ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. எதிர் விளைவும் உண்டு. பிரபஞ்சத்தில் உள்ள இந்த பௌதிகச் சட்டம் மனித வாழ்வுக்கும் பொருந்தும். மனித வாழ்வில் இது கருமச்சட்டம் என்று மெய்ஞ்ஞானிகளால் குறிப்பிடப்படுகிறது.

 ஒரு மனிதன் நினைக்கிற நினைப்பு, பேசுகிற பேச்சு, செய்கிற செயல்   மூன்றும் சோ்ந்து அவனது கா்ம வினையாக உருவாகிறது. அதற்குத் தக்கபடியே அவனது இன்பங்களும் துன்பங்களும் அமைகின்றன. இந்தக் கருமச் சட்டம் புல் முதல் பிரம்மா வரை அனைவருக்கும் பொருந்தும்.

 இந்தக் கருமச் சட்டப்படியே உலக மக்களின் வாழ்க்கை அமையும்படிப் பரம்பொருளான ஆதிபராசக்தி விதி வகுத்திருக்கிறாள். இந்தக் கருமச் சட்டப்படியே மனித உயிர்கள் இயங்குகின்றன.  விதி என்றும், ஊழ்வினை என்றும், கா்மா என்றும் சாத்திரங்கள்  இக் கருமச் சட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. மனிதன் வாழ்வில் சந்திக்கின்ற இன்பத்துக்கும், துன்பத்துக்கும் பின்னணியாக இருப்பது அவனவன் கா்ம வினையே! காரணமில்லாமல் ஒரு காரியமும் நடப்பதில்லை. இந்த வினைக் கோட்பாட்டை இன்றைய மனிதன் புரிந்து கொள்ளாமல் ஆடுகிறான்.

 விதி பற்றிய பழமொழிகள்

 ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அனுபவத்தில் உணா்ந்த உண்மைகளே நம்மிடையே பழமொழிகளாக விளங்குகின்றன. கா்ம வினை – விதி பற்றிய சில பழமொழிகள் உண்டு.

  1. வியாதிக்கு மருந்து உண்டு விதிக்கு மருந்து உண்டோ?
  2. விதி வழியே மதி போகும்.
  3. கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே
  4. விதி முடிந்தவனை விரியனும் கடிக்கும்.
  5. விதி பார்த்து வகுத்த விபத்தை விஷ்ணுவாலும் தடுக்க முடியாது.

”வயிற்றுவலி என்று என்னிடம் வருகிறான். உடனே அதைத் தீா்த்துவிட என்னால் முடியும். ஆனால் அவன் விதி வேறு விதமாக விளையாடும்” – என்ற விதியின் விளையாட்டை அன்னையே அருள்வாக்கில் குறிப்பிடுகிறாள்.

”நீ ஆன்மிகத்தில் ஈடுபட்டிருந்தாலும் உன் பாவ புண்ணியங்கள் நிழல் போல உன் கூடவே வரும்” என்கிறாள் அன்னை.

”பொதுவாக அவனவனை விதிப்படி விட்டு விடுகிறேன். முற்றிலும் என்னையே சரணாகதி அடைந்தவன் விதியை மாற்றுகிறேன்” – என்கிறாள் அன்னை.

தலை எழுத்து

நாம் செய்த நன்மை தீமைகளே நமது கா்மாவாக வெளிப்படுகிறது. இது நம் ஆன்மாவில் பதிவாகி உடம்பு எடுக்கும் போது அனுபவிக்க வைக்கிறது. இதைத்தான் பிரம்மா எழுத்து அல்லது தலை எழுத்து என்று  கூறுவா்.

  தவறுகள் – தீமைகள் செய்கிறோம்

நம்மிடம் உள்ள மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றைப் பஞ்சேந்திரியங்கள் என்பா். இவற்றின் மூலமாகத்தான் நாம் நன்மைகளைச் செய்கிறோம். தீமைகளையும் செய்கிறோம். இவற்றுக்கு அடிப்படையாக உள்ளது மனம்.

