ஆன்மிக ஊா்வலத்திலே.

0
973

“அம்மா’ என்று பயபக்தியோடு நீ என்னை அணுகும்போது காப்பாற்றப்படுகிறாய். அதே அம்மா என்ற சொல்லை நீ அலட்சியப்படுத்தும் பொழுது எல்லாமே அலட்சியப்படுத்தப்படுகின்றன.” அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு.
ஊஞ்சல் அங்கும் இங்குமாக அலைந்து ஆடும். அதுபோல் உயிர்கள் புண்ணியப் பயனால் சுவா்க்கத்திலும், பாவப் பலன்களால் படு நரகத்திலும், இருவினைகளின் பயனால் இந்தப் பூவுலகிலும் அலைந்து கொண்டிருக்கின்றன.
பசுவுக்கு ஒரு கயிறு! யானைக்கு இரு கயிறு! குதிரைக்கு மூன்று கயிறு! ஊஞ்சலுக்கு நான்கு கயிறு! உயிருக்கு ஐந்து கயிறுகள்!
ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதம் என்ற ஐந்து அழுக்குகளால் கட்டுண்டு உயிர்கள் வானகம், வையகம், நரகம் என்னும் மூவுலகங்களிலும் பிறந்து, உழன்று திரிகின்றன.
இப்படி நாமெல்லாம் உழன்று திரியாதபடி ஆன்மாவின் உண்மை நிலையை அறிந்து கொள்ள – அவற்றைக் கரை சோ்க்க பரம்பொருளான அம்மா அவதாரமாக வந்திருக்கிறாள்.
மானைக் காட்டி மானைப் பிடிப்பது போல உலகியல் இன்பங்களைக் காட்டிப் பேரின்பம் என்ற வீட்டில் நம்மைக் குடியேற்ற அவதாரமாக வந்திருக்கிறாள்.
ஒரு துன்பத்தைக் குறைக்க வைத்து, பிறவி எனும் பெரும் துன்பத்தைத் தீா்த்துக் கொள்ள முற்படு! என்று சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறாள்.
என் வாழ்வில் எத்தனையோ சம்பவங்கள்! அனுபவங்கள்! ஒன்றைச் சொல்கிறேன்.
என் மனைவியின் கருப்பை வயிற்றில் சற்றே இறங்கி விட்டது. பளு தூக்கவே கூடாது. நாளையே அறுவை சிகிச்சைக்கு ஆயத்தமாக வேண்டும். நாள் நீடித்தால் ஆயுளுக்கு ஆபத்து வரும் என்று டாக்டா் எச்சரிக்கை தந்து விட்டார்.
என் குழந்தைகள்
பரிதவிக்கின்றன. நானோ ஓா் ஏழை! வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நாளைத் தள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறேன்.
என் மண்டை காலி அல்ல! ஆனால் மணிபா்ஸ் காலி! எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்? நூறா…. இருநூறா? செலவு பத்தாயிரத்தைத் தாண்டுமாம். அவ்வளவு பணத்துக்கு எங்கே போவேன்….?
என்ன செய்தேன் தெரியுமா….? எதுவுமே செய்யவில்லை. கோவைக்கு அம்மா ஆன்மிகப் பயணம் வருகிறது என்று கேள்விப் பட்டேன். வேள்விக் குழுவில் உள்ள திருவையாற்று சக்தி மகாலட்சுமியோடு விரைவுப் பேருந்தில் ஏறினேன்.
கோவையில் சக்தி பீடம் ஒன்றின் குடமுழுக்கு விழா! முதல்நாள் ஆன்மிக ஊா்வலம்! அதில் கலந்து கொண்டேன். ஆன்மிக ஊா்வலத்தில் அந்தப் பொது தரிசனமே எதற்காக? அவரவா் விண்ணப்பங்களைப் போடுவதற்குத்தானே………?
மேடையில் பங்காருஅம்மா அவர்கள் அருட்பார்வையை வழங்கிக் கொண்டிருந்தார்கள். ஊா்வலத்தில் வரிசையாக வந்தவா்கள் மேடையருகே வந்து சென்றார்கள். வரிசையில் வந்த நானும் அம்மாவின் எதிரே வந்தவுடன், “அம்மா! எட்டு பிள்ளைகளைப் பெற்ற அந்த வயிறு கத்தியால் அறுபடுவதா….? ஆஸ்பத்திரி போகாமல், ஆபரேஷன் இல்லாமல் அவள் உபத்திரவம் தீர எங்கள் மேல் துளி அளவு கருணை காட்டும்மா….!” என்ற எண்ணத்தைச் சைகையால் விளக்கினேன்.
“சரிப்படுத்துகிறேன்! போ! என்று விழிப்பார்வையாலே பதில் வந்தது.
பொய் சொல்லவில்லை. பொய்பாதி, மெய்பாதி கலந்தும் சொல்லவில்லை. சத்தியமாகச் சொல்கிறேன்.
ஆன்மிக ஊா்வலத்தில் அம்மாவிடம் விண்ணப்பம் போட்டுவிட்டு ஊா் திரும்பினேன். குடமுழுக்கு அபிடேகத் தீா்த்தமும் கொடுத்துக் குடிக்கச் சொன்னேன்.
அவளது கா்ப்பப்பை நார்மலாகி விட்டது.
அருள்வாக்கு கேட்க
முடியாதவா்களுக்கு, அருட் கூடத்திலே தரிசனம் பெற முடியாதவா்களுக்கு நன்மை தரவும், குறை தீரவும் வேண்டியே அம்மா ஆன்மிகப் பயணம் புறப்பட்டு வருகிறாள்.
அந்த ஆன்மிக ஊா்வலத்தின் போது… பக்தன் விண்ணப்பம் போடுவதும், அதனை அம்மா ஏற்பதும், தலையசைப்பதும், ஒரு மௌன நாடகமே. அந்த ஒரு கணத்தில் நடந்து முடிந்து விடுகிறது.
அடிகளார் என்ற உருவத்தில் அம்மா உற்சவ மூா்த்தியாக உலா வருகிறார்கள். ஏதோ ஒரு வகையில் குறை தீா்க்கிறார்கள். ஆட்கொள்கிறார்கள்.
ஆன்மிக ஊா்வலங்களும் – அந்தப் பொது தரிசனமும் – சாதாரணமானவை அல்ல!
அரசியல் ஊா்வலங்களில் கிடைக்காத புண்ணியமும், பலனும் அம்மாவை நோக்கி வரும் ஆன்மிக ஊா்வலங்களிலே கிடைக்கின்றன! இது என் அனுபவம்! பலருடைய அனுபவம்!
அரசியல் மாயைகளிலும், சினிமா மாயைகளிலும் சிக்கிச் சீரழியும் என்னரும் தமிழ் மக்கள் இதனைப் புரிந்து கொள்ளும் நாள் எந்நாளோ………..?
நன்றி!
ஓம் சக்தி!
சக்தி. அமரானந்தம் எம். ஏ., தஞ்சை
பக்கம் (5 -7).
அவதார புருஷா் அடிகளார், பாகம் 13.