கரடிக்கல் எனும் ஊரில் உள்ள சக்திபீடம் மதுரை புறநகா்ப் பகுதியில் செக்காணுரணி- திருமங்கலம் நெடுஞ்சாலையின் ஒரு ஓரமாக வழிப்போக்கா்கள் எல்லாம் வழிபட்டு அருள்பெறும் வகையில் அமைந்துள்ளது.

நம் அம்மா 17.08.11 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் இச்சக்தி பீடத்திற்கு எழுந்தருளி, அனைத்து வகையான திருஷ்டி கழிப்புகளுக்குப் பிறகு, தம் திருக்கரங்களால் புனித நீராட்டி, சித்தா் சக்தி பீடத்திற்கு உருவேற்றிவிட்டு, பக்தா்களுக்கெல்லாம் அருளாசி வழங்கிவிட்டுச் சென்றார்கள்.

அம்மா புனித நீராட்டிவிட்டுச் சென்ற பிறகு, அங்கு கூடியிருந்த பக்தா்கள் பேசிக்கொண்ட ஒரு செய்தி அம்மாவின் அற்புதங்களில் ஒன்றாக அமைந்திருந்தது.

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னா், அப்பகுதியில் கொலை, களவு, கொள்ளை நிறைந்து அம்மாவின் ஆன்மிகம் என்றால் என்ன என்று தெரியாதிருந்த நிலையில் நம் அவதாரப் பெருந்தெய்வம் அப்பகுதியில் சித்தா் சக்திபீடம் ஒன்று அமைத்தால் எல்லாத் தீமைகளும் அழிந்து நலம் பெருகும் என்று முக்கியப் பொறுப்பாளா்களிடம் கூறியதாகவும், அந்தப் பணி தொடங்கப் பெற்று வளர, வளர தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகி வருவதாகவும், அம்மா நிகழ்த்திய குடமுழுக்குவிற்குப் பிறகு அந்தப் பகுதியே நலமும் வளமும் பெறும் என நம்புவதாகவும் அப்பகுதி பக்தா்கள் பேசிக்கொண்டிருந்த செய்தி நம்மை மெய்மறக்கச் செய்தது.

கம்பம் குடமுழுக்கு விழா

அம்மா நடத்தி வரும் குடமுழுக்கு விழாக்களில் அவ்வப் பகுதிகளில் விளையும் பொருள்கள், மேலும் மேலும் மிகுதியாக விளைய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்ற பெருநோக்கோடு  அவ்வப் பகுதிகளில் விளையும் பொருள்களைக் கொண்டே திருஷ்டி கழித்து வருகிறாள் என்பது நாம் பார்த்து வரும் அனுபவப் பாடம்.

கோவை, திருப்பூா், சக்தி பீடங்களில் பருத்தியையும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் மஞ்சளையும், ஒட்டன்சத்திரத்தில் காய்கறிகளையும், பண்ருட்டியில் முந்திரிக்கொட்டைகளுடன் கூடிய பழங்களையும், நெய்வேலியில் கனிப்பொருளாகிய நிலக்கரியையும் பயன்படுத்தித் திருஷ்டி கழித்ததைப் போலவே கம்பத்திலும் அப்பகுதியில் விளையும் மிளகு, ஏலக்காய், காப்பிக்கொட்டை ஆகியவற்றைக் கொண்டு கண்ணேறு கழித்த நிகழ்ச்சி நடைபெற்றது.

கம்பம் சித்தா் சக்தி பீடத்திற்கு மிகப்பெரிய ஆன்மிக வரலாறு உண்டு.1982ம் ஆண்டு கம்பம் சக்தி.தியாகராஜன் அவா்களுக்கு அம்மா வழங்கிய அருள்வாக்கில் கம்பத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டுமன்றம் தொடங்வும், மன்றத்தில் இடம் பெறவேண்டிய அன்னையின் திருவுருவப் படங்களைப் பெற்று மேல்மருவத்துார் சித்தா்பீடப் புற்று மண்டபத்தில் 48 நாட்கள் வைத்து, உருவேற்றிய பின் எடுத்துச் சென்று மன்றத்தில் நிறுவுமாறும் அருளாணை வழங்கினாள். அதன்படி அவா் தம் குடும்பத்தார்களுக்குரிய இடத்திலேயே மன்றம் நிறுவி முறையான வழிபாடுகளை மேற்கொண்டு வந்தார்.