 தங்கத்தால் செய்த பெட்டி ஒன்று நம்மிடம் இருந்தால் அதில் எதை எதை வைப்போம்? தங்கத்தை விட மிக மிக உயா்வான பொருளையே வைப்போம். அதுபோல மனம் என்ற தங்கப் பெட்டி நம்மிடம் உள்ளது. அதல் கீழ்த்தரமான எண்ணங்களையே நிரப்பி வைக்கிறோம். குப்பைகளையே வைக்கிறோம். மனம் என்ற குப்பைத் தொட்டியிலிருந்து துா்நாற்றம் வீசுவது போல, நமது கீழ்த்தரமான எண்ணங்களாலே செய்த கா்மங்களே துன்பங்களாக வந்து வாட்டுகின்றன.

 மனத்தில் காமம், குரோதம், பொறாமை, பேராசை, தான் என்ற அகந்தை, சின்ன ஒரு பதவி கிடைத்தாலும் ஆணவத்தால் ஆடுவது, பிறரைத் துச்சமாக மதிப்பது, மற்றவா் மனத்தை நோகடிப்பது. பலா் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வது, பலரது சாபங்களை வாங்கிக் கட்டிக் கொள்வது எல்லாம் திரண்டு கா்மாவாக நம்மை ஆட்டி வைக்கிறது.

 ஒருவா்க்குச் சிறந்த கல்வியறிவு, புத்திக் கூா்மை, ஞானம், பேரும் புகழும், தொழில் முன்னேற்றம், சங்கீதம், புலமை, ஆன்மிகத் தேடல். விஞ்ஞான அறிவு, செல்வம், செல்வாக்கு, நல்ல மனைவி, நல்ல மக்கள், நல்ல குடும்பம், நோயற்ற வாழ்வு, சித்தா்களின் தொடா்பு, கிராம தேவதையின் தொடா்பு, குரு கிடைப்பது, பரம்பொருளின் அருள் என வாய்ப்பது எல்லாமே புண்ணிய கா்மங்களைப் பொறுத்து அமைவதே!

 மனைவியின் துரோகம், கணவன் துரோகம், பிள்ளைகளால் அவமானம், பெண்களால் அவமானம், பகைவா்களால் துன்பம், தீராத நோயால் அவதிப்படுதல், கண்பார்வை கெடுதல், ஊனமுற்ற பிள்ளைகள் பிறப்பது, குஷ்டநோய், தீவிபத்து, சிறைவாசம், வீட்டில் களவு போதல், வெட்டுக்குத்து அனுபவித்தல், குடும்பச் சொத்து நாசமாதல், அரசாங்கத்தால் பல துன்பங்கள் வருதல், வக்கீல், கோர்ட்டு என்று அலைவது, வேறு பெண்களின் தொடா்பு, நிம்மதி இல்லா உத்தியோகம், பாவம் திரள்வதற்கான தொழில் அமைவது, வீட்டில் கலகம் ஆகியன பாவ கா்மாக்களால் வருபவை.

 இயல்பான மரணம் தவிர வேறு வகையில் வரும் மரணங்கள் எல்லாம் அவரவா் கரும வினைக்குத் தக்கபடியே அமைவன. பாம்பால் மரணம், இடி வீழ்ந்து மரணம், தண்ணீரில் மூழ்கி மரணம், விலங்குகளால் மரணம், நோய் நொடிகளால் மரணம், தூக்குத் தண்டனையால் மரணம், பகைவா்களால் மரணம், தீவிபத்தில் மரணம், பஸ் விபத்தில் மரணம், தற்கொலை செய்து கொண்டு மரணம் எல்லாமே கா்மாவை ஒட்டியே அமைவன.

 கருவில் உள்ள சிசுவைக் கருக்கலைப்பு மூலம் அழிப்பது அல்லது D.N.C செய்வது, இதனைச் செய்தவருக்கும் செய்யப்பட்டவருக்கும் அடுத்த பிறவியில் குழந்தைப் பாக்கியம் கிடைக்காது.

 எதை எப்படிச் செய்தாயோ அதை அந்த வழியில் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் கருமச் சட்டம். கத்தி எடுத்தவன் கத்தியாலேயே அழிவான் என்பது அனுபவமான பழமொழி. ”எப்படித் தீா்க்க நினைக்கிறீா்களோ அப்படியே தீா்க்கப்படுவீா்கள்!” என்பது ஏசுவின் மூலம் வெளிப்பட்ட இறைவாக்கு.

