மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு ஆச்சார்ய பீட நாயகர் அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் மகத்துவம் என்ன? பக்தர்களை ஆன்மிகத்தில் ஈர்த்து அருள்புரியும் அவருடைய உன்னதமான சக்தி என்ன? அவருக்காகப் பக்தர்கள் நிகழ்கின்ற விழாக்களின் அவசியம் என்ன? என்பன போன்ற பல வினாக்கள் நம்முன் தோன்றலாம்.
இந்த வினாக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்ற உந்துதலால் மேலும் மேலும் வினாக்களே தோன்றுகின்றன.மேல்மருவத்தூர் என்ற கிராமத்தில் அவதரித்த
ஆன்மிகக் குரு அருள்திரு அடிகளார் அவர்களைப் போல ஆன்மிகப்புரட்சி செய்தவர்கள் உலகில் வேறு எங்காவது இருக்கிறார்களா? என்று கேட்டால் ‘இல்லை’ என்று துணிந்து கூறலாம்.
அப்படி என்ன புரட்சி செய்தார் என்கிறீர்களா ?சற்றே சிந்தியுங்கள்! உங்கள் அறிவுக்கு எட்டிய காலம் வரை எந்தக் காலத்தில் எந்தக் கோவிலில் கருவறைக்கு உள்ளே சென்று நீங்கள் அபிடேகம், அர்ச்சனை, ஆரத்தி செய்து இருக்கிறீர்கள்? ஆண் , பெண், ஏழை, பணக்காரன் உயர்ந்த சாதி, உயர்வு இல்லாத சாதி என எந்த வகையைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மதத்தவராய் இருந்தாலும் மானிடராய்ப் பிறந்து இருந்தால் மட்டும் போதும் மேல்மருவத்தூரில் கருவறைக்குள் சென்று அன்னை ஆதிபராசக்திக்கு உங்கள் கைகளாலேயே அபிடேகம் செய்யலாம்.இந்த புரட்சியை இதுவரை யார் செய்தனர்? தெய்வத்தின் முன்பு மக்கள் அனைவரும் சமம் என்ற கருத்தை நடைமுறைப்படுத்தியது ஆன்மிகக்குரு பங்காரு அடிகளார் தானே? அந்த பங்காருஅடிகளார்க்குத் தான் அந்த இன்று விழா எடுத்து வருகிறார்கள்.
இன்றைய இளைஞர்கள் நிலை என்ன என்று நீங்கள் யோசியுங்கள். ஒரு புறம் கேளிக்கைகளும் களியாட்டங்களும், மறு புறம் மது பானங்களும் இத்துடன் நில்லாமல் போதை மருந்து வழியில் பாதை மாறிச் சென்று பரிதவிக்கின்றனர். இவர்களின் அவல நிலை கண்டு பெற்றோர்கள் விழிகளில் நீர் வற்றிட நிலை குலைந்து உளம் கலங்குகின்றனர்.
இது போன்று இளைஞர் சமுதாயம் நிலை குலைந்துவிடக்கூடாது என்பதற்காக அடிகளார் அவர்கள் இளைஞர்களைக் கரை சேர்க்கும் கலங்கரை விளக்காய் நல்வழி காட்டினார்.ஆன்மிக மார்க்கங்களில் ஒன்றான தொண்டு மார்க்கத்தில் அவர்களை நன்னெறிப்படுத்தினார். சமுதாயப்பணிகளில் அவர்களை ஈடுபடுத்தித் திசை திருப்பினார். இரத்ததானம், கிராமச் சாலை சீர் செய்தல்,இயற்கை அழிவு காலங்களில் நிவாரணப் பணிகள், மருத்துவ முகாம் அமைப்பு, கண் தானம், மருத்துவத் தொண்டு, அனாதைப் பிணங்களை அடக்கம் செய்தல், போன்ற அரிய நற்பணிகளில் இளைஞர்களை ஈடுபடுத்தி வருங்காலச்சமுதாயத்தில் தர்மம் தழைத்தோங்க வித்திட்டுள்ளார்கள். இத்தகைய சாதனைகளை இளைஞர் சமுதாயத்திற்குள் எந்த ஒரு மகானாவது செய்தார்களா என்று சிந்தியுங்கள். அதனைச் செய்த மகானுக்குத் தான் இங்கு விழா நடக்கின்றது.
