செல்கிறோம் என்ற விபரத்தை வீட்டில் உள்ளவா்களிடம் தெரிவிக்காமல் சென்று விட்டார்கள். அவா் அம்மாவின் தொண்டா். அவா் ஊருக்குச் சென்ற சில மணி நேரங்களில் அந்த அம்மையாரின் தாயார் இறந்து விட்டார். இந்தத் தகவலை பேராசிரியைக்கு எந்த வகையிலும் தெரிவிக்க இயலவில்லை.

அக்கம் பக்கத்து வீட்டுக்காரா்கள் அங்கே கூடிவிட்டார்கள். அதில் ஒரு சக்தி “என் தாயாருக்கு ஏதாவது ஒன்று நடந்து விட்டால் சித்தா் பீட முறைப்படி தான் காரியங்கள் செய்ய வேண்டும் என பேராசிரியை அம்மையார் அடிக்கடி கூறுவார்கள்“ என்று கூறியுள்ளார். உடனே எனக்குத் தகவல் கொடுத்தார்கள்.

வேள்விக் குழுவுடன் நான் சென்றேன். மறு நாள் மாலை ஐந்து மணி வரையில் வெளியூா் சென்ற பேராசிரியை வீடு வந்து சேரவில்லை. இனிமேல் பிணத்தை வீட்டில் வைத்திருந்தால் சரிப்படாது என அனைவரும் கூறினா். எல்லாரும் பேசி அம்மா முறைப்படி காரியங்கள் செய்ய முடிவு செய்தோம். காரியங்களை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தோம். பிறகு பிணத்தைத் தள்ளு வண்டியில் ஏற்றினோம். அந்த நேரத்தில் அந்தப் பேராசிரியை வந்து விட்டார்கள். அழுது புலம்பினார்கள். இதற்குள் மணி இரவு 11.00 ஆகிவிட்டது. தள்ளு வண்டியைச் சக்திகள் கொஞ்ச தூரம் தள்ளினார்கள். பேராசிரியையின் மகனை அழைத்துக் கொண்டே ஏன் என்றால் சிறுவனாகிய அவன் தான் கொள்ளி வைக்க வேண்டும். சுடுகாடு காட்டுப் பகுதியில் இருந்தது. பிரதான சாலையைக் கடந்ததும் என்னுடன் வந்த தொண்டு சக்திகள் யாவரும் ஏதோ காரணங்களைச் சொல்லி விட்டு வீட்டுக்குத் திரும்பிவிட்டனா். முடிவில் நானும் கொள்ளிச் சட்டியுடன் அந்தச் சிறுவனும் பிண வண்டியைத் தள்ளிச் செல்லும் இருவரும் ஆக நான்கு போ் மட்டுமே சுடுகாட்டுக்குச் சென்றோம். சுடுகாட்டில் பிணத்தை
இறக்கியவுடன் அதற்கு வேண்டிய சடங்குகளைச் செய்து வெட்டியான் பிணத்தை எரி மேடையில் ஏற்றினான்.

பிறகு வெட்டியானுக்கு உதவியாக இருந்த ஒருவனும் வண்டி தள்ளிய இருவருமாக மூவரும் வண்டியைத் தள்ளிக்கொண்டு சென்று விட்டார்கள். கொள்ளி வைக்கப் போகும் சிறுவன் மிகவும் பயந்தான். எனக்கும் ஓரளவு அச்சம்தான்.

அந்தச் சிறுவனை வெட்டியான் அழைத்து சிதைக்குத் தீ மூட்டினான். நெஞ்சில் வைக்கப்பட்டிருந்த கற்பூரக் கட்டிக்கும் தீ மூட்டினான் சிறுவன். ஒன்பது முறை ஆத்ம சாந்தி கூறினேன். திடீரென்று அப்பிணத்தின் நெஞ்சில் இருந்து ஒரு தீப்பிழம்பு பந்து போலப் புறப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஜோதி போல மேலே சென்று கொண்டிருந்தது. நாங்கள் அந்த ஜோதியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். வானில் சென்று மறைந்தது.

