உலக மருத்துவ முறைகளில் மிகவும் பழமையானதும், அனுபவபூர்வமானதும், இயற்கையானதும் தமிழர் மருத்துவமாகிய சித்தமருத்துவமாகும். ஒரு நாட்டின் வரலாற்றை அந்த நாட்டு மக்களின் நாகரீகத்தை அளவிடும் போது பண்பாடு, கலாசாரம் இவைகளின் முன்னேற்றத்திற்கான சான்றாக சிற்பம், நாடகம், இசை, நடனம் இவைகளின் வளர்ச்சியைக் கணிப்பது மிகவும் முக்கியமானவொன்றாகும். தென்நாட்டைப் பொருத்தவரையில் தமிழர்களின் பண்பாட்டின் சாரமாக உருவாகிய மருத்துவ வழக்கு சித்த மருத்துவமாகும்.
சித்தர்களின் சிறப்பு
சித்- அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள், அறிஞர்கள், மேதைகள், நுண்ணறிவினர், விஞ்ஞானிகள், எனலாம். சித்த மருத்துவ நூல்களை ஆராய்ந்தவர்கள். சித்தர்கள் பதினெண்மர் என்றே கூறுகின்றனர். இவர்கள் அட்டமாசித்திகளைப் பெற்றவர்கள். மனம்,வாக்கு,,காயம் ஆகியவற்றைப் பண்புறச் செய்து யோக, ஞான மார்க்கத்தைப் பின் பற்றி வாத வைத்தியத்துறையில் சிறந்து விளங்கியவர்கள், மனதை அடக்கியவர்கள், காரண காரியங்களால் உடம்பைச் சோதித்து சிவநெறி பூண்டு தூய ஒழுக்கம் நல்ல கொள்கை இவற்றைக் கடைப்பிடித்து எவ்வகைப் பொருளால் அழிகின்றது என்பதை ஊக்கத்தாலும், முயற்சியாலும் கண்டறிந்தவர்கள்.
சித்தர்கள் வகுத்ததால் இம்மருத்துவமுறைக்குச் சித்த மருத்துவம் எனப் பெயர் வந்ததென்றும் ; உடலையும் , உயிரையும் அழியாமல் காத்துச் சித்திபெறச் செய்யும் மருந்து என்பதால் சித்த மருத்துவம் ஆயிற்று என்றும் கூறுவர்.
சித்த மருத்துவத்தின் சிறப்பு
தமிழ் மருத்துவமாகிய சித்த மருத்துவத்தின் சிறப்பைச் சித்தர் நூல்களும் அவற்றின், வரலாறுகளும் நமக்கு அறிவிக்கின்றன.ஆயின் சித்த மருத்துவத்தின் தனித்தன்மையை விளக்க அதன் அடிப்படை அமைப்பும், மருந்து அளிக்கும் சிறப்பும் மிகவும் குறிப்பிடத்தக்கனவாகும்.
1. அடிப்படை அமைப்பு
சித்த மருத்துவத்தின் அடிப்படை அறிவியல் அமைப்பிலான ஒன்று. ஆழ்ந்த நோக்கும் போது நவீன விஞ்ஞானத்தின் அளவை இயலில் (லாஜிக்) நின்று எவ்விதத்திலும் வேறுபடாதது. காண்டல் (Observation) கருதல் (Inference), உரை (Hypothesis) என்ற மூன்று பிரமாணங்களை(Factors) அடிப்படையாகக் கொண்டதே இந்த மருத்துவம், மேலும், அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டு ஒப்புரை, எதிருரை, கலப்புரை என்ற மூன்று நிலைகளிலும் சிகிச்சை அளிக்கவல்லது என்பர். இதனை ஓர் எடுத்துக்காட்டல் விளக்கலாம்.
சித்த மருந்தியல் தத்துவத்தின்படி – உடலானது ஜம்பூதங்களாலும் (மண், நீர், தீ, காற்று, விண்) அப்பூதங்களின் தொகுதியான 3 உயிர்த்தாதுக்களாலும், (வாதம், பித்தம், கபம்) ஆனது. இம்மூன்று தாதுக்களும் இயற்கைப் பிறழ்ச்சியாலும், உணவு முதலான குறைகளாலும் இரச பேதங்களாலும் தம் நிலை பிறழும் போது முக்குற்ற நிலை டையும். வளி (வாதம்), தீ (பித்தம்), நீர் (கபம்) என்னும் மூன்றின் நிலை பிறழ்ச்சியால் நோய்கள் வரும். வளி இயக்கும்.( Starter) தீ இயங்கும்(Accelerator) கபம் நிறுத்தும் (Break). மூன்றில் எது பழுதடைந்தாலும் வாழ்வின் பயணம் தடைப்படும். இந் நிலை பிறழ்ச்சியால் உடலில் ஏற்படும் மாறுதல்களை அனுமானமாகக் கொண்டு நோயின் நிலை கணிக்கப்படும்.இந்த அனுமானங்களே இன்ன நோய் என்று தீர்மானிக்க உதவும். மருந்தைத் தீர்மானிக்கும் போதும், இத்தகைய அளவையியல் தத்துவமே பயன்படுத்தப்படுகிறது.மருந்துகளிலும் வாத மருந்து, பித்த மருந்து, கப மருந்து என்ற பிரிவுகள் உள்ளன. இக்கருத்து இன்றைய அறிவியலோடு ஒத்ததே எனவே, சித்த மருத்துவமும் சிறந்த தருக்க நெறியில் அமைந்த அறிவியல் என இக்கால அறிவியலாரும் ஒப்புக் கொள்வர்.