ஏழை எளிய மக்களுக்கு இவர் என்ன செய்தார்? என்று கேட்கலாம். மேல்மருவத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மருவத்தூரிலேயே மருத்துவமனை ஒன்று அமைத்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இலவசமாக மருத்துவ ஆலோசனையும், மருந்துகளும் பெற்றுக் குணமடைந்து வருகிறார்கள். இது அங்கு சென்று வந்தவர்களுக்குத் தெரியும். கிராமங்களில் பிரசவ வேதனையில் தவிக்கும் தாய்மார்களை ஊர்தி வைத்து அழைத்து வந்து, பிரசவம் பார்த்து முடித்து, மீண்டும் அவர்களை அவர்களது இல்லங்களில் விட்டு வருவது போல் செயல் திறனுடன் கூடிய ஓர் இலவச மருத்துவமனை உருவாக்கி வருகின்ற ஆன்மிகக் குரு அருள் திரு . அடிகளார்க்குத் தான் இங்கு விழா எடுக்கிறார்கள்.
அறிவுப் பசியைத் தீர்த்து வைக்கும் வண்ணம் அந்தக் கிராமத்தில் சென்னை நகருக்கு இணையாக ஆங்கிலப் பள்ளி , தொழில்நுட்பக் கல்வி, பொறியியல் கல்விகளை, கிராமப்புற மாணவர்களும் பெற்று, அறிவுச் சுடர் பட்டொளி வீசிப் பண்படும் வண்ணம் ஏற்பாடு செய்துள்ளார். அறிவுக் கண் கொடுத்த எங்கள் ஆன்மிகக்குருவிற்குத் தான் இந்த விழா. இதையெல்லாம் செய்ய இவருக்கு என்ன தலையெழுத்து? இவர் என்ன அரசரா? தலைவரா? மதகுருவா? ஆன்மிகவாதியா ?சாமியாரா? சன்னியாசியா? இல்லை. இல்லவே இல்லை. இதில் கூறிய யாராகவும் அவர் இல்லை. பின்பு இவர் யார்?
தலைவராக இருந்தால் மேடை ஏற வேண்டும். சொற்பொழிவு செய்ய வேண்டும். கொடி வேண்டும். கொள்கை வேண்டும். ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் மேடை ஏறிக் கொள்கை முழக்கம் செய்வது இல்லை. இன்றுவரை இவர் குரலை யாரும் மேடையில் கேட்டது கிடையாது. தம் குரலைக் கூட வெளிப்படுத்தாமல் கோடிக்கணக்கில் பக்தர்களைக் கொண்ட ஓர் ஆத்மா வெறும் தலைவராக இருக்க முடியாது.
பின்பு இவர் மதகுருவா ? அப்படியும் தெரியவில்லை. இவர் வாழும் மேல்மருவத்தூர் சித்தர் பீடத்திற்கு இந்துக்கள் மட்டுமன்றி , கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், என்று எந்தப் பாகுபாடுமின்றி வந்து செல்கிறார்கள். இதனால் இவர் எந்த மதத்திற்குக் குருவாக இருப்பார்?
பிறகு இவர் ஆன்மிகவாதியா? பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. மற்ற ஆன்மிகவாதிகளைப் போல் தாடி, மீசை, சடாமுடி, காவி, குங்குமம், விபூதி, என்று எந்த அலங்காரமும் இல்லையே!
அப்படியானால் இவர் சாமியாரா? சன்னியாசியா? இரண்டுமே இல்லை. இவருக்குக் குடும்பம் உண்டு. பிள்ளைகள் உண்டு. இவர் இல்லத்தரசியாரும் இவர் கூடவே எங்கும் வருவதைப் பலரும் பார்க்கின்றோம். வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டியில் வருகிறார். இதனால் இவரைச் சாமியார் என்று கூறமுடியாது. தன் குரலைக் கூட வெளிப்படுத்தாமல் பார்வையாலேயே கோடிக்கணக்காக பக்தர்களை நல்வழி நடத்தும் பங்காருஅடிகளார் வெறும் மானிடப் பிறவியாக இருக்க முடியாது.அப்படியானால் பங்காருஅடிகளார் யார் ?