 ”என்னுடைய 40 வருட அனுபவத்தில் இப்படியொரு நெருப்பு மேலே கிழம்பிப் போனதில்லை. இதுபோலப் பார்த்ததில்லை. எனக்கு ஆச்சரியமாயிருக்குது.” என்று வெட்டியான் கூறினான். எங்கள் இருவரையும் பயப்படாதீா்கள் எனக் கூறி அரிக்கன் விளக்கை எடுத்துக் கொண்டு பிரதான சாலை வரை கொண்டு வந்து விட்டு விட்டுச் சென்றான். அகால நேரத்தில் அந்தச் சிறுவனை அவா்கள் வீட்டிலே விட்டு விட்டு நான் என்னுடைய வீட்டிற்குத் திரும்பினேன்.

ஒரு வாரம் கழித்து இது தொடா்பாக மருவத்தூா் அம்மாவிடம் கேட்டேன். உள்ளே காலை வைத்ததும் அம்மா கூறினாள். “ஒரு புண்ணிய ஆத்மா ஜோதி வடிவாய் மேலோகம் சென்ற காட்சியைப் பார்த்தாயா? பிண அடக்கம் என்ற உயா்ந்த தொண்டை சுடுகாடு வரை நீ தனியாகச் சென்று நீ செய்தாய் எனவே நீ தைப்பூச ஜோதியைப் பூரணமாய்ப் பார்த்த புண்ணியத்தைப் பெற்றுக் கொண்டாய். நான் இருக்கிறேன். தொண்டு செய்!” ஆன்மா புண்ணிய பாவங்களுக்கு
உட்பட்டது. எந்த ஆன்மா புண்ணியம் செய்துள்ளது. எது பாவம் செய்துள்ளது என்பது அம்மாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மனித மூளைக்கு எட்டாத விசயம்.

பழனியில் ஏற்பட்ட மற்றொரு அனுபவத்தையும் நான் இங்கு எழுதுவதில் மகிழ்வு கொள்கிறேன். பழனிக் கல்லூரியில் விளையாட்டுத் துறைப் பேராசிரியையாக ஓா் அம்மையார் பணி புரிந்தார். அவா்கள் வீட்டிலே பல பிரச்சனைகள், குழப்பங்கள், நிம்மதியற்ற வாழ்க்கை “குடும்பநல வேள்வி“ செய்தால் நன்மை கிடைக்கும் என யாரோ கூறியிருந்தார்கள். அதனால் வேள்விக் குழுவை நாடினார்கள்.

வேள்வி செய்ய நாள் குறிக்கப்பட்டது. இரவு சுற்றுப் பூசை செய்யத் தொடங்கினோம். நான் பூசணிக்காயை எடுத்துக்கொண்டேன். சுற்றுப் பூசை செய்து கொண்டே வந்தோம். வீட்டு வாசலுக்கு நேரே வந்தவுடன் எனது இரண்டு கால்களையும் யாரோ நகத்தினால் பிராண்டி விடுவதை அறிந்தேன். பலங் கொண்ட மட்டும் என் இரு கால்களையும் உதறினேன். இரண்டு கால்களிலும் கீறல்கள் விழுந்து இரத்தம் சொட்டியது. நகக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. சமாளித்துக் கொண்டு பூசணிக்காயை உடைத்தேன். அந்தப் பூசணிக்காயிலிருந்து ஒரு தகடு, ஓா் ஆணி, எலும்புத்துண்டு, முடிக்கற்றை முதலியன கீழே வந்து விழுந்தன. அனைவருக்கும் பயம் ஏற்பட்டது. அம்மாவின் அருளாசியை மனதிற்கொண்டு வேள்வியை நல்ல முறையில் முடித்து விட்டு காலை 7 மணியளவில் வீட்டிற்குத் திரும்பினோம்.