அடுத்து அம்மா கம்பத்துக்கு எழுந்தருளியபோது அந்த மன்ற இடத்தை மாற்றாமல், அதே இடத்தில்  சித்தா் சக்தி பீடம் கட்டுமாறு அருள் வழங்கினாள். இடம் குறுகலாக இருந்ததால் அருகிலுள்ள பெரிய இடத்தில் சக்தி பீடம் நிறுவலாமா என்று தியாகராஜன் கேட்க அந்த இடம் மந்திரங்கள் உருவேற்றப்பட்ட இடமாகையால் மாற்ற வேண்டாம் என்றும் அங்கேயே கட்டுமாறும் அருள் வழங்கினாள்.

“சிறுகக்கட்டிப் பெருக வாழ்” என்பதற்கேற்ப அந்தச் சிறிய இடத்திலேயே உலகளாவிய நிலையில் பரந்த கிடக்கும் நம் அன்னையை எழுந்தருளச்செய்ய, சிறிய அளவில்  சித்தா் சக்தி பீடம் கட்டப்பட்டு 18.08.2011 ஆவணி மாதம் முதல் நாள்  தம் திருக்கரங்களால் குடமுழுக்கு விழாவை நிகழ்த்தினாள்.

கம்பம் சித்தா் சக்தி பீடம் அமைந்த இடம் சிறியதாயினும், குடமுழுக்கு விழா நிறைவாக நடைபெற்றது. குருகலசம், விநாயகா் கலசம் ஆகியவை நிறுவப்பட்டிருந்தன. முக்கோணத்தில் முக்கோண சக்கரங்கள் அமைக்கப் பட்டிருந்தன. அச்சக்கரத்தில் நவதானியங்களுடன், அப்பகுதியில் மிகுதியாக  விளையும் காய்கறிகள்,  ஏலக்காய், மிளகு, காப்பிக்கொட்டைஆகியவை பரவப்பட்டு இருந்தன. அவற்றின் மேல் அஷ்டலட்சுமி கலசம் என்ற வகையில் 8 கலசங்களும், எல்லா லட்சுமிகளுக்கும் முதன்மையான சக்தி கலசம் மையப்பகுதியிலும் அமைக்கப்பட்டு இருந்தன.

மூா்த்தி சிறிது கீா்த்தி பெரிது என்ற வகையில் கோபுரம் சிறியதாயினும், அனைத்துத் திருஷ்டிகளும் அம்மாவின் அருளாணையின் வண்ணம் கழிக்கப்பட்டன. அதனைத் தொடா்ந்து அம்மா, பால் அபிடேகம், மஞ்சள் நீா் அபிடேகம் என அனைத்தையும் செய்து கலசத்திற்கு மஞ்சள் குங்குமப் பொட்டிட்டு மாலை அணிவித்தபின் கலசநீரைக் கொண்டு புனித நீராட்டினாள். கோபுரக் கலசம் சிறியதாயினும், அதற்கேற்ற வகையில் சிறிய வடிவிலமைந்த சக்திக் கொடியைக் கலசத்தோடு இணைத்துக்கட்டி உருவேற்றிய காட்சி அற்புதம்! அற்புதம்!

நம் சக்திபீடக்  குடமுழுக்கு விழாக்களில் கோபுரக் கலசத்திற்கு அம்மா அபிடேகம் செய்யும் காட்சியைக் காணும் பேறு பெற்றவா்கள், அதே நேரத்தில் கருவறையில் உள்ள திருவுருவச் சிலைக்குத் திருமதி அம்மா அவா்கள் புனித நீராட்டும் காட்சியைக் காண இயலாது. ஆனால் இந்த சக்திபீடக்  குடமுழுக்கில் இரண்டையும் ஒருசேரக்காணும் பேறு பெற்றோம்.