தான் பிறந்த மண்ணில் உலகப்பெருந்தலைவர்கள் முதல் பாமரர்கள் வரை எல்லோரும் வந்து செல்லுமாறு ஈர்ப்புச் சக்தி ஏற்படுத்தியுள்ள பங்காருஅடிகளார் வெறும் மனிதராக இருக்க முடியாது. அனைத்து மக்களையும் ஆன்மிகப் பாதையிலும் தொண்டு நெறியிலும் வழிநடத்திச் சென்று பாமரனுக்குக் கூட தியானம்
பயில அருள் புரிந்துவரும் ஆன்மிகக் குரு பங்காருஅடிகளார் ஒரு சாதாரண பிறவியாக இருக்க முடியாது. அப்படியானால் பங்காருஅடிகளார் யார்?
அவரை ஓர் இல்லற ஞானியாகப் பார்க்கும் பக்தர்கள் சிலர்.
அவரை ஒரு சித்தராகப் பார்க்கும் அறிஞர்கள் சிலர்.
அவரை ஒரு மகானாகப் பார்க்கும் ஆன்மிகவாதிகள் சிலர்.
அவரை ஒரு சித்தராகப் பார்க்கும் அறிஞர்கள் சிலர்.
அவரை ஆதிபராசக்தியாக பார்பவர் சிலர்.
எந்தவொரு வரையறைக்குள்ளும் இவரை கொண்டுவர முடியவில்லையே. இவர் இலட்சக்கணக்கான மக்களை ஈர்க்க முடிகிறதே எப்படி என்று ஆராயும் அறிவு ஜீவிகள் சிலர்.
எல்லாவற்றிற்கும் மேலாக அடிகளார் ஓர் அவதாரம் . தெய்வ அவதாரம் . கலியுக அவதாரம்.
இதனை அனுபவங்கள் மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும். உணரவும் முடியும்.
அவதார புருஷர்களைச் சாதாரண உலகியல் மக்களால் அடையாளம் காண முடியாது. ஞானிகளால் மட்டும் தான் உணர முடியும்.
மறைந்த காஞ்சிப்பெரியவர், “ பங்காருஅடிகளார் அம்பாளின் ஸ்தூல வடிவம்” என்று சிலருக்கு அடையாளம் காட்டினார். இராமனைப் போல,கிருஸ்ணனைப்போல, ஏசுநாதரைப் போல, கெளதம புத்தரைப் போல, இராமகிருஸ்ண பரமஹம்சரைப் போல பங்காருஅடிகளார் ஒரு தெய்வ அவதாரம்.
இன்றைய உலக நெருக்கடிகளின் இடையே ஆன்மிகப் பாதை காட்டி நம்மை மீட்க வந்த அவதாரம் தான் அடிகளார். மனிதனைத் தெய்வமாக்க வேண்டி தெய்வம் மனிதனாக இறங்கி வருவதே அவதாரம்.
பிரும்மத்தை உணர்ந்தவன் பிரும்மமாகவே ஆகிறான் என்கிறது வேதம். பரம்பொருள் மட்டுமே ஓர் உயிரை சிருஷ்டி பண்ண முடியும். பரம்பொருளை உணர்ந்த பிரும்ம ஞானியால் ஓர் உயிரை சிருஷ்டி பண்ணமுடியாது என்கிறது பிரும்ம சூத்திரம். ஒரு ஞானிக்கும் பரம்பொருளுக்கும் உள்ள வேறுபாடு இது.
பார்வைக்கும் பாதம் பட்ட மண்ணுக்கும்
மகிமை உண்டு
அடிகளார் பார்வைக்கும், பாதம் பட்ட மண்ணுக்கு மகிமை உண்டு என்பது அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு.
பங்காருஅடிகளார்க்குப் பாதபூசை செய்து தீராத வினைகளைத் தீர்த்துக் கொண்டு நலம் பெற்ற குடும்பங்கள் ஏராளம்.
பகவான் இராமகிருஸ்ணர் திருமேனியில் காளி காட்சி கொடுத்த அற்புதம் நடந்ததாக அவர் வரலாறு கூறுகிறது.
அவதார புருஷர்கள் நம்மைப் போலவே சாதாரண மனிதர்களாக உலவி வருவதால் அவர்களைச் சராசரி மனிதர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை.
இராமன் அவதார புருஷன் என்பதை 12 ரிஷிகள் மட்டுமே அறிந்து வைத்திருந்தார்கள். மற்ற யாருக்கும் தெரியவில்லை.
கிருஷ்ணன் அவதார புருஷன் என்பதை அன்றைய உலகம் புரிந்து கொள்ளவில்லை.
