அருள்வாக்கில் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் சொன்னது:
“மகனே! உன் கடைசி காலத்தில் அடிகளாரின் பின்னால் சுற்றிக்கொண்டே இரு! உனக்கு முக்தியைத் தருகிறேன்! என்று அம்மா அருள்வாக்கில் கூறினார்கள். எனக்கு ஒருபுறம் சந்தோஷம்! ஒருபுறம் வருத்தம்.
கடைசிக் காலத்தில் அடிகளாருடன் இருக்கப் போகிறோம். அதற்கு வாய்ப்புக் கிடைக்கப் போகிறது என்பது குறித்து சந்தோஷம் ஏற்பட்டது. அம்மா முக்தியைத் தருவதாகச் சொல்லக் கேட்டு வருத்தம் தான் ஏற்பட்டது. ஏன் தெரியுமா?
ஓங்காரத்தின் உட்பொருளாகி, அந்த ஓங்காரத்தில் இருக்கும் ஆதிபராசக்தி; அண்ட சராசரங்களையும், மும்மூர்த்திகளையும், பல்வேறு தேவர்களையும், உயிர்களையும் பஞ்ச பூதங்களையும் இரவு, பகலையும், நன்மை தீமைகளையும் படைத்த அந்த ஆதிபராசக்தி இன்று இங்கு அடிகளார் என்ற வடிவில் தோன்றி வந்திருக்கிறாள்.
எனவே, அடிகளாருக்கும், செவ்வாடைத் தொண்டர்களுக்கும் பல நூறு ஜென்மங்கள் எடுத்துத் தொண்டு செய்யும் பேராவல் எனக்கு எப்பொழுதும் உண்டு. எனவே, அம்மாவிடம், ‘அம்மா’எனக்கு முக்தி வேண்டாம். பல நூறு ஜென்மங்கள் எடுத்து அடிகளாருக்குத் தொண்டு செய்ய வேண்டும்! என்று வேண்டினேன்.
என் விருப்பத்தைக் கேட்ட அம்மா, என்னைப் பரிவுடன் கண்திறந்து பார்த்து, “சரிடா மகனே! உன் விருப்பப்படி ஆகட்டும்!” என்றாள். இந்த அருள் வார்த்தைகள் சொல்லிய பிறகுதான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது.
இதைப் படிக்கிற அம்மா பக்தர்கள் நினைக்கலாம்; இவன் எவ்வளவு தொண்டு செய்திருந்தால் அம்மா இவனுக்கு முக்தியைத் தருவதாகச் சொல்லியிருப்பாள்! அந்த முக்தியை அடையத்தானே பக்தர்களும், துறவிகளும், ஞானிகளும் சிரமப்படுகிறார்கள்? அப்படியிருக்க, “எனக்கு முக்தி வேண்டாம்” என்று சொல்கிறானே… இப்படியும் ஒரு பைத்தியக்காரன் இருப்பானா? என்றே நினைக்கத் தோன்றும்.
இதுவரை நான் அம்மாவுக்கு எந்தத் தொண்டும் செய்யவில்லை. “ஓம் சக்தியே! ஓம் பங்காரு அடிகளே சரணம்! எப்போதும் அடிகளாரை நினைத்துக் கொண்டே இருப்பதையும் தவிர நான் எந்தத் தொண்டும் செய்யவில்லை. இது உண்மை!! அப்படிப்பட்ட எனக்கு முக்தியைத் தருவதாக அம்மா சொன்னது சரியென்று படவில்லை.
என் வாழ்க்கையில் பல நூறு வகையான துன்பங்கள் வந்தன. அவற்றிலிருந்து அடிகளார் என்னையும் என் குடும்பத்தையும் எப்படி எப்படியோ காப்பாற்றி வந்திருக்கிறார்கள். எனவேதான் நான் பல நூறு ஜென்மங்கள் எடுத்து அடிகளாருக்குத் தொண்டு செய்ய ஆசைப்படுகிறேன்.
அதுமட்டுமல்ல! வேறு எந்த பக்தருக்கும், தொண்டருக்கும் கிட்டாத அளவு அடிகளார் கருணை எனக்குக் கிட்டியது ஒரு காரணம்.
அன்றொரு நாள்… எனக்கு 25ம் ஆண்டு பிறந்தநாள். அடிகளாரைப் பார்த்தால் போதும் என்றெண்ணிக் கொண்டு மருவத்தூர் வந்தேன். அன்று தைப்பூசத் திருநாள். லட்சக்கணக்கான பக்தர்கள் – நூற்றுக்கணக்கான மன்றப் பொறுப்பாளார்கள் குரு தரிசனத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். நானோ ஓர் ஓரமாக அமர்ந்துகொண்டிருந்தேன். அடிகளார் அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு வந்தார்கள்.
