என் பெயர் ரேணுகாதேவி. பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் கோடான கோடி பக்தர்களில் நானும் ஒருத்தி. எனக்குத் திருமணம் என்று மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியபோது பல்வேறு தடைகளும், தாமதங்களும் வந்துகொண்டே இருந்தன.

நாங்கள் பல்வேறு கோயில்களுக்குச் சென்று தோஷப் பரிகாரங்களைச் செய்து கொண்டிருந்தோம். தொலை தூர மாநிலங்களிலும் சென்று வேண்டி வந்திருந்தோம். எந்த வரணும் அமையவில்லை.

ஒருநாள் எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு அக்காவின் கனவில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் வந்து எங்கள் பெயரைச் சொல்லி, “எங்கு சென்றாலும் என்னிடம் வந்து காணிக்கை செலுத்தி கண்ணீர் விட்டு வேண்டினால் தான் திருமணம் நடக்கும்.” என்று கூறினார்களாம்.

அதனைக் கேட்டதும் நாங்கள் பாதபூஜை செய்ய மருவூர் விரைந்தோம். பரம்பொருள் பங்காரு அம்மா என்னைப் பார்த்த உடனே “நல்ல வரன் தருகிறேன் போ” என்று சொன்னார்கள். முழு நம்பிக்கையுடன் வீடு சென்றோம். சில வாரங்களில் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் கூறியதை போல் நல்ல வரன் வந்தது. திருமணமும் நல்லபடியாக முடிந்தது.

திருமணம் முடிந்தவுடன் என் கணவருடன் பாதபூஜை செய்யச் சென்றோம். எங்களை பார்த்தவுடன் அம்மா, “கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிது. திருஷ்டி நிறைய இருக்கு. திரிசூலத்திலே உட்கார்ந்து திருஷ்டி போடு!” என்று சொன்னார்கள். நாங்கள் சற்றுத் தயங்கினோம். அதனுடைய சக்தியை அப்போது நாங்கள் உணரவில்லை. அடுத்த வருடம் செய்யலாம் என்று நாங்கள் தள்ளிப்போட்டோம்.

அடுத்த ஆறு மாதங்களில் எனது கணவர் கீழே தவறி விழுந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவர்கள் ஸ்கேன் செய்துவிட்டு, மூளையில் ரத்தம் கட்டியிருப்பதாக கூறினார்கள். நாங்கள் அதிர்ந்து விட்டோம். அப்போது தான் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் கூறிய திரிசூல யாகத்தின் காரணத்தை உணர்ந்து கண்ணீர் விட்டு அழுதேன். அதே தொகை இப்போது மருத்துவமனைக்கு செலவானது. பின்னே வரப்போவதை முன்னே அம்மா கூறி எச்சரித்தார்கள் என்று உணர்ந்தேன்.

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் மனம் உருகி வேண்டிக்கொண்டேன். அவர் மருத்துவமனையில் இருந்து வந்தவுடன் மேல்மருவத்தூர் அழைத்து வருகிறேன் என்றும், மூன்று அமாவாசைக்கு இரவு தங்குகிறேன் என்றும் வேண்டிக்கொண்டேன்.

அடுத்த சித்திரைப் பௌர்ணமிக்கே வேள்வி செய்கிறேன் என்றும் வேண்டிக்கொண்டேன். பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அருளால் அந்த ரத்தக் கட்டிகள் கரைந்தன.

நான் வேண்டியபடியே மேல்மருவத்தூருக்கும் அவரை அழைத்துச் சென்றேன். இப்போது
அவர் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் அருளால் நலமுடன் இருக்கிறார். இந்த சித்திரா பௌர்ணமியில் திரிசூல யாகத்தில் அமர்ந்தோம்.

இடையில் அவர் வேலை செய்த நிறுவனத்தில் பல இன்னல்கள் வந்தன. பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் சென்று வேண்டி வந்தோம். அதன் பலனாக இப்பொழுது அவருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமைந்துள்ளது.

எங்கள் வாழ்வில் வந்த துன்பங்களை எல்லாம் தக்க சமயத்தில் அம்மா தனது அருளால் போக்கி உள்ளார்கள். உயிர் உள்ளவரை பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் பாதங்களை
பற்றியே இருப்போம். பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் வேண்டியபடியே சக்தி ஓளிக்கு எழுதிவிட்டேன். பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களுக்கு
கோடானு கோடி நன்றிகள்.

ஓம்சக்தி!
சக்தி s . ரேணுகாதேவி, சென்னை.
பக்கம் 61 – 62.
சக்தி ஒளி ஜூலை- 2017