நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களில் உடலுக்குத் தேவையற்ற பொருட்கள் குறைவாக இருப்பின் வெளித்தள்ளும் வேலை சிரமமின்றி நடக்கும். எனவே எந்தெந்த உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது நல்லது என்பதைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இப்பொழுது எந்தெந்த உணவுகள் நமக்குத் தேவையானவை? அவற்றை எவ்வளவு சாப்பிட வேண்டும்? எந்த நேரங்களில் சாப்பிட வேண்டும்? எந்தெந்த உணவுகள் தேவையற்றவை? அவற்றை எப்படி விலக்குவது?என்பன போன்றவற்றைப் பற்றி சிறிது அறிந்து கொள்ள முயற்சிப்போம்.
உணவு
நமக்கு ஆரோக்கிய வாழ்வு அமைய வேண்டுமானால் இதற்குத் தேவையானவை பின்வருவனவாகும்.
1. உண்ண எளிய உணவு
2. குடிக்க நல்ல நீர்
3. சுவாசிக்கத் தூய்மையான காற்று
4.உள்ளிழுக்கும் இயக்கத்தையும் வெளித்தள்ளும் இயக்கத்தையும் சீர்ப்படுத்த அளவான உடற்பயிற்சி
உணவுப் பொருட்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. சாத்வீக உணவுகள்
2. ரஜோகுண உணவுகள் அல்லது இராஜஸ குண உணவுகள்
3. தமோ குண உணவுகள் அல்லது தாமச உணவுகள்
சாத்வீக உணவு என்றால் என்ன?
சில வகையான உணவுகளை அளவு அறிந்து உண்டு வந்தால் நோய்வாய்ப்படாமலே நெடுங்காலம் வாழ்ந்திருக்க முடியும். அத்தகைய உணவுகளுக்கு சாத்வீக உணவுகள் என்று பெயர். இவ்வகை உணவுகளை உண்பவர்கள்.
1. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
2. கோபப்பட மாட்டார்கள்.
3. உணர்ச்சிவசப்பட மாட்டார்கள்
4. நிதானத்தை இழக்க மாட்டார்கள்
5. எப்பொழுதும் அமைதியாக இருப்பார்கள்
6. அவர்களுடைய அறிவு தெளிவாக இருக்கும்
7. புத்தி கூர்மையாக இருக்கும்
8. மனத்தில் அமைதி நிலவும்
9. புனித மனப்பான்மையுடன் இருப்பார்கள்
10. இரக்க குணமும் சிந்தனையும் படைத்தவர்களாக இருப்பார்கள்.
சாறு, பசை, உறுதி, சுவை, நான்கு குணங்களும் அமையப் பெற்றவை சாத்வீக உணவுகள். அவற்றை உண்பதால் ஆயுள் பெருகுகிறது; வலிமை வளர்கிறது. உடலும் உள்ளமும் தூய்மை அடைகிறது. நோய்கள் நீங்குகின்றன. மனம் அமைதி அடைகிறது. ஊக்கம் பிறக்கிறது.
சாத்வீக உணவுகள் யாவை?
கீழ்க்கண்டவற்றைச் சாத்வீக உணவுகளாக எடுத்துக் கொள்ளலாம்.
ராகி , கோதுமை, ஜவ்வரிசி, வேர்க்கடலை, பார்லி, பாதாம்பருப்பு, சோளம், ரொட்டி, தீட்டப்படாத அரிசி, கிழங்கு மாவு, இளநீர், அரிசி, அவல், பாசிப்பயறு, பனைநுங்கு.
ரஜோ குண உணவு வகைகள்
கசப்பு, புளிப்பு, உப்பு, கடுஞ்சூடு, காரம், கடினம் முதலிய குணங்கள் அமையப்பெற்றவை ரஜோ குண உணவுகளாகும். அவற்றை உண்பதால் உடல் நோய்வாய்ப்படுகிறது. உள்ளம் துன்பத்தை அடைகிறது.உதாரணமாக மிளகாய்,ஊறுகாய் போன்ற பொருட்களை அடிக்கடி உண்போமானால் நமக்குப் பல வகையான நோய்கள் தோன்ற ஏதுவாகும். நமது உள்ளமும் நாளடைவில் பலவீனப்பட்டுப் போய் தொட்டதெற்கெல்லாம் எரிந்து விழுகின்ற சிடுமூஞ்சிகளாக ஆகிவிடுவோம். இத்தகைய உணவுப் பொருட்களுக்கு ரஜோகுண உணவுகள் என்று பெயர்.
