“நாடெங்கும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் அமைத்து, வாரம் ஒருமுறை கூட்டு வழிபாடு செய்யுங்கள்! மேல்மருவத்தூருக்கு வர முடியாதவர்கள் அந்த மன்றங்களில் தங்கள் குறைதீர வேண்டிக் கொண்டால் அவர்களின் குறை தீர்ப்பேன்!” என்று தன்னிடம் வந்த பக்தர்கள் சிலருக்கு அருள்வாக்கில் அன்னை ஆணையிட்டாள். அதன்படி உலக அளவில் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கூட்டு வழிபாட்டின் மகிமை – என்ன என்பது நமது மன்றத் தலைவர்கள் பலருக்குப் புரியாமல் இருப்பது துரதிர்ஷ்டம். நமது ஆன்மிக இயக்கத்தைச் சேராத பலர் இந்த வழிபாட்டின் மகத்துவம் பற்றித் தெரிந்து பாராட்டுகிறார்கள்.

எங்களது திருச்சி மாவட்டத்தில் ‘தொட்டியம்’ என்ற ஊரில் வழிபாட்டு மன்றம் அமைத்து, பிரம்மாண்டமாகத் துவக்க விழா கொண்டாடினோம்.

அந்த விழாவிற்கு முசிறிக் கோட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் (D.S.P.) சக்தி. சேதுராமன் அவர்களையும் அழைத்திருந்தோம்.

அந்த விழாவிற்கு முன்னதாக கல்லுப்பட்டி, காட்டுப்புத்தூர் ஆகிய ஊர்களில் அமைந்த வழிபாட்டு மன்றங்களின் துவக்க விழாவிற்கும் அவரை அழைத்திருந்தோம்.

இப்போது மூன்றாவது தடவைத் தொட்டியம் மன்றத் துவக்க விழாவுக்கும் அழைத்தோம். அவர் சிறப்புரை ஆற்றும்போது சொன்னார்.

எங்கள் திருச்சி மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் சக்தி முத்துக்கருப்பன் அவர்களைப் பார்த்து, “ஐயா! இது போன்ற மன்றங்களைக் குடிசையில் ஆரம்பித்தாலும் பரவாயில்லை. அனைத்து இடங்களிலும் ஆரம்பியுங்கள். அதனால் குற்றங்கள் வெகுவாகக் குறையும்.

நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் இதற்கு முன்பு கல்லுப்பட்டி, காட்டுப்புத்தூர் மற்றும் செவந்திலிங்கபுரம் மன்றங்கள் தொடங்கினீர்கள். எங்கள் காவல் துறைக் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய இந்த முசிறிக் கோட்டம் முழுமையிலும் குற்றங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன.

அதன் காரணமாக எங்களுக்கும் ‘டென்ஷன்’ வெகுவாகக் குறைந்து, காவல் துறையைச் சார்ந்த நாங்கள் நிம்மதியோடு இருக்க முடிகிறது!” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார். D.S.P யின் பேச்சு தெய்வம் இல்லை என்று பேசுகிறவர்களையும் சிந்திக்க வைத்தது.

நம் வழிபாட்டு மன்றங்களில் கூட்டு வழிபாட்டில் கலந்து கொண்டு வீடு திரும்பும்போது, இனம் தெரியாத ஒரு மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி இருப்பதை அவரவர்கள் தாமே உணர முடியும்.

கூட்டு வழிபாட்டில் சேர்ந்து மந்திரங்கள் படிக்கிறோம். ஏறக்குறைய 2000 தடவைக்கு மேல் ‘ஓம்’ என்ற வார்த்தையை நமது உதடுகள் உச்சரிக்கின்றன. அந்த ஓங்கார நாதம் நமது 72000 நாடி நரம்புகளில் புகுந்து இன்பமான அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

“பத்துப்பேர் சேர்ந்து ஓம் சக்தி சொன்னால் உங்களுக்குள்ளே இருக்கும் ஆன்மா குளிர்கிறது” என்கிறாள் நம் அன்னை.

அந்த ஓங்கார நாதத்தில் 72000 நாடி நரம்புகள் நனைகின்றன.

நமது மனத்தில் – பழம்பிறவி எண்ணப் பதிவுகள் பாசிபோலப் படிந்து இறுகியுள்ளன. அவை பூர்வ ஜென்ம வாசனைகள். இந்த வாசனைகள்தான் மன ஒருமையோடு மந்திரம் படிக்க முடியாதபடித் தடுக்கின்றன. தியானம் செய்யும்போது பனிப்படலம் எழுவதுபோல, வெவ்வேறான எண்ண அலைகளாகக் கிளம்பித் தியானத்துக்கு எதிராகத் தடை போடுகின்றன.

காம எண்ணங்கள்! வக்கிர எண்ணங்கள்! பழிவாங்கும் எண்ணங்கள்! ஆபாசக் காட்சிகள்! வெளியே தலை தூக்குகின்றன. அவற்றை எண்ணிப் பயந்து விடாமல் தொடர்ந்து மந்திரம் படிக்க வேண்டும். தினம் தினம் ஐந்து நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும்.

இந்த முயற்சிகள் நமக்குள்ளேயே – நாம் அறியாமலே பல மாற்றங்களை உருவாக்கும்!

அது மட்டுமா…?

நாம் கூட்டாகச் சேர்ந்து வழிபாடு செய்யும்போது, உண்டாகும் மந்திர ஒலி அலைகள் சுற்றுச் சூழலை மாற்றுகின்றன.