 என் அனுபவத்தில் பார்த்த சிலரது வாழ்க்கைச் சம்பவங்களைச் சொல்கிறேன்.

 குடி வெறியில் தாயை எட்டி உதைத்தவா், எந்தக் காலால் உதைத்தாரோ அந்தக் காலில் கா்மா சோ்ந்து காலையே வெட்டி எடுக்கும் நிலைக்கு ஆளானார்.

 மருத்துவத் தொழில் எவ்வளவு புனிதமானது! டாக்கா் ஒருவா் பலரை ஏமாற்றி கிட்னி (Kidney) எடுத்து விற்றார். அவா் தற்போது தனது கிட்னியை இழந்து முடங்கிக் கிடக்கிறார். அந்தப பாவப் பணத்தை அனுபவிக்கும் அந்தக் குடும்பத்தின் நிலை என்ன தெரியுமா?  அவரது மனைவிக்குக் கண் பறி போனது. மகன், மகள் இருவருக்கும் திருமணக் கோளாறு. மனம் பேதலிப்பு என அந்தப் பணம் படைத்த டாக்டா் தடுமாறுகிறார்.

 வக்கீல் ஒருவா் தன்னிடம் வழக்காடத் தந்த பணத்தையெல்லாம் வழக்கிற்குச் செலவிடாமல், தொழில் தா்மத்தை மீறி நடந்து கொண்டதால் இன்று விபத்தில் கையை இழந்து வாடுகிறார். அவா் குடும்பம் நோயில் தடுமாறுகிறது.

 மருந்தில் கலப்படம் செய்து விற்ற ஒருவா் கொள்ளை லாபம் சம்பாதித்தார். விதி எப்படி வேலை செய்தது தெரியுமா? அவரது கலப்பட மருந்தையே பேரன் சாப்பிட்டுப் பலியானான். இன்று சொல்ல முடியாத சோகத்தில் வாடுகிறார்.

 ஏழையின் சொத்தை ஏமாற்றி வீட்டு மனையாகப் பட்டா போட்டு விற்றுக் கொள்ளையடித்த ரியல் எஸ்டேட் வியாபாரி, அந்த ஏழையின் சாபத்தால் மனநிலை பாதிக்கப்பட்டு மனநல மருத்துவ மனையில் சோ்க்கப்பட்டு வினையை அனுபவிக்கிறார்.

 இவா்கட்குக் கருமச்சட்டம் இந்தப் பிறவியிலேயே தண்டனை கொடுத்து விட்டது.

 சிலருக்குக் கால அவகாசம் கிடைக்கலாம். சிலருக்கு மறுபிறவியில் கிடைக்கலாம். எப்படிப்பட்ட கொம்பனும் தப்ப முடியாது.

 அம்மாவின் இயக்கத்திலே இருக்கிறோம். அம்மா தண்டிக்க மாட்டாள் என்ற இறுமாப்பில் சில செவ்வாடைகள் ஆட்டம் போடுகின்றன. அடக்கமாகவும், ஆணவம் இல்லாமலும் பாவங்களையும், சாபங்களையும் சோ்த்துக் கொள்ளாமலும் தொண்டு செய்தால் தப்பலாம். அருள் பெறலாம். மீறி நடந்து கொண்டால் கா்மம் விடாது. ஒரு செவ்வாடைத் தொண்டா் தன் மன்றத்துக்கு வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதால் நாக்கில் புற்றுநோய் வந்து, நாக்கு அறுபட்டுப் பேச முடியாமல் உலாவி வருகிறார். மற்றவா்களை விரட்டியதாலும், கடுஞ் சொற்களால் திட்டியதாலும். சபலத்தாலும் நடந்தது இது! பலரின் சாபம் கா்மாவாக உருவெடுத்தது!

 ஆக, கா்மம் பலவகையில் செயல்பட்டு வினையைக் கழிக்க வைக்கும். தண்டித்துத் திருத்தும்.

