ஆபத்தான பயணம்

0
644

நான் எனது குடும்பத்தினருடன் கடந்த 25.12.2018 அன்று இருமுடி செலுத்த மேல்மருவத்தூருக்குக் காரில் புறப்பட்டு வந்தேன். திருச்சியில் மற்றவர்கள் காலை உணவு சாப்பிட்டனர். நான் எப்பொழுதும் இருமுடி செலுத்தும் அன்று எவ்வளவு நேரமானாலும் சரி, இருமுடி செலுத்திய பிறகுதான் சாப்பிடுவேன்.
திருச்சியை விட்டுக் கார் கிளம்பிய பின் காரை டிரைவர் மிகவும் மெதுவாக ஓட்டி வந்தார். காலை 10.30 மணிக்கெல்லாம் நாங்கள் கோவிலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் 1 மணிக்குத்தான் வந்தோம். இருமுடி செலுத்த 1 மணி நேரம் ஆனது.

அன்னதானக் கூடத்திற்குச் சென்று சாப்பிட்டு வர நேரமாகுமே என்று நாங்கள் வெளியில் உணவகத்தில் சாப்பிட்டோம். எனக்கு அதுவே மிகவும் உறுத்தலாக இருந்தது.

நான் 2005 -ம் ஆண்டிலிருந்து இருமுடி செலுத்தி வருகிறேன். ஒருதடவை கூட வெளியில் சாப்பிட்டதில்லை.

மேல்மருவத்தூரை விட்டு நாங்கள் கிளம்பும் போது மணி இரண்டரை. டிரைவர் 60கி.மீட்டரிலேயே ஓட்டி வந்தார். எப்படியோ திருச்சியை வந்தடைந்தோம். இரவு எட்டு மணிக்குத் திருச்சியை விட்டுக்கிளம்பிய பின் கார் வேகம் 40கி.மீ, 30கி.மீ, 20கி.மீ, 10கி.மீ எனக் குறைந்து கொண்டே வந்தது.

டிரைவரிடம் கேட்டால் ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை என்று கூறுகிறார் . எங்களுக்கு உயிர்ப்பயம் வந்துவிட்டது. நான்கு வழிச்சாலையில் 10கி.மீ வேகத்தில் இருட்டில் இப்படி வந்தால் எப்படி இருக்கும்? சர் சர் என்று வாகனங்களும் எங்களைத் தாண்டிப் போய்க் கொண்டே இருக்கின்றன.
சரி! காரை ஓரமாக நிறுத்துங்கள், மதுரையிலிருந்து மாற்று டிரைவரை அழைக்கலாம் என்றாலும் டிரைவர் செவி சாய்க்கவில்லை. என் மகள் மிகவும் பயந்து விட்டாள். துவரங்குறிச்சி வந்தவுடன் வண்டியை நிறுத்தச் சொல்லி விட்டோம். பாதுகாப்பு இல்லாத இடம் வேறு! தாயே! எங்களையும் காரையும் நல்லபடியாக வீட்டுக்குக் கொண்டு சென்று சேர்த்து விடுங்கள், சக்திஒளிக்கு எழுதுகிறேன் என்று வேண்டிக் கொண்டேன்.

முக்கால் மணி நேரம் கழித்து டிரைவர் 20கி.மீ முதல் 10 கி.மீ வேகத்திலேயே கொட்டாம்பட்டி வரை வந்துவிட்டார்.

பிறகு மாற்று டிரைவரை ஏற்பாடு செய்து இரவு 11 மணியளவில் அன்னை ஆதிபராசக்தியின் கருணையால் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தோம்.
மறுநாள் தான் தெரிந்தது. அந்த டிரைவருக்கு நான்கு வழிச்சாலையில் ஓட்டிய அனுபவம் இல்லை, மேலும் அவர் கண்ணாடியை கடந்த 5 வருடமாக மாற்றவில்லை, நாங்கள் கிளம்புவதற்கு முந்திய இரவு அவர் தூங்கவே இல்லை என்ற விபரங்கள்.

அன்னை ஆதிபராசக்தியின் அருள் மட்டும் இல்லாவிட்டால் நாங்கள் என்ன ஆகியிருப்போமோ? தெரியாது. அதை இப்போது நினைத்தாலும் பயம்தான். அன்னை ஆதிபராசக்தியின் திருவருளால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம்.

ஓம்சக்தி!
சக்தி அனுசுயாஅழகப்பநகர்,
மதுரை.
பக்கம் 56-57.
சக்திஒளி நவம்பர் 2019.