நமது தியானத்தின் மூலம் வெளியேறும் தூய எண்ண அலைகள் நம்மைச் சுற்றிச் சஞ்சாரம் செய்யும்போது, கண்ணுக்குத் தெரியாமல் உலவிக் கொண்டிருக்கும் ஆவிகள், தீய சக்திகள், துர்த்தேவதைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்துகின்றன.

மனிதர்களிடம் மறைந்துள்ள தீய எண்ணங்கள் முடுக்கி விடப்படுவதற்கு இந்தத் தீய ஆவிகளும், தீய சக்திகளும் ஒரு காரணம்!

தியானத்திற்குச் சக்தி அதிகம்! கூட்டுத் தியானத்திற்கு மேலும் சக்தி அதிகம்.

எங்கோ எப்போதோ படித்த ஒரு நிகழ்ச்சி இப்போது நினைவுக்கு வருகிறது.

அமெரிக்காவில் அதிகமான குற்றங்கள் நடைபெறுகிறதே! இதையெல்லாம் தடுப்பது எப்படி? அமெரிக்க மனோதத்துவ டாக்டர்கள் எல்லாம் சேர்ந்து விவாதித்தார்களாம்.

‘இந்திய ஞானிகள் தியானத்தின் மகிமை பற்றியெல்லாம் சொல்கிறார்களே… அந்தத் தியானத்தைப் பழகச் சொல்லி மக்களை ஈடுபடுத்தலாமா…’ என்று ஒரு கருத்து எழுந்தது.

அமெரிக்காவில் அதிகமான குற்றங்கள் நடப்பது எங்கே எனக் கேள்வி எழுந்தது! ‘டெட்ராயிட்!’ என்ற பதில் கிடைத்தது.

சரி! ‘டெட்ராயிட்! மாநிலத்தில் சில பகுதிகளில் தியானப் பயிற்சி வகுப்புக்கள் நடத்திச் சோதனை செய்து பார்க்கலாம் என்று செயலில் இறங்கினார்கள். சில மாதங்களில் ஆராய்ச்சி முடிவில் கண்டபோது, அங்கே குற்றங்கள் குறைந்து காணப்பட்டன என்று சொன்னார்களாம்.

நமது மன்றங்களில் தியானமும் ஓர் அங்கம்! சமுதாயத் தொண்டுகளும் ஓர் அங்கம்! மன்றங்களின் செயல்பாடு பற்றியும் அம்மாவின் எதிர்பார்ப்பு பற்றியும் சித்தர்பீடப் புலவர் சொன்னார்.

“நமது செவ்வாடைத் தொண்டர்கள் நினைத்தால் இந்த உலகத்தையே புரட்டிப் போடலாம்” என்கிறாள் அன்னை. “மன்றங்களில் முறையான வழிபாடு நடந்தால் அங்கே வசிக்கிறவர்களுக்குப் பிழைக்க வழி கிடைக்கும்” என்கிறாள் அன்னை. “சுபிட்சம் கிடைக்கும்” என்கிறாள் அன்னை என்று புலவர் கூறினார்.

மன்றங்களில் முறையான வழிபாடு நடந்தவரை, அந்தந்த ஊர்களில் அமைதி இருந்தது. மழை கிடைத்தது. கிராம தேவதைக் கோயில்களுக்குத் தெய்வ சாந்நித்தியம் ஏறியது. அந்தக் கிராம தேவதைக் கோயில்களுக்குக் கும்பாபிடேகங்கள் நடந்தன.

மன்றங்களில் முறையான வழிபாடு நடந்தபோது, ஆதிபராசக்தி உளம் கனிந்தாள். அற்புதங்கள் புரிந்தாள்! சித்தாடல்கள் நடத்தினாள். வந்தவர்களின் நியாயமான கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றி வைத்தாள்.

என்னால்தான் மன்றம் நடக்கிறது. அம்மா பற்றி உனக்கு என்ன தெரியும்? 20 வருடமாக அம்மாவிடம் போய் வருகிறேன்! நான் சொல்கிறபடிதான் எல்லாம் நடக்கணும்! நான் தான் தீபாராதனை காட்டணும்! – என்றெல்லாம் எந்த மன்றத் தலைவன் நினைத்தானோ அன்றிலிருந்து ஆதிபராசக்தியின் அற்புதங்கள், சித்தாடல்கள் எல்லாம் அங்கு குறைந்து போயின. காலப்போக்கில் செயற்படாத மன்றமாக அவற்றுள் சில ஆகிவிட்டன.

ஒவ்வொரு மன்றத் தலைவனையும், வேள்விக்குழுத் தொண்டனையும், அந்தந்த ஊருக்கு ஒரு ஆன்மிக உயிர்ப்பு கொடுக்கும் மனிதனாக ஆக்கலாம் என்று நினைத்துப் பொறுப்பு கொடுத்தால் இவர்களில் சிலர் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் இருந்து சேற்றில் விழுந்ததுதான் மிச்சம்!

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தைப் பொறுத்து அந்த ஊரின் வளர்ச்சியும் பாதுகாப்பும் உள்ளது.

‘இனியாவது செயற்படாத மன்றங்கள் அம்மா கூறிய முறைகளில் முறைப்படி செயல்படட்டும்!” என்று மேலும் கூறினார் புலவர்.

அம்மா சொல்லிய முறைப்படி வார வழிபாடுகள் தவறாமல் நடந்தால் செவ்வாடைத் தொண்டன் வீடும் விளங்கும்! அந்த ஊரும் விளங்கும்! சமுதாயமும் விளங்கும்!

நன்றி!

ஓம் சக்தி!

பக்கம் (5-8).

சக்தி ஒளி ஜுன் 2012.