பங்காரு அன்னையாய் இந்தப் பாரினில் அவதரித்து மேல்மருவத்தூரில் ஆன்மிக குரு அருளாட்சி செய்து கொண்டு, ஆன்மிக நண்பர்களின் உள்ளங்களில் சிம்மாசனமிட்டு இவ்வுலகையும், உலக மனிதர்களையும் பக்தி நெறி என்னும் பாதையில் நடக்க வைத்து, ஒன்று கூட்டி, செவ்வாடை கட்ட வைத்து, சக்தி என்ற ஒரு சொல்லுக்குள் அடக்கி , ஒரே தாய்; ஒரே குலம் என்ற மந்திரத்தை முழங்கிக்கொண்டு நம்முடனே நம்மைபோல் ஒருவராய் அவதாரமெடுத்து அவராக வாழும் பரம்பொருளான அவளை யார் என்று புரிந்துகொண்ட பக்குவமடைந்த ஆத்மாக்கள் மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.
அம்மாவும் சொல்கின்றார்கள் “ஒரு காலத்தில் என்னை பங்காரு என்றார்கள். பின் பள்ளிக்கூட வாத்தியார் என்றார்கள். பாலகன் என்றார்கள். சித்தர் என்றார்கள்; சித்தர்களின் தலைவி என்றார்கள். வழிகாட்டும் குரு என்றார்கள். பராசக்தி என்றார்கள்; பராசக்தியின் அவதாரம் என்றார்கள். ஒரு சிலர் நான் தான் பராசக்தியின் ஸ்தூல வடிவம் என்கின்றார்கள். ஆனால் நான் ஒன்றாகத் தான் ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றேன். உன் எண்ணமும், கண்களும் என்ன பக்குவத்தோடு என்னை எப்படி நினைத்துப் பார்கின்றதோ, நான் உனக்கு அப்படிதான் என்ற சூக்குமத்தையும் நமக்குத் தெரிவிக்கின்றாள்.
]]>