தமோ குண உணவுகள்
சில வகை உணவுகளை உண்டால் சோம்பலும், தூக்கமும் உடம்பை ஆட்கொள்ளும். அறிவின்மையும் மதிமயக்கமும் ஏற்படும். ஆயுள் குறையும். அவ்வாறான உணவுகளுக்கு தமோகுண உணவுகள் என்று பெயர். தூய்மையற்ற உணவுகள், சாப்பிட்ட பின் மிஞ்சிய உணவு, ஆறிப்போன உணவு, சுவை இழந்த உணவு, புளித்துப்போன உணவு கெட்டுப்போன உணவு, நஞ்சு போன உணவு, ஆகியவற்றைத் தாமஸ உணவுகள் என்று குறிப்பிடலாம்.
பழங்காலத்திலிருந்து சாத்வீக உணவுகள், இராஜஸ உணவுகள், தாமஸ உணவுகள் என்ற உணவு வகைகளைப் பிரித்துள்ளார்கள். ஆனால் தற்கால விஞ்ஞானிகள் கீழ்க்கண்ட சத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உணவுகளைத் தரப்படுத்துகிறார்கள்.
1. புரதப் பொருள் (Proteins)
2. மாப் பொருள் (Starch)
3. சர்க்கரை (Sugar)
4. கொழுப்பு (Fats)
இந்த நான்கு பொருட்களும் மனித உடலுக்கு மிக முக்கியமானவை என இன்றைய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
சாத்வீக உணவில் இந்த நான்கு பொருட்களைத் தவிர தாது உப்புக்கள் என்னும் பொருளும் இருக்கிறது. பின்வருவனவற்றில் தாது உப்புகள் நிரம்ப இருக்கின்றன.
1. இளங்கீரை வகைகள் 2. புதிதாகப் பறித்த பிஞ்சுக் காய்கள் 3.கனிகள் 4. தளிர்கள் தாது உப்புகள் உள்ள உணவுகளை முதல்தரமான உணவுகளாகும். கீழ்க் கண்ட உணவுப் பொருட்களில் புரதம், மாவு, சர்க்கரை, கொழுப்பு, ஆகியவை இருப்பதால் இவை இரண்டாந்தர உணவுகளாகும். அவையாவன
1. தானியங்கள்
2. பயறுகள்
3. கிழங்குகள்
4. பருப்புகள்
ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிடலாம்?
நோய் வருவதற்கு தீர்வதற்கும் உரிய காரணங்களில் உணவு முதலிடம் வகிக்கிறது. அளவான உணவு வளமான உடலைத் தருகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்ற பழமொழிக்கிணங்க மிகையான உணவு உடலில் நோயை உண்டாக்குகிறது. ஆகவே உணவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.
ஒரு போது உண்டான் யோகி என்பார்கள். மனிதர்களில் உயர்ந்தவர்கள் யோகி. நோயற்ற நீண்ட இன்ப வாழ்வு வாழ வேண்டும் என்பது அவன் நோக்கம். செய்யும் செயல்களில் தூய்மை அடைவதன் மூலமும் , பிராணாயாமம் போன்ற பயிற்சிகள் மூலமும் ஜம்புலன்களையும் அடக்கி உயர் நிலை அடைபவனே யோகி என அழைக்கப்படுவான். ஆக புலனடக்கமே யோகத்தின் ஆரம்ப நிலை. இப் புலனடக்கத்திற்கு வித்தாக , ஆரம்பமாக அமைவது உணவுக் கட்டுப்பாடு.
‘உண்டி சுருங்கிடில் உபாயம் பல உள’. என்று திருமூலரும் கூறுகின்றார். உண்டி சுருங்கும் பொழுது நோய்கள் உடலைத் தாக்குவதில்லை.எனவே உடல் வளமாக இருக்கிறது. யோகத்தில் ஈடுபடும் பொழுது காற்றே உணவாக மாறும். ஆழ்ந்த யோகப் பயிற்சியின் போது மூளையின் அடிப்பகுதியிலுள்ள ஹைப்போதஸமஸ் என்னும் அமைப்பிற்குக் கீழே உள்ள சுரப்பியிலிருந்து ‘அமிர்தம்’ என்ற சித்தர்கள் கூறும் ஊட்டச்சத்து சுரக்கும். இந்த ‘அமிர்தம்’ உடம்பில் பர விட பசி, உறக்கம் ஆகியன நீங்கும். நரை, திரை, நோய் அணுகாது. நீண்ட நல்வாழ்வுக்கு உணவைக் கட்டுப்படுத்தி ஒருவேளை உண்ண வேண்டும்.
அடுத்து இரு போது உண்பான் போகி என்பர். போகி என்பவன் யோகிக்கு அடுத்த நிலையிலுள்ளவன். போகி உலக இன்பங்களை அளவோடு துய்த்து வளமோடு வாழ்பவன். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற கொள்கையுடையவன்.