அவதாரங்கள் நடந்து முடிந்த பின்பு தான் உலகம் அவர்களுக்குக் கோவில் கட்டி பூசை புரிந்து விழா எடுக்கிறது.
அவதாரங்கள் என்பது அடிக்கடி வரக்கூடிய விஷயமல்ல. உலக நெருக்கடியின் போது மட்டும் தெய்வம் அவதார வர்க்கத்துடன் வரும்.
சவால் விட்டும், வாதம் புரிந்தும், தெய்வத்திடமும், அவதார புருஷர்களிடமும் காரியம் சாதிக்க முடியாது.
நம்பிக்கையுடனும் , பக்தியுடனும், விசுவாசத்துடனும் அணுகினால் அற்புதமான நன்மைகள் அடையலாம்.
இன்றைய கலியுகத்துக் கேடுகளை நீக்க அன்னை ஆதிபராசக்தியே பங்காருஅடிகளார் என்ற மானுட வடிவில் தன்னைப் பிரித்துக் கொண்டு வந்து விளையாடுகிறாள்.
நல்வினையுள்ளவர்கள் பற்றிக் கொண்டு நலம்பெறுக!
ஆராய்ச்சி செய்யாதே
அம்மாவும் அடிகளாரும் ஒன்று என்பது எப்படி? ஆதிபராசக்தி பெண் தெய்வமாயிற்றே? பங்காருஅடிகளார்
ஆண் ஆயிற்றே? அப்படியானால் ஆதிபராசக்தி ஆண் தெய்வமா? பெண் தெய்வமா? என்றெல்லாம் வீணாக ஆராய்ச்சி செய்யாதே! உன் சிற்றறிவிற்கு இவையெல்லாம் எட்டாதவை!
இங்கே கொடுக்கிற வாய்ப்பையும், கிடைக்கிற வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு கரையேற வழி தேடு ! என்பது அன்னையின் அருள்வாக்கு.
அம்மனா? அடிகளாரா?
அம்மனா? அடிகளாரா? என்ற குழப்பம் தேவையில்லை. அடிகளாரின் ஆன்மாவின் மூலம் தான் என்னை நான் வெளிப்படுத்திக் கொள்கிறேன்.
மனிதர்கள், பறவைகள், தாவரங்கள் ஆகியவற்றிற்கெல்லாம் உருவம் உண்டு. ஆனால் ஆன்மாவிற்கு உருவம் கிடையாது.
காற்றை உன் கண்களால் காண முடியாது. வெளிச்சத்தில் உள்ளவர்களால் இருட்டில் உள்ளவர்களை எப்படிப் பார்க்க முடியாதோ அப்படியே ஆதிபராசக்தியாகிய என் உருவத்தை உன்னால் காண முடியாது.
சக்தி எந்த ரூபம்? தர்மம் எந்த ரூபம்? என்பதையெல்லாம் உன்னால் தெரிந்துகொள்ள முடியாது! என்பது அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு
பண்டமும் , பாண்டமும்
மகனே! சிலர் என்னுடைய அருளை மட்டும் விரும்புகிறார்கள். பாலகனை அவமதிக்கிறார்கள். அவர்களுக்கு பண்டம் பிடிக்கிறது. பாண்டம் பிடிக்கவில்லை. அடிகளார் என்கிற பாண்டத்தின் மூலம் தான் எனது அருள் என்கிற பண்டம் கிடைக்கும் என்பது தெரியவில்லையே மகனே! என்பது அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு.
ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னே…. வாராத மாமணி போல் இன்று அன்னை வந்திருக்கிறாள். ஆதிபராசக்தி வந்திருக்கிறாள்… பங்காரு அடிகளார் என்னும் மானுடம் தரித்து வந்திருக்கிறாள்…சாதி,மதம், இனம், மொழி, அறிவு, ஆராய்ச்சி என்ற எல்லைக்கோடுகளைத் தாண்டி “அம்மா!” என்று அடியெடுத்து வாருங்கள்.
உங்கள் சுமையைக் குறைப்பாள்.. வேதனையைத் தணிப்பாள்… நாங்கள் பெற்ற இன்பம் நீங்களும் பெறலாம்.
ஓம் சக்தி
நன்றி
பக்கம் 19- 22.
சக்தி ஒளி 2002 பிப்ரவரி.