அடிகளாரைப் பார்த்தபடியே, ‘அம்மா’ எப்படியோ கால் நூற்றாண்டு இதே மண்ணில் வாழ்ந்து விட்டேன். இனி வாழப்போகும் காலமெல்லாம் உன் திருவடிகளை நினைத்தபடியே வாழவேண்டும். கருணை புரிவாயா தாயே? என்று பிரார்த்தனை செய்துவிட்டு அடிகளார் அருட்கூடத்தின் உட்புறம் சென்ற பிறகு, ஊருக்குப் புறப்பட வேண்டி அங்கிருந்து கிளம்பினேன்.
அந்தச் சமயம், சித்தர்பீடப் பொறுப்பாளர் ஒருவர், மிகவும் வேகமாக வந்து, “உங்களை அம்மா கூப்பிடுகிறார்கள் வாருங்கள்” என்றார்.
அங்கே அடிகளாரைத் தரிசிக்க நூற்றுக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். நாம் போய்ச் சந்தித்தால் காலதாமதமாகுமே! எனவே, இப்படிப்பட்ட சமயத்தில் அடிகளார் நேரத்தை நாம் பங்கு போட்டுக் கொள்வது தவறு ஆகுமே என்று பயம் ஏற்பட்டது. என்னைக் கூப்பிட்டதே போதும் என்றும் எண்ணி சந்தோஷப்பட்டேன்.
அருகில் இருந்த பக்தர்களோ….! அம்மாவே அழைக்கிறார்கள். போங்க சார்! என்று தைரியம் ஊட்டினார்கள்.
“உங்களுக்காகவே அம்மா காத்திருக்கிறார்கள்; எந்தப் பணியும் செய்யாமல் இருக்கிறார்கள். சீக்கிரம் வாருங்கள்” என்றார் சித்தர்பீடப் பொறுப்பாளர்.
கை, கால் நடுங்க அருட்கூடத்தின் உள்ளே சென்று குருவின் திருவடிகளை வணங்கி எழுந்தேன். என்னைக் கனிவோடும், கருணையோடும் பார்த்த அடிகளார், “ஆசி உண்டு! என்னைப் பார்க்க நிறைந்த ஆசையுடன் வந்திருக்கிறாய். அதனால்தான் உன் ஆசையை நிறைவேற்றியனுப்ப நானே கூப்பிட்டனுப்பினேன்” என்றார் அடிகளார்.
இப்பொழுது சொல்லுங்கள். அடிகளாரின் இந்தக் கருணைக்கு ஈடாகுமா முக்தி?
ஒருமுறை என் உறவுக்காரர்கள் என்மீது இல்லாத பழியைச் சுமத்தி வீட்டை விட்டு வெளியே போ! என்று துரத்திவிட்டார்கள். திக்கற்றவனுக்குத் தெய்வந்தான் துணை என்பது பழமொழி. எனக்குத் தெய்வம் யாது? ஆதிபராசக்தியின் மறு உருவமான அடிகளார் தான்.
கடன் வாங்கிக் கொண்டு மருவத்தூர் வந்தேன். இரவு ஏழு மணி ஆகிவிட்டது. அப்போது அடிகளார், வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள். கையிலிருந்த பணம் இன்னும் ஒரு வேளைச் சாப்பாட்டிற்கும், திரும்பி ஊருக்குச் செல்லவுமே சரியாக இருந்தது.
நான் வந்த பஸ் ரிப்பேராகி விட்டதால் மருவத்தூர் வந்து சேர இரவு 7.00 மணியாகிவிட்டது. வேறு பஸ் பிடித்து வரவேண்டும் என்றாலோ அவ்வளவு பணம் கையில் இல்லை. என்ன செய்ய?
கருவறை முன்னால் நின்று என் நிலைமையை அம்மாவிடம் சொல்லிவிட்டுத் தியானம் செய்யும் இடத்தில் அமர்ந்து கொண்டு, அம்மா! இனி என் வாழ்க்கையில் அடிகளாரைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்குமா? கடைசியாக ஒருமுறை பார்ப்போம் என்று கடன் வாங்கிக் கொண்டு வந்தேன்.