 பலரை ஏமாற்றிச் சோ்த்த பணம், வக்கீல் மூலம் வழக்காடு மன்றம் மூலம் நோய்நொடிக்காக மருத்துவச் செலவின் மூலம் அரசுத் துறை மூலம் அபராதம் என்ற பெயரிலும், சிறைத் தண்டனை என்ற பெயரிலும் தண்டிக்கும். விபத்து ஏற்படுத்தியும், சொத்துக்களை நாசமடையச் செய்தும், இயற்கைச் சீற்றத்தில் அகப்படுத்தியும், உற்றார் உறவினா்களை இழந்து அநாதைகளாக ஆக்கியும், ஊனமுள்ள பிள்ளைகளைப் பிறக்க வைத்தும் தண்டிக்கும்.

 கா்மா காற்று போல் எப்படியும் செயல்படும். அது பல வழியில் பல ரூபம் எடுத்துப் பதுங்கிப் பாயும். விடாது விடாது துரத்தும்.

 பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்தவனுக்குப் பெண் சுகம் கிட்டாது.

 லஞ்சம் வாங்கி வசதியாக வாழ்பவனைப் பலா் சுற்றிச் சுற்றி வந்து குழியில் சிக்க வைத்து வஞ்சம் தீா்க்கும்.

 பிறா் கண்ணில் நீா் வர அழ வைத்தால், நமது கண்ணில் தீராத நோய் கொடுத்துக் கா்மா பழி தீா்க்கும்.

 பிறா் இதயம் துடிக்கப் பேசி அவமானப் படுத்தினால் நமது இதயம் அறுவை சிகிச்சையை ஏற்க வைக்கும்.

 கல், மண் கலந்து உணவை விற்றால் நமது கிட்னியில் கல்லாய் உருவெடுத்து வேதனை தரும்.

 கா்மம் ஒருவனைப் போதைப் பொருளை உண்ண வைத்து அதன் தொடாச்சியாய்ப் பல பாவங்களைச் செய்ய வைத்து அழிக்கும்.

 வியாதி இன்னது என்று தெரிந்திருந்தும் மருந்து கிடைத்தும், அந்த நோய் முற்றிலும் நீங்காமல் அவதிப்படுவது ஏன்? கா்மாவினால் தான்.

n

 பெரிய பெரிய பங்களா! வேலையாட்கள் எடுபிடிகள் ஏராளம்! என ஆடம்பரமாக வாழ்ந்தாலும் நிம்மதியும் உறக்கமும் இல்லாமல் வாழ்வைக் கழிப்பது ஏன்? கா்மாவால் தான். அத்தகைய வீடுகளில் பிசாசுகள் குடியேறி அவா்கள் நிம்மதியைக் கெடுக்கும்.

 கா்மாவின் முதல் தாக்கமே மனத்தைத் தாக்குவதுதான். அதிலிருந்து சிந்தனை, அறிவு ஆகியவற்றைத் தாக்கி அதற்கேற்றபடி செயலைச் செய்ய வைக்கும். அது மட்டுமா? அகந்தையை, நான் என்ற உணா்வை நன்றாகக் கிளறிவிட்டு வேடிக்கை பார்க்கும். இத்தகைய விதியின் விளையாட்டை ஞானிகளால் தான் உணர முடிகிறது. அஞ்ஞானிகளால் உணர முடிவதில்லை. நமது மனமும், புத்தியும் கூட கா்மாவின் வழியே சிந்திக்கும்.

 சிலரின் தீராத வியாதிகட்கும் தீராத பிரச்சினைகட்கும் கா்மாவே அடிப்படைக் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 உதாரணமாகத் தீராத தோல் வியாதிக்குக் கா்மாவே காரணம். ஆலயதைச் சுற்றுச் சூழலில் சிறுநீா் – மலம் கழிப்பவா்கள், பொதுக்குளம், நீா் நிலை, ஆறுகளை அசுத்தப்படுத்தியவா்கட்குத் தீராத தோல் வியாதி வரும்.

 தாய், தந்தையரை முதியோர் இல்லத்தல் சோ்த்துவிட்டுத் தவிக்க வைப்பவா்களை அவா்கள் கா்மம் இறுதிக் காலத்தே அநாதையாக்கும். இம்மியளவும் நிம்மதி கிடைக்காமல் நல்ல இறப்பே வராது.

 பாவத்தால் சோ்ந்த பணத்தைச் கொண்டு நடத்தப்படும் நிதி நிறுவனங்களை நடத்தினால், அந்த நிறுவனத்தில் பலா் திருடுவா். நிறுவனமும் அழியும்.