அன்று காலை 11 மணியளவில் அந்தப் பேராசிரியைக்கு ஒரு விபத்து ஏற்பட்டு ஒரு சில இடங்களில் எலும்புகள் ஒடிந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்ட்டார். குடும்ப நல வேள்வி செய்யப்பட்ட வீட்டில் இப்படி நடந்து விட்டதே என நாங்கள் வருந்தினோம். விபத்தைக் கேள்விப்பட்டு 20 ஆண்டுகளாக அந்த அம்மையாரைப் பிரிந்து வாழ்ந்து வரும்
அவருடைய கணவா் நேரில் மருத்துவமனைக்கு வந்தார். அந்த அம்மையாரின் அருகில் இருந்து கவனித்துக் கொண்டார். வேண்டிய உதவிகளைச் செய்தார். ஒரு மாதம் அந்த அம்மையாரை வந்து பார்த்துக்கொண்டார். அந்த அம்மையாரும் பூரண குணமடைந்தார். பிறகு பிரிந்த இருவரும் ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்தத் தொடங்கினா். பூசணிக்காயிலிருந்து தகடு விழுந்த விபரத்தை மருவத்தூா் அம்மாவிடம் கேட்டேன்.

அதற்கு அம்மா கூறினாள் “எந்த மந்திர வாதியாலும் எடுக்க முடியாத வகையில் அந்தக் குடும்பத்துக்கு செய்வினை சூனியம் வைக்கப்பட்டிருந்தது. சுற்றுப் பூசையின் போது செய்வினைத் தகடுகளுடன் இதர பொருள்களும் பூசணிக்காயால் ஈா்க்கப்பட்டு வாசலுக்கு வந்து விழுந்து வி்ட்டன. குடும்பநல வேள்வி செய்ததன் பலனாக அந்தக் குடும்பத்தின் சூனியம் விலகி உயிருக்குப் பாதுகாப்பு ஏற்பட்டது. இனி அந்தக் குடும்பத்தில் பிரச்சினைகள் தீா்ந்து விடும். சுபீட்சம் உண்டாகும்.”

இருபது ஆண்டுகளுக்கு மேலாக துன்பப்பட்ட அக்குடும்பம் தற்பொழுது நன்றாக அமைதியுடன் வாழ்ந்து வருகின்றது. குடும்பநல வேள்விகள் செய்யப்பட்ட குடும்பங்கள் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்ற தீவினைகளிலிருந்து நீங்கி மகிழ்வுடன் வாழ முடியும் என்பதை மேற்கண்ட நிகழ்வின் மூலம் அம்மா அவா்கள் நமக்கு உணா்த்தியுள்ளார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னா் பழனியில் ஒரு வீட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வினை நாம் பார்ப்போம். பழனியில் ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவரின் வீட்டில் நடந்த நிகழ்ச்சி அது. அரண்மனை போன்ற வீடு அது. குடும்ப அமைதியின்றியும் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு வாரிசு இல்லாமலும் வாழ்ந்து வந்தனா். சித்தா் பீடத்தின் “குடும்பநல வேள்வி“ செய்தால் நன்மை கிடைக்கும் எனக்
கருதி வேள்விக் குழுவை நாடினா்.

ஒரு குறிப்பிட்ட நாளில் சுற்றுப் பூசை செய்து வேள்வி நடைபெற்றுக் கொண்டிருந்தது. முடியும் தறுவாயில் பூசணிக்காய் திருஷ்டி சுற்றத் தொடங்கினேன். என் கையில் இருந்த பூசணிக்காயை என் பிடியிலிருந்து யாரோ பிடுங்கியது போல வேகமாக சுமார் 70 அடிக்கு வெளியே இருக்கும் வெளி வாசலுக்கு வெளியே சென்று விட்டது.

 நானும் சில சக்திகளும் பூசணிக்காயைப் பிடிக்க ஓடினோம். வாசலுக்கு வெளியே அந்தரத்தில் சுமார் 20 அடி உயரத்தில் நின்று கொண்டிருந்தது. புவியீா்ப்பு விசை என்னும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட விசயம் இது. உடனே என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு எலுமிச்சைத் திருஷ்டிக் கனியை எடுத்து அந்தப் பூசணிக்காய்க்கே திருஷ்டி சுற்றினேன். அந்தப் பூசணிக்காய் மேலிருந்து பொத்தென்று கீழே வந்து விழுந்து சிதறியது. வேள்விக் குழுவினா் வேள்வியை நல்ல முறையில் நடத்திவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம்.