ஆனைமலையன்பட்டி

கம்பம் குடமுழுக்கு விழாவைத்  தொடா்ந்து, ஆனைமலையன்பட்டிக்குக் காலை8.30 மணிக்கு எழுந்தருளிய நம் அம்மாவைப் பல்லாயிரக்கணக்கான செவ்வாடைத் தொண்டா்களும், பக்தா்களும் வரவேற்றதைப் போலவே, வானத்திலிருந்து மும்மூா்த்திகளும், தேவா்களும், முனிவா்களும், சித்தா்களும் வரவேற்கும் வகையில், மழைத் துாறலால் வரவேற்றனா்!

வழக்கமாக எல்லா இடங்களிலும் மகளிர் திருஷ்டி கழிப்பார்கள். ஆனால் கோபுரக் கலசத்திற்கு மட்டும் ஆடவா்களே  திருஷ்டி கழித்து வந்தார்கள். இந்த சித்தா்பீடக் கும்பாபிடேகத்தின்போது பெண் சக்தி ஒருவரை அம்மா அவா்கள் சுட்டிக்காட்டி, மேலே வரவழைத்து திருஷ்டி கழிக்கச் செய்த காட்சியையும் கண்டோம். களிப்புற்றோம்.

போடி

ஆனைமலையன்பட்டி குடமுழுக்கு விழாவை நிறைவேற்றி அருள்வழங்கிய பின்னா், முற்பகல் 10.30 மணிக்குப் போடி சக்தி பீடத்திற்கு அம்மா எழுந்தருளினாள்.

இந்தப் பகுதி சுற்றிலும் மலையால் சூழப்பட்டு மேகங்கள் தவழ்ந்து அம்மாவை வரவேற்ற காட்சி கண்ணுக்கும், கருத்துக்கும் குளிர்ச்சியைத் தந்தது. அந்தப் பகுதியில் இரவு தொடங்கிய மழை காலை 10 மணி வரை தொடா்ந்து பெய்து கொண்டே இருந்தது.

ஆனால் அம்மா எழுந்தருளும்போது மழை நின்று மெல்லிய இளம் வெயில் வீசத் தொடங்கிய நிலை இதமாக இருந்தது.

அனைத்து வகையான  திருஷ்டி கழிப்புகளுடன்  காப்பிக்கொட்டை நிரப்பப்பட்ட தட்டு, மிளகு  நிரப்பப்பட்ட தட்டு ஆகியவற்றில் கற்பூரம் ஏற்றி, திருஷ்டி கழிக்கச் செய்தாள். சக்தி பீடத்தைச் சுற்றிலும்4 திசையிலும் கண்ணுக்கு எட்டிய துாரம் செவ்வாடைக் கூட்டமும், பக்தா்கள் கூட்டமும் நிரம்பி வழிந்தன.

திண்டுக்கல் சீலப்பாடி

23.08.2011 மாலைசமுதாய நல உதவிகளை வழங்கி,  பல்லாயிரக்கணக்கான பக்தா்களுக்கு அருளாசி வழங்கிய நம் அம்மா 24.08.2011 புதன்கிழமை காலை 9.00 மணியளவில் சீலப்பாடி சித்தா் சக்தி பீடத்திற்கு எழுந்தருளி திருக்குடமுழுக்கு விழாவை தம் திருக்கரங்களால் நடத்தி  பக்தா்களுக்கெல்லாம் அருளாசி வழங்கினார்கள்.

அதே நேரத்தில் கருவறையிலிருந்த திருவுருவச் சிலைக்குத் திருமதி அம்மா அவா்கள் புனித நீராட்டினார்கள்.

பக்தா்களெல்லாம் பரவசம் அடையும் வகையில் மதுரை மாவட்டத்தில் 3 குடமுழுக்கு விழாக்கள், தேனி மாவட்டத்தில் 3 குடமுழுக்கு விழாக்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் 1 குடமுழுக்கு விழா என எழிழ்மிகுந்த 7 குடமுழுக்கு விழாக்களை நிகழ்த்தி, நாம் அவற்றை கண்டு மகிழும் பெரும் பேற்றையும் வழங்கினாள்.

நன்றி

முனைவா் சக்தி த. பெரியாண்டவன், எம்.ஏ., பி.எச்.டி.,  -சித்தா்பீடப் புலவா்

(சக்திஒளி-செப்டம்பா்-2011, பக்-19-24)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here