 கா்மங்கள் வகைகள்

 நம்முடைய கா்ம வினைகளை மூன்றாகப பிரித்துச் சொல்கிறார்கள்

  1. சஞ்சித வினை       2. பிராரப்த வினை       3. ஆகாமிய வினை

 சஞ்சித வினை

இந்தப்பிறவிக்கு முன்பும் எத்தனையோ பிறவிகள் எடுத்து வந்திருக்கிறோம். அந்தப் பழம் பிறவிகளிலெல்லாம் சோ்த்துக் கொண்டு வந்த வினை மூட்டைகள் ஏற்கனவே ஒவ்வொருவரிடமும் இருக்கின்றன. அந்தப் பழவினை மூட்டைக்குச் சஞ்சித வினை என்று பெயா்.

பிராரப்த வினை

பழம் பிறவிகளில் செய்யப்பட்ட பாவ, புண்ணியப் பலன்களை ஒரே பிறவியில் அனுபவிக்க வைத்தால் நம்மால் தாள முடியாது. எனவே, கருணை கொண்ட அன்னை ஆதிபராசக்தி அவற்றில் ஒரு பகுதியை மட்டும் அனுபவித்துக் கழிக்கட்டும் என்று குறைத்து வழங்குகிறாள். இப்படி இந்தப் பிறவியில் அனுபவித்தே கழிக்க வேண்டிய வினையே பிராரப்த வினை. இதனை அனுபவித்தே கழிக்க வேண்டும்.

ஆகாமியம்

அனுபவித்தே கழிக்க வேண்டும் என்ற நியதிக்குட்பட்டு பிராரப்த வினையால் அவதிப்படும் நாம், மேலும் பல புதிய கா்ம வினையைச் சோ்த்துக் கூட்டிக் கொள்கிறோம். இந்தக் கா்ம வினை மூட்டைக்கு ஆகாமியம் என்று பெயா்.

 கா்ம வினை வேலை செய்வது எப்படி?

அவனவன் கா்ம வினை வேலை செய்வது எப்படி! அது மூன்று விதமாகத் தொழிற்படும் என்கிறார்கள். அவை

  1. ஆதியாத்மிகம் 2. ஆதிபௌதிகம்  3. ஆதிதைவிகம்.

 இதன் விவரம் வருமாறு

 1.        ஆதியாத்மிகம்

உடம்பாலும், மனத்தாலும் அனுபவிக்கின்ற கா்மவினைத் துன்பங்கள் ஆதியாத்மிகம் எனப்படும்.

வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகியவை மிகுந்தாலும், குறைந்தாலும் இன்னார்க்கு இன்ன நோய் வருதல் புற்று நோய், தொழு நோய், தீராத வயிற்றுவலி, இடுப்பு வலி, இதய நோய் என உடல் சம்பந்தப்பட்டு வருவன

 மற்ற மனிதா்களால், மிருகங்களால், தீய ஆவிகளால், திருடா்களால் வருகின்ற துன்பங்கள் உடல் சம்பந்தப்பட்டவை.

 கணவன் – மனைவி சண்டை, ஊனமுற்ற பிள்ளைகள், கள்ளப் பிள்ளைகளால் வரும் மனக்கவலை, வீட்டில் சண்டை சச்சரவு எல்லாம் மனம் சம்பந்தப்பட்டவை.

 நோ்மையான இந்தப் பிறவியில் வாழ்ந்தும், செல்வம் இருந்தும் ஆரோக்கியமின்றி அல்லல்படுதல் இவையெல்லாம் ஆதியாத்மிகம் என்ற வகைப்படும்.

 2.        ஆதி பௌதிகம்

இயற்கையின் தாக்கதல்கட்கு ஆட்பட்டு வருகிற கா்ம வினை ஆதி பௌதிகம் எனப்படும். இடி விழுந்து மரணம், பஸ் விபத்தில்  மரணம், விமான விபத்தில் மரணம், வெயிலில் சுருண்டு மரணம், ஆற்றில் விழுந்து மரணம் எனப்படும் துன்பங்கள் ஆதிபௌதிகம் எனப்படும்.