இதிலும் தாமதம்! இரவு தங்கவும் பண வசதியில்லை. என் குடும்பச் சூழ்நிலை எப்படியிருந்தாலும் பரவாயில்லை. அடிகளாரைப் பார்க்க முடியாமல் திரும்பிச் செல்வதுதான் எனக்கு வேதனையாக உள்ளதெனக் கலங்கியபடி குருவடிகளை நினைத்தபடியே அமர்ந்திருந்தேன்.
அன்றைக்கு மருவத்தூரில் மழையென்றால் மழை! அப்படியொரு மழை! பெருமழை. நேரம் இரவு 8.00 மணி ஆயிற்று.
அடிகளார் தங்கும் அறைக்கு வெளியே நின்றபடி குருவடிகளை வணங்கி பேசுவதுபோல, அந்த அறையை வணங்கியபடி, ‘அம்மா’ எனது நிலை என்ன? உனக்குத் தெரியும்.
அம்மா! அந்தக் கயவனை நம்பி நகையோடு ஓடிப்போக இருந்த என் உறவுக்காரப் பெண்ணைத் தடுத்து, புத்தி சொல்லி அவன் ஏற்கனவே பல பெண்களை ஏமாற்றியவன் என்பது எடுத்துச் சொல்லி உன்னிடம் அழைத்து வந்து பேசச் செய்தேன். நீயும் அவளுக்கு நல்ல இடத்தில் நல்ல மாப்பிள்ளையை அமைத்துக் கொடுத்தாய். அதையெல்லாம் மறந்த அவள், எனக்குத் தரவேண்டிய பணத்தைத் தராமலும், சொத்தில் பங்கு தராமலும் எதுவும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலையை எனக்கு உருவாக்கி விட்டாள்.
அந்தப் பெண்ணை நினைத்து நான் வருத்தப்படவில்லை. என் பணம் திரும்ப வராவிட்டாலும், சொத்தில் பங்கு கிடைக்காமற்போனாலும் பரவாயில்லை.
அம்மா, நானும் என் மனைவியும் குழந்தைகளும் உயிர் வாழ ஆசைப்படுகிறோம். ஏன் தெரியுமா? அடிகளார் இருக்கும்போது எவனும் அனாதையல்ல! என்று நீதான் சொன்னாய். நீயே அடிகளாராகவும் பிறாந்து இருக்கிறபோது, உன் காலத்தில் நாங்கள் வாழவே ஆசைப்படுகிறோம் என்று சொல்லிவிட்டு சக்திபீடத்தை விட்டு வெளியே வந்தேன்.
அப்போது இரவு 8.30 மணி. அந்த நேரத்தில் என்ன அதிசயம்! அம்மாவின் கருணையை ஆயிரம் நாக்குக் கொண்ட அந்த ஆதிசேஷனால்கூடச் சொல்ல முடியாது. ஆம்! அந்த நேரத்தில் அடிகளார் காரில் வந்து ஓம் சக்தி மேடையருகே இறங்கினார்கள். ஓம் சக்தி மேடையைக் கூட வலம் வராமல் என்னைக் கருணையுடன் பார்த்தார்கள்.
அதன்பிறகே ஓம் சக்தி மேடையருகில் சென்றார்கள். உடனே நான் ஓடிச் சென்று தியானம் செய்யும் இடத்தில் எதிரில் நின்று குருவடிகளின் கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதபடி இருந்தேன். வந்த அடிகளார் ஆலயத்தை ஒரு சுற்றுச் சுற்றி வந்து அருட்கூடத்திற்குள் நுழைந்துவிட்டார்கள்.
அந்தச் சமயம் பார்த்து, என் சட்டைப் பையில் ஏதோ உறுத்துவது போல இருந்தது. என்னவென்று பார்த்தபோது… என் சட்டைப் பையில் வைத்திருந்த பணத்தைவிட இப்போது ரூபாய் 100/= கூடுதலாக இருந்தது. எப்படி வந்தது? அம்மாதான் தந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் குருவடிகளை எண்ணிக் கலங்கி நின்றேன். உடனே ஓடிச் சென்று விளக்கு ஒன்று வாங்கிக் கொண்டு வந்து நின்றேன்.
அடிகளார் அருட்கூடத்திலிருந்து வெளி வந்தார்கள். ஆலயத்தை இரண்டாவது தடவை வலம் வந்தார்கள். மூன்றாவது தடவை வலம் வரும்போது, என்னருகில் வந்து, “எதைப் பற்றியும் கவலைப்படாதே!” என்று சொல்லி அந்த விளக்கைக் கையால் தொட்டு ஆசி வழங்கி, “இப்போது சந்தோஷந்தானே…? என்று ஆசி வழங்கினார்கள்.