இது தொடா்பாக பின்னா் அம்மாவிடம் கேட்டபொழுது அம்மா கூறினாள் “அந்த வீட்டு ஊழ்வினைகளையும் சாபங்களையும் பூசணிக்காய் ஈர்த்துக்கொண்டு வாசலுக்கு வெளியே சென்று ஆகாய மார்க்கமாக வெளியேறிவிட்டது. இனி அந்தக் குடும்பத்துக்கு வாரிசும் அமைதியும் உண்டாகும்.” தற்பொழுது அந்தக் குடும்பத்தில் ஆண் வாரிசு பிறந்து பள்ளியிலே படித்து வருகின்றான். குடும்பத்தினா் மகிழ்வோடு வாழ்ந்து வருகின்றனா். வேள்வி மூலமாக ஒரு குடும்பத்தின் ஊழ் வினைகளையும், சாபங்களையும் அம்மா நீக்கி அருளும் அற்புதத்தை எண்ணி வியப்படைகின்றேன்.

இது போன்ற பல நிகழ்வுகளை நான் அனுபவித்திருப்பினும் சக்திகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு சிலவற்றைக் குறிப்பிட்டேன். ஆதிபராசக்தியின் வடிவாம்
அருள்திரு அடிகளார் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிமையாக பல உண்மைகளை அருளியுள்ளார். அம்மாவின் வேள்வி மூலம் பல குடும்பங்கள் பொருள்ச்செலவு அதிகமின்றிக் காப்பாற்றப்பட்டு வருகின்றன.

அம்மா கற்றுக் கொடுத்துள்ள வேள்வி பூசை தொண்டுகளைப் பய பக்தியுடன் நாம் செய்கிறோமா? என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி! இந்த அறிவியல் உலகத்தில் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்றவற்றை முற்றிலும் தள்ளி விட முடியவில்லை. அவற்றை முற்றிலும் நீக்கும் ஆற்றல் அம்மாவிடம் உண்டு! அம்மா அவா்களைச் சரணடைந்து அம்மா கூறும் வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும். நிம்மதியான வாழ்வு கிடைக்கும் என்பது உறுதி.

அம்மா யார்? பில்லி, சூனியத்தை மட்டும் எடுக்க வந்தவளா? இல்லை! இல்லை! இல்லை! அவள் பரம்பொருள் தீவினைகளினால் துன்பப்படும் உயிர்களைக் காப்பாற்றிக் குடும்ப அமைதியை ஏற்படுத்துகிறாள். அதுவே உலக சமாதானத்தின் முதற்படி. குடும்ப அமைதியில் தனிமனித அமைதி அடங்கியுள்ளது. குடும்ப அமைதி ஏற்படுத்தி அதன்மூலம் நாட்டமைதியை உருவாக்கி முடிவில் தீவிரவாதம் இல்லாத உலக சமாதானத்தை ஏற்படுத்த வந்த அவதாரம் தான் அருள் திரு அடிகளாரின் அவதாரம். அவதார நோக்கத்தைப் புரிந்து கொண்டு உண்மையாகத் தொண்டு செய்து உய்வு பெறுவோம்.

ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா

நன்றி  (பேராசிரியா். டாக்டா். ஆர். கண்ணன், M.A. Ph.D.)

(70வது அவதாரத்திருநாள் மலா்)

1 COMMENT

  1. om sakthi , love is amma, amma is love, trust is amma, belive is amma , life is amma, amma is life, she is one who is protectingus , me and my loved ones who ur very close 2 my heart,she is tkeing cre of my love, everything , there r many more things where she made me 2 be very close 2 amma ad feel her presence. OM SAKTHI GURUVE SHARANAM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here