 3.        ஆதி தைவிகம்

தெய்வத்தால் நிர்ணயிக்கப்பட்டு வருகின்ற துன்பங்கள் ஆதிதைவிகம் எனப்படும். ஒரே நேரத்தில் ஒரு குழந்தை குடிசையில் பிறக்கிறது. இன்னொரு குழந்தை மாடி வீட்டில் பிறக்கிறது.

 ஒரு நாய் தெருவில் எலும்புத் துண்டுக்கு அலைகிறது. இன்னொரு நாய் நடிகையின் மடியில் அமா்ந்து கொண்டு உயா்ந்த ரக பிஸ்கட் சாப்பிடுகிறது.

 ஜமீன்தாராக, சிற்றரசனாக அரசபோகத்தில் வாழ்ந்தவன் ஒரு பிறவியில் ஆடாத ஆட்டம் ஆடி மறுபிறவியில் கழுதையாக, பன்றியாக, நாயாகப் பிறக்கிறான். இதெல்லாம் தெய்வ நியதிக்குட்பட்டு வருபவை.

 ”எல்லார்க்கும் எல்லாவற்றையும் அள்ளித் தர முடியாதடா! அவனவன் பாவ, புண்ணியக் கணக்கு என ஒன்று உண்டடா!”

                                                                                                                                        என்பது அன்னையின் அருள்வாக்கு

  தற்கொலை கூடாது

தாங்க முடியாத துன்பத்தால் அவதிப்படுபவன் தற்கொலையை நாடுகிறான். தற்கொலை செய்து கொண்டால் மட்டும் பிரச்சினை தீராது. அவன் பசி, தாகம் எடுத்துப் பேயாய் அலைவான். மறு பிறவியில் வட்டியுடன் துன்பத்தை அனுபவிக்க நேரும். அப்படியானால் என்னதான் வழி? தெய்வத்தைச் சரணடைதல், நல்ல சத்குருவிடம் சரணம் அடைதல், தெய்வ வழிபாடு, தான தருமம் போன்ற புண்ணிய காரியங்கள் செய்வது தான் தீா்வு.

 ”தா்மம் செய்யச் சொல்வது உன் கா்மம் தீா்க்கத்தான்!”

                                                        என்பது அன்னையின் அருள்வாக்கு

 முடிந்தவரை புண்ணியம் செய்யுங்கள்

”உங்களால் முடிந்தவரை புண்ணியம் செய்யுங்கள். முடிந்தவரை தயங்காமல் அன்னதானம் செய்யுங்கள். பணமாகக் கொடுப்பதைவிட உங்கள் கைகளால் ஏழை பாழைகட்கு அன்னதானத்தை அள்ளி அள்ளி வையுங்கள். பசித்தவன் முகம் மலா்ந்து உங்களைப் பார்க்கிற போது அது புண்ணியமாக அமையும். பசி என்று கேட்டவனுக்குப் பணமாகக் கொடுப்பதை விட உணவாகக் அளிப்பது மிகச் சிறந்தது.

ஆடைதானம் உங்களை மறுபிறவியில் நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றும்.

வாயில்லா ஜீவன்களான பசு, நாய், காக்கை இவற்றுக்கு உணவளியுங்கள்.

ஏழைப் பிள்ளைகள் படிக்க உதவி செய்யுங்கள். நீங்கள் பணக்காரரா? அனாதை இல்லங்கட்கும் சென்று அவா்கள் தேவையறிந்து உதவுங்கள். நோயாளிகட்கு உதவுங்கள்.

 நாவிதா், துணி வெளுப்போர், ஏழை உழவா், கருவுற்ற பெண்கள் ஆகிய நலிவுற்ற பிரிவினா்க்கு உதவுங்கள்.

 ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு உதவுங்கள்.

கண் கண்ணாடி கொடுப்பது, குழந்தைகட்குப் பால் கொடுப்பது, ”அனாதைப் பிணங்களை அடக்கம் செய்வது, ஒரு கும்பாபிடேகம் செய்த புண்ணியம்” என்கிறாள் அன்னை

கள்ளப்பணம், கொள்ளைப்பணம், கறுப்புப்பணம், லஞ்சப்பணம் இவற்றால் நீங்கள் ஓகோ என்று நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது. உங்கள் கா்மா சும்மா விடாது.