இதை எண்ணும்போதும், எழுதும்போதும் எனக்கு அழுகையே வருகிறது. அதன்பின் ஊர் திரும்பினேன். எந்தப் பிரச்சனையும் இல்லை. இப்பொழுது சொல்லுங்கள்; அந்தக் கருணையைவிடவா முக்தி பெரிது?
ஒரு முறை என் மனைவியையும் குழந்தைகளையும் மருவத்தூருக்கு அனுப்பி வைத்தேன். என்னால் அவர்களோடு சேர்ந்து போக முடியாத சூழ்நிலை. குரு காணிக்கையாக புதுமையாக இருக்கட்டுமே என்று அடிகளார் வீட்டுச் சமையலறையில், உபயோகப்படுமே என்றெண்ணி, சுத்து, ஸ்டேன்ட் முதலிய சாமான்களைக் கொடுத்து அனுப்பினேன்.
“ஏங்க! அம்மாவுக்கு இதையெல்லாமா கொடுப்பது? வேண்டாம்” என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது?” என்று அடம்பிடித்தாள். நான் தான் பிடிவாதமாகச் சண்டை போட்டுக் கொடுத்து அனுப்பினேன்.
என் மனைவி, குருவடிகளை வணங்கும்போது பயந்து தயங்கித் தயங்கி அந்தச் சமையலறைச் சாமான்களைத் திருவடிகளில் எடுத்து வைத்திருக்கிறாள். அப்போது அடிகளார் சொன்னார்களாம்.
“என்ன இதைத் தரலாமா வேண்டாமா என்று உன் புருஷனும், நீயும் சண்டை போட்டுக் கொண்டீர்களா….? சரி! சரி! உன் புருஷனிடம் சொல்லு! இது நல்லாத்தான் இருக்கு! ஏத்துக்கிட்டேன்னு போய்ச் சொல்லு! எனச் சொல்லி ஆசி புரிந்தார்.
வெகு தொலைவில் எங்களுக்குள் நடந்த அன்புச் சண்ணையை கூட மறவாமல் கவனித்தபடி இருக்கும் அந்தக் கருணைக்கு ஈடு இணையேது? இப்பொழுது சொல்லுங்கள் அந்தக் கருணையைவிட முக்தியா பெரிது?
என் ஜாதகத்தை ஒரு சோதிடரிடம் காட்டினால், இந்த ஜாதகர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா? என்று கேட்பார். காரணம் என் வாழ்க்கை சுமார் 20 வருடங்களுக்கு முன்பே முடிந்திருக்க வேண்டியது. என்னென்ன பிரச்சனைகள்! என்னென்ன ஆபத்துக்கள்! அப்பப்பா.. எப்படி மீண்டு வர முடிந்தது? அம்மாவின் அந்தத் திருவடிகள்தான் என்னை இன்றளவும் காப்பாற்றி வருகின்றன.
இத்தனைக்கும் நான் செவ்வாடையணிந்து வழிபாட்டில் கலந்து கொள்பவனும் அல்ல! தினசரி அம்மா மந்திரங்களைப் படிப்பவனும் அல்ல!
தினமும் அம்மா படத்தின் முன்பு நின்றபடி, “அம்மா” உன்னைவிட்டால் எனக்கு வேறு யாரும் துணையில்லை. என்னைக் காப்பாற்று! என்று சொல்லி விட்டு மனதில் அடிக்கடி நினைப்பதுடன் சரி. எனக்கே இந்தக் கருணை என்றால் செவ்வாடைத் தொண்டர்களுக்கு அம்மா பொழியும் கருணை எப்படிப்பட்டது?
நான் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு வினாஅடியும்…
நான் சாப்பிடும் ஒவ்வொரு துளி உணவும்…
நான் செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும்..
நான் உடுத்தும் துணியில் இருக்கும் ஒவ்வொரு நூலும்..
எனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு உயர்வும்…
அடிகளார் இட்ட பிச்சை! அதை நினைக்கிறபோது வருகிற ஆனந்தக் கண்ணீர்! ஒரு இன்ப சுகம்! அந்தக் கருணை!
இப்பொழுது சொல்லுங்கள். இந்தக் கருணையை விடவா முக்தி பெரிது?
நன்றி!
ஓம் சக்தி!
பக்கம் :(17 – 25).
அவதார புருஷர் அடிகளார், பாகம் 17.