முப்போது உண்பான் ரோகி என்பது அடுத்தது. உணவின் மீது கொண்ட மோகம் அதிகமாகி, ரோகமாகி அதனால் ரோகி என்ற பெயர் பெற்ற மனிதன். மூன்று வேளை உணவு உட்கொள்பவர்கள் எல்லாம் ரோகி என்பது தெள்ளத் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் தான் நாற்பது வயதிற்கு மேலாகிவிட்டால் இரவுச் சாப்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள்.
எப்படிச் சாப்பிட வேண்டும்?
எத்தனை முறை உண்பது என்று பார்த்தோம். இனி எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதைக் காண்போம். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று பெரியவர்கள் கூறுவர். இதற்கு நிறையச் சாப்பிடுதல் என்று பல்ரும் பொருள் கொள்வர். ஆனால் அது சரியான பொருள் அல்ல. நன்றாக மென்று அதாவது நொறுங்கிப் பொடியாக்கிய பின் சாப்பிட வேண்டும் என்று பொருள். வாயிலிடப்படும் உணவு பற்களால் நன்கு அரைக்கப்படல் வேண்டும். அப்போது தான் வாயில் ஊறும் உமிழ் நீர் உணவுடன் நன்கு கலந்து விரைவில் ஜீரணமாகும். எனவே வாயிலிட்ட உணவுப் பொருட்களை நன்றாக மென்ற பின் விழுங்க வேண்டும்.
விலக்கப்பட வேண்டிய உணவுகள்
அடுத்தபடியாக எந்தெந்த உணவுகளை விலக்க வேண்டும் என்று சற்று ஆராய்வோம். தளர்ச்சியையும் சோர்வையும் உண்டாக்கும் காப்பி, தேநீர் போன்றவற்றை உடனே அறவே நீக்க வேண்டும். காப்பி, டீ போன்றவற்றைக் குடித்தவுடன் புத்துணர்ச்சியளிப்பது போல இருப்பினும் காலப் போக்கில் அவை தீமையானவையே.
கள், சாராயம், போன்றவை பெரிய அளவில் செய்கின்ற அதே தீங்கை காப்பியும், டீயும் சிறிய அளவில் செய்கின்றன.
காலையில் எழுந்தவுடன் காபி, டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் அருந்துவது நல்லது. குளிர்ந்த நீர் என்றால் அறையிலுள்ள வெப்பத்திற்குச் சமமான உஷ்ண நிலையிலுள்ள நீர் என்று பொருள் கொள்ள வேண்டும். காய்ந்து ஆறிய நீராக இருந்தால் நல்லது. காபி, டீ அருந்துவதை விட்டவுடன் உங்களது உடலில் பலவித மாற்றங்களை நீங்கள் காணக்கூடும். மலம் நன்றாக வெளியேறுவதுடன் மலத்தின் நிறத்திலேயே வித்தியாசம் தெரியும். மலம் நன்றாக வெளியேறி விட்டால் 50% உடல் வியாதிகள் குறைந்து விட்டன என்று பொருள்.
காப்பி, டீக்குப் பதிலாக மோர், பால் , இளநீர் பருகலாம் அல்லது நீரில் தேன் கலந்து பருகலாம். புகை பிடிப்பதையும், பொடி போடுவதையும், புகையிலை போடுவதையும் விட்டுவிட வேண்டும். புகையிலை இல்லாது வெற்றிலை போடுவது நல்லது. ஆனால் அடிக்கடி போடக்கூடாது. நல்ல ஜீரண சக்தி இல்லாதவர்கள் பாலை மிகுதியாகச் சாப்பிடக் கூடாது. பாலைக் காய்ச்சாமல் குடிக்கக் கூடாது. ஊறுகாய்களை நாம் முடிந்தவரையில் விட்டுவிட வேண்டும். தேவையானால் காரம் சேராத புதிய ஊறுகாய்களைச் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.
விரதம், உடலைப் பலவீனமடையச் செய்வது அதனால் உடல் வலிமையை இழந்து விடுவோம் என்ற தவறான எண்ணத்தை விட்டு விடுங்கள்.விரதம் உடம்புக்குப் புத்துயிர் அளிக்கின்றன. உடல் நலத்தைப் பலப்படுத்துகின்ற சக்தி வாய்ந்த வழியாகும். ஆகையால் விரதமிருந்து என்றென்றும் உடல் நலம் பெற்று விளங்குங்கள்.
இயற்கையின் விதிமுறைகளைப் புரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் வழிகளை மாற்றிக் கொள்ளுங்கள். பயிற்சி, பொறுமை இடைவிடா முயற்சி, நம்பிக்கை ஆகியன மிக முக்கியமானவைகள். ஆர்வம், பிரார்த்தனை, அன்னையிடம் சரணடைந்தால் ஆகியவை ஆன்மிக முன்னேற்றம் விரைவாக ஏற்படச் செய்யும்.
ஓம் சக்தி
நன்றி சக்தி ஒளி 1991 ஏப்ரல் பக்கம் 52- 56. ]]>