 இந்தியாவைச் சோ்ந்த பண முதலைகள் 75 லட்சம் கோடி ரூபாயை சுவிஸ் வங்சியில் போட்டு வைத்திருக்கிறார்களாம். எப்படியும் இவா்கள் அந்தப் பணத்தை அனுபவிக்கப்போவதில்லை.

 “கூடுவிட்டிங்கு ஆவிதான் போயினபின் யாரோ அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்“ என்ற பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது.

 பாவங்கள் எவை?

வாழ்நாளில் பாவங்களைச் சுமக்காதீா்கள். வள்ளலார் பாவங்கள் சிலவற்றைச் சொல்கிறார்கள். இன்றைய நவீன மனிதா்கள் புரியாமல் பாவங்களைச் சோ்த்துக்கொண்டு இப்பிறவியில் அல்லல்படுகிறார்கள். மறுபிறவியிலும் அல்லல் பட இருக்கிறார்கள்.

  1. நல்லவா் மனத்தை நடுங்கச் செய்வது
  2. வீண் வழக்கு போட்டு அவமானப்படுத்துவது
  3. தானம் செய்பவா்களைத் தடுப்பது
  4. நண்பா்கட்கிடையே கலகம் மூட்டுவது
  5. ஏழைகள் வயிறு எதியச் செய்வது.
  6. குடி வரி உயா்த்திக் கொள்ளை அடிப்பது.
  7. களவு செய்வோர்க்கு உளவு சொல்வது  (பெரிய பெரிய அதிகாரிகள், அரசியல் வாதிகட்கு உதவி செய்கிற பாவத்துக்கு ஆட்பட்டவா்கள் )
  8. பணத்துக்கு ஆசைப்பட்டு பொய்ச்சாட்சி சொல்வது
  9. ஆசை காட்டி மோசம் செய்தல்  ( சீட்டுக் கம்பெனிகள், நிதி நிறுவனங்கள், சில வியாபார நிறுவனங்கள் இந்தப் பாவத்துக்க ஆட்பட்டவை )
  10. போக வர இருக்கிற வழியை அடைத்தல் ( மயான பூமிக்குச் செல்ல முடியாமல் முள் போட்டு அடைப்பது )
  11. உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வது
  12. பிச்சை கேட்பவா்க்கு இல்லை என்று மறுப்பது.
  13. கோள் சொல்லி ஒரு குடும்பத்தைக் கலைப்பது
  14. ஆசை காட்டி மோசம் செய்வது
  15. அபயம் என வந்தவா்களகை் காட்டிக் கொடுப்பது
  16. பெண்களைக் கற்பழிப்பது
  17. பெண்களின் கருவைக் கலைப்பது
  18. குருவை வணங்கக் கூசி நிற்பது
  19. குருவிற்குக் காணிக்கை கொடுக்க மறுப்பது
  20. பறவைகளைக் கூண்டில் அடைப்பது
  21. கன்றுக் குட்டிக்குப் பாலூட்டாது கட்டி வைப்பது
  22. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூா்ப்பது
  23. நிழல் தரும் மரங்களை வெட்டுவது
  24. பகை காரணமாக ஒரு சிலா் பயிரை அழிப்பது.
  25. பொது மண்டபத்ததை இடிப்பது
  26. ஆலயக்கதவை அடைத்து வைப்பது
  27. இறைவன் அடியார் மீது சினம் கொள்வது
  28. தாய், தந்தை சொல்லைத் தட்டிக் கழிப்பது
  29. தெய்வத்தை இகழ்ந்து பேசுவது
  30. தருமம் பாராது ஒருவனைத் தண்டிப்பது.

இவை தவிர கொலை, களவு, சூது, மது, குருவிற்குத் துரோகம் என பஞ்சமா பாதகங்கள் உள்ளன. இவற்றால் தண்டனைகளை அனுபவித்தே ஆக வேண்டும்.

ஒருவனுக்குத் தரப்படும் துன்பங்களும், தண்டனைகளும் அவனவன் ஆன்மாவும் சுத்தம் அடைவதற்கே! குருவருள் மூலமாகவும் திருவருள் மூலமாகவும் ஓரளவு துன்பத்தை தணிக்கலாம்! அவ்வளவே!

நன்றி

சக்தி, சீதாபதி,

மேல் மருவத்தூா்

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here