2. நோய்களின் வகைப்பாடு
மேற்கூறப்பட்ட முக்குற்ற அடிப்படையிலேயே நோய்கள் வகைப்படுத்தப்படுகின்றன. ஆயினும் உடல் நோய், உள நோய், உயிர் நோய், என மூன்று வகையாகவும் நோய்களை வகைப்படுத்துவர். இவற்றுள்,
உயிர்நோய் என்பது பிறப்பும் இறப்புமாகும். உளநோய் என்பது நொடிக்கு 100 என்ற கணக்கில் தோன்றும் என்பர்.
உடல் நோய் என்பது 4448 என்று வகைப்படுத்தியுள்ளனர். இவற்றுள் உடலின் அக, புற உறுப்புக்களின் நோய்கள் பலவும் அடங்கும்.
3. மருந்து
இம்மூவகை நோய்களைத் தீர்க்கவுமே தமிழ் மருத்துவத்தில் மருந்து என்பது பயன்படுவதாகக் கூறுவர்.
“மறுப்பதுடல் நோய் மருந்தெனலாகும்
மறுப்பதுளநோய் மருந்தெனற்சாலும்
மறுப்பதினி நோய் வாரா திருக்க
மறுப்பது சாவை மருந்தெனலாமே”!
என்பர் திருமூலர்.
சித்த மருத்துவம் அகமருந்து, புற மருந்து இவ்விருகை மருந்துகளும் தத்தம் வகையில் முப்பத்திரண்டு வடிவமுடையவையாகும்.
முப்பெரும் பிரிவுகள்
1. தேவ மருத்துவம்
2. மனித மருத்துவம்
3. இராட்சச மருத்துவம்
ஜம்பெரும் முறைகள்
1. மூலிகை முறை
2. உலோக வர்க்க முறை
3. பாடாண முறை
4. உயிர்ச்சத்து முறை
5. அறுவை முறை
இத்தகைய சிறப்பான தத்துவ அடிப்படையும் பிரிவுகளும் முறைகளுமே சித்த மருத்துவத்தின் மேன்மைக்குக் காரணங்கள் ஆகும். இவற்றை மற்ற மருத்துவ முறைகளோடு ஒப்பிட்டும் அறியலாம்.
சித்த மருத்துவத்தின் சில உண்மைகள் strong>
1. தமிழர் (தமிழ்) மருத்துவம் வரலாற்று முறையிலும் வேறு பிற முறைகளை விடவும் சிறப்பிடம் பெறுவது.
2. லெமுரியா மருந்து முறையோடு தொடர்புடையது.
3. நாகர், கோண்டு மருத்துவர், சித்தர் எனும் சிறந்த மூவரில் அறிவால் மிக உயர்நிலையை எய்தியவர்கள் சித்தர்களே. எனவே அவர்கள் மருத்துவமும் அறிவிலோங்கியதே.
4. மருந்து என்னும் ஒன்றோடு நிற்காமல் வாதம், யோகம் , ஞானம், எனும் பிற துறைகளையும் இணைத்து வளர்ந்தது சித்த மருத்துவம்.
5. உடலுக்கும் உள்ளத்திற்கும் உயிருக்கும் மருந்தளிக்கும் சித்தர் நெறி சிறந்த அடிப்படையிலானது.
6. காலப்போக்கில் இத்தகைய சிறந்த அறிவியல் மருத்துவ நெறிகளுடன் வேதகாலச் சடங்குகளையும் தத்துவங்களையும் இணைத்ததால் வலிமை குன்றியது எனலாம்.
7. வேத அடிப்படையில் பிறந்த ஆயுள் வேதம் குருசீடர் உரையாடல் வழியாகப் புலப்படும், கற்பிக்கப்படும். சித்த மருத்துவமோ சிவன் உமையாள் உரையாடல் முறையில் அமைவது இதன் தனிச் சிறப்பிற்கு ஓர் அடையாளமாகும்.
8. சித்த மருத்துவ நூல்கள் முதன் முதலாக அம்மையாருக்கு அரனும், பின்னர், அவர் வழி முருகன், நந்தி தேவர், அகத்தியர் முதலான சித்தர்கட்கும் போதிக்கப்பட்டு வழிவழி வரலாயின. இவர்கள் தொன்மைத் தமிழ் மரபினரேயாவர்.
பண்டைய காலத்தில் சித்த மருத்துவம் என்று ஒன்று வழங்கவில்லை. ஆயுர் வேத மருத்துவந்தான் வழங்கி வந்ததென்று கூறுவார் கூறுக. சங்க காலத்திலிருந்து தமிழ் மருத்துவம் வழங்கி வந்தது.
எனவே, பண்டைய மருத்துவமாம் சித்த மருத்துவம் அறிவியல் அடிப்படையானது, பழமையும், அனுபவச் சிறப்பும் மிக்கது. இயற்கையானதாகும். வாழ்க சித்த மருத்துவம்.
ஓம் குருவடி சரணம்! ஓம் திருவடி சரணம்!
ஒம் சக்தி!
நன்றி
சக்தி ஒளி 1991 ஜுன்
பக்கம் 58- 61.
]]>